Bihar Election | மகாகத்பந்தன் கூட்டணியின் மிகப்பெரிய பலம் இதுதான்; வெற்றிக்கான வாய்ப்புகள் எப்படி?
பிஹார் தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணி பலம் மற்றும் பலவீனங்களை எதிர்கொள்கிறது. இளம் வாக்காளர்களின் ஆதரவு தேஜஸ்விக்கு அதிகம் கிடைத்தாலும், வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகள் பின்னடைவாக இருக்கின்றன. யாதவ மற்றும் இஸ்லாமிய வாக்குகள் ஆர்ஜேடிக்கு பலம் சேர்க்கும் நிலையில், கூட்டணியின் பல்வேறு கட்சிகள் ஒரே கொள்கையில் இணைந்திருப்பது வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
சில வாரங்களாக திட்டங்கள், வாக்குறுதிகள், குற்றச்சாட்டுகள் என சூடு பறந்த பிஹார் தேர்தலில் முதற்கட்ட பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, ஜன் சுராஜ், மகா ஜனநாயகக் கூட்டணி என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.
இதில் எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் பிராந்திய மற்றும் தேசியக் கட்சிகள் என 7 கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) போன்ற கட்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன.
இத்துடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) விடுதலை (CPIML-Liberation) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPIM) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் இந்த எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளன.
மேலும், முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி (Vikassheel Insaan Party) மற்றும் இந்திரஜீத் பிரசாத் குப்தாவின் இந்தியன் இன்க்ளூசிவ் பார்ட்டி (Indian Inclusive Party - IIP) ஆகியனவும் மகாகத்பந்தன் கூட்டணியின் கீழ் பிகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்நிலையில் மகாகத்பந்தன் கூட்டணியின் பலம் பலவீனம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Strengths (பலங்கள்)
மாநிலத்தில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் தேஜஸ்விக்கான ஆதரவை அதிகளவில் பார்க்க முடிகிறது. தேஜஸ்வி துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் வேலைவாய்ப்புகளை வழங்குவது மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். கிட்டத்தட்ட 17 மாதங்களில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இளம் வாக்காளர்கள் மத்தியில் தேஜஸ்வியின் இத்தகைய செயல்பாடுகள் எதிரொலித்திருக்கின்றன.
ஆரம்ப கட்டத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதிலும், தொகுதி பங்கீடு விவகாரத்திலும் மகாகத்பந்தன் கூட்டணியில் சிக்கல்கள் இருந்தாலும், தேஜஸ்வி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே, அடுத்த முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கருத்துக்கணிப்புகளில் பிகார் மக்கள் பெருமளவிலான ஆதரவை தேஜஸ்விக்கு வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
யாதவ சமூகம் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குவங்கி ஆர்ஜேடிக்கு பலம். 2005 அக்டோபரில் நடந்த தேர்தலில் பாஜக ஆட்சியில் பங்கேற்க ஆரம்பித்த பிறகு இஸ்லாமியர்களின் வாக்குகள் மொத்தமாக பாஜகவை எதிர்க்கும் கூட்டணிக்கு சென்றிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும், நிதிஷ்க்கு இருந்த தனித்த பிம்பத்தின் காரணமாக இஸ்லாமிய மக்களின் வாக்குகள் 15 முதல் 17% நிதிஷ்க்கு சென்றது. ஆனால் அடுத்தடுத்த தேர்தல்கள் அது பாஜகவை எதிர்க்கும் கூட்டணிக்கே சென்றது. முக்கியமாக ஆர்ஜேடி. கிட்டத்தட்ட 17.7% இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கும் நிலையில் இது ஆர் ஜே டிக்கே பலம்,. யாதவ சமூகத்தின் வாக்குகளையும் சேர்த்தால் கிட்ட்டத்தட்ட 30% வாக்குகள் மொத்தமாக இருக்கின்றன.
