26 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு; பின்னணி என்ன? கருக்கலைப்பு உரிமையை மறுக்கிறதா?

பெண்ணின் 26 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதன் பின்னணி என்ன? பெண்களின் அடிப்படையான கருக்கலைப்பு உரிமையை இந்த உத்தரவு மறுக்கிறதா என்ற கேள்விகளுக்கு பதில் என்ன? விரிவாக பார்க்கலாம்.
கரு கலைக்க அனுமதி மறுப்பு
கரு கலைக்க அனுமதி மறுப்புpt web

ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் தன் வயிற்றில் வளரும் 26 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தான் மன அழுத்தம் உள்ளிட்ட சில பிரச்சனைகளை சந்தித்து வரும் சூழலில் மேலும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க விரும்பவில்லை என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 9 ஆம்தேதி, பெண்ணின் கருவை கலைக்க இரு நீதிபதிகள் அமர்வு அனுமதி வழங்கிய நிலையில், பெண்ணின் வயிற்றில் வளரும் கரு, உயிர்வாழ்வதற்கான வலுவான சாத்தியத்தை கொண்டிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்தது.

அந்த பெண்ணுக்கு எந்த விதமான கருக்கலைப்பை செய்ய வேண்டும் என்ற விளக்கத்தை உச்சநீதிமன்றத்திடம் கேட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வதற்கு மாற்றப்பட்டது. மீண்டும் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்து கருக்கலைப்பிற்கான சாத்தியம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய எய்ம்ஸ் மருத்துவமனை குழுவிற்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது.

அந்த குழு வழங்கிய அறிக்கையில் பெண்ணின் வயிற்றில் வளரும் கரு 26 வாரங்கள் மற்றும் ஐந்து நாட்களை கடந்து இருக்கிறது என்றும் கரு முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அறிக்கை வழங்கியது. கருவின் இதயத்துடிப்பை நிறுத்துவது போன்ற செயல்முறைகளை மேற்கொண்டு அது தவறாக போகும் பட்சத்தில் குழந்தை வாழ்நாள் முழுவதும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையையும் மருத்துவர் குழு வழங்கியது.

மருத்துவர்கள் குழு வழங்கிய அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் 26 வார கருவை கலைக்க அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இதேபோல ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், திருமணமாகி கைவிடப்பட்ட, திருமணமாகாத பெண்களும் 24 வாரம் வரையிலான கருவை கலைக்க உரிமை கொண்டவர்கள் என அறிவிக்கப்பட்டது.

கருக்கலைப்பில் திருமணமானவரா? இல்லையா என்று பாகுபாடு பார்ப்பது அரசியல் சாசனம் வழங்கி உரிமைக்கு எதிரானது என்றும், 24 வாரம் வரையிலான தனது கருவை கலைக்க வழி செய்யும் சட்டப்பிரிவு 3(2) (பி)-ஐ, திருமணமாகாத பெண்களுக்கும் பெருந்தும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. கருவை ஏற்பதும், மறுப்பதும் ஒவ்வொரு பெண்ணின் உரிமை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், தற்போதைய வழக்கில், 26 வார கரு என்பதால் அதனை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com