இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ப. சிதம்பரம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ப. சிதம்பரம்pt web

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்..| தரவுகள் அடிப்படையில்தான் விமர்சனம்!

பொருளாதாரம் குறித்து எண்ணற்ற வாசகங்களைக் கோர்த்து அலங்காரமாக எழுதப்படும் அறிக்கைகளைவிட - எண்ணிக்கைகளைக் கொண்ட தரவுகள் உண்மைகளை எளிதாகத் தெரிவித்துவிடும் என்பது என்னுடைய நம்பிக்கை.
Published on

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து கடந்த வாரம் எழுதிய கட்டுரையின் தொடர்ச்சிதான் (15.06.2025) இது. துல்லியமாகவும் சரிபார்க்கக் கூடியதுமான தரவுகள் என்றால் எனக்குப் பிடிக்கும்; துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான வாசகர்களுக்கு அது பிடிக்கவில்லை. படித்த வாசகர்கள் கூட அரசின் தரவுகளிலிருந்தே வளர்ச்சியைப் பற்றிய எண்ணிக்கைகளைத் தெரிவித்தபோதும் அதை ஏற்க மனமில்லாமல் தயங்குகிறார்கள். பொருளாதாரம் குறித்து எண்ணற்ற வாசகங்களைக் கோர்த்து அலங்காரமாக எழுதப்படும் அறிக்கைகளைவிட - எண்ணிக்கைகளைக் கொண்ட தரவுகள் உண்மைகளை எளிதாகத் தெரிவித்துவிடும் என்பது என்னுடைய நம்பிக்கை.

ப சிதம்பரம்
ப சிதம்பரம்

நல்லாட்சிக்கான முக்கியமான உரைகல் எதுவென்று கேட்டால் மக்களுடைய நல்வாழ்வுதான்; அப்போது எழும் கேள்வி – ‘உணவு, குடியிருப்பு, கல்வி, மருத்துவத் தேவைகள், போக்குவரத்து, குடும்ப அளவில் செய்யப்படும் சுப நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு ஆகியவற்றுக்குச் செலவிட போதிய அளவு வருமானம் மக்களுக்குக் கிடைக்கிறதா? என்பதுதான்’. (மாறிவரும் சமூகச் சூழலில், அத்தியாவசியம் என்று இன்றைய காலகட்டத்தில் கருதப்படும் வேறு செலவுகளை இந்தப் பட்டியலில் நான் சேர்க்கவில்லை). இதை அறிவதற்கு மிகச் சிறந்த தரவு, ‘குடும்பங்களின் நுகர்வுச் செலவு கணக்கெடுப்பு’ (எச்சிஇஎஸ் – HCES). ஒரு சராசரி குடும்பத்தின் வருமானத்தைவிட, நுகர்வுக்காக அது செய்யும் செலவுதான் அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலைமையையும் வாழ்க்கைத் தரத்தையும் சரியாகக் காட்டுகிறது என்பது என் கருத்து. இப்படி குடும்பங்களின் நுகர்வுச் செலவு கணக்கெடுப்பு சமீபத்தில் 2023-24-ல் நிகழ்ந்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் நிலை அறிய, மொத்தம் 2,61,953 குடும்பங்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிராமப்புற குடும்பங்கள் 1,54,357, நகர்ப்புற குடும்பங்கள் 1,07,596. நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது பத்தாண்டுகளை 2023-24-ல் தான் பூர்த்தி செய்தது என்பது கவனிக்கத்தக்கது. குடும்பங்களின் சராசரி நுகர்வு கணக்கெடுப்பு தரவானது அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையானது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ப. சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|மோடியின் 11 ஆண்டு ஆட்சி: ஓர் பகுப்பாய்வு!

நெஞ்சை உறுத்தும் நுகர்வுச் செலவு

இந்த நுகர்வுக் கணக்கெடுப்பின் மையமே, சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு செலவிடுகிறது – எந்தெந்தத் தேவைகளுக்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது அல்லது எவ்வளவைச் செலவிட முடிகிறது என்பதுதான் (MPCE). ஒரு மாதத்தில் ஒரு ஆண்- அல்லது பெண் எவ்வளவு செலவு செய்கிறார் என்பது அவருடைய வாழ்க்கைத்தரம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிவிக்கிறது; ஏழை, பணக்காரர், நடுத்தர வர்க்கம் என்று அனைவருக்குமே இது பொருந்தும். நல்ல வேளையாக இந்தத் தரவு, மொத்த மக்களை பத்து சதவீத - சம பகுதிகளாகப் பிரித்துக் காட்டுகிறது.

