சக்கர வியூகம் 4 | நட்சத்திர வரவு

“ஆர்ஜே ஸ்வாமி எனக்கு இந்நுவரே யாரையும் ரெகமெண்ட் செய்திட்டில்லா. உன் பேரைச்சொல்லி இன்னைக்கு டீல் முடிக்கச்சொல்றார்னா, யூ ஆர் ப்ளெஸ்ட். பெரிய இடத்துக்குப்போவ, ஸ்மைல்”
சக்கரவியூகம்
சக்கரவியூகம்pt web

அத்தியாயம் 4

காலையில் கண்விழிக்கும் முன்னரே அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. கடலுக்கு நடுவில் பனைமர வடிவில் கட்டப்பட்ட தீவினில் இருந்த பெரிய பங்களா வில்லாக்களின் தொகுப்பை விற்கும் பிரதிநிதி நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில்தான் அப்போது வேலையில் இருந்தேன்.

உலகெங்கிலும் அப்போது நிலவி வந்த பொருளாதார நலிவில் விற்பனையாகாமல் கிடப்பில் இருக்கும் ரெசிடென்ஷியல் வில்லாக்களை எப்படி விற்பது என்று நிறுவனம் தலையைப் பிய்த்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்த வேளையில், பெரும் விலை கொண்ட - வீட்டு வாசலில் கடலைகள் கதவைத்தட்டும் ஒரு வசீகர பங்களாவை விற்பனைக்கு வாங்கவிருக்கும் யாரோ ஒரு பணக்காரனின் கால்.

இல்லை, இந்த தொலைபேசி அழைப்பு கனவில்லை. இப்போது இருக்கும் நானும் நானில்லை. என்னால் தெளிவாக சிந்திக்கமுடிகிறது.

கோப்புப்படம்

துக்கம், தூக்கம் இரண்டையும் ஒற்றைக்குளியலில் உதறினேன். கிடைத்ததை உடுத்திக்கொண்டு ஓடினேன். கிட்டத்தட்ட 25 மில்லியன் திர்ஹாம் – 40 கோடி ரூபாய் கடலலை தீண்டும் கார்னர் வில்லாவை ஃபோனில் பேசி விற்பனைக்குக்கூப்பிட ஒன்று அவன் ஏமாளியாக இருக்கவேண்டும், அல்லது என்னை ஏமாற்ற வேண்டும், அல்லது போட்டிக்கம்பெனியில் யாரோ ஆழம் பார்க்கிறோர்களோ என்று ஏகப்பட்ட குழப்பமான எண்ணங்களை சுமந்துகொண்டு ஓடினேன்.

இது வாழ்வில் புகுந்த இன்னொரு சைத்தானாக இருக்குமோ என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. சட்டென கைப்பையில் இருந்த ஸ்வாமி ஆசீர்வதித்துகொடுத்த எலுமிச்சம்பழத்தை ஏனோ தொட்டு வணங்கினேன். இன்னொருமுறையும் “இழக்க இனியொன்றுமில்லை, ஒரு ஆட்டம் ஆடித்தீர்ப்பேன்” என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன்.

அந்த 70 மாடிக்கட்டடத்தின் 65வது மாடியின் குளிர்க்கண்ணாடிகள் வெளியில் நகரம் வெயில் போர்த்தி உறங்கிக்கொண்டிருந்தது. பார்க்கும் இடங்களிலெல்லாம் பணம் சூடிக்கொண்டிருந்த அந்த மீட்டிங் அறையில் நான் மட்டும் தனித்திருந்தேன். சற்று குளிராக இருந்தது. ஆனால் அது நடுக்கமில்லை என்று புரிந்தது.

ஐரோப்பியர்களோ, வளைகுடாவினரையோ எதிர்பார்த்திருந்த எனக்கு கோட் சூட்டணிந்த தென்னிந்திய முகங்களைக்கண்டவுடன் நடுக்கம் போனது. இவர்களுக்கு நான் பயின்றிருந்த ஆங்கிலப்புலமை போதும் என்று மனம் ஆறுதல் சொன்னது.

குறிப்பிட்ட, கடல் வந்து வாசற்தெளிக்கும் அந்தப்பெரிய சொகுசு பங்களாவை தென்னிந்திய நடிகர் ஒருவர் வாங்க விருப்பப்படுவதாகவும், அவர்களின் பிரதிநிதிகளாக தாங்கள் வந்திருப்பதாகவும் சுருங்கக்கூறினர்.

