ஒவைசி, சிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர்
ஒவைசி, சிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர்pt web

Bihar Election| மூன்று ஆட்டக் குலைப்பர்கள்.. பி.கே., சிராக், ஒவைசி; ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

பிஹாரில், நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் சரி; தேஜஸ்வி தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் சரி; ஆட்டக்குலைப்பர்கள் பெரும் பிரச்சினையாக இருப்பார்கள்.
Published on
Summary

பிஹாரில், நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் சரி; தேஜஸ்வி தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் சரி; ஆட்டக்குலைப்பர்கள் பெரும் பிரச்சினையாக இருப்பார்கள்; குறிப்பாக முடிவுகளைத் தீர்மானிப்பதில், பிரசாந்த் கிஷோர், சிராக் பாஸ்வான், அசாதுதீன் ஒவைசி மூவரும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

நிதிஷுக்கு கலக்கத்தைக் கொடுக்கும் லோக் ஜனசக்தி !

பிஹார் 2025 தேர்தலில், நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – தன்னுடைய எதிரணிகளுக்கு இணையாகக் கலக்கமாகப் பார்க்கக் கூடிய கட்சி லோக் ஜனசக்திதான். அரை நூற்றாண்டுக்கு முன்பு லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் போன்றே பிஹாருடைய நம்பிக்கைக்குரிய சோஷலிஸ முகங்களில் ஒன்றாக உதித்த ராம் விலாஸ் பாஸ்வான் தொடங்கிய கட்சி இது. தொடக்கத்தில் இணைந்து செயல்பட்ட பாஸ்வான் பிற்பாடு தனக்கென்று தனிப் பாதையை அமைத்துக்கொண்டார்.

ராம் விலாஸ் பாஸ்வான்
ராம் விலாஸ் பாஸ்வான்x

பிஹாரில் லாலு எப்படி பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் தனக்கென்று ஓர் ஆதரவுத் தளத்தை அமைத்துக்கொண்டாரோ, நிதிஷ் எப்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் தனக்கென்று ஓர் ஆதரவுத் தளத்தை அமைத்துக்கொண்டாரோ அப்படி பட்டியலின மக்கள் மத்தியில் தனக்கென்று ஓர் ஆதரவுத் தளத்தை அமைத்துக்கொண்டிருந்தவர் பாஸ்வான். சொல்லப்போனால், கன்ஷிராமும், மாயாவதியும் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பே இந்தி பிராந்தியத்தில் தலித் அரசியலின் முகமாக உருவெடுத்தவர் பாஸ்வான். லாலு, நிதிஷ் போன்று தானும் ஒரு நாள் முதல்வர் ஆக முடியும் என்று நம்பியவர். அதற்கேற்ப வலுவான கட்டமைப்பை உருவாக்கியவர். லாலு, நிதிஷ் இருவருடனும் முரண்பாடுகள் பாஸ்வானுக்கு இருந்தன என்றாலும், நிதிஷுடனான முரண்பாடு அவருக்கு பகையாக மாறியது.

ஒவைசி, சிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர்
Bihar Election | பிஹார் ஏன் வறுமையாக இருக்கிறது?

2005இல் பிஹார் இரு தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முன்னதாக 2005 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காத சூழல். அந்தச் சமயத்தில் 29 இடங்களை வென்றிருந்தது பாஸ்வானின் கட்சி. லாலு, நிதிஷ் இருவருக்குமே தன்னுடைய ஆதரவு கிடையாது; மாறாக முஸ்லிம் ஒருவர் முதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டால் அவருக்கு ஆதரவு தருவேன் என்று சொன்னார் பாஸ்வான். பிஹாரில் அதுவரை லாலு கட்சியே ஆட்சியில் இருந்தது. ஆட்சிக்குப் பக்கத்தில் அப்போதுதான் நிதிஷ் வந்திருந்தார். பாஸ்வான் ஆதரவு தராத சூழலில், அவருடைய எம்.எல்.ஏ.க்களில் 22 பேரை தன் பக்கம் இழுத்தார் நிதிஷ். அப்படியும் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, ஆட்சி அமைக்க முடியாமல் போனது என்றாலும், அடுத்து 2005 அக்டோபரில் நடந்த தேர்தலில் பாஸ்வானிடமிருந்து நிதிஷ் பக்கம் வந்தவர்களில் பெரும்பான்மையினர் நிதிஷ் கட்சியில் நின்று வென்றார்கள்.

