தொ.பரமசிவன்
தொ.பரமசிவன்pt web

அழகர் கோயில் To உரைகல்| தமிழ் சமூகத்தின் வேர்களை வெளிக்காட்டிய ஆய்வாளர் தொ. பரமசிவன்! நினைவு கூறல்..

”நவீனத்தின் வழியே பழமை மீது வெளிச்சத்தையும், பழமையின் வெளிச்சத்தில் நவீனத்தின் இருட்டையும் கண்டறியும் பணியை தொ.ப. தனது எழுத்துகள் மூலமாக தொடர்ந்து செய்தார்” கட்டுரையில்...
Published on

ஆய்வாளர் தொ.பரமசிவன்

‘கலாசாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது’ என்று ஆய்வாளர்கள் பேசுகின்ற தத்துவ மொழியை உடைத்தெறிந்து எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரிய வைத்தவர் தொ.பரமசிவன். கல்வெட்டுகள், புராணங்கள், இலக்கியங்களில் இருந்து தமிழர் வராலாறுகள் சொல்லப்பட்டு வந்த சூழலில், நாட்டார் வழக்காற்றியல் மற்றும் மக்களது வாழ்வியலில் இருந்து வரலாற்றை பேசியவர் தொ.பரமசிவன். தமிழ் பண்பாட்டின் வேர்களை தனது கட்டுரைகள் வாயிலாக ஆவணப்படுத்தியவர், அவர்.

எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி
எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி

தொ.பரமசிவன் ஆய்வுகள் குறித்து பேசுவதற்கு எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியை தொடர்பு கொண்டோம்., அவர் கூறியதாவது, “ஒரு சமூகம் எவ்வளவு தூரம் தன் வேருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்கிற பார்வையை விதைத்ததில் தொ.ப.வின் எழுத்துகள் மிக முக்கியமானது. ஏனென்றால், அது அரசியல்பூர்வமானது. ஆதிச்சநல்லூர், கீழடி போல் மண்ணுக்குக் கீழ் கிடைத்த தடயங்களும் சரி, ஓலைச்சுவடி, புத்தகங்கள் என்று மண்ணுக்கு மேல் கிடைத்த தடயங்களும் சரி, இந்த இரண்டுக்கும் இடையே நின்று மனிதர்களிடம் இருக்கும் அறிவைத் திரட்டிக் கொடுத்ததில் மிக முக்கியமான ஆய்வாளராக தொ.பரமசிவன் இருக்கிறார்.

ஆய்வாளன் என்ற சொல் மிக முக்கியமானது. ஏனென்றால், நாம் எங்கிருந்து வந்தோம் என பேசி, இன்று இருக்கும் நிலைமையைச் சரிசெய்ய தொ.ப முயன்றார். அதாவது, நவீனத்தின் வழியே பழமை மீது வெளிச்சத்தையும், பழமையின் வெளிச்சத்தில் நவீனத்தின் இருட்டையும் கண்டறியும் பணியை தொ.ப. தனது எழுத்துகள் மூலமாக தொடர்ந்து செய்தார்” எனத் தெரிவித்தார்.

தொ.பரமசிவன்
தேர்தல் விதிமுறை திருத்தங்களுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு!

அழகர் கோயில்

தொ. பரமசிவன், தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக புதுமைப்பித்தனைப் பற்றி ஆய்வு செய்யவே விரும்பினார். ஆனால், அவரது ஆய்வு நெறியாளர் மு.சண்முகம் பிள்ளை, கோயில் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு கூற, அழகர் கோயிலை தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டார். அழகர் கோயில் தொடர்பான இவரது ஆய்வு நூலான ‘அழகர் கோயில்’ இன்றளவும் கோவில் ஆய்வு நூல்களில் கொண்டாடப்படக்கூடிய படைப்பாகும். கோயில் தொடர்பான ஆய்வுகளுக்கு முன்னோடியாகவும் அந்த நூல் பார்க்கப்படுகிறது.

