பார் திறந்து வைத்தாரா திருமாவளவன்... உண்மை என்ன..?
சென்னை புழல் பகுதியில் 'பார்' வசதியுடன் கூடிய கிளப் ஒன்றை விடுதலை சிறத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திறந்து வைத்ததாக செய்திகள் வெளியாகின. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. “கடந்த அக்டோபர் மாதம், மது ஒழிப்பு மாநாட்டை நடத்திவிட்டு, திருமாவளவனே பார் வசதியுடன் கூடிய கிளப்பை திறந்து வைப்பதா?” என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் நடந்தது என்ன?
உண்மை என்ன?
சென்னை புழல் பகுதியில் உள்ள தனியார் கிளப் ஒன்றை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டிசம்பர் 7 ஆம் தேதி திறந்து வைத்தார். வி.கே. சசிகலாவின் உறவினர் பாஸ்கரனுக்கு சொந்தமானதாக கூறப்படும் இந்த கிளப்பில், நீச்சல் குளம், டென்னிஸ் மைதானங்கள், பார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. J clubன் வலைப்பக்கத்தில் அங்கு என்ன என்ன வசதிகள் இருக்கின்றன என்பவை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பெரிய நிகழ்ச்சிகளுக்கான அரங்கு, ரெஸ்டோபார் போன்ற வசதிகளுடன் இந்த கிளப்பை 2022ம் ஆண்டு தொடங்கியிருக்கிறார் பாஸ்கரன். இந்த டிசம்பர் மாதம் அந்த கிளப்பில் மேலும் சில வசதிகளை இணைத்திருக்கிறார்கள். உணவகம், காஃபி ஷாப், பேட்மின்டன் கோர்ட், குழந்தைகளுக்கான பிரத்யேக அரங்கு போன்ற வசதிகளை தற்போது தொடங்கியிருக்கிறார்கள். இந்த வாரம் திருமாவளவன் தொடங்கி வைத்தது இந்த வசதிகளைத்தான் என்று தெரிவிக்கிறார்கள்.
இதை விசிக பொதுச்செயலாளர் வன்னியரசும், X தளத்தில் உறுதி செய்திருக்கிறார். “நேற்று டிசம்பர் 7 ஆம் தேதி மாலை புழல் அருகே ‘ஜே கிளப் ’ நிறுவனத்தின் சைவ உணவகம், நீச்சல் குளம், பேட்மின்டன் விளையாட்டரங்கம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம் ஆகியவற்றை விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் திறந்து வைத்தார்.
‘J club’ நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கரன் அவர்கள், திருமாவளவன் மீதான பேரன்பினால் அந்நிகழ்வுக்கு அழைத்திருந்தார். அவரது அழைப்பையேற்றுத் திருமாவளவன் பங்கேற்றார். ஆனால், அங்கே ‘மது பாரினைத்’ திறந்து வைத்ததாக அவதூறு பரப்புகின்றனர். இப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
திருமாவளவன் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.