சக்கர வியூகம் 7 | ஷேக் அமானுல்லா

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் ஏழாம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.
சக்கர வியூகம் 7
சக்கர வியூகம் 7புதிய தலைமுறை

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்

சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்
சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்

அத்தியாயம் 7 -ஷேக் அமானுல்லா

அரண்மனையின் தரைகள் அனைத்துமே புஸூபுஸுவென ஒரு பூனைக்குட்டியின் தோல் போன்ற ஏதோ ஒரு பிராண்ட் கார்பெட்டினால் தழுவப்பட்டிருந்தது.

”அது ஷேக்கோட ஃபேவரைட் பிராண்ட், அதுனால பேலஸ்ல அவர் ஆஃபீஸ் முழுக்க இதே கார்பெட்தான்” என்றாள் அரபி கலந்த ஆங்கிலத்தில் ஷேக்கின் பெர்சனல் செகரட்ரி ஃபஹீமா.

‘என்ன இருந்தாலும் நீ இந்தியப்பெண், நான் லோக்கலாக்கும்’ என்ற மதர்ப்பு அவள் குரல், நடவடிக்கை எல்லாவற்றின் பின்னணியிலும் இருந்ததை உணர முடிந்தது. இருக்கலாம் . தவறில்லை. இருக்கவேண்டியதுதான்.

ஆனால் குழையக்குழைய மூன்று இன்ச் மேக்கப் போட்டிருக்கும் உன் முகத்திற்கும், சற்றே டச்சப் செய்து எழுந்து வந்திருக்கும் என் முகத்திற்கும் உள்ள அழகிற்கு இன்னும் உனக்கு சில ஜென்மங்கள் வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.

ஒரு நீண்ட மேசையும், சுற்றிலும் மானிட்டர்களும், முனையில் பெரிய தொலைக்காட்சித்திரையும் இருந்த அந்த மூலை அறைக்கு கூட்டிச்சென்றாள். அதில் நடுவண் இருக்கையில் இருத்தி, இன்னும் சில நிமிடங்களில் ஷேக் உன்னிடம் பேசுவார் என்றாள்.

“நீ இங்கே இருப்பாய் அல்லவா?” என்றேன்

“ஏதோ பெரிய விஷயமாமே. நீ மட்டும்தான் என்றிருக்கிறார்” ஷேக் என்றபடி கடந்து போனாள். அவளின் சற்று எடக்கான பேச்சின் காரணம், இந்த மீட்டிங்கில் அவள் இல்லை என்பதனால் வந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி வந்தது.

சக்கர வியூகம் 7
சக்கர வியூகம் 6 | அரசாங்க அழைப்பு

இதோ இந்த அரண்மனையின் ஏதோ ஒரு தளத்தில்தான் ஷேக் இருக்கிறார். அவர் இல்லம், அலுவலகம், எல்லாமே இங்கேதான். ஆனால் அவர் நேரில் யாரையும் சந்திப்பதில்லை, எல்லாமே விர்ச்சுவல் சந்திப்புகள்தான் என்று சொல்லியிருந்தார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் திரை ஒளிர்ந்து அதில் ஷேக்கின் முகம் வந்தது.

”ஹலோ மிருணாளினி, ஐ அம் அமானுல்லா” என்றது அவர் முகம்

லேசான அரபி கலந்த அமெரிக்க ஆங்கிலம். ஆறு வருட அமெரிக்க வாசம், ஸ்டான்ஃபோர்ட் கல்வி காரணமாக இருக்கலாம்.

“குட் மார்னிங் ஷேக்” என்றேன்

“உங்கள் வருகைக்கு நன்றி. எங்கள் அழைப்பை உடனே ஏற்றுக்கொண்டமைக்கு வந்தனங்கள்” என்றார். பிடரி சிலிர்த்தது.

“மை ப்ளஷர் ஷேக்” என்றேன் நிதானித்து

”உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ளப்போவதில்லை மிருணாளினி. கடந்த ஆறு மாதத்தில் உங்கள் கார்பரேட் நாட்டுக்கு நிறைய நல் வருவாய்களையும், முதலீடுகளையும் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டே இருக்கிறது. நிறைய நல்ல செய்திகள் வந்துகொண்டே இருந்தது. யார் இதன் பின்னணியில் என்றபோது உங்கள் சேர்மேன் பெயரை விட உங்கள் பெயரையும், உங்கள் திறமையையும் பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார்கள்”

மகிழ்வு பெருக்கோடிக்கொண்டிருந்தது

“உங்களைப்பார்க்க வேண்டும் என்று தோன்றியது. கூடவே ஒரு சிக்கலான விஷயமொன்று, எங்கள் அரசாங்கம் முயன்றும் தடைப்பட்டுக்கொண்டே இருக்கிற ஒன்றை, உங்களிடம் விவரிக்க இருக்கிறேன். உங்களுக்கு தோன்றினால், தீர்வு கிடைக்கும் என்று நீங்கள் நம்பினால். உங்களிடம் ஒப்படைக்கிறேன்.”

