"டிச. 8-ஐ லைஃப்ல மறக்க மாட்டேன் dude.. ஒரே நாள்ல எத்தன தோல்வி" கண்ணீர் விடும் கிரிக்கெட் ரசிகர்கள்!
டிசம்பர் 8. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக இந்த நாளை மறந்துவிட மாட்டார்கள். இந்திய கிரிக்கெட் உலகுக்கு நேற்றைய நாள் மிக சோகமான நாளாக அமைந்துவிட்டது. இந்திய ஆடவர் அணி, மகளிர் அணி, 19 வயதுக்குட்பட்ட்டோருக்கான ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணி என மூன்று அணிகளும் முக்கியமான போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் மூன்று அணிகளும் வெற்றிக்கு அருகில் கூட செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs AUS test
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, மிட்செல் ஸ்டார்க்கின் 6 விக்கெட்டுகள் என்ற அபாரமான ஸ்பெல்லில் சிக்கி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான சதத்தால் 337 ரன்கள் சேர்த்தது.
பின், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி மீண்டும் தடுமாற்றத்துடனே ஆட்டத்தைத் தொடங்கியது. ஜெய்ஸ்வால், ராகுல், கில், கோலி என அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இறுதியில் சற்று நிலைத்து நின்று ஆடிய நிதிஷ் ரெட்டி மட்டும் 42 ரன்களை எடுத்து ஆறுதல் தந்தார். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 175 ரன்களை சேர்த்து 18 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்களையும், போலந்த் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் எனும் எளிய இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கி, 3.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. தொடரையும் 1-1 என்று சமன் செய்தது. ஆட்டநாயகனாக ட்ராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.
INDw vs AUSw 2nd ODI
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 371 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ஜியார்ஜியா மற்றும் எல்லிஸ் பெர்ரி சதமடித்து அசத்தினர். 372 எனும் மிகப்பெரிய ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி தடுமாற்றத்துடனே ஆட்டத்தைத் தொடங்கியது. ஸ்மிருதி மந்தனா 9 ரன்களில் வெளியேற எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனைகள் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் மட்டும் 54 ரன்களை எடுத்திருந்தார். முடிவில் இந்திய அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 249 ரன்களை மட்டுமே தோல்வி அடைந்தது.
ACC U19 Asia Cup Ban U19 vs Ind U19
11-வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில், பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வங்கதேச அணியும், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இறுதிப் போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
பரபரப்பான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.1 ஓவரில் 198 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அதற்குபிறகு விளையாடிய இந்திய அணி எப்படியும் எளிதாக இலக்கை எட்டிவிடும் என எதிர்ப்பார்த்த நிலையில், கடந்த போட்டிகளில் சதமடித்த அனைத்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே ஆட்டம் வங்கதேசம் பக்கம் சென்றது. மேலும் மேலும் மிடில் ஆர்டர் வீரர்களுக்கு அழுத்தம் போட்ட வங்கதேச பவுலர்கள் இந்திய அணியை 139 ரன்களுக்கே ஆல் அவுட் செய்து 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றனர்.
முன்பே சொன்னதுபோல, மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிக்கு அருகில் கூட செல்லவில்லை.