சக்கர வியூகம் 2 | தேவதைகளும் சாத்தான்களும்

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் இரண்டாம் அத்தியாத்தை இங்கே பார்க்கலாம்.
சக்கர வியூகம் 2
சக்கர வியூகம் 2புதிய தலைமுறை

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்

சக்கர வியூகம் குறுநாவல்
சக்கர வியூகம் குறுநாவல்

தொடரின் 2-வது அத்தியாயம் இதோ....

எங்கிருந்து ஆரம்பிப்பது? எதைச்சொல்வது, எதை விடுப்பது!

ஐந்து பெண்களுடன் பிறந்து வறுமையில் கழிந்த என் இளமையையா? குடிகாரத்தந்தையும், வியாதியில் விழுந்த அன்னையுமாய் கடந்து போன பள்ளி நாட்களையா? எவ்வளவோ பணக்கஷ்டங்களைக்கண்டு கண்டு வறுமையில் சிக்கி உழன்று வாழ்வின் ஆதார சுருதியிலிருந்து விலகியிருந்த அந்த கொடூர நாள்களைப்பற்றிப்பேசவே மனம் நடுங்குகிறதே!

பள்ளி முடிந்த பிறகு சிறு சிறு கைத்தொழில்களின் வழியும், பள்ளியில் கற்றுக்கொண்ட அக்கவுண்ட்ஸ் உதவி செய்ய, சிறுகடைகளில் கணக்குகள் பார்ப்பதிலும் பொழுதுகள் ஓடின. துரத்திக்கொண்டிருந்த விதி ஓய்வெடுத்துக்கொள்ளும் சில கணங்களில் ஒன்று தேவதைகள் வந்து உதவிசெய்யும், அல்லது சைத்தான்கள் காலிடறிவிடும்.

இரண்டையும் வேறுபடுத்திப்பார்க்க மட்டும் எனக்கு வாழ்வு இடமளித்ததே இல்லை. அன்று தேவதையாய் வந்த ஒரு அயல் நாட்டு ஏஜெண்டின் பொன்மொழிகள் என் காதுக்கு தேவாமிர்தமாய் இருந்தன. அந்த வளைகுடா நாட்டில் அக்கவுண்ட்ஸ் வேலை. மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். கமிஷனுக்கு மட்டும் இரண்டு லட்சம் கொடுக்கவேண்டும். அங்கே போய் நான்கு மாதத்தில் அடைத்துவிடலாம் என்று வந்து முன் நின்று ஆசைக்கு நான் பலியானேன்.

வறுமை என்ற ஒற்றைச்சொல்லிற்கு முன் எல்லா நியாயங்களையும் பலியிட முடியும், பகுத்தறிவையும் சேர்த்து. அதற்கு மேல் இழப்பதற்கொன்றுமில்லை என்ற துணிவும் துரத்த, நான் இங்கு வந்து சேர்ந்தேன்.

சக்கர வியூகம் 2
சக்கர வியூகம் 1 | ஆதி

எத்தனை கொடூர நாட்களவை. 2 பேர் வசதியாக தங்க முடிகிற ஒரே அறையில் 10 பேரைத்தங்க வைத்திருந்தார்கள். ஒரு நாளைக்கு10 நிமிடம் மட்டுமே கழிப்பறை கிடைக்கும். பெண்ணிற்கு அதைவிட பெருஞ்சாபம் ஏதுமில்லை. ஆயினும் பணம் என்னும் ஒற்றை அரக்கனுக்கு முன்னால் எல்லா வாழ்வின் தேவைகளும் பலியிடப்படுகின்றன.

அங்கிருந்து முயன்று, முயன்று மேலேறி துபாய் வந்த பணத்தை அடைத்து குடிகாரத்தந்தையின் பேராசைக்கும், அக்கா, தங்கைகளின் தேவைகளுக்கும் உழைத்து உழைத்து அனுப்பிய ஆயிரம்கட்டிவராகன்களுக்கு இன்றுவரை என்னிடம் கணக்கில்லை.

அக்காக்களின் திருமணங்கள், அம்மாவின் ஈமைச்சடங்கு, அப்பாவின் இறுதி மரியாதை என எல்லாவற்றையும் பணத்தால் நிவர்த்தி செய்துகொண்டிருந்தேனே ஒழிய என் வாழ்வின் பாதையினை ஒருபோதும் நிர்ணயிக்கவும் இல்லை, நின்று யோசிக்கும் நேரத்தையும் வாழ்வு எனக்கு வழங்கவில்லை.

