தேர்தல் விதிமுறை திருத்தங்களுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு!
மத்திய சட்டத்துறை அமைச்சகம் தேர்தல் விதிமுறைகளை திருத்தி டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. தேர்தல் விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றம் வெளிப்படைத்தன்மையை பாதிப்பதாக விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது என கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.
சுட்டுரையில் ஜெயராம் ரமேஷ் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து, சர்ச்சைக்குரிய புதிய தேர்தல் விதிகள் ஜனநாயகத்தை சிதைப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.
டிசம்பர் 9-தாம் தேதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு முக்கிய உத்தரவை வழங்கியது. அந்த உத்தரவுப்படி சமீபத்தில் ஹரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது வாக்குப்பதிவு மையத்தின் வீடியோ காட்சிகளை முகமது பிராச்சா எனப்படும் வழக்கறிஞருக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதுகாப்பு கேமரா காட்சிகள் மற்றும் அந்த வாக்கு பதிவு மையத்தில் நடைபெற்ற காணொளி பதிவு ஆகிய அனைத்து நகலும் மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போதே தேர்தல் ஆணையம் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முகமது பிரச்சா அந்தத் தொகுதியின் வேட்பாளர் அல்ல எனவும் அவருக்கு காணொளி காட்சிகளை வழங்க உத்தரவிடக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்தது. ஆனால் அதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. வேட்பாளராக இருந்தால் கட்டணமின்றி அவருக்கு காணொளி விவரங்கள் அளிக்கப்பட வேண்டும் எனவும் மனுதாரர் வேட்பாளர் இல்லை என்பதால் அவரிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்பது மட்டுமே ஒரே மாற்றம் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஆகவே அந்த வாக்குச்சாவடியின் காணொளி பதிவுகளை மனுதாரர் முகமது பிரச்சசாவுக்கு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இத்தகைய சூழலில் மத்திய சட்ட அமைச்சகம் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்தது. டிசம்பர் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் தேர்தல் விதிமுறை 93 திருத்தப்பட்டது. இந்த விதியின் உட்பிரிவு 2 (A) திருத்தப்பட்டதால், தேர்தல் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்கிற நடைமுறையில் மாற்றம் ஏற்படுகிறது என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே முகமது பிராச்சா போன்ற மனுதாரர்களுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை பகிர வேண்டும் என்கிற கட்டாயம் இனி கிடையாது என்கிற சூழல் உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த சட்ட திருத்தம் புதிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இரண்டு பிரிவுகளாக உள்ள 17C ஆவணங்களை ஆறு வாரங்களுக்குள் வழங்க பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு நீதிமன்ற உத்தரவை தடுக்கும் வகையில் இத்தகைய அரசாணை பிறப்பித்துள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும். இது தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மையை பாதிக்கும் எனவும் ஜனநாயகத்துக்கு எதிரான செயல் எனவும் பல்வேறு எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தனது பதிவு மூலம், "நேர்மையான, நியாயமான தேர்தல் நடைமுறையை மத்திய அரசின் உத்தரவு கேள்விக்குறியாகி உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹரியானா சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா மாநிலத்தில் "தேர்தல் புனித தன்மையை கெடுத்து பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளதால் அடைந்துள்ள பதட்டத்தின்" எதிரொலியே இந்த உத்தரவு என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசு தேர்தல் விதிமுறைகளை திருத்தி டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.