ராம் விலாஸ் பாஸ்வான், நிதிஷ்குமார்
ராம் விலாஸ் பாஸ்வான், நிதிஷ்குமார்pti

நிதிஷ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. எதிரே பாஸ்வானின் கட்சி 10 இடங்களுடன் முடங்கியது. இந்த துரோகத்தால் பாஸ்வான் பெரும் மனவுளைச்சலுக்கு உள்ளானார். அடுத்து, நிதிஷ் முதல்வரானதும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைக் காட்டிலும் கீழே இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு சிறப்பு கவனம் அளித்து, தன்னுடைய ஆதரவு தளமாக அவர்களை மாற்றிக்கொண்டாரோ அப்படி தலித் வரையறைக்குள் இருந்த 22 சாதிகளில் 18 சாதிகளை மட்டும் பிரித்து மகா தலித் எனும் ஒரு பிரிவை உருவாக்கி, அவர்களுக்கு சிறப்புக் கவனமும், சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்தினார். தலித் வட்டத்துக்குள் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும் பாஸ்வான் சமூகம் உள்ளிட்ட 4 சமூகங்கள் மகா தலித் வட்டத்துக்குள் கொண்டுவரப்படவில்லை.

ஒவைசி, சிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர்
Bihar Election | மகாகத்பந்தன் கூட்டணியின் மிகப்பெரிய பலம் இதுதான்; வெற்றிக்கான வாய்ப்புகள் எப்படி?

பிற்பாடு 10 ஆண்டுகள் கழித்து எல்லா சமூகங்களையும் ஒரே வட்டத்துக்குள் கொண்டுவந்துவிட்டாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் ராம்விலாஸ் பாஸ்வானுடைய ஆதரவுத் தளத்தை நிதிஷின் இந்நடவடிக்கை சுருக்கிவிட்டது. இது பாஸ்வானுக்கு நிதிஷ் கொடுத்த ஆறாத ரணம் ஆனது. இத்தகு சூழலில், இடையிடையே லாலுவுடன் இணைந்து கூட்டணி கண்டார் பாஸ்வான். இது, நிதிஷுக்கு பாஸ்வான் மீதான பகையானது. எப்படியும் 2020இல் பாஸ்வான் மறையும் வரை நிதிஷும் பாஸ்வானும் தங்களுடைய மனக்கசப்பிலிருந்து வெளியே வரவே இல்லை. இந்தப் பின்னணியில் லோக் ஜனசக்தியின் அடுத்த தலைவராக பதவியேற்றுக்கொண்ட பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கு நிதிஷ் மீது ஆழமான கசப்பு இருந்தது.

சிராக் பாஸ்வான்
சிராக் பாஸ்வான்pt web

மத்தியில் பாஜகவுடன் உறவில் இருந்தபோதும், 2020 பீகார் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார் சிராக் பாஸ்வான். மொத்தம் 243 இடங்களைக் கொண்ட பிஹார் சட்டமன்றத் தேர்தலில், 133 தொகுதிகளில் போட்டியிட்டது சிராக்கின் லோக் ஜனசக்தி கட்சி. அது ஏன் மிச்சம் 110 தொகுதிகளில் போட்டியிடவில்லை. ஏனென்றால், அங்கெல்லாம் பாஜக களத்தில் இருந்தது. அதாவது நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் பாஜக 110 தொகுதிகளிலும் ஏனைய கூட்டணி கட்சிகள் 43 தொகுதிகளிலும் போட்டியிட்ட சூழலில், பாஜக போட்டியிடும் 110 தொகுதிகளில் மட்டும் மறைமுகமான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார் சிராக். 2020 தேர்தலில் ஒரேயொரு இடத்தில்தான் அவருடைய லோக்ஜனசக்தி வென்றது என்றாலும், மாநிலம் தழுவி 5.66% வாக்குகளை குவித்தது. கூடவே கிட்டத்தட்ட 34 தொகுதிகளில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் தோல்விக்கு வழிவகுக்கும் வகையில் ஓட்டைப் பிரித்தது. இதன் விளைவாகத்தான் 2024 தேர்தலில் சிராக் பாஸ்வானை மீண்டும் கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவந்தது பாஜக.