அழகர் கோயில் நூல் தொடர்பாக பேசினார் நாற்கரம் பதிப்பகத்தின் பதிப்பாளரும், சிற்றுளி கலை இலக்கிய இதழின் ஆசிரியருமான நல்லு ஆர். லிங்கம், “அழகர் கோயில் புத்தகத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழகமே வெளியிட்டார்கள். எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 7 முதல் 8 பதிப்புகளை வெளியிட்டுவிட்டார்கள். ஒரு ஆய்வு நூல் அற்புதமான வாசிப்பு அனுபவத்தையும் கொடுக்குமென்றால் ‘அழகர் கோயில்’ நூலை எடுத்துக்காட்டலாம். இத்தனைக்கும், அந்த ஆய்வு 80களின் தொடக்கத்தில் செய்யப்பட்ட ஆய்வு. நாம் இப்போது 2024ன் இறுதியில் இருக்கிறோம்” என்றார்.

தொ.பரமசிவன்
ரூ.91,771 விலையில் அறிமுகமானது புதிய 2025 ஹோண்டா SP125 பைக்.. சிறப்புகள் என்ன? முழு விவரம்!

இளைஞர்களுக்கு ஏன் தொ.பரமசிவன் முக்கியம்.. 

அழகர் கோயில் நூலுக்குப் பின்னர் வெளியான 'அறியப்படாத தமிழகம்' நூல் அவரை தமிழ் வாசிப்பு பரப்பு எங்கிலும் அவரைக் கொண்டு சென்றது. திராவிட சிந்தனைகளுடன் ஆய்வு முறையை கையாண்ட தொ.பரமசிவன், தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை இளைஞர்களுக்கு அறிமுகம் செய்தவர்.

சமகால இளைஞர்கள் தொ.பரமசிவன் புத்தகங்களை வாசிப்பது ஏன் முக்கியம் என்பது குறித்தும் பேசினார் கார்த்திக் புகழேந்தி. “இன்றைய காலக்கட்டத்தில் அரசியல்படுத்தப்பட்ட தலைமுறையை உருவாக்குவதில், தொ. பரமசிவன் புத்தகங்கள் அடிப்படைத் தேவையாக உள்ளது. அவரது புத்தகங்களை வாசிப்பது என்பது மிகப்பெரிய சமையல் விருந்தில் கலந்துகொண்டு பசியாறுவதுபோல். உதாரணத்திற்கு, பலதரப்பட்ட அரசியல் பார்வைகளை ஒரு மேசையில் பரிமாறும் ஆளாக தொ.ப. இருந்தார்.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்தின் அரசியலையும் பேசியுள்ளார்; பூனா ஒப்பந்தத்தில் என்ன நிகழ்ந்தது? அதன்மூலம் என்ன மாறியது? என்பது குறித்தும் பேசியுள்ளார்; மடங்களின் மூலமாக நாட்டார் தெய்வங்கள் மேல் நிகழ்த்தப்படும் பண்பாட்டுப் படையெடுப்புகளைக் குறித்தும் எழுதியுள்ளார். அரசியல் தெளிவுள்ள தலைமுறையாக இளைஞர்கள் உருவாவதற்கு தொ.பரமசிவன் படைப்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தொ.பரமசிவன் தன் எழுத்தை இன்றைய தலைமுறைக்கு கையளித்திருக்கிறார்” என்கிறார் கார்த்திக் புகழேந்தி.

தொ.பரமசிவன்
விபரீத அறிவிப்பு.. விவசாயிக்கு பாதுகாப்பு கொடுத்ததற்காக ரூ.9.91 லட்சம் கேட்ட போலீஸ்.. என்ன நடந்தது?

பரணில் இருந்ததாலே ‘பரண்’

பண்பாட்டு அசைவுகள், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், விடு பூக்கள், உரைகல், இந்து தேசியம், இதுவே சனநாயகம், மானுட வாசிப்பு, மஞ்சள் மகிமை போன்ற ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் தொ. பரமசிவன்.

