உக்ரைன் அரசில் நடந்த மிகப்பெரிய மாற்றம்; பொறுப்பேற்கப்போகும் பெண் பிரதமர்! அடுத்தது என்ன?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனின் முதன்மை துணை பிரதமராக பதவி வகிக்கும் யூலியா ஸ்விரிடென்கோவை புதிய பிரதமராகப் பரிந்துரை செய்த மறுநாளே டெனிஸ் ஷ்மிஹால் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். திங்களன்று தனது கைப்பட எழுதிய கடிதத்தை டெலிகிராம் போஸ்ட்டில் பதிவிட்டு தனது ராஜினாமாவை உறுதி செய்திருக்கிறார் ஷ்மிஹால். அந்த ராஜினாமா கடிதத்தில், “முன்னணியில் நின்று உக்ரைனைப் பாதுகாக்கும் எங்கள் பாதுகாவலர்களுக்கு நன்றி! ” எனத் தெரிவித்திருக்கிறார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, முதன்மை துணை பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை, புதிய பிரதமராக திங்கட்கிழமை பரிந்துரை செய்தார். ஸ்விரிடென்கோ அந்நாட்டின் பொருளாதார அமைச்சராக பதவிவகிப்பவர். அதோடு ஜெலன்ஸ்கியின் நீண்டகால தோழராவார். அமெரிக்க - உக்ரைன் கனிம வள ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஸ்விரிடென்கோ முக்கியப் பங்கு வகித்தார். பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மேற்கத்திய அரசுகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளும் உக்ரைன் அரசை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் போருக்குப் பிறகு உக்ரைன் அதிகார மட்டத்தில் நடைபெறும் மிக முக்கியமான மாற்றமாக இந்த நடவடிக்கைகள் பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஜெலன்ஸ்கி, "அரசை புதுப்பிக்க வேண்டும்" என்பதுதான் நோக்கமாக இருப்பதைத் தெரிவித்துள்ளார். இது, ரஷ்யா ஆக்கிரமிப்புக்கு பிறகு ஏற்பட்ட நிர்வாகசோர்வைச் சரி செய்வதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளையில், மார்ச் 2020 முதல் பிரதமராகப் பதவி வகித்த ஷ்மிஹால், உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.
புதிய பிரதமரின் நியமனம், உக்ரைன் பாராளுமன்றத்தின் (Verkhovna Rada) ஒப்புதலைப் பெற வேண்டும். இருப்பினும், ஜெலன்ஸ்கியின் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ளதால், அனுமதி பெற வாய்ப்பு அதிகம். அப்படி பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுவிட்டால் உக்ரைனின் வரலாற்றில் இரண்டாவது பெண் பிரதமாராக ஸ்விரிடென்கோ பதவியேற்பார்.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமானப் பணிகள் குறித்து யூலியா ஸ்விரிடென்கோவிடம் ஏற்கனவே விவாதித்துவிட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். முக்கியமாக உள்நாட்டு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதும், உக்ரைனின் பொருளாதார திறனை வெளிக்கொண்டு வருவதற்கான சீர்த்திருத்தங்களை செயல்படுத்துவதும் முக்கியமானப் பணிகளாக இருக்கும் என்றும் அதிபர் தெரிவித்திருக்கிறார்.