'வங்கதேசம் பாகிஸ்தான் அல்ல.. முஸ்தபிசூர் இந்து வீரராக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?'- சசி தரூர்
தாக்கத்வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை கேகேஆர் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார். வங்கதேசம் பாகிஸ்தான் அல்ல, இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு அல்ல என அவர் கூறினார். முஸ்தஃபிசூர் ஒரு விளையாட்டு வீரர் மட்டுமே, சமூக ஊடகங்களின் தாக்கத்தை கிரிக்கெட் ஏன் சுமக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
ஐபிஎல் தொடரில் அங்கம் வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை 9.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது. இதற்கிடையே, வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறையில் இந்து மதத்தைச் சேர்ந்த இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த பதட்டமான சுழலை அடுத்து, முஸ்தஃபிசூர் ரஹ்மானை கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என எதிர்ப்பலைகள் எழுந்தன. இதையடுத்து பிசிசிஐ அவரை, உடனே நீக்க வேண்டும் என கேகேஆர் அணி நிர்வாகத்திடம் வலியுறுத்தியிருந்தது. இவ்விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்ததுடன், ஐசிசிக்கும் கடிதம் எழுதியுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரப்ப மாட்டோம் என்றும் வங்கதேச அரசு முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தசூழலில் தான் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றிய முடிவை முட்டாள் தனமானது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சித்துள்ளார்..
முஸ்தஃபிசூர் மீதான நடவடிக்கை கொடூரமானது..
முஸ்தஃபிசூர் மீதான நடவடிக்கை குறித்து சமீபத்திய உரையாடல் ஒன்றில் பேசியிருக்கும் காங்கிரஸின் மூத்த தலைவர் சசி தரூர், வங்கதேசம் பாகிஸ்தான் அல்ல. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடும் வங்கதேசம் கிடையாது. இரண்டு நாடுகளையும் ஒரே அளவுகோலில் பார்க்க முடியாது.
முஸ்தபிசூர் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் அல்ல. வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை ஆதரித்தவரும் அல்ல. முஸ்தபிசூர் ஒரு விளையாட்டு வீரர் மட்டுமே. இங்கே நாம் யாரை பலிகடா ஆக்குகிறோம். மேலும் சமூக ஊடகங்களின் தாக்கத்தின் சுமையை கிரிக்கெட் ஏன் சுமக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.
உலகக்கோப்பைக்கு வரவேண்டாம் என சொல்வீர்களா..?
மேலும், சமூக ஊடகங்களின் எதிர்ப்பின் தாக்கத்தால், ஒவ்வொரு வங்கதேச கிரிக்கெட் வீரரும் இந்தியாவில் விளையாட தகுதியற்றவர் என்று நாம் இப்போது முடிவு செய்துவிட்டோமா? ஒருவேளை முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு பதிலாக லிட்டன் தாஸ் அல்லது சௌமியா சர்க்கார் போன்ற வங்கதேச இந்து கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தால், அவர்களும் வெளியேற்றப்பட்டிருப்பார்களா? அப்படி இல்லையென்றால், நாம் இங்கே எதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்?
நாம் ஒரு சகிப்புத்தன்மையற்ற நாடாக இருக்கிறோமா? இந்து வங்கதேச நபர்களுக்கு எதிராக அல்லாமல், முஸ்லிம் வங்கதேச நபர்களுக்கு எதிராக மாறி இருக்கிறோமா? என்ற கேள்வி எழுகிறது.
சமூக ஊடகங்களில் ஏற்பட்ட சீற்றத்திற்கு எதிர்வினையாக, இந்த அபத்தமான முடிவை எடுத்த எவரும் இதைப்பற்றி எல்லாம் யோசித்துப் பார்க்கவில்லையா? இது முற்றிலும் அபத்தமான ஒன்றென நான் நினைக்கிறேன். என் கருத்துப்படி, இந்த முடிவு ஒரு தேசமாக நம்மை இழிவுபடுத்துகிறது, நமது கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறது.
வங்கதேச வீரர்களே வேண்டாம் என முடிவெடுத்துவிட்டால், இந்தியாவிற்கு வந்து 2026 டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டாம் என வங்கதேசத்தை சொல்லிவிடுவீர்களா? எனக்கு இது புரியவே இல்லை. இதுபோன்ற முடிவுகளை எடுத்தவர்கள், தங்களை தாங்களே விளக்கிக் கொள்ளட்டும். முஸ்தஃபிசூரை வெளியேற்றிவிட்டு வங்கதேசத்தை உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என நம்ப வைக்கப்போகிறீர்களா? இது ஒரு முட்டாள் தனமான முடிவு என விமர்சித்துள்ளார்.

