சக்கர வியூகம் 8 | தங்க ஏணி

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் எட்டாம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.
சக்கர வியூகம் 8
சக்கர வியூகம் 8புதிய தலைமுறை

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்

சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்
சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்

அத்தியாயம் 8 - தங்க ஏணி

முதல் நாள் கோதாவரியில் சந்தித்த அந்த ஆந்திர இளைஞனுக்கு அழைத்தேன். அவன், “பள்ளிப் பணிக்கான ஆலோசகர்கள் வந்து பார்த்துவிட்டுப்போனதாகவும், விரைவில் பள்ளிக்கான பணிகள் துவங்கவிருப்பதாகவும் எளிய ஆங்கிலத்தில் தன் மகிழ்வைப் பகிர்ந்துகொண்டான்.

எது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். என் எண்ணிற்கு ஒரு செய்தி அனுப்புமாறு சொன்னேன். “ஸ்வாமி ஓய்வாக இருக்கும்போது அவரிடம் நான் பேச விரும்புவதாகச்சொல், அவர் சரியென்று சொன்னால் ஒரு மிஸ்ட்கால் கொடு, நான் திரும்ப அழைக்கிறேன்” என்று சொல்லி துண்டித்தேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மிஸ்ட் கால் வந்தது. நான் அவன் வாட்சப் காலில் வீடியோவில் அழைத்தேன்

“என்ன கேர்ள், ஏணியா, பாம்பா” என்றார் முகம் முழுக்கப்புன்னகையுடன்

“தங்க ஏணி ஸ்வாமி” என்றேன்.

“சொன்னேனே” உடல் குலுங்கிச் சிரித்தார்.

ஷேக் விவரித்த பிரச்னையை விரிவாக விளக்கிச்சொன்னேன்.

மிக நிதானமாகக்கேட்டுக்கொண்டு, “பெரிய பிரச்னை போலிருக்கிறதே மிருணாளினி, இதில் உபாயம் இருக்கிறதா என்ன”? என்றார். அவருக்கென்றே உருவாக்கிக்கொள்கிற, இதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாதே என்கிற பாவனை.

“இது சரியாக இருக்குமா என்று சொல்லுங்கள்” என்று சொல்லி ஒரு தீர்வை விவரிக்க ஆரம்பித்தேன்.

“நாட்டின் இன்னொரு எல்லையான கிழக்கு மூலையில் இருக்கும் ஒரு பாலைவனச்சோலையின் ஒரு பகுதி மட்டும் இந்த நாட்டின் எல்லையில் வரும், மீதிப்பகுதியில் ஒரு 10 கிமீ சுற்றளவில் பக்கத்து நாட்டிற்குப்போகும். இந்தப்பகுதியிலும், அந்தப்பகுதியிலும் வசிப்பதென்னவோ ஒரே ஆதிகுடிகள்தான். ஆனால் எல்லையிலிருப்பதால், இந்த நாடும் கைவிட்டு, அந்த நாடும் கைவிட்டு ஒரு மாதிரியாக திரிசங்குவில் இருப்பவர்கள்”

“அண்டை நாட்டிற்கு ஒருமாதிரியாக அவர்கள் பிரச்னையை தீர்த்துவிடவே விருப்பம் இருக்கிறது. ஆனால் இங்கேதான் பாலைவனச்சோலையை தாரை வார்த்துக்கொடுக்க முடியாமல் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்”

இதைச்சொல்லும்போதே ஆர்ஜேவின் முகம் மலர்ந்துவிட்டது

“ஆக பத்தைக்கொடுத்து மூன்றை பெற்றுக்கொள்ளலாம் என்கிறாயா? ஆனால் சோலைப்பத்திற்கு, பாலைமூன்று டேலியாகாதே கேர்ள்”

“இல்லை ஸ்வாமி. பத்தைக்கொடுக்க வேண்டாம். இந்தப் பத்தையும், அந்தப் பத்தையும் பேசி வாங்கி தனி நாடுகளை ஆதிகுடிகளுக்கு வாங்கிக்கொடுத்துவிட்டால் ஷேக்கின் பெயர் நோபல் வரைக்கும் போகும். இப்படிக்கொடுப்பதற்கு ஈடாக இந்தப்பக்கம் பத்தை எடுத்துக்கொள்கிறோம் என்றால் சந்தோஷமாக பாலைவனத்தைக்கொடுக்க மாட்டார்களா?” என்றேன்.

