ஒரு நாளில் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு மருத்துவர்கள் சொல்வதென்ன?
உடல் நலனை பேண நடைப்பயிற்சி முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஒரு மணி நேரம் நடப்பது சிறந்தது என்றாலும், 15 அல்லது 30 நிமிட நடைப்பயிற்சியும் இதய நலம், உடல் எடை கட்டுப்பாடு, ரத்த சர்க்கரை அளவு சீராக்குதல் போன்ற பல நன்மைகளை தரும். நேரம் குறைவானவர்களுக்கு நடை நேரத்தை பிரித்து மேற்கொள்வது பயனுள்ளதாகும்.
உடல் நலனைப் பேணுவதற்கும் உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் நடைப் பயிற்சி மிகவும் பயனுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. வியர்க்க விறுவிறுக்க ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக நடந்தால்தான் பயன் கிடைக்கும் என்று சில பட்டம் வாங்காத மருத்துவர்களும், பிறரை நம்பிக்கை இழக்கச் செய்வதில் மட்டுமே நிபுணத்துவம் பெற்றவர்களும் கூறுவதைக் கேட்டு, குறைவாக நடப்பவர்கள் துவண்டு விட வேண்டாம்.
என்னால் ஒரு நாளில் அரை மணி நேரம்தான் நடைப் பயிற்சிக்கு ஒதுக்க முடிகிறது என்பவர்களுக்கும், என்னால் தொடர்ச்சியாக 15 நிமிடங்களுக்கு மேல் நடக்க முடியாது என்பவர்களுக்கும் கூட நற்செய்தியை வைத்திருக்கிறார்கள் துறைசார் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள். ஒரு மணிநேரம் தொடர்ச்சியாக நடப்பதால் ஏராளமான உடல்நலப் பயன்கள் உள்ளன. எவ்வளவு அதிக நேரம் நடக்கிறோமோ அவ்வளவு அதிகம் நல்லது. ஆனால், குறைவான நேரம் நடப்பதும் அதற்கேயுரிய நன்மைகளைத் தருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
30 நிமிடங்கள் நடைப் பயிற்சி இதய நலனை மேம்படுத்தும், உடல் எடைக் கட்டுப்பாட்டுக்கும் உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு நாளின் நடைப் பயிற்சியை இரண்டு அல்லது மூன்று 15 நிமிட நடைகளாக பிரித்துக்கொண்டு நடப்பதிலும் பயன்கள் உள்ளன என்று நம்பிக்கை அளிக்கிறார்கள். இது, உணவு செரிமானத்துக்கு உதவுவதுடன் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கும், மிக நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் உடல் தொய்வடைவதையும் தடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஒருவர் தனது வாழ்க்கை முறை மற்றும் வேலைநேரம் சார்ந்தும் தனது, நடைப் பயிற்சி திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளலாம். வேலைநாட்களில் 30 நிமிடம் மற்றும் விடுமுறை நாட்களில் ஒருமணி நேரம் என்று கலவையான முறையில் நடப்பதும் நல்லதுதான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

