20 வயதில் ரூ.72.3 லட்சத்தில் ரோல்ஸ் ராய்ஸில் வேலை.. அசத்தும் கர்நாடகப் பெண்!
கர்நாடகத்தின் திர்த்தஹள்ளி தாலுகாவின் கொடூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரிதுபர்ணா. பள்ளிப்படிப்பை முடித்தபின் மருத்துவர் ஆக விருப்பப்பட்ட ரிதுபர்ணா நீட் தேர்வை எழுதினார். ஆனால், எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. பின்னர் UPSC தேர்வுக்கு தயாராகலாமா என சிறிது காலம் யோசித்தார். ஆனால், பெற்றோர் பொறியியல் படிப்பில் கவனம் செலுத்தச் சொல்ல, தனது கவனத்தை பொறியியலுக்குத் திருப்பியிருக்கிறார் ரிதுபர்ணா.
பல்வேறு ஆலோசனைகள் மற்றும் யோசனைகளுக்குப்பின் கடந்த 2022 ஆம் ஆண்டு சஹ்யாத்ரி இன்ஜினியரிங் கல்லூரியில் Robotics and Automation துறையில் சேர்ந்து பொறியியலைக் கற்கத் தொடங்கினார். TOI செய்தி நிறுவனத்திடம் இதுதொடர்பாகப் பேசியிருக்கும் ரிதுபர்ணா, “PUC தேர்வுக்குப் பிறகு, டாக்டராக வேண்டும் என்பதே எனது கனவு. ஆனால், என் நீட் தேர்வு முடிவுகளில் அரசு இடம் கிடைக்காததால், 2022 CET கவுன்சிலிங்கில் அரசு இடத்தைப் பெற்று சஹ்யாத்ரி கல்லூரியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் சோர்வாக இருந்திருந்தாலும், கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ஆகியவற்றில் தீவிரமான ஈடுபாடுடன் இருந்தேன்” எனத் தெரிவிக்கிறார்.
கல்லூரியிலும் பல்வேறு விஷயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார் ரிதுபர்ணா. முதலில் தனது சீனியர்களின் படைப்புகளை கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர். பின்னர், பாக்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ரோபோட்டிக்ஸ் உதவியுடன் தீர்ப்பதை நோக்கமாகக் ஆராய்ச்சியில் தனது குழுவினருடன் சேர்ந்து ஈடுபட்டிருக்கிறார். முடிவாக, அறுவடை இயந்திரம் மற்றும் தெளிப்பான் மாதிரியை உருவாக்கி அதை, கோவா INEX போட்டியில் அறிமுகப்படுத்தி தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருக்கிறார். மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது என்னவெனில், இந்த போட்டியில் ஜப்பான், சீனா, சிங்கப்பூர் மற்றும் ரஷ்யாவிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர் என்பது. அத்தனை பேரையும் வென்ற ரிதுபர்ணாவின் முதல் அடியே தங்கமாக மாறியிருக்கிறது.
பின்னர் கர்நாடக தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NITK) ஆராய்ச்சிக் குழு ஒன்றுடன் இணைந்து ரோபோடிக் அறுவை சிகிச்சை தொடர்பாகவும் கற்றுக்கொண்டார். தொடர்ந்து அப்போதைய துணை ஆணையர் முல்லை முகிலனைச் சந்தித்து திடக்கழிவு மேலாண்மைக்கான செயலியை உருவாக்கும் குழுவில் இணைந்திருக்கிறார்.
இதற்கிடையில்தான், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை இன்டர்ன்ஷிப் வேண்டி அணுகியிருக்கிறார். முதலில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ரிதுபர்ணாவின் அணுகலை நிராகரித்தது. பின்னர், ‘நீங்கள் எங்கள் நிறுவனத்திற்கு தகுதியானவர்தானா?’ என்று கேள்வி எழுப்பிய நிர்வாகம், உங்களுக்கென ஒதுக்கும் பணியை ஒருமாதமானாலும் முடிக்க முடியாது என கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த ரிதுபர்ணா, “ஒரு வாய்ப்பு தாருங்கள். நான் முடித்துக் காட்டுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். நிறுவனம் ஒரு மாத டெட்லைனுடன் ஒரு பணியை ஒதுக்கியிருக்கிறது. முதலில் அந்தப் பணி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், இடைவிடாத முயற்சியால் அப்பணியை வெறும் ஒரே வாரத்தில் முடித்து நிறுவனத்தை வியக்க வைத்திருக்கிறார் ரிதுபர்ணா. அதன்பின் தொடர் பணிகள், சவாலான நேர்முகத் தேர்வுகள் மற்றும் 8 மாதங்கள் கடுமையான பணிச்சூழலுடன் கழிந்திருக்கிறது. கடந்த 2024 டிசம்பரில், அவருக்கு Pre-Placement Offer (PPO) வழங்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து 2025 ஜனவரி 2 முதல், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டிலிருந்து வேலை செய்தார். மிக முக்கியமாக கல்லூரிப் படிப்பையும் தொடர்ந்திருக்கிறார்.
இத்தகைய சூழலில்தான், கடந்த ஏப்ரல் மாதத்தில் அவரது ஆண்டு ஊதியம் ரூ.39.6 லட்சத்தில் இருந்து ரூ.72.3 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 7வது செமஸ்டர் முடிந்தவுடன், அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள Rolls-Royce நிறுவனத்தில் ஜெட் என்ஜின் உற்பத்திப் பிரிவில் பணியாற்ற இருக்கிறார்.