
19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகின்றன. கடந்த செப். 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கிரிக்கெட்டும் இடம்பெற்றது. முன்னதாக இதன் மகளிர் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது. இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஆடவர் அணி, இன்று (அக். 3) நேரிடையாக காலிறுதிப் போட்டியில் நேபாளம் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தீர்மானித்தது இந்திய அணி. அதன்படி, தொடக்க பேட்டர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும், யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். ருதுராஜ் நிதானத்தைக் கடைப்பிடிக்க, ஜெயஸ்வாலும், ஐபிஎல் ஆட்டங்களில் அதிரடி காட்டியதுபோல், இந்தப் போட்டியிலும் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார். அவர் அதிரடியால் இந்திய அணி நல்ல ஸ்கோரை நோக்கி முன்னேறியது. இடையில் ருதுராஜ் 25 ரன்களில் வீழ்ந்தாலும் ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்ஸருடன் 100 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த சதத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இளம்வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் (21 வயது) படைத்தார். முன்னதாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், 23 வயதில் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.
எனினும் பின்னர் களமிறங்கிய திலக் வர்மா மற்றும் ஜிதேஷ் ஷர்மா ரசிகர்களை ஏமாற்றினாலும், ஷிவம் துபேவும், ரிங்கு சிங்கும் இணைந்து கடைசியில் அதிரடியாக ஆடி இந்திய அணி 200 ரன்கள் குவிக்க உதவினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. ஷிவம் துபே 19 பந்துகளில் 25 ரன்களுடனும், ரிங்கு சிங் 15 பந்துகளில் 37 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் அணி, ஆரம்பம் முதலே பொறுமையுடனே விளையாடியது. தொடக்க மற்றும் நடுநிலை பேட்டர்களும் நல்ல ரன்களை எடுத்தபோதும் அவர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் நிலைத்து நிற்க விடவில்லை. தவிர, பின்னர் வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தனர். இதனால் அவ்வணி இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.