அண்ணாமலை இல்லாத கூட்டம்: நிதியமைச்சரை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?

இன்று நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொள்ளாததும், அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்திய நிதியமைச்சரைச் சந்தித்ததும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
bjp - admk
bjp - admkfile image

அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய சர்ச்சை பேச்சு!

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் முத்துராமலிங்கத் தேவர் தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்து தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணியிலும் மோதல் போக்கு நிலவியது. இந்த நிலையில்தான் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதை மையமாக வைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ’இனி அதிமுக - பாஜக கூட்டணி இல்லை’ எனத் தெரிவித்தார்.

bjp - admk
“அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை” அண்ணாமலையை கடுமையாக சாடி, கட்சி நிலைப்பாட்டை அறிவித்தார் ஜெயக்குமார்
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி கோப்பு படம்

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு!

இதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு, பாஜக கூட்டணியில் நீடிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் அங்கு எடுக்கப்பட்ட முடிவின்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்வதாக அக்கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் சில நாட்கள் மவுனமாகவே இருந்த எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், ‘பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டோம்’ என தெளிவுப்படுத்தினார்.

bjp - admk
“முற்றுப்புள்ளி வைக்கிறேன்”-கூட்டணி முறிவு குறித்த அனைத்து கேள்விக்கும் ஒரே பதில் சொல்லி முடித்த EPS

நிர்மலா சீதாரானைச் சந்தித்த அண்ணாமலை

எனினும், இதுகுறித்து பதிலளித்த அண்ணாமலை, ‘இந்த விஷயத்தில் டெல்லி தலைமைதான் முடிவு செய்யும்’ என்றார். அத்துடன், ‘என் மண், என் மக்கள்’ என்ற பாதயாத்திரை பயணத் திட்டத்தின் மூலம் தமிழக மக்களைச் சந்தித்து வருகிறார். அதில் அவர், சில நேரங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக - பாஜக விவகாரம் குறித்து டெல்லி தலைமைக்குத் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா ராமன் அண்ணாமலையை அழைத்து விவரம் கேட்டார். இதனால் அவருடைய பாதயாத்திரை பயணத் திட்டமும், பாஜக ஆலோசனைக் கூட்டமும் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து அப்படியே, டெல்லிக்குப் பறந்த அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்து தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து கூறியதாகத் தெரிகிறது.

திடீர் கூட்டத்தால் அண்ணாமலை மாற்றமா?

இதற்கிடையே அண்ணாமலை தலைமையில் நடைபெற இருந்த பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமும் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இன்று (அக்.3) அவர் இல்லாமலேயே பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ’அண்ணாமலை இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதால், தமிழகத்தில் பாஜக தலைமையில் மாற்றம் வரப்போகிறது. அதனால்தான் அண்ணாமலை இல்லாமல் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது’ என்கிற செய்திகளும் காட்டுத் தீயாய்ப் பரவி வருகின்றன.

bjp - admk
மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமல் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்; காரணம் என்ன?

நிர்மலா சீதாராமனைச் சந்தித்த அதிமுகவினர்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழகத்தில் இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.எல்.ஏக்களான அமுல் கந்தசாமி, வரதராஜ் ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசியதும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

bjp - admk
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

இதனால் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இதில் ஒருசாரார், ‘அண்ணாமலையை தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக வேறு யாரையாவது டெல்லி தலைமை நியமிக்கும். பின்பு, மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படும். தமிழகத்தின் மனவோட்டத்தைச் சோதித்துப் பார்க்கவே இதுபோன்ற இரண்டு கட்சிகளும் இறங்கியிருக்கலாம்’ என்கின்றனர்.

இதையும் படிக்க: AsianGames2023: சதமடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால்... அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

பாஜக தலைமையில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை!

இன்னும் சிலரோ, ‘தமிழக பாஜகவில் எந்த மாற்றமும் தற்போது நடைபெற வாய்ப்பே இல்லை. காரணம், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆகையால் இந்த நேரத்தில் தலைமையை மாற்றினால், அது பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், தமிழகத்திலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெற்றித் தொகுதிகளைத் தருவதாகவும் டெல்லி தலைமையிடம் அண்ணாமலை உறுதியளித்துள்ளாராம். அதனால், தேர்தல் வரை அண்ணாமலையே தொடர வாய்ப்பிருக்கிறது. கட்டாயம் மாற்றமிருக்காது. அத்துடன், தமிழக பாஜக தொண்டர்களிடத்தில் அண்ணாமலைக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. ஒருசில மூத்த நிர்வாகிகளிடம் அவர், நல்ல தொடர்பில் இல்லை எனக் கூறப்பட்டாலும் அடித்தட்டு தொண்டர்களிடையே நல்ல பெயர் இருக்கிறது. தவிர, தமிழகத்தில் பாஜகவை வளர்க்கவும் பாடுபட்டு வருகிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

மேலும், தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சிக்கக் கூடிய நபராகவும் அண்ணாமலைதான் உள்ளார். எனினும், அவரால் பல நிர்வாகிகள் பிரிந்து போன கதைகளும் உண்டு. ஆக, அனைத்தையுமே டெல்லி தலைமை நன்றாகக் கவனத்தில் கொண்டிருக்கிறது. அதனால் எதுவாக இருந்தாலும் டெல்லி தலைமைதான் இறுதி முடிவெடுக்கும். இதற்கிடையே சில அதிமுக எம்.எல்.ஏக்கள் நிர்மலா சீதாராமனைச் சந்தித்திருப்பதால் கட்சியில் பிளவு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இல்லையேல், அவர்கள் மூலம் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. எல்லாமே டெல்லி கையில்தான்’ என்கின்றனர் விவரமாக.

இதையும் படிக்க: டெல்லியில் பத்திரிகையாளர்கள் வீடுகளில் திடீர் ரெய்டு! லேப்டாப், செல்போன்கள் பறிமுதல்! நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com