Twist | யார் முதலமைச்சர்? சொந்த ஊருக்குப் பறந்த ஷிண்டே.. முக்கிய மீட்டிங் கேன்சல்.. என்ன நடக்கிறது?
இறுதிக் கூட்டத்தில் அனைத்து முடிவுகள்
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணி பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்ததை அடுத்து முதல்வராக யார் பொறுப்பேற்பார்? கூட்டணிகளுக்கு எத்தனை துறைகள் ஒதுக்கப்படும்? துணை முதல்வராக யார் பொறுபேற்பார்கள் என பல்வேறு கேள்விகள் நிலவுகின்றன.
மகாயுதி கூட்டணித் தலைவர்கள் தொடர்ச்சியாக பாஜக கூட்டணித் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதி என்றாலும், இலாகாக்கள் ஒதுக்கீடு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அமித் ஷா மற்றும் ஜேபி நட்டாவைச் சந்தித்த மகாயுதி கூட்டணியின் தலைவர்களான தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே போன்றோர் இலாகாக்கள் பகிர்வு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.
முடிவில், “வெள்ளிக்கிழமை (29/11/2024) அன்று மும்பையில் நடைபெறும் இறுதிக்கூட்டத்தில் அனைத்து முடிவுகளும் இறுதி செய்யப்படும்” என நேற்றிரவு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஷிண்டே தெரிவித்திருந்தார்.
அமைச்சரவையைப் பொறுத்தவரை 42 பேர் அமைச்சர்களாக செயல்படுவார்கள். இதில் பாஜக 22 அமைச்சர் பதவிகளை தன்னகத்தில் வைத்துக்கொண்டு, மீதியை கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை விட கூடுதலாக இடங்களும், மிக முக்கியத் துறைகளும் ஒதுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, உள்துறை அமைச்சகத்தை பாஜக தக்கவைத்துக்கொள்ளும் என்றும், நிதி அமைச்சகத்தை தேசியவாத காங்கிரஸும், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறையை சிவசேனா வகிக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்பதிலும் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. “ஷிண்டே துணை முதலமைச்சராக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே முதலமைச்சராக இருந்தவருக்கு துணை முதலமைச்சர் என்பது சரியாக இருக்காது. அவர் துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவில்லை என்றால், அவருக்குப் பதிலாக கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்பார்” என சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளரான சஞ்சய் ஸ்ரீசாத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பரபரப்பான சூழல்களுக்கு மத்தியில்தான் ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். இன்று நடைபெற இருந்த கூட்டம் அவர் மீண்டும் மும்பை திரும்பிய பின்பே நடக்கப்படும் என்று தெரிகிறது.
மும்பையில் இறுதிக் கூட்டம் நடக்கும் என ஏக்நாத் ஷிண்டேவே தெரிவித்திருந்த நிலையில், அவர் சொந்த ஊருக்கு சென்றிருப்பது அவர் அதிருப்தியில் இருப்பதாக ஊகங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக பேசிய ஏக்நாத் சிவசேனா தலைவரான உதய் சமந்த், “ஏக்நாத் ஷிண்டே வருத்தத்தில் இல்லை. அவர் தனது சொந்த கிராமத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. நாளை திரும்பி வருவார்” என தெரிவித்துள்ளார். முடிவில் புதிய அரசு பொறுப்பேற்கும் நிகழ்வு டிசம்பர் 2 ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.