நல்லு ஆர். லிங்கம்
நல்லு ஆர். லிங்கம்

‘பரண்’ நூல் குறித்து சுவையான தகவலைச் சொன்னார் நல்லு ஆர். லிங்கம். “ஆரம்ப காலக்கட்டங்களில் தொ.பரமசிவன் தனது நூல்களை வெளியிடுவதில் பெரிய ஈடுபாட்டைக் காட்டவில்லை. அவரது நட்பு வட்டத்தில் இருந்தவர்கள்தான் அவ்வப்போது அவரது கட்டுரைகளை நூலாக தொகுத்து வெளியிட்டனர். பெரும்பாலும் அவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் பரண் மேலேதான் இருந்தது. அந்தக் கட்டுரைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவரது நண்பர்கள் நூலாக தொகுத்து வெளியிட முயன்றபோது தொ.பரமசிவன் அதற்கு பரண் என பெயர் வைத்தார்” என்றார்.

நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் முக்கியத்துவம் என்ன?

தொ.பரமசிவன் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் முக்கியத்துவம் குறித்து இருவருமே பேசினர். கார்த்திக் புகழேந்தி கூறுகையில், “இந்த அரசு அமைந்த பின்பே தொ.பரமசிவன் புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கினார்கள். நாட்டுடைமை ஆக்கப்பட்டது மிக முக்கியத்துவம் வாய்ந்த செயல். அவரது புத்தகங்களை ஒவ்வொரு மாணவரது கைகளிலும் கொண்டு சேர்ப்பது இன்று நிகழ்ந்துள்ளது” என்றார்.

தொ.பரமசிவன்
“பிரிவினைதான் பாஜகவின் வேலை” - மீண்டும் சூடுபிடிக்கும் விவாதம் அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி!

நல்லு ஆர்.லிங்கம் கூறுகையில், “தொ.பரமசிவன் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்ட பிறகு, பரவலாக அதிகமான பதிப்பகங்கள் அவரது புத்தகங்களைப் பதிப்பித்தன. நாங்களும் அவரது மொத்த நூல்களையும் தொகுத்து, புத்தகங்களில் இடம்பெறாத அவரது பேட்டிகள் சிலவற்றையும் சேர்த்து, ‘தொ.பரமசிவன் ஆய்வுலகம்’ எனும் பெயரில் 1800 பக்க அளவில் அந்த புத்தகத்தைக் கொண்டு வந்தோம். இரு பாகங்களாக இருந்த அந்த புத்தகத்தை ரூ.500 எனும் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிட்டோம். இந்தாண்டு புத்தகக் கண்காட்சியிலும் அந்த தொகுப்பை ரூ.800 எனும் விலையில் கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளோம்” என்றார்.

தமிழ் சமூக சூழலில் தொ.பரமசிவன் ஆய்வுகள் மிக முக்கியமானது. அத்தகைய ஆய்வாளருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற பலரது கோரிக்கையை அரசு செயல்படுத்த வேண்டும் என்கிறார் கார்த்திக் புகழேந்தி. “தொ. பரமசிவன் பிறந்த திருநெல்வேலியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது. ஆனால், அது தேங்கி நிற்கிறது. அதற்கான செயல்களை அரசு முன்னெடுக்க வேண்டும். தேங்கி இருக்கும் அந்த செயல் முழுமை பெற்றால், அடுத்த தலைமுறைக்கும் தொ.பரமசிவன் விரைவில் சென்று சேருவார்” என்றார்.

தொ.பரமசிவன் வரலாற்றால் மறுக்க முடியாத ஆய்வாளனாக வாழ்ந்து தனது வாழ்வை நிறைவு செய்தவர். அவருடைய எழுத்து புதிய தலைமுறை இளைஞர்களிடம் சென்று சேர வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்.

தொ.பரமசிவன்
2024 அரசியல் சர்ச்சைகள் | 'கடவுளால் அனுப்பப்பட்டவன் - மோடி' To 'அம்பேத்கர், அம்பேத்கர்.. - அமித்ஷா'

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com