சக்கர வியூகம் 5 | கத்தகரு வெங்கட ரெட்டி

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் ஐந்தாம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.
சக்கர வியூகம் 5
சக்கர வியூகம் 5புதிய தலைமுறை

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்

அத்தியாயம் 5 - கத்தகரு வெங்கட ரெட்டி

வெங்கடாஜலபதி படத்தோடு அதற்கடுத்த வாரம், ஹயாத்தில் எக்சிகியூட்டிவ் சூட்டில் கத்தகரு வெங்கட ரெட்டியை பார்க்கச்சென்றேன். ஒரு பெரிய ஃப்ரேம் செய்யப்பட்ட வெங்கடாசலபதி - தாயார் படத்தை எடுத்துச்சென்றிருந்தேன்.

அது தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாள் என்பதை கணிக்க மறந்திருந்தேன். அந்தப்பெரிய ஹோட்டல் எக்சிகியூட்டிவ் சூட்டிலியே, ஒரு தற்காலிக அலுவலகம் இயங்கிக்கொண்டிருந்தது. அங்கே இருந்த சிப்பந்திகள் எவர் முகத்திலும் உற்சாகமில்லை.

ரெட்டியின் மாநிலத்தில் ஆட்சிமாறும் வானிலை இருந்தது. மாறினால், ஊழலில் பொலிந்த அசையும், அசையாச்சொத்துகளின் நிலை, அரசியல் எதிர்காலம், அதிகார ஸ்திரத்தன்மையின்மை என ஏகப்பட்ட குழப்பங்களுடன் இருந்தது அந்த அலுவலகம்.

தேர்தல் எப்படியும் தன்னை கவிழ்த்துவிடும் என்ற எண்ணம் கொண்டும் - செய்த ஊழல்களின் பலனாய் பதவி போய், அவமானப்படுவதைத் தவிர்த்து இந்த வளைகுடா நாட்டில் சொச்ச வாழ்வைக்கழிப்போம் என்றும் தப்பிப்பிழைக்க சிலபல ஏற்பாடுகளோடும் வந்திருக்கிறார் என்ற பலமான கிசுகிசு இருந்தது.

அவரை சந்திக்க வந்த இந்த நேரம் எவ்வளவு கொடும் நேரம் என்று நுழைந்தவுடனேயே புரிந்தது. முற்றிலும் எதிர்மறை அதிர்வுகளால் நிறைந்திருந்தது அந்த இடம் முழுவதும். எரிச்சலும், கோபமும், ஆற்றாமையும் மண்டியிருந்த முகங்களைப்பார்க்கவே பயமாக இருந்தது. ஆனால் ஸ்வாமியின் கோரிக்கை. அதை நிறைவேற்றுவதை விட அந்த நிமிடத்தில் எனக்கேதும் வேறு வேலை இல்லையாதலால், அங்கே ஒரு ஓர சோஃபாவில் காத்திருந்தேன்.

என்னை ஏறெடுத்துப்பார்த்துவிட்டு அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். ரெட்டியப்பார்க்கவேண்டும் என்று சொன்ன ஒரே ஒரு வாக்கியத்திற்கு மட்டும் தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு பதிலேதும் சொல்லாமல் கணினியில் மூழ்கிப்போனான் அந்த சிப்பந்தகளில் ஒருவன்.

மீண்டும் ஓர சோஃபாவில் அமர்ந்து காத்திருந்தேன். உட்கதவு திறந்து சந்தன நிற ஜிப்பாவில் வெளியே வந்தா ரெட்டி. எள்ளும் கொள்ளும் வெடித்திருந்த முகம். தெலுகுவில் ஏதோ அரற்றினார். சிப்பந்திகளில் ஒருவனைத்திட்டினார்.

சக்கர வியூகம் 5
சக்கர வியூகம் 4 | நட்சத்திர வரவு

அவரை நெருங்கி வணங்கி,

“பிரணாம்ஸ் சார்” என்றேன்.

