குஜராத் | ரயில் நிலையத்தில் மாணவியின் சடலம்.. சிக்கிய சீரியல் கில்லர்.. விசாரணையில் திடுக் தகவல்!
19 வயது கல்லூரி மாணவியை கொலை செய்த சீரியல் கில்லர்
குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டத்தில் உள்ள உத்வாடா ரயில் நிலையம் அருகே 19 வயது கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி, இந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணம் மேற்கொண்டனர். விசாரணையில் முதற்கட்டமாக அவர், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் துரித விசாரணையில் இறங்கினர். அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், அப்போது மாணவியின் உடல் அருகே மீட்கப்பட்ட அதே மாதிரியான ஆடைகளை அணிந்த நபர் ஒருவர் கொலை நடந்ததற்குப் பின்னர் ரயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிடுவது சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த நபரைப் பிடிக்க தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன.
தேடுதல் வேட்டையின் இறுதியில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி குஜராத்தின் வல்சாத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அந்த நபர், ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கைச் சேர்ந்த ராகுல் கரம்வீர் ஜாட் என கண்டறியப்பட்டது. 5ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரனையில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தவிர, தொடர் கொலைகள் செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீஸிடம் சிக்கியது எப்படி?
மஹாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ரயில்களில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை உட்பட நான்கு கொலைகளில் அவருக்குத் தொடர்பு இருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். ”அன்றைய தினம், ஹோட்டலில் வேலை செய்த சம்பளப் பணத்தை வாங்குவதற்காக இங்கு வந்தேன். அப்போது, அந்தப் பெண் தனது செல்போனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது தன்னைப் பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது. இதையடுத்தே அவரை கொலை செய்தேன். கொலை செய்தபிறகும் பாலியல் வன்புணர்வு செய்தேன். பின்னர், பசி எடுத்ததால் உணவும் தண்ணீர் பாட்டிலும் வாங்கச் சென்றேன். திரும்பி வந்து பார்த்தபோது, அங்கு மக்கள் கூட்டம் கூடியிருந்தது. இதனால் எனது உடைமைகளை எடுக்க முடியாமல் அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். தற்போது போலீஸிடம் சிக்கிக் கொண்டேன்” என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ரயிலில் தொடர் கொலை
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோன்று பல மாநிலங்களில் தொடர் கொலைகளைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில், அவர் கைது செய்யப்படும் நவம்பர் 24ஆம் தேதிக்கு முந்தைய தினம் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் மங்களூரு சிறப்பு விரைவு ரயிலில் ஒரு பெண்ணைக் கொலை செய்துள்ளார். அடுத்து அதற்கு முன்பாக, அக்டோபர் 25 அன்று கர்நாடகாவில் பெங்களூரு-முர்தேஷ்வர் ரயிலில் சிகரெட் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சக பயணியைக் கொலை செய்துள்ளார்.
அக்டோபர் இறுதியில் மகாராஷ்டிராவில் சோலாப்பூர் ரயில் நிலையம் அருகே பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து அதே மாதத்தில், அவர் சோலாப்பூர் அருகே புனே-கன்னியாகுமரி ரயிலில் பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். அடுத்து மேற்கு வங்கத்தில், இந்த மாதத்தில் கதிஹார் எக்ஸ்பிரஸில் 63 வயது நபரைக் கொன்று கொள்ளையடித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களுக்குக் குறி!
பெரும்பாலும் ஒரே இடத்தில் அவர் தங்காமல் பயணித்துக்கொண்டே இருந்ததால், அவரைப் பிடிப்பதில் அந்தந்த மாநில காவல் துறையினருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. சுமார் 2,000 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பின்னர் அவர் தற்போது போலீஸில் சிக்கியுள்ளார். ரயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ரயில்களிலும் ரயில் மேடைகளிலுமே அவர் உறங்கியது தெரிய வந்துள்ளது.
2018-19 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் லாரி திருட்டு மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
பின்னர், சிறையில் இருந்து வெளிவந்த பிறகு சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார். அவர்மீது 12க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்தச் சிறுமியையும் சேர்த்து இதுவரை 19 பெண்களை அவர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இவர், குற்றச் செயல்களில் ஈடுபட தொடங்கியதை அடுத்து, அவரை, அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.