சக்கர வியூகம் 6 | அரசாங்க அழைப்பு

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் ஆறாம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.
சக்கர வியூகம் 6
சக்கர வியூகம் 6புதிய தலைமுறை

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்

அத்தியாயம் 6 - அரசாங்க அழைப்பு

எல்லா தொலைபேசி அழைப்புகளும் விசேஷமானவைகள் அல்ல. எப்போதும் காத்திருக்கும் மீட்டிங் அழைப்புகளும், விஐபி சந்திப்புகளும், ஏர்போர்ட் முகமன்களைப்பற்றிய செய்திகளும் பழகிப்போன நாட்களிவை.

ஆகவே எவ்வளவு பெரிய விஐபி அழைத்தாலும் ஆச்சர்யப்பட்ட ஆரம்ப நாட்களிலிருந்து சற்று விலகிதான் வந்திருக்கிறேன். அழைக்கும் விஐபியின் பொருண்மை குறித்து கணக்குகளும், அவன் இங்கே எவ்வளவு தூரம் வரை முதலீடுகளுக்குக் கூட்டிச்செல்ல முடியும், அதில் என் கமிஷன் என்ன என்பது வரையிலான கணிதங்களைப் பொறுத்தே எல்லா அழைப்புகளின் மீதான முக்கியத்துவங்களும் நிர்ணயிக்கப்படுகின்றன.

ஆனால் அன்று வந்தது அதே நிலா அல்ல. இந்த தேசத்து மன்னரின் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது அந்த அழைப்பு. நேரடியாக என் செல் ஃபோன் எண்ணைப்பெற்று இளவரசர் ஷேக் அமானுல்லாவின் செக்கரட்ரியின் அழைப்பு அது.

ஷேக் அமானுல்லா என்னை சந்திக்க விரும்புவதாக வழங்கப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட் கால். ஷேக்குடனான அப்பாயிண்ட்மெண்ட் நேரம், நான் அணிந்து வர வேண்டிய உடைகள், நடந்துகொள்ளவேண்டிய விதம் என ஏகப்பட்ட விவரணைகள், கட்டுப்பாடுகளுடன் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலும்.

சற்று விதிர்விதிர்த்துத்தான் போனேன். இது வரமா சாபமா என்று தெரியவில்லையே? என்னதான் ஒரு கார்ப்பரேட்டில் என் விரலசைவுக்கு பலம் உண்டெனினும், அரசாங்கத்தின் முன்பு நான் ஒரு கொசுதான்.

ஒருவேளை என் சாதுர்யத்தின் பலங்களினால் நான் பெரும் பலங்களை அசைபோட்டு அது தொடர்பாகக் கூப்பிடுவார்களோ என்று எண்ணினேன். அல்லது ரெட்டியின் மிக அதிகமான முதலீடுகள் குறித்த விசாரணை? சென்ற வாரம் அதிரடியாக துறைமுகத்திலிருந்து வெளியேற்றி எடுத்து வந்த இரண்டு கண்டெய்னர் ஆப்பிள் ஃபோன்கள் பற்றி ஏதாவது.

ஏதேதோ கடும் பயங்கள் சற்று சுழற்றிப்பார்த்தன. என் அனாதரட்சகர் ஆர்ஜேயை விட்டால் இந்த நேரத்தில் எனக்கு வேறார் துணை. ஆனால் அவரை அவராக நினைத்தாலொழிய தொடர்புகொள்ள முடியாது. செல்ஃபோன்கள் கிடையாது,

ஆசிரமங்கள் கிடையாது, தொடர்பெண் கிடையாது. அவராக அழைத்துப்பேசும் நாளில்தான் அவரோடு பேசமுடியும். சற்று யோசித்து அவருக்கென ஒரு பக்தர் நடத்தி வந்த யூட்யூப் சேனலை இயக்கிப்பார்த்தேன். சற்றுமுன்பு ஒரு பதிவு கோதாவரிக்கரையில் அவர் ராமர் சென்ற பாதையில் சென்று ஒரு வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னது. ஷேக்கைச்சந்திக்க இன்னும் சரியாக 23 மணி நேரங்கள் இருக்கிறது.

துரிதமாகச்செயல்பட்டு, ஒரு சார்டர்ட் ஃபிளைட்டை ஐதராபாதுக்கு புக் செய்தேன். அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அங்கிருந்து கோதாவரிக்கரைக்குப் போய்வர கார் ஏற்பாடுகள் செய்யச் சொன்னேன். ஒருமணி நேரத்தில் தயாராகி, விமானமேறி கோதாவரிக்கரைக்குச்சென்று சேர்ந்தபோது ஸ்வாமி தூங்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