இதோ தரவு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ப. சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்.. | ‘ஒன்றுபட்ட’ சீனா - பாகிஸ்தானுடன் போர்!

இவற்றிலிருந்து நாம் அறியக்கூடியவை

Ø செலவு என்பது வருமானம் – கடன் ஆகியவற்றைக் காட்டும் பதிலீடு. வருவாய் அடுக்கில் கடைசி 10% ஆக இருப்பவர்கள் அன்றாடம் ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே செலவிடுகின்றனர். ஒரு நாளைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை செலவு செய்யும் குடும்பத்தில் ஒருவருக்கு எவ்வளவு சத்தான உணவு கிடைக்கும்? அவர்கள் எப்படிப்பட்ட இடத்தில் குடியிருப்பார்கள்? நோய்வாய்ப்பட்டால் எந்த அளவுக்கு மருந்து-மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவார்கள் அல்லது எப்படிப்பட்ட மருத்துவ வசதி அவர்களுக்குக் கிடைக்கும்?

Ø இந்திய மக்கள் தொகையில் 10% என்பது மிகவும் குறைவானதல்ல, அது சுமார் 14 கோடி. 14 கோடியுடன் தனி நாடாக இருந்தால் மக்கள் தொகை அடிப்படையில் இன்றைக்கு உலகின் பத்தாவது இடத்தில் அது இருக்கும். இருந்தும் நீதி ஆயோக்கும் ஒன்றிய அரசும் நாட்டில் வறியவர்கள் எண்ணிக்கை வெறும் 5% தான் என்கின்றன. இந்தக் கூற்று இரக்கமற்றது மட்டுமல்ல, நேர்மையற்றதும் கூட.

Ø இந்திய சமூகங்களுக்குள் பொருளாதார வேறுபாடு எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதை அறிய, உச்ச நிலையில் உள்ள 5% மக்களையும் இறுதியில் உள்ள 5% மக்களையும் ஒப்பிட்டு நோக்க வேண்டும். பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இடைவெளி 12 மடங்காக இருந்தது, 2023-24-ல் அது இன்னமும் சராசரியாக 7.5 மடங்காகவே இருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ப. சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும் | ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் USA.. சுற்றி ராஜதந்திரம்!

உழவர்களும் உணவும்: சோர்வே மிஞ்சுகிறது

வேளாண்மை வளர்ச்சி செழிப்பாக இருக்கிறது என்கிறது அரசு, ஆனால் விவசாயிகளின் வாழ்க்கையும் அதே அளவுக்கு செழிப்பாக இருக்கிறதா? நபார்டு வங்கியின் 2021-22-ம் ஆண்டறிக்கை கூறுகிறது விவசாயிகளில் 55% பேர் கடன் சுமையில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று. ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் சராசரி கடன் சுமை ரூ.91,231. மக்களவையில் 2025 பிப்ரவரி 3-ல் ஒரு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலின் படி: 13.08 கோடி விவசாயிகள் வணிக வங்கிகளுக்கு வைத்துள்ள கடன் நிலுவை ரூ.27,67,346 கோடி. 3.34 கோடி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு வைத்துள்ள கடன் நிலுவை ரூ.2,65,419 கோடி. 2.31 கோடி விவசாயிகள் பிராந்திய ஊரக வங்கிகளுக்கு வைத்துள்ள கடன் நிலுவை ரூ.3,19,881 கோடி.

‘பிரதான் மந்திரி கிஸான்’ திட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள். இந்த திட்டத்தில் சேர்ந்த விவசாயிகள் எண்ணிக்கை 2022 ஏப்ரல் - ஜூலையில் 10.47 கோடியாக இருந்தது. அதுவே 2023-ல் 15-வது தவணையின்போது 8.1 கோடியாக சரிந்துவிட்டது. அது மீண்டும் 9.8 கோடி அளவுக்கு உயர்ந்துவிட்டதாக 2025 பிப்ரவரியில் அரசு (19-வது தவணை) அறிவித்தது. இப்படி அரசின் திட்டத்தில் விவசாயிகள் எண்ணிக்கை திடீரென சரிவதும் மீண்டும் உயர்வதும் எப்படி என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. சொந்தமாக நிலமில்லாமல் - குடிவாரதாரராக மட்டும் இருக்கும் விவசாயிகள் (விவசாயத் தொழிலாளர்கள்) இதில் பயன்பெற முடியாமல், சேர்க்கப்படாமல் ஒதுக்கப்படுவது மிகப் பெரிய அநீதி.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ப. சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும் இளைஞர்களுக்கு ஏன் வேலை கிட்டவில்லை?

