இங்கிலாந்துக்கு விழுந்த அதேஅடி... தென்னாப்ரிக்காவிற்கு மரண அடிகொடுத்து வெற்றி பெற்ற நெதர்லாந்து!

உலகக்கோப்பை தொடரில் தென்னாப்ரிக்கா அணியை, நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
நெதர்லாந்து, தென்னாபிரிக்கா
நெதர்லாந்து, தென்னாபிரிக்காட்விட்டர்

15வது லீக் போட்டியில் மோதிய தென்னாப்ரிக்கா - நெதர்லாந்து

கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு பல போட்டிகளை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில் சாம்பியன்களை, கத்துக்குட்டி அணிகள் வீழ்த்தி தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் சம்பவங்களும் உண்டு. அப்படியான ஒரு நிகழ்வுதான் இன்றைய போட்டியில் அரங்கேறியுள்ளது. 10 அணிகள் பங்கேற்றுள்ள 13வது ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 15வது லீக் போட்டி, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் இன்று நடைபெற்றது.

ned vs sa teams toss
ned vs sa teams tosstwitter

இந்தப் போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்ரிக்காவும், பலம் குன்றிய நெதர்லாந்தும் பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக தென்னாப்பிரிக்கா, தாம் சந்தித்த முன்னாள் உலக சாம்பின்களான ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையை துவம்சம் செய்திருந்தது. அதிலும் இலங்கைக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்து, இந்த உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேவேட்கையுடன் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா மீதும் தாக்குதல் நடத்தி, அவ்வணியையும் நிலைகுலையச் செய்தது.

இதையும் படிக்க: சையது முஷ்டாக் அலி தொடர்: யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரயில்வே அணி வீரர்! 8 சிக்ஸர் விளாசல்

பலமிக்க அணிகளுடன் போராடிய நெதர்லாந்து

அதிலும் தொடக்க பேட்டர் டி.காக் தொடர்ந்து 2 சதம் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளார். இப்படியான அசுரபலம் வாய்ந்த தென்னாப்ரிக்கா அணி, இன்றைய போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தைச் சந்தித்தது. அதேநேரத்தில் நெதர்லாந்து அணி, தாம் சந்தித்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளிடம் பரிதாப தோல்வி அடைந்திருந்தது. என்றாலும், பலமிக்க பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் இறுதிவரை மல்லுக்கு நின்று போராடியது. ஆகையால் அதேவேகத்தில், இன்றைய போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் வகையில், நெதர்லாந்து நிமிர்ந்து நடைபோட்டது.

sa team
sa teamtwitter

இன்னும் சொல்லப்போனால், நெதர்லாந்தையும் லேசாக எடைபோட்டு விடக்கூடாது. காரணம், அந்த அணி கடந்த 2022ஆம் ஆண்டு, டி20 உலகக்கோப்பையில், இதே தென்னாப்ரிக்காவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம். ஏன், நடப்புச் சாம்பியனான இங்கிலாந்துகூட, இந்த உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியிடம் அடிவாங்கியது நினைவிருக்கலாம்.

இதையும் படிக்க: 26 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு; பின்னணி என்ன? கருக்கலைப்பு உரிமையை மறுக்கிறதா?

மழையினால் 43 ஓவர்களாகக் குறைப்பு

அந்த வகையில்தான் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி, இன்று மதியம் 2 மணிக்குச் சரியாகத் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் மழை நின்றபிறகு மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கியது. அதேநேரத்தில், மழையின் காரணமாக, 50 ஓவர்களுக்குப் பதிலாக 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

rain
raintwitter

இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த தென்னாப்ரிக்க அணி, முதலில் நெதர்லாந்தைப் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து அவ்வணியின் தொடக்க பேட்டர்கள் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தனர். அதில் விக்ராம்ஜித் சிங் 2 ரன்களில் ஏமாற்றினாலும், மேக்ஸ் ஓடவுடு 18 ரன்கள் எடுத்தார். இவர்களைத் தொடர்ந்து நடுநிலை பேட்டர்களும் நல்ல பங்களிப்பைத் தந்தனர்.

எட்வர்ட்ஸ்
எட்வர்ட்ஸ்twitter

அரைசதம் அடித்த நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ்

குறிப்பாக, நெதர்லாந்து அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எட்வர்ட்ஸ், நிலைத்து நின்றபடி அரைசதம் அடித்தார். அவர், 69 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 1 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் அவ்வணியில் கடைசிக்கட்டத்தில் இறங்கி அதிரடியாக ஆடிய வீரர்களால் அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்களைக் குவித்தது. இதில் தென்னாப்பிரிக்கா அணி, 31 ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்கியிருந்தது. அவ்வணி தரப்பில், நிகிடி, ஜேன்சன், ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையும் படிக்க: மஜாஜ் செய்தபடியே மீட்டிங் நடத்திய விமான நிறுவன சி.இ.ஓ. - சர்ச்சையான பின் கொடுத்த விளக்கம்

ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்த தென்னாப்பிரிக்கா

பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணியில் தொடக்க பேட்டர்களான கேப்டன் பவுமாவும் விக்கெட் கீப்பர் டி.காக்கும் விரைவாகவே விக்கெட்டை இழந்தனர். கடந்த 2 போட்டிகளில் சதம் கண்ட டி.காக், இந்தப் போட்டியில் வெறும் 20 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். பின்னர் இறங்கிய வீரர்களும், சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் அந்த அணி, 44 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. அப்போது கிளாசனும் டேவிட் மில்லரும் கைகோர்த்தனர். இந்த இணை ஓரளவு தாக்குப்பிடித்து நின்றது.

twitter

மீண்டும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்த நெதர்லாந்து

எனினும், நெதர்லாந்து பவுலர்கள் அவர்களையும் பிரிப்பதில் மும்முரம் காட்டினர். அதன்படி, கிளாசன் 28 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். இதனால், டேவிட் மில்லர் மட்டும் அணியின் வெற்றிக்காக மற்ற வீரர்களுடன் இணைந்து போராடினார். ஆனாலும் மறுபுறம் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்தன. எனினும் அவரும், வான்வீக் பந்துவீச்சில் போல்டாகி நடையைக் கட்டினார். அவர் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் ஜெரால்டும், கேசவ் மகாராஜும் கொஞ்ச நேரம் களத்தில் நின்று அதிரடியில் கலக்கினாலும், தென்னாப்ரிக்கா அணியின் தோல்வி உறுதியானது. ஜெரால்டு 22 ரன்களிலும், மகாராஜ் 40 ரன்களிலும் வீழ்ந்தனர். மொத்தத்தில் அந்த அணி, 42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து நெதர்லாந்து அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் நெதர்லாந்து அணி, மீண்டும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடித்தது. தவிர, நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் முதல் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. நெதர்லாந்து அணி தரப்பில் வான்பீக் மட்டும் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மீக்கீரன், மெர்வே, லீடே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஏற்கெனவே நெதர்லாந்து அணி, உலகக்கோப்பை தொடரில் நமீபியாவை கடந்த 2003ஆம் ஆண்டு 64 ரன்கள் வித்தியாசத்திலும், 2007ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியுள்ளது. தொடர்ந்து ஒருநாள் (5 போட்டி) போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து வந்த தென்னாப்ரிக்கா அணி, இன்றைய போட்டியில் 207 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

இதையும் படிக்க: ’பாகிஸ்தானை வீழ்த்த மாந்திரீகரை வைத்து செய்வினை செய்தார்’ - ஜெய்ஷா மீது பாக். பத்திரிகையாளர் புகார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com