முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும் இளைஞர்களுக்கு ஏன் வேலை கிட்டவில்லை?
குறு, சிறு, நடுத்தரத் தொழில்பிரிவுகள் (எம்எஸ்எம்இ) துறையைப் பற்றி சமீபத்தில் இரண்டு அறிக்கைகள் வெளியாகின; இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) ஒன்றையும் ‘நிதி ஆயோக்’ இன்னொன்றையும் தயாரித்துள்ளன. இரண்டுமே அதிகாரப்பூர்வமான அறிக்கைகள். சட்டப்படி கூட்டுருவாக்கம் பெறாத (அன்-இன்கார்ப்பரேட்டட்) துறை நிறுவனங்கள் தொடர்பான ஆண்டறிக்கையும் கிடைத்திருக்கிறது.
அடிப்படை அம்சங்கள், அமைப்புகள்
குறு, சிறு, நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறையின் அடிப்படையான அம்சங்கள், அமைப்புகள் தொடர்பாக இவ்விரு அறிக்கைகளிலிருந்து நாம் அறியக்கூடியது என்ன?
Ø நடப்பு வகைப்படுத்தலின்படி, குறுந்தொழில் நிறுவனம் என்பது அதிகபட்சம் ரூ.2.5 கோடி முதலீட்டையும் ஆண்டு விற்றுமுதல் ரூ.10 கோடிகளையும் கொண்டது; சிறுதொழில் நிறுவனம் என்பது ரூ.25 கோடி வரை முதலீட்டையும் ஆண்டு விற்றுமுதல் ரூ.100 கோடியையும் கொண்டது; நடுத்தரத் தொழில் பிரிவு என்பது ரூ.125 கோடி முதலீட்டையும் ஆண்டு விற்றுமுதல் ரூ.500 கோடி வரையும் கொண்டது. இந்த வகைப்படுத்தலால், நாட்டில் சில ஆயிரம் நிறுவனங்களைத் தவிர ஏனையவை பெரும்பாலும் இந்த சிறு-குறு-நடுத்தரத் தொழில் பிரிவுகளாகத்தான் இருக்கும்.
Ø இந்தவகைத் தொழில் பிரிவுகளில் எண்ணிக்கையில் மிக அதிகமாக இருப்பவை குறுந்தொழில் பிரிவுகள்தான்; குறுந்தொழில் பிரிவுகள் - 98.64%; சிறு தொழில் பிரிவுகள் - 1.24%; நடுத்தரத் தொழில் பிரிவுகள் - 0.12% மட்டுமே.
Ø உரிமையாளரே தொழில் முனைவோராகவும் இருப்பது (59%), கூட்டாண்மைத் தொழில்பிரிவுகள் (16%), வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (எல்எல்பி) (1%), வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் (23%), வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் (1%).
Ø இந்தியாவில் தோராயமாக 7,34,00,000 சிறு-குறு-நடுத்தரத் தொழில் பிரிவுகள் உள்ளன. இவற்றில் 6,20,00,000 ‘உதயம்’ இணையதளத்தில் 2025 மார்ச் வரையில் பதிவு செய்துகொண்டுள்ளன.
Ø சிறு-குறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மொத்த கடன் தொகைக்கும், உண்மையில் அவற்றுக்குக் கிடைக்கும் தொகைக்கும் இடையில் சுமார் ரூ.30 லட்சம் கோடி இடைவெளி (பற்றாக்குறை) இருக்கிறது. துணைப் பிரிவான சேவைத் துறையில் இந்த இடைவெளி 27% ஆக இருக்கிறது, அதிலும் மகளிர் நடத்தும் பிரிவுகளுக்குக் கடன் கிடைப்பதில் 35% பற்றாக்குறை நிலவுகிறது.
Ø சிறு-குறு-நடுத்தரத் தொழில்பிரிவுகள் இணைந்து 2023-24 -ஆம் ஆண்டில் மொத்த சரக்கு ஏற்றுமதியில் 45% அளவுக்குப் பங்களிப்பு செய்தன. 2024-25-ல் 1,73,350 சிறு-குறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியில் பங்களிப்பு செய்தன. இவை அந்த நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1% -க்கும் குறைவே. பின்னலாடைகள், நவரத்தினக் கற்கள், தங்க நகைகள், தோலினால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், கைவினைப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மோட்டார் வாகனங்களில் பொருத்தப்படும் இயந்திர பாகங்கள் ஆகியன – இவற்றில் ஒன்றைத் தவிர ஏனையவை - தயாரிப்புக்கு உயர் தொழில்நுட்பம் தேவைப்படாத சாதாரண சரக்குகள்.
