நினைவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் சர்க்கரை நோய் திருடி கொண்டிருக்கிறதா?
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்ட பிறகும், உரிய கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்களா? உங்களது நினைவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் ரத்த சர்க்கரையானது ரகசியமாக திருடிக்கொண்டிருக்கலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்!
ரத்த சர்க்கரை அளவுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சர்க்கரையை கட்டுப்படுத்தத் தவறிய நீரழிவு நோயாளிகளுக்கு ஞாபக மறதி, நினைவுத் தடுமாற்றம், முடுவெடுக்க முடியாமை, கவனக்குறைவு, மனச்சஞ்சலம் போன்றவை அதிகம் இருப்பதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு.
சிலரை‘அல்சைமர்’ போன்ற தீவிர நினைவிழப்புக்கும் கொண்டு சேர்க்கலாம். நீண்ட ஆயுளோடு இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மூளையின் ஆரோக்கியமும் முக்கியம் என்பது நாம் அறியாதது அல்ல. ரத்த சர்க்கரை எனும் திருடனை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அது சத்தமே இல்லாமல் மூளை அறைகளுக்குள் புகுந்து, நாம் ஆயுள் முழுக்க திரட்டி வைத்திருந்த நினைவாற்றலையும், அறிவாற்றலையும் நைசாகத் திருடிக்கொண்டு போய்விடும்.
இந்தத் திருடனிடமிருந்து, மூளையின் செயல்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளையும், உணவுத் திட்டத்தையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். கூடவே, புகை, மதுப்பழக்கத்தைக் கைவிட்டு, போதிய உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.