“தவிர, இந்த நாட்டில் வளர்ச்சி வேகத்திற்கு ஒன்றென்ன இன்னும் நூறு சோலைகளை பாலைவனத்தின் நடுவிலேயே அமைக்கலாம் சாமி. அதற்கான ப்ரபோசல்களை என் கம்பெனிக்கே கொடுத்துவிடவும் செய்வேன். ஒரே கல்லில் பதினைந்து மாங்காய்களை வீழ்த்தலாம்” என்றேன்

இடி இடியெனச்சிரித்தார்.

சக்கர வியூகம் 8
சக்கர வியூகம் 4 | நட்சத்திர வரவு

“நீ ஷேக்கிற்கே மண் விற்பாய் கேர்ள். எனக்கு இது பிடித்திருக்கிறது. ஆனால் நிதானமாகப்பேசு. முடிவை முதலில் சொல்லாதே. ஒருவிதத்தில் இது அவர்களுக்கு கெளரவப்பிரச்னை, பிறகு ஷேக் மட்டுமே முடிவெடுக்கக்கூடியதும் அல்ல. ஆகவே நிதானித்துச்சொல், நாக்கில் உனக்கு என்றென்றும் கலைமகள் துணையிருக்கப்பிரார்த்திப்பேன்” என்றார்.

வளைந்து செவி வரைக்கும் நீளும் அவர் புருவங்களும், நீண்டு இந்தப்புறமும் செவியைத்தொடும் புன்னகையும், அலைபேசி அழைப்பு முடிந்த பல நிமிடங்களுக்கு மனதில் நின்றது.

புன்னகைத்துக்கொண்டேன்.

மிகத்தீவிரமாக சில பவர்பாயிண்ட் ப்ரசண்டேஷன்களை கிரியேட் செய்தேன். பெரிய அறிகை ஒன்றையும் டைப் செய்து வைத்துக்கொண்டேன். நாட்டில் நிலப்பரப்பு, சோலைகளின் எண்ணிக்கை, பயன்படுத்தப்பட்ட பயன்படுத்தப்படாத நிலங்களின் எண்ணிக்கை, ஒன்றைக்கொடுத்து ஒன்றைப்பெறுவதால் கிடைக்கும் பயன், சர்வதேச அங்கீகாரம் என நீண்டு சென்ற அந்த அறிக்கையின் கடைசி ஸ்லைடில் புதிய தேசத்திற்கு விட்டுக்கொடுக்கும் ஸ்லைடை வைத்திருந்தேன். அதை மட்டும் கட் செய்துவிட்டு, ஷேக் மீட்டிங்கின்போது அதனை ப்ரசெண்ட் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு அந்தக்கோப்பை ஃபஹீமாவுக்கு அனுப்பினேன்.

பெருமூச்சுகளோடு அடுத்த வாரத்திற்குக் காத்திருந்தேன்.

வியாழனன்று மீண்டும் அதே மீட்டிங் அறையில் ஷேக் தோன்றியபோது மிக மிக நைச்சியமாக, கிழக்கு எல்லையையும், மேற்கு எல்லையையும் ஒப்பிட்டுப்பேசினேன். செயற்கையாக சோலைகள் உருவாக்கும் திறன்கள், ஹார்டிகல்ச்சரை மேம்படுத்துதல் பற்றிய செய்தியை போகிற போக்கில் சொல்லிவிட்டு சற்றே நிதானித்து, கிழக்கு எல்லையை விட்டுக்கொடுத்து புதிய தேசம் உருவாகும் வாய்ப்புகளையும், அதனால் சர்வதேச சமுதாயத்தின் அங்கீகாரம் கிடைப்பதையும், 10 கிமீ வளங்களை விட்டு 3 கிமீ எண்ணெய் கிடைப்பதால் நமக்கு கிடைக்கவிருக்கும் லாபங்களையும் புள்ளிவிபரங்களோடு அளித்தேன்.

சட்டென ஷேக்கின் திரை இருண்டது. ஒரு நிமிடம், ஒரே நிமிடம் என் இதயத்துடிப்பு நின்று விட்டது. எத்தனை பெரிய தவற்றைச்செய்துவிட்டேன். இது அதிகப்பிரசங்கித்தனமில்லாமல் வேறென்ன. என் கார்ப்பரேட் அறிவைக்கொண்டு அரசாங்கத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டேனே? என்ன மதிகெட்ட செயல் இது! சற்று தலை சுற்றியது. அய்யோ, மீண்டும் பரமபதத்தில் இறங்கும் பாம்பில் வீழ்ந்தேனா! ஷேக்கின் இந்தக்கோபம் என்னவெல்லாம் செய்யும் என்று யோசித்தபடியே கைப்பையில் இருந்த எலுமிச்சம்பழப்பெட்டியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டேன்.

