முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்.. | ‘ஒன்றுபட்ட’ சீனா - பாகிஸ்தானுடன் போர்!
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து (குட்டு உடைந்தது) கடந்த வாரம் கட்டுரை எழுதியிருந்தேன். ஆனால் 24 மணி நேரம் பொறுத்து அதை எழுதியிருந்தால் முக்கியமான உண்மைகள் வெளிவந்திருக்கும்… அந்த நல்லூழ் எனக்குக் கிட்டவில்லை.
இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌஹான் சிங்கப்பூரில் புளூம்பர்க் – ராய்ட்டர்ஸ் ஆகிய ஊடகங்களுக்கு மே 31-இல் அளித்த நேர்காணலில் முக்கியத் தகவல்களைத் தெரிவித்திருந்தார். நேர்காணலுக்கான நேரம், இடம், ஊடகங்களின் தேர்வு எல்லாமே வியப்பை அளித்தாலும், நாம் அதிர்ச்சி அடையும் அளவுக்கு அது தவறானதும் அல்ல. ‘ஷாங்ரி-லா உரையாடல்’ என்ற நிகழ்வையொட்டி சிங்கப்பூர் சென்றிருந்தபோது இந்த நேர்காணல் நடந்திருக்கிறது. உலக அளவில் போர் தந்திரங்கள் – உத்திகள் தொடர்பாக ‘ஐஐஎஸ்எஸ்’ என்ற பன்னாட்டு ஆய்வுக் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் மாநாட்டுக்காக அனில் சௌஹான் சென்றிருந்தார். சிங்கப்பூர் நம்முடைய நட்பு நாடுதான்.
உண்மையை என்றாவது ஒரு நாள் சொல்லித்தான் ஆக வேண்டும். அதைச் சொல்வதற்கு மிகவும் பொருத்தமான வழி எதுவென்றால் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி பிரதமர் அல்லது பாதுகாப்பு (ராணுவ) அமைச்சர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தெரிவித்து விவாதம் நடத்துவதுதான். ஆனால் ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் (பக்தர்கள்) அருவருப்பு தரும் வகையில், உண்மையைப் பேசியதற்காக ஜெனரல் சௌஹானை சமூக ஊடகங்களில் வசை பாடினார்கள் (வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ராவும் இப்படித்தான் கடுமையாக சாடப்பட்டார்).
வெற்றிகளும் இழப்புகளும்
அரசின் உயர் நிலையில் பதவி வகிப்பவர்களின் வழிகாட்டல் இல்லாமல் ஜெனரல் சௌஹான் இந்தத் தாக்குதல் குறித்துப் பேசியிருக்க மாட்டார். அவர் சொன்னது நேரடியானது, சுருக்கமானது: இந்திய ராணுவம் தன்னுடைய இலக்குகளில் வெற்றி பெற்றது. ஆனால் அப்படிச் செய்யும்போது சில இழப்புகளையும் சந்தித்தது.
மே 7-ஆம் நாள் ராணுவ உத்தியில் தவறுகள் இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்; முப்படைகளின் தலைவர்கள் உடனே தங்களுடைய உத்தியை மாற்றினார்கள்;
மே 9–10 ஆகிய நாள்களுக்கு இடையிலான இரவில், பாகிஸ்தான் ராணுவத்தின் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இழப்புகள் எப்படிப்பட்டவை என்று தலைமை தளபதி அளவிட்டுக் கூறவில்லை. ஆனால் சுயேச்சையான ராணுவ நிபுணர்களும் பன்னாட்டு செய்தி ஊடகங்களும், இந்தியத் தரப்பில் 5 போர் விமானங்கள் இழக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன: அவற்றில் 3 ரஃபேல், 1 சுகோய், 1 மிக் (எம்ஐஜி).
