RCB-க்கு இனி வேட்டை தான்.. 100 சராசரி.. முதல் இந்திய வீரராக தேவ்தத் படிக்கல் வரலாறு!
விஜய் ஹசாரே டிராபியில் தேவ்தத் படிக்கல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 600 ரன்களை குவித்து முதல் இந்திய வீரராக வரலாறு படைத்துள்ளார். இந்திய தேர்வுக்குழுவின் கதவை உடைத்துள்ளார் தேவ்தத் படிக்கல்..
இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே டிராபியின் 33ஆவது சீசன் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பங்கேற்று இளம் வீரர்களுடன் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
ஐபிஎல் ஏலத்தில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அங்கீகரிக்கப்படுவதால், ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தசூழலில் தான் நடப்பு சீசனில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தேவ்தத் படிக்கல், முதல் இந்திய வீரராக வரலாறு படைத்துள்ளார்.
வரலாறு படைத்த படிக்கல்..
கடந்த 2025 ஐபிஎல் சீசனிலேயே ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் இம்பேக்ட் வீரராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் படிக்கல், ஆனால் கோப்பை வெல்வதற்கு முன்பாக காயம் ஏற்பட்டதால் தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகினார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் விளையாடினார்.
இந்தசூழலில் காயத்திலிருந்து மீண்டுவந்து சிறப்பான ஃபார்மில் ஜொலித்துவரும் படிக்கல், நடப்பு விஜய் ஹசாரே தொடரில் 4 சதங்களை பதிவுசெய்து 600 ரன்களை குவித்து மிரட்டியுள்ளார். 102 சராசரியுடன் 605* ரன்களை குவித்திருக்கும் படிக்கல், கடந்த 2019-20 சீசனில் 609 ரன்கள், 2020-21 சீசனிலும் 737 ரன்கள் குவித்து 3 வெவ்வேறு சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய வீரராக வரலாறு படைத்தார்.
இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 91 ரன்களை அடித்ததன்மூலம் இச்சாதனையை படைத்தார் படிக்கல். 2026 ஐபிஎல் தொடரில் படிக்கலுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயரே ஆர்சிபிக்கு முதல் தேர்வாக இருப்பார் என சொல்லப்பட்ட நிலையில், தன்னுடைய இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என மிரட்டிவருகிறார் படிக்கல்.. இந்திய டெஸ்ட் அணிக்கும் மீண்டும் திரும்புவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது..