ஒவைசி, சிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர்
Bihar Elections | நீடிப்பாரா நிதிஷ், நிறைவேறுமா தேஜஸ்வியின் கனவு.. வாக்குப்போரில் வெல்லப்போவது யார்?

2024 தேர்தலில் பாஜக கூட்டணி பிஹாரில் பெரும் வெற்றி பெற சிராக் பாஸ்வானும் ஒரு காரணம். ஆனாலும், ” நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு வேலை செய்தோம்; சட்டமன்றத்தில் நிதிஷுக்கு அல்லவா வேலை செய்கிறோம்!” என்ற எண்ணம் லோக் ஜனசக்தி கட்சியினர் இடையே இருப்பதாக நிதிஷ் கட்சியினர் கூறுகிறார்கள். இதன் விளைவாக நிதிஷ் கட்சி போட்டியிடும் 101 தொகுதிகளிலும் லோக்ஜனசக்தி ஓட்டுகள் தங்களுக்கு வருமா என்ற கேள்வி அவர்களிடம் இருக்கிறது.

பீகார் தேர்தல்
பீகார் தேர்தல்எக்ஸ் தளம்

அதேபோல, கூட்டணியில் தாங்கள் போட்டியிடும் 28 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லை என்று சிராக் கட்சியினர் சொல்கிறார்கள். தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புகூட நிதிஷ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; நிர்வாகம் சரியில்லை என்று கடுமையாக விமர்சித்திருந்தார் சிராக் பாஸ்வான். ஆக, 129 தொகுதிகளிலும் கூட்டணி முழு பலத்தோடு இல்லை என்ற கவலை பாஜகவுக்கு இருக்கிறது. இவ்வாறு, சிராக் பாஸ்வானை ஆட்டக்குலைப்பராகவே பார்க்கிறார்கள் நிதிஷ் கட்சியினர்!

ஒவைசி, சிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர்
Bihar Election | பிஹார் சொல்லும் சேதி பெண்களின் எழுச்சி!

சிறுபாண்மை வாக்குகளை பிரிக்கும் ஒவைசி.,

அடுத்தது, ராஷ்ட்டிரிய ஜனதா தளத்தின் கவலை. அசாதுதீனுடைய ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி இந்த முறையும் பிஹாரில் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எல்லாமே முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் தொகுதிகள். கணிசமாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள். சென்ற முறை ஒவைசி கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இவற்றில் 5 தொகுதிகளை வென்றதோடு, பல தொகுதிகளில் தேஜஸ்வி தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை மாற்றியது. ஆக, இம்முறையும் ஒவைஸி போட்டியில் இருப்பதால், இந்த இடங்களில் எல்லாம் கலக்கத்தில் இருக்கின்றன.

அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி

இது தவிர இண்டியா கூட்டணியில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டுகளும் சுமார் 10 தொகுதிகளில் உடன்பாடு அடையாத சூழல் கடைசிவரை நிலவியது. இங்கெல்லாம் கூட்டணிக்குள்ளேயே போட்டி வேட்பாளர்கள் நிற்கிறார்கள். இந்த இடங்களும் ஆட்டத்தைக் குலைக்கலாம் என்ற அச்சம் தேஜஸ்வி கட்சியினரிடம் இருக்கிறது. இது தேர்தல் பிரச்சாரத்திலும் எதிரொலிக்கிறது. ஒவைசியை தீவிரப்போக்காளர் என்று விமர்சித்தார் தேஜஸ்வி. பதிலுக்கு, தேஜஸ்வியை மோடியின் சோட்டா பாய் என்று விமர்சித்தார் ஒவைசி. இவ்வாறு, கலக்கத்துடன்தான் ஒவைசியை அணுகுகிறார்கள் இண்டியா கூட்டணியினர்.