மேலும் கீழுமாகப்பார்த்துவிட்டு சட்டைசெய்யாது உள்செல்லப்போனார். என்னுடன் கொண்டு சென்றிருந்த பத்துக்குப்பத்து அளவில் இருந்த வெங்கடாசலபதி – தாயார் படத்தைக்கொடுத்தேன், அசுவாரசியமாகத்தான் வாங்கினார். படத்தை வணங்கினாராயேயன்றி என் முகத்தைக்கூட ஏறிட்டுப்பார்க்கவில்லை. அகலாது அணுகாது அலுவலக வாயிலில் ஓரமாக சென்று நின்று கொண்டேன்.

அதே நிமிடத்தில் உள்ளிருந்து ஒருவன் ஓடிவந்தான், தெலுங்கில் ஏதோ பகிர்ந்தான். ரெட்டி வேகமாக உள்ளே போனார். அந்த அலுவலகம் அந்த நொடியில் தீப்பற்றிக்கொண்டது. ஏதேதோ எண்கள் பகிரப்பட்டன. ஏதேதோ ஊர்களின் பெயர்கள் பற்றிய பேச்சு எழுந்தன. மனிதர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு கொக்கரிப்பு எழுந்தது. மகிழ்வு பரவி அந்த இடத்தின் அதிர்வுகள் மாறியிருந்தன.

எதுவும் புரியவில்லை. ஆனால் ஒன்று தெரிந்தது. சற்றுமுன்பு அங்கே இருந்த ஆற்றாமைகள் மாறி ஆனந்தம் வந்திருந்தது. கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் கழிந்து ஒரு சிறியக்கிண்ணத்தில் “பாயசம்” வந்தது. புரியாமல் அந்தப்பணியாளை ஏறெடுத்துப்பார்த்தேன் “ரெட்டிகாருவின் சேசாரும்மா”.

சக்கர வியூகம் 5
சக்கர வியூகம் 3 | வாழ்வை மாற்றும் மந்திரம்

ரெட்டி ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி முகத்திற்கு வந்திருக்கிறார். இனி ஜெயிப்பதில் தடை இருக்காது என்று முடிவாகிவிட்டது. அவர் செய்த அத்தனை ஊழல்களுக்குப்பிறகும் அவருக்கு ஓட்டு விழுந்திருக்கிறது.

இனி ஓடி ஒளியத்தேவையில்லை. நீள அகலங்கள் தெரியாது உலகெங்கும் வாங்கி வைத்திருக்கும், சொத்துகள், வியாபாரங்கள் யாவையும் எந்தத் தடையுமின்றி இயங்கும். அரசியல் வாழ்வும் செழிக்கும். இந்த அலுவலகத்தின் ஆனந்தக்கூத்தாடுவதின் அர்த்தம் புரிந்தது.

சற்று நேரத்தில் கதவைத்திறந்து கொண்டு ரெட்டியே பிரசன்னமானார். முன்னர் வந்தபோது முகத்தில் இருந்த வெறுப்பு முற்றிலும் இல்லாது முகமெங்கும் புன்னகை தழுவ என்னருகில் வந்தார்.

அவர் கையில் சற்று முன்பு நான்கொடுத்த வெங்கடாசலபதி – தாயார் படம் இருந்தது.

புன்னகையுடன் ஏறிட்டு

”மீரு எவரு”

“நான் மிருணாளினி, ஆர்ஜே ஸ்வாமியின் சிஷ்யை” என்றேன்.

”மிருணாளினி அண்டே மஹாலக்‌ஷ்மி காதா” அவர் முகத்தின் பிரகாசம் வலுத்தது, அத்தனை பற்களும் தெரிய சிரித்தார்.