உடனேயே தயக்கங்கள் களைந்து, அந்தப்பங்களா எவ்வளவு சிறப்புமிக்கதென்றும், தென்னிந்தியாவிலேயே இதனை வாங்கப்பேறு பெற்ற முதல் விவிஐபியாக மேற்கண்ட நடிகர் இருப்பாரென்றும், அந்த வீட்டின் அருகே வீடுகள் வாங்கக்காத்திருக்கும் உலகப்பெரும் பணக்காரர்கள் பெயர்களையும், அந்த வீடு பார்த்துக்கொண்டிருக்கும் திசை எவ்வளவு உன்னதமானது என்பதையும் என் தொழிலுக்கு உபதேசிக்கப்பட்ட பொய்களின் வரையறைக்குட்பட்டு விளக்கினேன்.

கோப்புப்படம்

என் சரளமான மொழி எனக்கே வியப்பாயிருந்தது. கடந்த சில நாட்களாக கோர்வையாக பல விஷயங்களை சொல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த என் மனதுக்கும் மொழிக்கும் அன்று ஏதோ புதிய வீரியம் வந்திருந்ததை உணர்ந்தேன்.

புன்னகையோடு அதைக்கேட்டுக்கொண்டு விலை விபரங்கள், வாங்குவதில் இந்த நாட்டில் அவருக்குக் கொடுக்கப்படப்போகும் சிறப்புச்சலுகைகள், வில்லங்கங்கள் போன்றவற்றை மிக விரிவாகப்பேசிப் புரிந்துகொண்டார்கள். சற்று காத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றார்கள்.

திருமணப் பெண்ணைப்பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் வீட்டுக்குப்போய் தகவல் சொல்லுகிறோம் என்று சொல்வதைப்போலத்தான் திருப்பி அனுப்புவார்கள் என்று தோன்றியது.

காத்திருந்தேன். ஸ்ட்ராபெர்ரி ஏற்றப்பட்ட எலுமிச்சைச்சாறு வந்தது. இரண்டு மிடறுகள் உள்ளே இறங்கியவுடன், சட்டென கைப்பையை இன்னொரு முறை திறந்து, எலுமிச்சையைப்பார்த்துக்கொண்டேன்.

“நமஸ்காரம்” என்ற அந்த மலையாளம் பூசிய தமிழ்க்குரல் கேட்டது.

நிமிர்ந்த கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. திரைப்படங்களில் சிலவற்றிலும், போஸ்டர்கள் பலவற்றிலும் கண்ட அந்த மலையாளப்பரிச்சிய முகம், இப்போது சற்று மூச்சு விடும் தொலைவிலேயே. மூச்சு நிற்பதுபோலத்தான் இருந்தன

தட்டுத்தடுமாறி “நமஸ்காரம் சார்” என்றேன். புன்னகை மாறாத முகத்துடன். ”ஈ டீல் எனக்கு ஓகேயானு. எல்லா பேப்பர்ஸும் ப்ரிபேர் பண்ணி இங்க கொண்டு வந்தா மதி. என்னுடே சைன் ஆஃப் அத்தாரிடி இன்னைக்கு க்ளோஸ் செய்யும்” என்றார் மலையாளமும், தமிழும் கலந்த குரலில். கால்கள் பூமியிலிருந்து சற்று மேலெழும்பி வந்தது.

”சார், இன்னைக்கே…” என்றேன் நம்பமுடியாத அதிர்ச்சியில்… “இந்நு முடியாதா” என்றார்.

”அய்யோ, சார். நிச்சயம் முடியும். ஒரு நாள்ள யாரும் டீல் முடிக்கறதில்ல. அதான் அப்படிக்கேட்டுட்டேன் சாரி” என்றேன்.

“ஆர்ஜே ஸ்வாமி இன்னைக்கு திரிதியை திதில பண்ணிட்டா நல்லதுன்னு சொன்னார். அவர்தான் உங்கள காண்டாக்ட் பண்ணவும் சொன்னார். அவர் சொன்னா சரியா இருக்கும். அதான்..” என்றார் அவர் ட்ரேட் மார்க் கண்சிமிட்டலுடன்.

எனக்கு எல்லாம் புரிந்தது. இது எங்கிருந்து தொடங்கியது என்றும் இந்த நாள் யாரால் ஆசீர்வதிக்கப்பட்டது என்றும். சற்றே அழுகை வந்தது. அதற்கு இது நேரமில்லை.

அலுவலகத்திற்கு அழைத்தேன். விஷயம் சொன்னதும், கிண்டலாக, “இன்று தாமதமாக வருவதற்கு இந்த பொய்க்காரணமா” என்றார்கள். என் பேச்சில் காரம் சற்று கூடியதும், மேனேஜருக்கு லைன் போனது. அந்த கிழத்திடம் எகத்தாளமிக்க மராத்தி விளிப்பில் என் மீதுள்ள வெறுப்பு நன்றாகவே தொனித்தது. இரண்டே நிமிடங்களில் நான் அழைத்த காரணம் தெரிந்ததும் எல்லாம் மாறியது. உடனேயே தன்னுடன் அனைத்து பேப்பர்கள், அங்கீகாரங்களை எடுத்து வருவதாகச்சொன்னது.