Ø சிறு-குறு-நடுத்தரத் தொழில்பிரிவுகளுக்கு ஏராளமான கடன் ஆதரவு திட்டங்களும் வளர்ச்சி திட்டங்களும் உள்ளன. அறிக்கைகளைப் படிக்கும்போது - மானிய உதவி தரும் திட்டங்கள் 2, கடன் உத்தரவாதம் அளிக்கும் திட்டங்கள் 4, வளர்ச்சி திட்டங்கள் 13 - இருப்பது தெரிந்தது. 2025-26 ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), முதல் முறையாக தொழில்முனைவோராக ஈடுபடுவோருக்கான தனி திட்டங்களும் கடன் அட்டை வழங்கும் முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லா நிதிகளுக்கும் தலையாய நிதி திட்டத்தையும், தொழில்நுட்பம் மூலம் தீர்வுகளைத் தரும் நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதையும், வீதிகளில் தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்வோருக்கு மேம்படுத்தப்பட்ட நிதி திட்டத்தையும் நிதிநிலை அறிக்கை அறிவித்துள்ளது.
Ø சிறு-குறு-நடுத்தரத் தொழில்கள்தான் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த மூன்று பிரிவுகளிலும் மொத்தம் 26 கோடிக்கும் மேல் வேலைவாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை உண்டு, தகுதியானவர்கள் இல்லை!
கட்டுரையின் மையப்பகுதிக்கு இப்போது வருவோம். சிறு-குறு-நடுத்தரத் தொழில்துறையின் மிகப் பெரிய பிரச்சினைகள் என்னவென்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன – அவை வருமாறு:
வேலை செய்வதற்கேற்ற திறன் பெற்ற தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது, திறன்மிக்கத் தொழிலாளர்களை ஈர்ப்பது கடினமான வேலையாகத் தொடர்கிறது.
நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் எப்படிப்பட்டது என்ற முழுக் கதையையும் இந்த அறிக்கைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ரூ.125 கோடிக்கும் மேல் முதலீடு – ரூ.500 கோடிக்கும் மேல் ஆண்டு விற்றுமுதல் உள்ள பெரிய தொழில் நிறுவனங்கள், உயர் கல்வித் தகுதியும் உயர்வான தொழில்திறனும் உள்ளவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன என்று கருதலாம்; வேலை கிடைக்காமல் அவதிப்படும் இளைஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு உயர் தொழில்நுட்பக் கல்வித் தகுதியோ, தொழில் திறனோ இல்லை. அதே சமயம், சிறு-குறு-நடுத்தரத் தொழில்பிரிவுகளுக்கு வேலை செய்ய ஆள்கள் தேவைப்படுகிறார்கள், நல்ல தொழிலாளர்களை வேலைக்கு ஈர்க்க முடியாமல் அவை திண்டாடுகின்றன, ஏன்? வருத்தம் தருகிற – அதே சமயம் தப்பிக்க முடியாத உண்மையான சில முடிவுகள் இவற்றிலிருந்து தெரிகின்றன; முதலாவதாக, வேலை தேடும் பெரும்பாலான இளைஞர்களிடம் வேலைக்கான கல்வியோ, வேலை செய்வதற்கான தொழில் திறனோ இல்லை; இரண்டாவதாக இந்தத் துறையில் உள்ள நிறுவனங்கள் அளிக்கும் ஊதியமும் இதர படிகளும் ஊக்குவிப்புகளும் நல்ல திறமையுள்ளவர்களை ஈர்ப்பதாகவும் இல்லை, அதற்கு முக்கிய காரணம் இந்தத் தொழில்பிரிவுகளின் அமைப்புகள்.
தொழில் நிறுவனங்களின் அமைப்பியல் அடிப்படையிலான உண்மைகளையும் வேலைவாய்ப்பு சந்தையின் நிலைமையையும் பொருத்திப் பார்க்கும்போது, இந்திய இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பது ஏன் என்பதைத் தெரிந்துகொள்வதில் சிக்கல்கள் ஏதுமில்லை.
Ø இந்திய மக்கள் தொகை 2025 ஏப்ரல் மாத நிலவரப்படி 146 கோடி.
Ø இதில் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (எல்.எஃப்.பி.ஆர்) என்பது மொத்த மக்கள் தொகையில் எத்தனை பேர் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள் – எத்தனை பேர் வேலை செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதன் சதவீதமாகும். இது 55.6% அல்லது எண்ணிக்கையில் 81 கோடிப்பேர்.