“மனவாடா” என்றார்

“தமிழ்” என்றேன்

சட்டென்று ஆங்கிலத்திற்கு மாறி

”என் வாழ்வைக்காத்த மஹான் ஆர்ஜே, இப்போ அதிர்ஷ்டத்திற்காகத்தான் உன்னையும் இந்தத்தருணத்தில் அனுப்பி வைத்திருக்கிறார்” என்று சொல்லி ஆனந்தக் கண்ணீரோடு மெல்ல அணைத்துக்கொண்டார் அந்தப்படத்தோடு சேர்ந்து. என் வாழ்வையும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

சக்கர வியூகம் 5
சக்கர வியூகம் 2 | தேவதைகளும் சாத்தான்களும்

”இந்த வெற்றி அவருக்கு சமர்ப்பணம். அவர் அருளால்தான் நான் இங்கே இருக்கேன். அதுவும் நீ என் அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்தது அந்தத்தாயாரே வந்தது போல. அதுவும் மகாலஷ்மிங்குற பொருள் கொண்ட மிருணாளினி வந்தது நான் இனிமே பெறப்போகும் வெற்றிகளின் முதல் அக்‌ஷரம்” என்றார். அதீத உணர்ச்சிவசப்பட்டிருந்தார். காக்காய் உட்கார பனம்பழம் போல, என் சம்பந்தப்படாத இந்த விஷயத்தை என் மேல் ஏற்றுகிறது காலம். நற்சமிஞ்ஞைகள்.

“உனக்கு என்ன வேணுமோ அது தரேன் கேளு” என்றார்

பெரிய கேள்வி, பெரிய விடை சொல்ல வேண்டும். அதை ஸ்வாமியைக்கேட்காது சொல்வது முறையல்ல. ஆகவே, கைகூப்பி ”உங்கள் அறிமுகமே எனக்கு மிகப்பெரிய வரம் சார். வேறொண்ணும் வேண்டாம்” என்றேன்.

”ஸ்மார்ட் கேர்ள்”

என்றபடி என் வேலை விஷயங்களை விசாரித்தார். சட்டென்று புருவமேற்றி “அந்த மலையாள நடிகனுக்கு இரண்டு மணிநேரத்தில் வில்லா விற்ற பெண்ணா நீ?” என சட்டெனெ சிரித்தவாறே அலுவலகத்தின் சக சிப்பந்திகளை அழைத்து தெலுங்கில் ஏதோ உரக்கச்சொல்லி சிரித்தார்.

என் திறமை சார்ந்து ஜெயித்திராத ஒரு விஷயம் முழுக்க முழுக்க என் பெயராலேயே அந்த வட்டாரத்தில் சொல்லப்பட்டிருந்தது புரிந்தது. என் வாழ்க்கை மாற்றத்தின் இரண்டாவது விதை அங்கே நடப்பட்டது.

ஏதோ ஒரு குறுக்கு அதிர்ஷ்டத்தில் அவர் தேர்தலில் ஜெயித்திருந்தார். அவர் ஆதரித்த கட்சியும் மத்தியில் ஆட்சிக்கு வந்திருந்தது. நான் அவர் அலுவகத்தில் நுழைந்த நேரம் இந்தச்செய்தி வரவும், ஆர்ஜேயுடனான அவரது நீண்ட தொடர்பின் காரணமாகவும், என்பால் அவர் கவனம் குவிந்தது.

”இந்த வெள்ளிக்கிழமை ஆஃபீஸ் வா. உனக்கு பெரிய பெரிய கடமைகள் காத்திருக்கிறது” என்று கூறி விடை கொடுத்தார்.

அன்று மாலை ஸ்வாமியின் அழைப்பு வந்தது. நடந்தவைகளைச்சொன்னேன்.

“ரெட்டியைப்பிடித்துக்கொள் மிருணாளினி. அவன் செய்த பல தவறுகளை சரி செய்யும் வாழ் நிலைக்கு வந்திருக்கிறார். மனம் திருந்த நினைக்கும் அவருக்கு இப்போது பல நல்ல மனிதர்கள் வேண்டும் – திறமை நிறைந்த நல்மனிதர்கள். உனக்கு வேண்டியதைச்செய்வார். அவருக்கு வேண்டிய தொழில் நலன்களை நீ பார்த்துக்க்கொள்” என்றார்.

