ஆதவ் அர்ஜூனா மீது விசிக எடுத்த அதிரடி ஒழுங்கு நடவடிக்கை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட திருமா!
விசிக துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் விஜய் பங்கேற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் திமுகவுக்கு எதிராக விசிக துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் ஆர்ஜூனா பேசியிருந்தார். மேலும், சமீபகாலமாகவே ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு சர்ச்சைக்குரியதாகவே இருந்து வந்தது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் வெளியான நிலையில், “உயர்நிலைக் குழுவிலே கலந்தாய்வு செய்து பேசிதான் ஆதவ் அர்ஜூனாவை கட்சியிலிருந்து நீக்க முடியுமா? இல்லையா? அவர்மீது என்ன நடவடிக்கை இருக்கும் என்று கூறமுடியும்” என்று விசிக திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்சியின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக ஆதவ் அர்ஜூனா செயல்பட்டதால் அவரை 6 மாத காலம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்த பதிவில்,
“ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு:
1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
2. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்”
என்று திருமாவளவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.