சக்கர வியூகம் 6
சக்கர வியூகம் 5 | கத்தகரு வெங்கட ரெட்டி

தென்னங்கூரை வேய்ந்த ஒரு குடிலில் கீழே ஒரு உரைச் சாக்குப்பையைப் போட்டுக்கொண்டு தலைக்கு கையை வைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தார். அவர் காலடியில் சற்று தள்ளி ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டேன். எத்தனை எளிமை. அந்த மலையாள நடிகரும் சரி, ரெட்டியும் சரி, பின்னர் நான் பார்த்த பல விஐபிக்களும் சரி இவர் பெயரைச்சொன்னதும் எவ்வளவு மரியாதையாகப் பேசுகிறார்கள். அவ்வளவு உயரங்களைத்தொட்ட மனிதர்களை அருகில் வைத்திருந்தும் பிடிவாதமாக சன்னியாசமும், பிக்‌ஷை பெற்றே உணவருந்துதலும், இது போன்ற கட்டாந்தரை உறக்கமுமாக – ஒரு மனிதனின் மனம் இவ்வளவு ஆழத்தில் இப்படிப் பயணிக்க எது ஊக்கமாக இருந்திருக்க முடியும்.

யோசனைகள் பலவாறாகச் சென்றது. நன்றாகவே வேர்த்தது. சற்று நடந்து போய் காருக்குள் ஏசியைப்போட்டு அமர்ந்துகொள்ளலாம் போலத்தான் இருந்தது. ஆனால் சற்று முன்பு ஸ்வாமியைப்பற்றி எழுந்த சிந்தனைகளின் நீட்சியால் சற்று நேரம் கூட இப்படி இருக்கவில்லையென்றால் அப்படியென்ன ஒரு மனம் என்று தோன்றி அந்த எண்ணத்தைத்தள்ளி வைத்தேன்.

ஸ்வாமியின் வெளிப்பாதங்கள் ஒரு பெரிய பஞ்சு மிட்டாயைப்போல அத்தனை இளஞ்சிவப்பாக, அத்தனை தூய்மையாக ஒரு பெருமலரின் இதழ் போல இருந்தது. அதைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டிருக்கும்போதே ஸ்வாமியிடம் அசைவு தெரிந்தது.

திரும்பியவர், ஒரு கணம் அதிர்ந்து

“மிருணாளினி, நீ எங்கே கேர்ள் எங்கே “ என்றார், எல்லாம் ஒரு நொடிதான். பிறகு அந்த முகத்திற்கென்றே அமையப்பெற்ற புன்னகை வந்து ஒட்டிக்கொள்ளும்.

சக்கர வியூகம் 6
சக்கர வியூகம் 4 | நட்சத்திர வரவு

”உங்களைப்பார்த்து நெடு நாளாச்சே ஸ்வாமி, அதான்” என்றபடியே விழுந்து வணங்கினேன்.

”தீர்க்கானந்தம் பிராப்திரஸ்து, தீர்க்கானந்தம் பிராப்திரஸ்து” என்றார் இருமுறை.

”என் பாக்கியம் கேர்ள் உனக்கு. இன்றுமாலையோ, நாளையோ அழைத்துப்பேச வேண்டும் என்றிருந்தேன்.” என்றார்

”அந்த அழைப்பு வராமலாகிடுமோ என்ற பதற்றத்தில்தான் ஸ்வாமி நான் விமானம் பிடித்து வந்திருக்கிறேன்” என்றேன்

புருவம் சுருக்கினார். பிறகு உதட்டைப்பிதுக்கி

“சரி சொல்” என்றார்.

“குருதான் எப்போதும் முதல்” என்றேன்.

சிரித்துக்கொண்டே, “இங்கு இரண்டு நாட்களாக வகுப்பெடுக்கிறேன். இங்கு பல மலைக்கிராமங்களில் பள்ளிகளே இல்லை. குழந்தைகள் ஆடும் மாடும் மேய்க்கும் குட்டிக் கண்ணன்களாயிருக்கிறார்கள். அரசாங்கத்திற்கு வேறு பல கவலைகள் இருக்கின்றன. இவர்களுக்கு பள்ளிகளுக்கென ஏதாவது செய்யலாமென நினைப்பு. நீ என்ன சொல்கிறாய்”

”உங்கள் வழியில்தான் ஸ்வாமி. இந்த வருட கார்பரேட் சி எஸ் ஆர் ஃபண்டிங் முழுவதையும் இங்கு திருப்பச்சொல்கிறேன். இங்கு ஒரு பிரதி நிதியை மட்டும் எனக்கு ஒரு அறிமுகப்படுத்துங்கள். அடுத்த முறை இங்கே வரும்போது கிருஷ்ணர்களுக்கு அக்‌ஷரங்கள் சொல்லிக்கொடுக்குமாறு செய்துவிடலாம்” என்றேன்

”பகவான் எவ்வளவு பெரியவன் தெரியுமா கேர்ள். காலையில் எனக்கு ஒரு பிரச்னையைக் கொடுக்கிறான். மதியமே தீர்வுடன் இன்னொரு உபதெய்வத்தை மகாலஷ்மி வடிவில் அனுப்புகிறான்” என்று சிரிக்கிறார்.

சக்கர வியூகம் 6
சக்கர வியூகம் 3 | வாழ்வை மாற்றும் மந்திரம்

மீண்டும் வணங்கினேன் சூடாக அவருக்கும் எனக்கும் ஒரு எவர்சில்வர் டம்பளரில் பால் வந்தது.