பிஎம்எஃப்பிஒய் பணப்பறிப்புத் திட்டம்  

பயிர் பாதுகாப்பு திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சீரமைத்து மீண்டும் அறிமுகப்படுத்தியது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் பயிர் காப்பீட்டில் ஈடுபட அனுமதிக்கப்பட்டன, அதே சமயம் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்ற அடிப்படையில்தான் செயல்பட வேண்டும் என்று அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் அறிவுறுத்தப்பட்டன. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ‘பிரதான் மந்திரி ஃபஸல் பீமா யோஜனா’ (பிஎம்எஃப்பிஒய்) என்ற திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தியது இது விவசாயிகளிடமிருந்து காப்பீட்டு சந்தாவை அதிகமாக கறந்துவிடும் பணப்பறிப்பு திட்டமாகத்தான் இருக்கிறது. விவசாயிகள் செலுத்திய சந்தாவில் 87% காப்பீட்டுப் பணமாக 2019-20-ல் கிடைத்தது இப்போது 2023-24-ல் 56% ஆக அது குறைந்துவிட்டது.

மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ‘மகாத்மா காந்திய தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’ (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) இப்போது கடந்த மூன்று வருடங்களாக அதே அளவு நிதி ஒதுக்கீட்டுடன் தேக்க நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1.5 கோடிப் பேரின் வேலைவாய்ப்பு அட்டைகள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. ஆண்டுக்கு 100 நாள்கள் வேலைவாய்ப்பு தரும் திட்டத்தில் சராசரியாக இப்போது ஆண்டுக்கு 51 நாள்கள்தான் வேலை வழங்கப்படுகிறது. வேலையற்ற கிராமப்புற மக்களின் தேவைக்கேற்ப வேலை வழங்கும் திட்டமாக இருந்த இது, அரசின் நிதி ஒதுக்கீட்டை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளும் திட்டமாக மாற்றப்பட்டுவிட்டது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ப. சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|அடக்க முடியாதவர் திருவாளர் டிரம்ப்!

80 கோடி மக்களுக்கு நபர்வாரியாக 5 கிலோ விலையில்லா உணவு தானியம் வழங்கும் திட்டத்திலிருந்து, தகுதியுள்ள 10 கோடிப் பேர் நீக்கப்பட்டுவிட்டனர். விலையில்லா உணவு தானியம், அரசு பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் ஆகியவற்றை அமல் செய்யும்போதும் வயதுக்கேற்ற உயரம் இல்லாத ஊட்டச் சத்துக் குறைவால் 33.5% குழந்தைகளும், வயதுக்கேற்ற உடல் வளர்ச்சியின்றி மெலிவதால் 19.3% குழந்தைகளும் வாடுகின்றனர். பசிக் கொடுமையால் வாழ்வோர் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 127 நாடுகள் பட்டியலில் 105-வது இடத்தில் இருக்கிறது.

ஆலைவாய் உற்பத்தியில் நெருக்கடி

பொருளாதார மொத்த மதிப்பு கூட்டலில் ஆலைவாய் உற்பத்தியின் பங்களிப்பு 2011-12-ல் 17.4% ஆக இருந்தது, 2024-25-ல் 13.9% ஆக சரிந்து விட்டது. தொழிற்சாலைகளில் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு கொண்டுவந்த ‘ரொக்க மானிய ஊக்குவிப்பு திட்டம்’ பெருந்தோல்வியைச் சந்தித்திருக்கிறது. 14 வகை தொழில்களுக்கு அரசு ஒதுக்கிய ரூ.1,96,409 கோடியில் வெறும் ரூ.14,020 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் துரிதமான வளர்ச்சியைக் கண்டுவருவதாக கூறுவதாலேயே நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருப்பதாகவும் வறுமை ஒழிந்து நாடு வளர்ச்சியடைந்துவிட்டதாகவும் பொருள் இல்லை. ஒவ்வொரு பத்தாண்டும் நாட்டின் அடித்தளக் கட்டமைப்புகளை வலுப்படுத்த சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம், மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், அரசின் கட்டுப்பாடுகளை வெகுவாகக் கைவிட வேண்டும், தொழில்துறை உற்பத்தியில் போட்டிகளை அதிகப்படுத்த வேண்டும், எல்லா துறைகளிலும் மூக்கை நீட்டிக் கொண்டிராமல் வழிவிட்டு நகர வேண்டும் அரசு.

ப.சிதம்பரத்தின் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com