ஒரு காலத்தில் அம்மாநிலத்தில் இருக்கும் பட்டியல் சமூக மக்களிடம் காங்கிரஸ் கட்சியே செல்வாக்குடன் இருந்தது. இடையில் நிதிஷ் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் அம்மக்களின் வாக்குகளை குறிப்பிடத்தக்கவகையில் தன்பக்கம் திருப்பியிருந்தாலும், மீண்டும் தற்போது காங்கிரஸ் தனக்கான ஆதரவை மீட்டு வருகிறது. சிராக் பஸ்வான் போன்றோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் சற்றே பட்டியல் சமூக மக்களது வாக்குகளை மகாகத்பந்தனுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.
Weaknesses (பலவீனங்கள்):
இளம் தலைவர்கள் மற்றும் இளம் வாக்காளர்களால் பிகார் மாநிலம் நிறைந்திருந்தாலும், மகாகத்பந்தன் கூட்டணி வாரிசு அரசியல் எனும் விமர்சனத்தை மிகக் கடுமையாக எதிர்கொள்கிறது. தேஜஸ்வி, ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் என கூட்டணியின் முக்கிய முகங்கள் எல்லாம் வாரிசு எனும் கேட்டகிரியிலும் வருவதால் இதுவே அவர்களுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஆர்ஜேடி கட்சியே பெரும்பாலும், ஒரே குடும்பத்தினரைச் சேர்ந்த உறுப்பினர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் தற்போது வரை ஜங்கிள் ராஜ் என்பதைக் குறிப்பிட்டு பேசுகின்றனர். மக்கள் மத்தியில் ஆர்ஜேடி ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மக்கள் மத்தியில் இன்னும் நினைவிலிருப்பதால் மகாகத்பந்தனுக்கு இது பின்னடைவான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பிகார் மாநிலத்தின் ஒவ்வொரு தேர்தலிலும், வெற்றி தோல்விக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைந்துகொண்டே வருகிறது. இத்தகைய சூழலில் காங்கிரஸ் ஆர்.ஜே.டி ஏறத்தாழ 9 தொகுதிகளில் தங்களுக்குள்ளாகவே போட்டியிடுகின்றன. இது மகாகத்பந்தன் கூட்டணியை நேரடியாகவே பாதிக்கும் ஒன்று.
ஏறத்தாழ ஒத்த கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் எல்லாம் ஒரே கூட்டணியில் அமைந்த்திருப்பது, கூட்டணிக்கான பலமாகப் பார்க்கப்படுகிறது
Opportunities (வாய்ப்புகள்):
ஏறத்தாழ நிதிஷின் 20 ஆண்டுகால ஆட்சியில், மாற்றம் வேண்டுமென மக்கள் நினைப்பது மகாகத்பந்தன் கூட்டணிக்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது
வேலைவாய்ப்பு பிரச்னைகள் உச்சத்தில் இருப்பதால், ஆர்ஜேடி சமூக நீதி மற்றும் வேலைவாய்ப்பு எனும் கருப்பொருளில்தான் தேர்தல் அறிக்கையையே வெளியிட்டிருக்கிறது. இளைஞர்கள் அதிகமிருக்கும் மாநிலத்தில் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அரசு வேலை போன்ற வாக்குறுதிகள் மகாகத்பந்தனுக்கு கைகொடுக்கக்கூடிய வாய்ப்புகளாக இருக்கின்றன.
ஏறத்தாழ ஒத்த கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் எல்லாம் ஒரே கூட்டணியில் அமைந்த்திருப்பது.
Threats (அச்சங்கள்):
மாநிலத்தில் இளம் வாக்காளர்கள் அதிகமிருக்கும் நிலையில், இளம் வாக்காளர்களை தன்பக்கம் திருப்புவதற்கு பிரசாந்த் கிஷோர் தயாராக இருக்கிறார்.
இஸ்லாமிய சமூக வாக்குகள் ஆர்ஜேடிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அந்த வாக்குகளை பிரிக்க ஓவைசி களத்தில் இருக்கிறார். கடந்த தேர்தலிலும் மூன்றாவது அணியாக போட்டியிட்ட நிலையில், இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக தொகுதிகளை வென்றது.
தேஜஸ்வியின் சகோதர் தேஜ் பிரதாப் ஆர்ஜேடிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். தேசிய ஜனநாயகக்கூட்டணி முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கும் தேஜ் பிரதாப் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தேஜ்ஸ்வி அதிக கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது.