ரெட்டி, தன் முதலீட்டை மேலும் பெருக்கி அந்த வளைகுடா நாட்டில் உள்ள தனது வியாபாரங்களை விரிவாக்கினார். உலகெங்கும் உள்ள தனது பல தொழில்களை வளைகுடா நாட்டிற்கு தலைமை அலுவலங்களைத் துவங்கினார்.. அதில் ரியல் எஸ்டேட் துறைக்கு நான் விற்பனை மேலாளரானேன். இதன் பின்னாலெல்லாம் ஸ்வாமியின் கணக்கிடப்பட்ட செயல்திறன்கள் இருந்திருக்கின்றன என்பதை போகப்போக அறிந்துகொண்டேன்.

கடந்து போன கொடும் பொருளாதார மந்த நிலை மெள்ள மெள்ள சரியாகிக்கொண்டிருக்க, ஆசியாவின் மொத்த கருப்புப்பணத்தையும் அரசியல்வாதிகளும், நடிகர்களும், தொழிலபதிர்களும் கொண்டு வந்து குவிக்கக்கூடிய பிராந்தியமாக நாடு மெல்ல மாறிக்கொண்டிருந்த நேரம். ரெட்டியின் வியாபரங்களும் சூடு பிடிக்கத்துவங்கின.

சக்கர வியூகம் 5
சக்கர வியூகம் 1 | ஆதி

அரசியல்வாதிகள் செய்யும் கருப்பு வெள்ளை மாயங்களையெல்லாம் பக்கத்திலிருந்து கண்டுணர முடிந்தது. வரியே இல்லாமல் இந்தியாவில் சம்பாதிக்கும் பணத்தை கடும் கருப்பென இங்கு வந்து கொட்ட அங்கு இருக்கும் கோடீஸ்வரர்களுக்கு சமிஞ்கைகள் தரப்பட்டது.

ஒருவர் ஓடினால், கூடவே ஓடும் இந்திய மனப்பான்மையில் ஒருவர் பின் ஒருவராக மொத்த கோடீஸ்வரர்களும் சொத்தும், மனையும், பொருளும் வாங்குமிடமாக நாடு மாறியது.

எந்தச்சிரமமுமின்றி அவர்களின் பெயர் வராமலே அவர்களது முதலீடுகள் பினாமிகள் துணையோடு வளர முதலில் தொடர்பு கொள்ள வேண்டிய பெயராக என் பெயரே சொல்லப்பட்டது. அத்தனை தேர்களும் வந்து குவியும் பிராந்தியத்தில் மூலதெய்வமாக ஆனேன்.

வளர்ந்து வளர்ந்து வாழ்வில் யோசிக்க வேறேதுமின்றி பணத்தால் அடுக்கப்பட்ட மலை மேல் நெடிது வளர்ந்துகொண்டிருந்தேன்.

திறமையும், நாவன்மையும் இருந்ததால் அடுத்தடுத்து டெலிகாம், வைரம், சந்தன எண்ணெய், சாஃட்வேர் என்று ரெட்டியின் பல்வேறு நிறுவனங்களின் சகலதளங்களிலும் என் கரம் படர்ந்தது.

தொட்டதெல்லாம் பொன்னானது. சேல்ஸ்மேனேஜர், க்ரூப் டிப்ளாய்மெண்ட் மேனேஜர் என்பதெல்லாம் கடந்து சீஃப் ஆபரேட்டிவ் ஆஃபீசர் வரை அடுத்தடுத்த வருடங்களில் களம் கண்டிருந்தேன்.

ரெட்டியின் வளைகுடா முகமாக என் முகம் ஆகியிருந்தது.

கடந்து போன என் பழைய கால சோகங்களை நினைத்துப்பார்க்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தேன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com