இது பெரிது, மிகப்பெரிது. என் திறமை அரசாங்கத்தினால் பரிசோதிக்கப்படுகிறது. மிகவும் கவனமாக வார்த்தைகளைக் கோர்க்கவேண்டும்.

மிகுந்த தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, கைப்பைக்குள் இருந்த எலுமிச்சம்பழ கண்டெய்னரை சற்று தொட்டுக்கண்களில் ஒற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தேன்

“உங்கள் திருவாயால் என் நிறுவனம் குறித்தும், என்னைப்பற்றியும் கேட்பது என் நல்லூழ் ஷேக். உங்கள் சிக்கலைப்பகிருங்கள் இயன்றால் மேதமை தங்கிய மன்னரின் ஆசியோடு அதை நான் செய்கிறேன். இல்லையென்றால் அது என் மனத்தையும், இந்த அறையையும் விட்டு எப்பொழுதும் வெளியே போகாது”

அது அவரை அசைத்தது புரிந்தது. அவர் தந்தையின் மீது கொண்ட பாசத்தைப்பற்றி பேசாத மேடை கிடையாது. அங்கே பற்றவைத்தால், இவர் மனம் பற்றிக்கொள்ளும் என்று எனக்குத்தெரிந்தது. அவர் பற்றிக்கொண்டார்தான்.

“தேங்க்யூ, தேங்க்யூ” என்று இருமுறை அழுத்தி நன்றி சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார்.

சக்கர வியூகம் 7
சக்கர வியூகம் 5 | கத்தகரு வெங்கட ரெட்டி

அது ஒரு உள்நாட்டுப்பிரச்னை மட்டுமல்ல. தேசத்தின் கோடியில் யாரும் அண்டா பாலைவனத்தில் உள்ள ஒரு பெரிய எண்ணெய்க் கிணற்றைப்பற்றிய பிரச்னை. கிணறென்றால் கிணறல்ல. இது ஒரு பெரிய ஏரி அளவிற்கு எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேசம் மற்ற அண்டை தேசங்களைப்போல எண்ணெய் வளங்கள் நிறைந்த நாடு கிடையாது. டூரிசத்தையும், ரியல் எஸ்டேட்டையுமே நம்பி வாழும் தேசம். எண்ணெய் உண்டென்றாலும், அதை வைத்தே கல்லா கட்ட முடியாத துரதிருஷ்டம் கொண்ட நாடு. ஆனாலும் அதனைக்கடந்து இந்தப்பிராந்தியத்தில் இதன் செல்வாக்கு கொடி நடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்றாலும், வளைகுடா என்றால் எண்ணெய் என்றிருக்கும் அதன் மீதான கவன ஈர்ப்புகள் இன்னும் இருந்துகொண்டுதான் இருந்தன.

இந்த எண்ணெய் ஏரியின் பிரச்னை என்னவென்றால், இதன் ஒரு முனையின் குறிப்பிட்ட பகுதி கிட்டத்தட்ட மூன்று சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே - அண்டை நாட்டினுள் இருக்கிறது. அதுவும் பாலைவனம்தான், கண்டுகொள்ளாத பகுதிதான். ஆனால் சிக்கல் என்னவெனில் அது பெரியண்ண தேசத்தின் முழுப்பிடியில் உள்ள நாடு. எண்ணெய்க்காக எல்லை மீறுதல் என்பதை ஒரு சர்வதேசச்சதி என்று முடிவு செய்து நாளன்னைக்கே ராணுவத்தளவாடங்களை தேசத்தின் மீது திருப்பிவிடக்கூடிய அபாயங்களெல்லாம் உள்ளன.

இதனாலேயே இந்தச்சிக்கலை பல வருடங்களாக ஒத்திப்போட்டுக்கொண்டே வந்திருக்கிறார்கள். அண்டை நாடுகள், கோபிக்காமல், பெரியண்ணனுடன் சண்டைக்குப்போகாமல் இதைத்தீர்க்கும் வழிகளை யோசித்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.

நிதானமாகக்கேட்டுக்கொண்டேன். உடனேயே அதன் முடிச்சுகள் புரிந்தது. அதன் அதிகாரக்கரம் வளைகுடாவில் இல்லையென்பது தெளிவாகப்புரிந்தது.

ஒரு ப்ரபோசலுடன் வருவதற்கு இருபத்தி நான்கு மணி நேர அவகாசம் வேண்டுமென்றேன். ஒரு வாரம் எடுத்துகொள்ளலாம் என்றார். அடுத்த வியாழன் மீண்டும் அப்பாயிண்ட்மெண்ட் அனுப்பச்சொன்னார். ஆல்தி பெஸ்ட் என்று சொல்லி திரையை கறுப்பாக்கி விடைபெற்றார்.

ஒரு கனவு போல இருந்தது. எவ்வளவு பெரிய விளையாட்டு இது. நினைத்தாலே மலைப்பாக இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com