சக்கர வியூகம் 8
சக்கர வியூகம் 5 | கத்தகரு வெங்கட ரெட்டி

அடுத்த நொடி மீட்டிங் அறையின் கதவு திறந்தது. ஒரு வெள்ளுடை ஷேக், கையில் ஒரு நான்கடி நாய் ஒன்றுடன் நுழைந்தான். உயிரே போய்விட்டது. “சபர் சபர்” என்றவாரு அவன் என்ன சொன்னான் என்பதே விளங்கவில்லை. நாய் அறையின் சகலத்தையும் மோப்பமிட்டுவிட்டு மீண்டும் அவனிடம் போனது. மோப்ப நாய். அறையில் ஏதேனும் தீயபொருள் இருக்கிறதா என்று சோதித்துப்போகிறது. அது வரையில் போன உயிரை அந்தரத்தில் பிடித்துவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அவன் போன மறு நொடி எதிர்பாராத தருணத்தில் நான்கு புஜபல ஆட்கள், இரண்டு ஏகே47 தாங்கிய நெடியன்கள் புடை சூழ, ஷேக் உள்ளே நுழைந்தார்.

அத்தர் வாசனை, வெள்ளுடையின் சரசரப்பு, இத்தனை நாட்கள் பெரிய பெரிய திரைகளில் பார்த்த உருவம் சற்று நெருங்கி அருகில் வந்து, என் தோளைப்பற்றி, கையைக்குலுக்கியதும்தான் அந்தரத்தில் இருந்த உயிரைப்பற்றி ஆன்மாவுக்குள் விட்டுக்கொண்டேன்.

“கலாஸ்” என்றவாரு கையை ஆட்டி அறைக்குள் நுழைந்த அவர் பாதுகாவலர்களை வெளியில் போகச்சொல்லி, இருக்கையைக்காட்டினார்.

“சாரி ஃபார் தி இன்கன்வீனியன்ஸ் அபவுட் த டாக் அண்ட் செக்யூரிடீஸ் (Sorry for the inconvinence about the talk and Securities). அது நானே நினைத்தால் கூட மாற்றிக்கொள்ளமுடியாத தேசவிதி” என்றார். எத்தனை நேர்த்தியான ஆங்கிலம்! பெரிய திரைகளில் பார்ப்பதை விட சற்று நிறம் குறைவுதான், ஆனால் அங்கே தெரிவதை மிகத்தெளிவான, நேர்த்தியான, கூர்மையான அறிவைப்பொழிகிற முகம் இவருக்கு.

சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “ஆல்மோஸ்ட் இறந்திருந்தேன் ஷேக், உங்கள் மானிட்டர் ஒளி போனதும்” என்றேன்

“நோ நோ ஐம் இம்ப்ரெஸ்ட், நேரில் என் மகிழ்வைத் தெரிவிக்கத்தான் சட்டென எழுந்தேன். இந்த முட்டாள்கள் என்னை எந்த விதத்திலும் நானாக இருக்கவிடுவதில்லை” என்றார் வெளியிலுள்ள மெய்க்காவலர்களை சுட்டிக்காட்டி.

சற்று இழுத்து மூச்சுவிட்டுக்கொண்டேன்

“எனக்கு இந்த ப்ரோபசல் மிக மிகப்பிடித்திருக்கிறது. நிச்சயமாகச்செய்து முடிக்கவேண்டிய நெடு நாள் பிரச்னை. இப்போது முறையான காரணமும் வந்திருக்கிறது. நான் கேபினெட்டில் உடனேயே இதனை எழுப்புகிறேன். உங்களுக்கு நன்றி” என்றார் கைகளை விரித்து. எத்தனை நிம்மதி, எத்துணை மகிழ்வு, எவ்வளவு பெரிய அங்கீகாரம் இது? மிகுந்த நிறைவோடு

“மிக்க நன்றி ஷேக்” என்று எழுந்தேன்

சக்கர வியூகம் 8
சக்கர வியூகம் 6 | அரசாங்க அழைப்பு

“நம் மீட்டிங் இன்னும் முடியவில்லை” என்றார்

எத்தனை சிறுபிள்ளைத்தனமாக எழுந்துவிட்டேன், “சாரி” என்றேன்

“எனக்கு உங்கள் திறமைகள், நுண்ணுணர்வு, முடிவெடுக்கும் வேகம், நிதானமான செய்கை என ஏகப்பட்ட விஷயங்களை கடந்த ஒருமாதமாக கூர்ந்து அவதானித்திருக்கிறேன். எனக்கு இந்த தேசத்தில் செய்ய ஏகப்பட்ட பணிகள் இருக்கின்றன. பணிகளுக்கீடா முட்டுக்கட்டைகளும், செயல் திறன் குறைந்த, அல்லது வேகமில்லாத பணியாளர்களுடனும், என் பாதுகாப்புக்காரணங்களுக்குமிடையே ஊசலாடிக்கொண்டிருக்கிறேன்”

இதையெல்லாம் ஏன் சொல்கிறார் என்று யோசித்தேன், மனதில் ஒரு பக்கத்தில் அரசாங்கத்தின் இந்த செயற்கை பாலைவனச்சோலைகளுக்கு என்ன கோட் செய்யலாம் என்ற கணிதம் பெருமளவு ஆக்கிரமித்திருந்தது.

