8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் வீரர்.. 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இதனையடுத்து பரபரப்பாக நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில்தான், இங்கிலாந்து அணி நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து வீரர்களை அறிவித்திருக்கிறது. இதில், சாம் குக் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரை இங்கிலாந்து அணி விடுவித்திருக்கிறது; 21 வயது வீரரான சோயிப் பஷீர் இடது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து ரூல் அவுட் ஆகியிருக்கிறார். பஷீருக்கு இந்த வாரத்தின் இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.
சோயிப் பஷீருக்குப் பதிலாக விளையாடுவதற்காக 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார் இங்கிலாந்தின் லியாம் டாசன். ஜாக் லீச் அல்லது ரெஹான் என இருவரில் யரேனும் ஒருவர் அணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 வயதான லியான் டாசன் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். டாசன் கடைசியாக 2017 ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியவர். 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் தொடர்ந்து PCA ‘Player of the Year’ விருதைப் பெற்றுள்ளார். இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான டாசன் இங்கிலாந்து அணியின் 8ஆவது இடத்தில் ஆடுவதற்கான மிகச்சிறந்த வீரராக இருப்பார் என இங்கிலாந்து அணியின் நிர்வாகம் கருதுகிறது. டாசன் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாகப் பேசிய தேர்வாளர் லூக் ரைட், “லியாம் டாசன் தகுதியான வீரர்தான். கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டாசன், பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.