“கிருஷ்ணர்கள் மேய்த்த தூய ஆட்டின் பால் கேர்ள், குடித்துப்பார்” என்றபடியே,

”மீ தேவுடு வெச்சேனு” என்றபடியே பால் கொடுத்தவரிடம் தெலுகில் பேச ஆரம்பித்து ஏதோ சொல்கிறார். அந்த நடுத்தர வயது இளைஞர் கைகூப்பி, ”தேங்க்யூ மேடம்” என்றுசொல்லிவிட்டு நெடுஞ்சாண்கிடையா ஸ்வாமியின் காலில் விழுகிறான்.

சக்கர வியூகம் 6
சக்கர வியூகம் 2 | தேவதைகளும் சாத்தான்களும்

”உன் எண்ணை என்னிடம் கொடு. உனக்கு த்தகவல்கள் வரும். உன்னை இந்த ப்ராஜெக்டின் ஏரியா ரெப்ர செண்டேட்டிவ்வாகப் போடுகிறேன். பொறுப்பாகப் பார்த்துக் கொள்வாயா” என்றேன்.

தயங்கிய ஆங்கிலத்தில் சரி என்றான். புன்னகையோடு நகர்கிறார். மனங்களையும், மனிதர்களையும் வென்று கொண்டே இருக்கும் அவரின் பயணத்தை வியந்தபடியே இருக்கிறேன்.

“சொல்லு கேர்ள், ஏதோ சொல்ல வந்தாய், நான் பாதியில் உன்னைத்தடுத்தேன்”

”ஸ்வாமி எனக்கு வளைகுடா அரசாங்க அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. என்னால் கார்பரேட்டுகளை என்னிஷ்டத்திற்கு வளைக்கக்கற்றுக் கொண்டிருக்கிறேன். எந்தக்காய்களையும் வசமாக நகர்த்தும் துணிவும் இருக்கிறது. ஆனால் அரசாங்கத்திடமிருந்து அழைப்பு என்றால் அது ஏணியா, பாம்பா என்ற கவலை வந்து ஒட்டிக்கொண்டது. அதனால்தான் உடனே உங்களைப்பார்க்க ஓடிவந்தேன்” என்றேன்.

மென்மையாக சிரித்தார்.

“ஒன்று புரிந்துகொள் மிருணாளினி. எந்த இறங்கும் பாம்பையும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து அடிக்க அழைக்க மாட்டார்கள். நல்ல கைத்தடி உள்ளவனை அனுப்பி காரியத்தை முடித்துவிடச் சொல்வார்கள். இது நீ ஏறும் ஏணி. உன் ஏணெயில் இன்னொரு பொற்படி சேர்க்கப்படுவதற்கான அழைப்பாக இருக்கலாம். ” சட்டென மனத்திடம் அதிகமானது

“நீ செய்யும் அருஞ்செயல்களின் ஈர்ப்பு ஒரு சிறிய வட்டத்திற்குள் சுழல்கிறது கேர்ள். அது பெருக வேண்டும். இது அதற்கான ஒரு சிறிய ஏற்பாடாகத்தான் இருக்கும். நீ போ. துணிவாகப்போ. அந்த யாதவன் உனக்கு எப்போதும் துணை இருப்பான்”

”பெரிய பெருமாளை வணங்கும்போதே உங்களையும் சேர்த்தே வணங்குகிறேன் ஸ்வாமி, உங்கள் அருள்தான் இந்த உயிர் தழைத்திருப்பதே” என்றேன்.

சக்கர வியூகம் 6
சக்கர வியூகம் 1 | ஆதி

மெல்ல தலையில் கைவைத்து ஆசி வணங்குகிறார். அடுத்த ஆறு மணி நேரத்தில் நாடு திரும்பினேன். முதல் காரியமாக கார்ப்பரேட்டின் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடி ஃபண்டை அந்த ஆந்திர கிராமத்துக்கு திருப்புவதற்கான ப்ரபோசலை எழுதினேன். ரெட்டிக்கு ஒரு கால் செய்து, இது அவரின் அரசியல் முன்னேற்றத்திற்கான சிறுவழி என்பதையும் குறிப்பிட்டேன். அடுத்த அரை மணி நேரத்தில் ஒப்புதல் வந்தது.

அந்த ஆந்திர நடுத்தர வயது இளைஞனின் அலைபேசிக்கு அழைத்து, நாளையே உங்கள் ஊருக்கு ஆலோசகர்கள் வருவார்கள் என்றும் விரைவில் பள்ளியேற்பாடுகள் நடக்கும் என்றும் சொன்னேன். ஸ்வாமிக்கு என் ப்ரணாம்களை வழங்கச்சொன்னேன். நிறைவாக இருந்தது. அந்த நீண்ட நாளில் அலுப்புக்களைக் களைய ஷவரைத் திறக்கும்போது ஸ்வாமியின் பஞ்சுமிட்டாய்ப்பாதங்கள் நினைவுக்கு வந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com