எல்லா இருளையும் என் அகத்தொளி கொண்டே வெளிச்சங்களை உய்ந்துகொண்டிருந்த கருஞ்சாலையில்தான் ஒரு வெள்ளுடை தேவதையென வந்து சேர்ந்தான் அவன்.

வேலைகளால் சூழ்ந்திருந்த என் நாள்களை தன் கூரிய நகைச்சுவைக்கரங்களால் ஏந்திக்கொண்டான். உணவு நேரங்களை உணவு பகிர்தலோடும், உணர்வு பகிர்தலோடும் உயிர்ப்பாய் ஆக்கினான். ஒரே அறைக்கும் சுழன்று கொண்டிருந்த என் வாரயிறுதிகளை அந்த கனவு நாட்டின் செயற்கை நீரூற்றுகளிலும், பாலைவனச்சவாரிகளிலும் வண்ணமயமாக்கிக்கொண்டிருந்தான்.

நிச்சயமாய் என் வாழ்வை தேவதையொன்று ஆட்கொண்ட தருணமெனதான் அதை நினைத்தேன். அப்போதிருந்த என் வேலையிலிருந்து இன்னும் அதிக சம்பள வேலைக்கு மாற்றவும், விற்றலுக்கும், சந்தைப்படுத்துதலுக்கும் அந்த நாட்டில் அப்போதிருந்த தேவைகளைக்கற்றுக்கொடுத்து இன்னும் இன்னும் என்னை தொழில்சார்ந்த முன்னெடுப்புகளுக்குத் தயார் படுத்தினான்.

பத்துபேர் குகையிலிருந்து வெளியேற்றி இரண்டு பேர் குடியிருப்பில் இருத்தினான். ஒரே வீட்டில் வசிக்கவில்லையே தவிர மனமொப்பி தம்பதிகள் போலத்தான் இருந்தோம். என் உடலும் மனமும் முழுவதும் அவன் பிடிக்குப்போனது. வரவு, செலவுகள் உட்பட.

எல்லாம் நன்றாகப்போய்க்கொண்டிருந்த ஒரு நல்வாரத்தில்தான் திடீரென காணாமற்போனான். அவன் அறிமுகமாகியிருந்த அந்த ஒரு வருடத்தில் அவனைக்காணாத, பேசாத நாளேயிருந்திருக்கவில்லை. முதலில் ஏதேனும் அவசரமான இந்தியப்பயணமாக இருக்கும்தான் என்று தேற்றிக்கொண்டேன்.

அவன் போனது என் உடைமைகளும் சேர்த்தெடுத்துக்கொண்டுதான் என்பது புரியவே எனக்கு ஒரு வாரமானது. என் பெயரில் 5 கிரெடிட்கார்களை வாங்கி, அதிலிருந்து பெரும்பணத்தை எடுத்துக்கொண்டு நாட்டை விட்டே தப்பியிருக்கிறான் என்ற செய்தி இடியெனத்தாக்கியது.

என் சக்திக்கு மீறிய பணம். சம்பளங்களை மொத்தமாகத் திருப்பிக்கொடுக்க ஆரம்பித்தாலே சில வருடங்களாகும், இதில் அவன் மீது அளிக்கப்பட்ட போலீஸ் கம்ப்ளெயிண்டுகள் என் மீதே திரும்பின.

கொடூர சட்டங்கள் உள்ள நாட்டில் இது போன்ற குற்றங்களெல்லாம் மன்னிக்கவே படாத நாட்டில் மாட்டிக்கொண்டேமே என வலி தாக்கியது. ஆறுதல் தேடி சகோதரிகளுகு அலைபேசி வலியைப்பகிர்ந்து கொண்டதுமே, திறந்த வேகத்தில் அதிவேகமாக கதவைச்சார்த்தினார்கள். அவர்களைப்பொறுத்த வரை அவர்களுக்கு பணம் காய்க்கும் ஒரு மரத்திலிருந்து, இன்னொரு மரத்திற்கு தாவிவிட்டவர்கள். என் வேர்களில்தான் இப்போது வெந்நீர்.

ஆறுதலின்றி, தேற்றுதலின்றி, வேறு வழிகளே தென்படாதபோதுதான் வாழ்வை முடித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்தேன். அப்போதுதான் சற்று வழிமாறி ஆர் ஜே ஸ்வாமியையும் சந்திக்க வந்தேன்.

(அடுத்த வாரம் தொடரும்...)

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com