எல்லாம் ஒரு மாயமென நிகழ்ந்தன. சரிபார்ப்பிற்கே சில வாரங்கள் செலவிடும் இதுபோன்ற பரிமாற்றங்களுக்கெல்லாம், சில மணி நேரங்களில் கையெழுத்து என்பதெல்லாம் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கனவிலும் நினைத்திராதது. எல்லாம் முடிந்து செக் வாங்க உள்ளே அழைத்தார்கள்.

கோப்புப்படம்

எனக்கு மட்டும்தான் அழைப்பு, என மராத்திக்கிழத்தை வெளியில் நிப்பாட்டினார்கள். இன்முகத்துடன் கிழக்கு நோக்கி நிற்க வைத்து செக்கை கையில் வாங்கியதும், அத்தனை நேரம் அடக்கி வைத்த அழுகை பொங்கித்தான் வந்தது. நடிகர் தலையில் கைவைத்தார்.

“ஆர்ஜே ஸ்வாமி எனக்கு இந்நுவரே யாரையும் ரெகமெண்ட் செய்திட்டில்லா. உன் பேரைச்சொல்லி இன்னைக்கு டீல் முடிக்கச்சொல்றார்னா, யூ ஆர் ப்ளெஸ்ட். பெரிய இடத்துக்குப்போவ, ஸ்மைல்” என்றார்.

டாக்குமெண்டுகள் கையெழுத்தானது. கையெழுத்தாகும்போதே என் கமிஷன் டெபாசிட் என் அக்கவுண்ட்டுக்குப்போனது. மராத்திக்கிழம் புன்னகையோடு என்னை அணைத்துக்கொள்ள வந்தது. அவனை அணைப்பதை விட எனக்கு அன்று முக்கியமான இன்னொரு பணியிருந்தது. ”மீதமுள்ள நாள் எனக்கு விடுமுறை” என்று அறிவித்துவிட்டுப் பறந்தேன். கிழம் அதிர்கிறது தெரிந்தது

ஆர்ஜே தங்கியிருந்த வீட்டுக்கு டாக்சி எடுத்துக்கொண்டு போனேன். விமான நிலையத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்தவர், என்னைப்பார்த்தவுடன்,

”ஹா, மிருணாளினி, உன்னுடனான என் அடுத்த சந்திப்பு இவ்வளவு சீக்கிரம் நடப்பதற்கு பிராப்தம் இருந்திருக்கிறதே”

என்றார்

சாலையிலேயே அவர் கால் பிடித்து வணங்கினேன்

“சர்வானந்தப் பிராப்திரஸ்து” என்றவாரே கும்பிட்டார்

அழுதிருந்த என் கண்களைப்பார்த்தார்.

“வலி குறைந்ததா, பறந்ததா கேர்ள்” என்றார் புன்னகையோடு,

வார்த்தைகள் வராமல் கைகூப்பி நின்றிருந்தேன்.

”ஞாபகம் இருக்கட்டும், இன்னைக்கு புதிதாய்ப்பிறந்திருக்கும் இந்தப்பிறப்பின் முதல் நாள், உனக்கு இன்னொரு ஜென்மம் இருக்கிறது. நீ போக வேண்டிய உயரங்கள் மீதமிருக்கிறது. பெற வேண்டிய ஆனந்தங்கள் பலகோடி காத்திருக்கிறது. தனித்திரு,விழித்திரு, மகிழ்ந்திரு” என்று ஆசீர்வதித்தார். அவரின் ட்ரேட் மார்க் புன்னகையுடன்.

இன்னொன்றும் செய். அடுத்த வாரம் ஹயாத்தில் ‘கத்தகரு வெங்கட ரெட்டி’ என்றொரு ஆந்திர அரசியல்வாதி தங்க வருவார். அவரைச்சென்று பார்” என்றார். சரி என்றேன்.

கிளம்பியவர், சற்று யோசித்தபடி சில அடிகள் எடுத்து முன்னால் வந்து, ”அப்புறம், ஒரு முக்கிய விஷயம். இன்னொரு முறை எந்தத்தருணத்திலும் அன்பினால் கட்டுறாதே. இறைவன் மட்டும்தான் உன் இலக்கு. அதை எப்போதும் நினைவில் கொள்” என்று சொல்லி விடைபெற்றார்.

25 மில்லியனில் 3 சதவீதம் கமிஷன் 75000 ரியால்கள். எனக்கு பேரழுத்தம் தந்துகொண்டிருந்த என் மொத்தக்கடனும் கழிந்தது. எனது சில வாரங்களில் வலி, ஸ்வாமியை சந்தித்த ஒரே நாளில் விலகியது. அவரின் பரிபூரண சிஷ்யையாக நான் மாறினேன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com