'என்னடா பா வயசு உனக்கு..' 1 பவுண்டரி.. 10 சிக்சர்கள்.. 283 ஸ்ட்ரைக் ரேட்! சூர்யவன்ஷி மிரட்டல்!
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், 14 வயது கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி 24 பந்தில் 68 ரன்கள் குவித்து இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடையச் செய்தார். 283 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய சூர்யவன்ஷி, தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் மிரட்டினார்.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய யு19 அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கேப்டன் ஆயுஸ் மாத்ரேவிற்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், இத்தொடரில் இந்திய அணியை சூர்யவன்ஷி வழிநடத்துகிறார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் 301 ரன்கள் குவித்த இந்தியா, DLS முறைப்படி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது.
24 பந்தில் 68 ரன்கள் விளாசிய சூர்யவன்சி..
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 49.3 ஓவரில் 245 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
246 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி, 24 பந்தில் 1 பவுண்டரி 10 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து 283 ஸ்ட்ரைக்ரேட்டில் 68 ரன்கள் குவித்து மிரட்டினார். மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் தடைபட்ட நிலையில், இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 174 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது.
14 வயதான இந்திய இளம்வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய மண்ணில் மட்டுமே அதிரடியாக விளையாடுகிறார் என சொல்லப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்கா மண்ணிலும் தன்னுடைய அதிரடி பேட்டிங்கை வானவேடிக்கையாக காட்டி மிரட்டியுள்ளார் சூர்யவன்ஷி..