ஒவைசி, சிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர்
பிஹார்| இருவரும் இணைந்து மாற்றத்தை கொண்டு வருவோம்.. தேஜஸ்விக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

மாயக் குதிரை பிரசாந்த் கிஷோர் !

இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாயக் குதிரையாக களத்தில் நிற்கிறார் ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர். ஒருகாலத்தில் அரசியல் கட்சிகளுக்கு கனவுகளை விற்றவர் இப்போது தனது சொந்தக் கனவை நிறைவேற்றிக்கொள்ள தன் சொந்த மாநிலத்தையே களம் ஆக்கிக்கொண்டிருக்கிறார். பிஹார் தழுவி அவர் நடத்திய பாத யாத்திரையும், முன்வைத்த கோஷங்களும் நிச்சயமாக வாக்காளர்களிடம் ஒரு தாக்கத்தை உண்டாக்கியுள்ளன. தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனால், மோடி – ராகுல், நிதிஷ் – தேஜஸ்வி என்று எல்லா தரப்பையுமே கடும் விமர்சனத்துக்குள்ளாக்கினார். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பிஹாரிகள் புலம்பெயர்ந்து செல்வது ஆட்சியாளர்களின் தவறுகளால் என்றார். வேலைவாய்ப்பின்மையை மையப்படுத்தியும் பிஹாருக்குள்ள வாய்ப்புகளை முன்வைத்தும் பேசினார். குடும்ப அரசியலையும் வாரிசு அரசியலையும் ஊழல்களையும் கடுமையாகச் சாடினார். இதெல்லாமே பீகார் களத்தில் பேசுபொருள் ஆகியுள்ளன.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்web

ஆனால், எத்தனை இடங்களை பிரசாந்த் கிஷோர் வெல்வார்? தெரியவில்லை. ஜன்சுராஜுக்கு ஓட்டு போடுவேன் என்று சொன்னவர்கள் குறைவு. ஆனால், அவர் வாங்கும் கொஞ்ச ஓட்டுகளும் யாரைத் சேதத்துக்கு உள்ளாக்கும் என்ற கவலை இரு தரப்பினரிடமுமே இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகளைப் பிரித்துவிடுவார் என்ற அச்சம் ஆர்.ஜே.டி. தரப்புக்கு இருக்கிறது; அடிப்படையில் அவர் முற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்; முற்பட்ட சமூகங்கள் பிஹாரில் பாஜக ஆதரவுத் தளத்தில் இருக்கின்றன. ஆகையால், தங்களுடைய ஓட்டுகளைப் பிரித்துவிடுவார் என்ற அச்சம் பாஜக தரப்புக்கு இருக்கிறது. ”மோடியின் பி டீம்” என்று ஆரம்பத்தில் வசை பாடப்பட்டாலும், களத்தில் அவருடைய வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்; தூக்கப்படுகிறார்கள் என்று பாஜகவைத்தான் குற்றஞ்சாட்டினார் பிரசாந்த் கிஷோர்.

இவ்வாறு, இந்த மூவரையும் அச்சத்துடனேயே களத்தில் பார்க்கிறார்கள். சரி, இதெல்லாம் எல்லா தேர்தல்களிலும் நடக்கும் கதைதானே; பிஹார் தேர்தலில் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இதைப் பேசுகிறார்கள் என்று ஒரு கேள்வி எழுகிறது இல்லையா? பதில் எளிமையானது. கடந்த 2020 தேர்தலில் இரு தரப்பும் 37% ஓட்டுகளைப் பெற்றன. இரு தரப்புக்கும் இடையிலான இடைவெளி எவ்வளவு தெரியுமா? வெறும் 12,000 சொச்ச ஓட்டுகள். ஆட்சியை சில ஆயிரம் ஓட்டுகள் தீர்மானிக்கும் இடத்தில்தான் ஆட்டக்குலைப்பர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள்!

ஒவைசி, சிராக் பாஸ்வான், பிரசாந்த் கிஷோர்
Bihar Exit Polls | என்ன சொல்கின்றன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்? - விரிவான அலசல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com