Bihar Elections | நீடிப்பாரா நிதிஷ், நிறைவேறுமா தேஜஸ்வியின் கனவு.. வாக்குப்போரில் வெல்லப்போவது யார்?
பிஹார் — இந்தியாவின் அரசியல் திசையை தீர்மானிக்கும் மாநிலம். 243 தொகுதிகளில் தங்கள் வாக்குகளை செலுத்தி முடித்துள்ளனர். நிதீஷ் குமாரின் நீண்ட ஆட்சிக்கும், தேஜஸ்வி யாதவின் இளம் சவாலுக்கும் இடையேயான கடுமையான போட்டி இந்த தேர்தலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றியுள்ளது.
“13 கோடி பிஹார் மக்கள், 7 கோடி வாக்குகள் – யார் ஆட்சி?”
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது பிஹார். 13 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில், வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 7 கோடியே 40 லட்சம் பேர். இது, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகைக்கு நிகரானது. பிஹார் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது, இதனால் தான் இருபெரும் கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பிஹாரின் பக்கம் கவனத்தை செலுத்தினர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பிராந்திய கட்சித் தலைவர்கள் பரப்புரை செய்தனர். இரு பெரும் கூட்டணிகளுடன், பிற மாநிலங்களை மையமாகக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, மஜ்லீஸ் கட்சிகள் கணிசமான தொகுதிகளில் போட்டியிட்டன.
“பிஹாரில் ஆட்சிப் போர் – நிதீஷ் vs தேஜஸ்வி கடும் போட்டி!”
20 ஆண்டுகளாக முதல்வர் நாற்காலியை தன்வசம் வைத்திருக்கும் நிதிஷ் குமாருக்கும், முதன்முறையாக முதல்வராவாரா என எதிர்பார்க்கப்படும் 35 வயது தேஜஸ்வி யாதவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்றே கணிக்கக்கட்டிருந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யார்?
தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சிகளாக பாரதிய ஜனதாவும், ஜக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி 29 இடங்களில் போட்டியிட்டது. ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரியா லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.
மகாகட்பந்தன் கூட்டணியில் யார், யார்?
மகாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரியா தள ஜனதா தளம் 143 தொகுதிளில் போட்டியிட்டது. இதன் மூலம் பிஹார் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் கட்சியாக அக்கட்சி இருந்தது. காங்கிரஸ் கட்சி 61 இடங்களிலும், சிபிஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 20 இடங்களிலும், முகேஷ் சஹானி கட்சி வி.ஐ.பி கட்சி 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
களத்தில் மற்றவர்கள் யார், யார்?
இந்திய கம்யூனிஸ்ட் 9 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும் போட்டியிட்டன, ஐ.ஐ.பி. 3 கட்சி 3 இடங்களிலும், ஜன்சக்தி ஜனதா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தி, நட்பில் போட்டியை நடத்தின. சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பதில் முக்கிய சக்தியாக விளங்கும் மகா ஜனநாயக கூட்டணி 79 இடங்களில் போட்டியிடுகிறது. ஒவைசி கட்சியான ஏ.ஐ.எம்.ஐ கட்சி, ராஷ்ட்ரியா லோக் தள், ஆசாத் சமாஜ் ஆகியவை தலா 25 தொகுதிகளில் போட்டியிட்டன . அப்னி ஜனதா தளம் நான்கு தொகுதிகளில் களம் கண்டது.
களத்தில் பிரசாந்த் கிஷோர் கட்சி..
இவை தவிர 243 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முதலில் அறிவித்த பிரசாந்த் கிஷோரின் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதலில் வேட்பாளர் பட்டியலை அறிவித்த பகுஜன் சமாஜ் கட்சி 121 இடங்களிலும், ஆம் ஆத்மி 131 இடங்களிலும் போட்டியிட்டன. குடும்ப பிரச்னையில் தனியாக கட்சி தொடங்கிய லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவின் ஜன் சக்தி ஜனதா கட்சி 22 இடங்களில் போட்டியிட்டது.
இந்த தேர்தலுக்காக அதிக முறை பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் உள்துறை அமித்ஷா. மொத்தம் 34 பொதுக் கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார் அமித் ஷா. இதில், மழையின் காரணமாக ஒரு சில கூட்டங்கள் டிஜிட்டல் முறையில் நடந்தது, நவீன கால அரசியலின் ஒருபகுதியாக இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் தலா 15 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர். பா.ஜ.க சார்பில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 18 நிகழ்ச்சிகளிலும், கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா 8 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர்.
அனல் பறந்த பரப்புரை கூட்டங்கள்..
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 3 நிகழ்ச்சிகளிலும், பொதுச் செயலாளர் பிரியங்கா 13 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் தங்கள் கூட்டணிக்காகப் பல பொதுக்கூட்டங்களில் பேசி களம் கண்டனர். பிரச்சாரத்தின் கடைசி நாளில் பிரதமர் நரேந்திர மோடி பிஹாருக்குப் பயணிக்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி, அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் களத்தில் இருந்து கடைசி நாளிலும் பரப்புரையில் ஈடுபட்டனர்.
நிதி அயோக் அறிக்கையில் அதிக வறுமை விகிதத்தை கொண்டுள்ள மாநிலமாக இருக்கும் பிஹாரில் வேலைவாய்ப்பு பிரச்சினையை புதிய அரசு தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. 40 ஆண்டுகளாக நீடிக்கும் லாலு-நிதிஷ் போட்டி, அதிகளவிலான மகளிர் வாக்குகள், நலத்திட்ட வாக்குறுதிகள் ஆகியவற்றை தாண்டி, வாக்காளர் பட்டியல் சீர்திருத்தமும், டெல்லி கார்வெடிப்பும் தேர்தல் முடிவுகளில் பிஹார் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியிருக்கிறது.