ராணுவ உத்தியில் என்ன தவறு, இழப்புகள் எப்படிப்பட்டவை என்பதையெல்லாம் மிகவும் ஆழமாகவும் விருப்பு – வெறுப்பு இல்லாமலும் ராணுவ நிபுணர்களால் ஆராயப்பட வேண்டும். எந்த விவரமும் இல்லாமல் - கூச்சல் மட்டுமே போடத் தெரிந்தவர்களால் - செய்தித் தொலைக்காட்சிகளில் விவாதிப்பது கூடாது. கிடைத்துள்ள தகவல்களின்படி (சில சரிபார்க்கப்பட்டவை, சிலவற்றை சரிபார்க்க இயலவில்லை) இவை மட்டுமே தெளிவான தகவல்கள்:
Ø மே 7 அதிகாலையில், தாக்குதலை முதலில் தொடங்கிய நாடு என்ற வகையில் இந்தியப் போர் விமானங்களும் ஏவுகணைகளும் பயங்கரவாதக் குழுக்கள் பயிற்சி தரும் 9 அடிப்படை முகாம்களும் தளங்களும் அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதப்படுத்தப்பட்டன.
Ø மே 8 இல் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானும், வழிகாட்டல்படி இலக்குகளைத் தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணைகளையே பயன்படுத்தியது. சில இந்தியப் போர் விமானங்கள் மே 8 இல் தான் தாக்கி அழிக்கப்பட்டன. தலைமைத் தளபதி ஜூன் 4 இல் புணே நகரில் தெரிவித்த கூடுதல் தகவல்களின்படி, இந்தியப் போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள்ளேயே தாக்கி அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதப்படுத்தப்பட்டன, இதையடுத்தே இந்தியப் போர் விமானங்கள் மே 8–9 ஆகிய நாள்களில் தாக்குதலில் ஈடுபடுத்தப்படவில்லை.
Ø தாக்குதல் உத்தியைப் புதிதாக தயார் செய்த பிறகு, இந்தியப் போர் விமானங்களும், ஏவுகணைகளும் டுரோன்களும் மே 9-10 இரவில் புதிய தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன (தலைமைத் தளபதியோ மே 10 இல் ஈடுபடுத்தப்பட்டன என்றார்). அந்தத் தாக்குதலின்போது இந்திய விமானப்படை போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள்ளேயே இருந்து ஏவுகணைகளை -பிரம்மோஸ் உள்பட – ஏவின, பாகிஸ்தானின் 11 ராணுவ தளங்களைத் தாக்கின.
Ø பிறகு மே 10-ல் இந்தப் போர் முடிவுக்கு வந்தது.
சீனத்தின் மறைமுகப் போர்
இந்தக் கட்டுரையின் நோக்கம் - கற்றுக்குட்டியான ராணுவ நிபுணராக - அரைகுறையாக ஆய்வு செய்வதல்ல. இந்தியா இப்போது புதியதொரு சூழலை எதிர்கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டத்தான். சீனத்தின் ஜே-10 ரக போர் விமானங்களும் பிஎல்-15 ஏவுகணைகளும், சீனத்தின் வான் தற்காப்பு அரண் சாதனங்களும் இந்தப் போரில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சீன விமானங்களை பாகிஸ்தானிய போர் விமானிகள் ஓட்டினர். சீன ஏவுகணைகளை பாகிஸ்தானியப் போர் வீரர்கள் பயன்படுத்தினர். சீனத் தளபதிகள் வகுத்த போர் உத்தியை பாகிஸ்தானிய ராணுவத் தளபதிகள் அப்படியே ஏற்று பின்பற்றினர். பாகிஸ்தான் ராணுவத்துக்கு சீன செயற்கைக் கோள்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் வழிகாட்டிகளாகச் செயல்பட்டுள்ளன. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், இந்த போர்க்களத்தில் இந்தியாவுக்கு எதிராக தன்னுடைய ராணுவ சாதனங்களைப் பயன்படுத்தி மறைமுகமாகப் போரிட்டிருக்கிறது சீனா.