Ø தொழிலாளர் – மக்கள் தொகை விகிதம் (டபிள்யு.எஃப்.பி.ஆர்) என்பது மொத்த மக்கள் தொகையில் வேலை பெற்று தொழிலாளர்களாக இருப்பவர்கள் எவ்வளவு என்பதைக் காட்டுகிறது. இது 52.8%, எண்ணிக்கையில் 77 கோடி.
Ø இதில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை, இவ்விரண்டுக்கும் உள்ள இடைவெளியான 4 கோடி. இது பெரிய எண்ணிக்கைதான், அதிலும் வேலைக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதும் முக்கியம். பல லட்சம் பேர், வேலை தேடுவதையே விட்டுவிட்டு சும்மா இருக்கிறார்கள் என்பதும் உண்மை – அதற்குக் காரணங்கள் பல.
Ø அதிகாரப்பூர்வமாக வேலையின்மை விகிதம் 4% அதாவது 81 கோடி, அதாவது மக்கள் தொகையில் 5.0%
தீர்வுக்கான வழி
சிறு-குறு-நடுத்தரத் தொழில் பிரிவுகளில் மிக அதிகமாக இருப்பது குறுந் தொழில்கள்தான் – 98.64%. உரிமையாளர்களே அதே தொழிலில் ஈடுபடுவதும் இம்மூன்றிலும் 75%. இந்தத் துறையில் வேலை செய்யும் 26 கோடிப் பேர், தொழில்முனைவோர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள். சிறு தொழில் பிரிவுகளிலும் நடுத்தரத் தொழில் பிரிவுகளிலும்தான் (இது மொத்தத் தொழில்பிரிவுகளில் 1.36% அல்லது சுமார் 10 லட்சம் அலகுகள்) ‘வேலைக்கு அமர்த்துவோர் - வேலை செய்வோர்’ (முதலாளி – தொழிலாளி) என்ற அமைப்பு நிலவுகிறது.
Ø வேலைவாய்ப்புகளை ‘அளிக்க’ வேண்டியது இந்த 10 லட்சம் சிறு-குறு-நடுத்தரத் தொழில் பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Ø இந்தப் பிரிவுகளில் வேலை தேடுவோராக – பள்ளிக்கூட படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள், பள்ளிக் கல்வியை முடித்தவர்கள், இளங்கலை அல்லது இளம் அறிவியல் பட்டம் பெற்றவர்கள்தான் பெரும்பாலும் இருக்கின்றனர்.
இவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய தொழில்முனைவோருக்கு தொழில் செய்வதற்கான கடன் போதிய அளவில் கிடைப்பதில்லை, தொழில்பிரிவுகளின் நிர்வாகத்தை சுதந்திரமாக நடத்த முடியாமல் அரசுத் தரப்பிலிருந்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அரசில் ஏராளமான திட்டங்கள் – அவற்றால் பயன்பெற ஏராளமான நிபந்தனைகள் என்பதும் நிலவுகின்றன. வேலை தேடுவோருக்கோ வேலை செய்வதற்கேற்ற கல்வித் தகுதி இல்லை, தொழில் திறனும் இல்லை, தொழில் திறனில் பயிற்சி பெறும் வசதிகளும் இல்லை – சுருக்கமாகச் சொல்வதென்றால் தொழில்பிரிவுகளுக்கான திறனுக்கு, பெரும் பற்றாக்குறையே நிலவுகிறது.
அரசு நிர்வாகம் இந்தக் குறைபாடுகளை நீக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். இதன் முதல் படியாக, பள்ளிக்கூட கல்வியை மாற்றியமைக்க வேண்டும், ஏட்டுக் கல்வியுடன் தொழில் திறனிலும் தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அடுத்ததாக சிறு – குறு தொழில் பிரிவுகளுக்கு (நடுத்தரத் தொழில் பிரிவுகள் பற்றி நான் குறிப்பிடவில்லை) அதிக நிபந்தனைகளோ கட்டுப்பாடுகளோ இல்லாமல் தாராளமாக கடனுதவி செய்ய வேண்டும், அந்த கடன்களுக்கு ரொக்க மானியமும் அவசியம். இந்தத் தொழில் பிரிவுகளுக்கான அரசின் நிர்வாகத்தை மிகவும் எளிமையாகவும் சிக்கலில்லாமலும் சீரமைக்க வேண்டும்.