“இதற்கெல்லாம் மத்தியின் எனக்கு உங்களைப்போன்ற ஒருவர் அரசாங்கத்தின் செயல் பிரிவில் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும், தேசத்திற்கும்…” என்றவர், சற்று இடைவெளி கொடுத்து என் முகத்தை கவனித்தார். எனக்கு அதில் பாதிதான் காதில் விழுந்தது…

விழுந்த பாதியே பல மின்னல்களை மூளைக்குள் இட்டுச்சென்றது..

“சாரி, ஷேக், இஃப் யூ டோண்ட் இன்னொரு முறை சொல்ல முடியுமா” என்றேன் சிரித்துக்கொண்டே

“என்னோடு இணைந்து இந்த அரசாங்கத்தில் பணி செய்ய விருப்பமா? என்று கேட்டேன்” என்றார்.

மையமாகத் தலையசைத்தேன். ஆனால் என்ன பணி, இந்த ஃபஹீமாவைப்போல வாயிற்காவலாளி பணியா, அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய, இவரிடம் சரி என்று சொல்லி இவர் மீண்டும் என்னை ஒரு கூட்டுக்குள் அடைத்துவைத்துவிட்டால், இத்தனை நாள் பிரியமுடன் வளைத்த இறகுகளை என்ன செய்வது.

இந்த ஸ்வாமிஜி ஒரு மொபைல் போன் வைத்துக்கொண்டால்தான் என்ன, இப்போது எங்கே என்று தேடிப்போய் எப்படி அவரை ஆலோசனை கேட்பேன். என்ன பதில் சொல்வது என்று யோசனையுடனும், சற்று தயக்கத்துடனும் முகத்தை ஏறிட்டபடியே புன்னகைத்தேன்.

“புரிகிறது. நான் எந்தச்சிறுபணிக்கும், உங்கள் பெரிய ஆளுமையை தாரை வார்க்கமாட்டேன். உங்கள் திறமைக்கேற்ற ஒன்றாகத்தான் அது இருக்கும். நான் வழங்க உத்தேசித்திருக்கும் பணி. முஸ்தஷர், தன்ஃபிதுயின் வடானியம்” என்று முடித்து சற்று இடைவெளி விட்டார்.

இது என்ன, அதிரசத்தை வாயில் வைத்துக்கொண்டு இன்றைக்கு நல்ல நாள் என்று சொல்வதைப்போல ஒரு மொழி, ஒருவேளை ஃபஹீமாவின் செக்யூரிடி பணியைத்தான் ஜிலேபி பிழிந்து சொல்கிறாரோ என்று யோசித்து முடிப்பதற்குள்ளாகவே

“National Executive Advisor” என்கிறார். சற்று நேரத்திற்கு முன்பு அந்தரத்தில் நிறுத்திய அதே மூச்சுதான். மீண்டும் அந்தரத்திற்குப்பாவ நிற்கிறது. இழுத்துப்பிடித்து நிறுத்தி.

“ஷேக், இது கனவில்லை என்று சொல்லுங்கள். இது எப்படி சாத்தியம். இதற்கு நான் உகந்தவள்தானா? நான் இந்த நாட்டு குடிமகள் கூட இல்லையே”

“அது ஒரு பேப்பர் வொர்க்தான், அந்தக்கவலை உங்களுக்கு வேண்டாம். நான் கடந்த மாதத்தில் பலமுறை யோசித்து எடுத்த முடிவுதான். உங்களுக்கு 15 நாட்கள் நேரமும் உண்டு. ஆனால் இந்த டீலை முடிப்பதற்கு உங்கள் உதவி வேண்டும். அதற்கு ஸ்பெஷல் ஃபீஸ் அரேஞ்ச் செய்கிறேன். அதற்குப்பிறகு உங்கள் முடிவைச்சொன்னால் போதும்” என்று எழுந்தார்.

“ஷுக்ரன்” என்றவாறே கைகுலுக்கிவிட்டு நகர்ந்தார்.

சக்கர வியூகம் 8
சக்கர வியூகம் 7 | ஷேக் அமானுல்லா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com