இந்த உண்மை நம்மை அடுத்த பிரச்சினைக்கு இட்டுச் செல்கிறது. இப்படி மாறிவிட்ட உலக நாடுகளின் அணிசேர்க்கைச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று அம்சக் கொள்கை எந்த அளவுக்குப் பொருந்துகிறது - நாம் அடைய விரும்பும் முடிவை எட்ட உதவுகிறது என்று பார்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போரிடும் என்றார் மோடி, இனி இது சாத்தியமில்லை. இந்தப் போர் இந்தியா மீது திணிக்கப்பட்டது என்பது தெளிவாகிவிட்டது. இனி இந்தியா போரிட்டால் அது பாகிஸ்தானுடன் மட்டுமானதாக இருக்காது, ஒன்றாக இணைந்துவிட்ட பாகிஸ்தான்–சீனா உடனாகத்தான் இருக்கும்; சீனமும் பாகிஸ்தானும் இணைந்து இப்போது இந்தியாவுக்கு ‘ஒரே எதிரியாக’ உருவெடுத்துவிட்டன. இந்தியாவுக்கு மேற்கில் அல்லது வடக்கில் என்று இரு களங்களில் போர் செய்வதற்கு இந்தியா வகுத்த ராணுவ முன் தயாரிப்புகள் இனி போதவே போதாது. இனி எந்தப் போராக இருந்தாலும் அது ‘இணைந்துவிட்ட’ இரு நாடுகளின் முழு எல்லையிலும் நடத்தப்பட வேண்டிய போராகத்தான் இருக்கும்.
மோடியின் மூன்று அம்ச உத்தியில் முதலாவது என்னவென்றால், ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்பது. எல்லைக்கு அப்பால் சென்று தாக்கிய தரைப்படை தாக்குதல் (யூரி தாக்குதலுக்கு பதிலடியாக நடந்தது), அல்லது இந்திய விமானப் படையின் தனித்ததொரு தாக்குதல் (பதான்கோட் தாக்குதலுக்கு பதிலடியாக நடந்தது) போன்றவை பாகிஸ்தானையோ பயங்கரவாதிகளையோ அச்சுறுத்த இனி போதுமானவை அல்ல. பயங்கரவாதிகள் எல்லை கடந்து வந்து தாக்குவது நிற்காவிட்டால், அடுத்து என்ன செய்வது? நீண்ட, பெரிதாகிக் கொண்டே போகும் போரை நடத்துவதா? அல்லது ஒன்றாக இணைந்துவிட்ட (இரு நாடுகளின்) எல்லைகளில் போர் நிகழ்த்துவதா?
வெளியுறவு, ராணுவக் கொள்கைகள்
மாறிவிட்ட உலகச் சூழலில் மோடியின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்க்க போதவே போதாது என்பது நிரூபணமாகிவிட்டது. இந்தியா கடுமையாக எதிர்த்த பிறகும், ‘பன்னாட்டுச் செலாவணி நிதியம்’ (ஐஎம்எஃப்) 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடனுதவிக்கு, ‘விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி’ என்று ஒப்புதல் வழங்கியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப். அளித்திருக்கும் மொத்தக் கடன் மதிப்பு 210 கோடி அமெரிக்க டாலர்கள்.
ஜூன் 3 இல் ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) 80 கோடி அமெரிக்க டாலர் கடன் வழங்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது. பத்தாண்டுக் கால தவணையில், 4,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கடனை வழங்க உலக வங்கியும் மிகச் சமீபத்தில்தான் முடிவெடுத்திருக்கிறது. இந்த முடிவுகளில் எல்லாம் அமெரிக்காவும் சீனமும் ஒரே பக்கத்தில் இருந்து செயல்பட்டுள்ளன. இவற்றையெல்லாம்விட பெரிய நகைமுரண் என்னவென்றால், தலிபான்கள் மீது தடை விதிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவைக் குழுவுக்கு தலைவராக பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது! ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையில் பயங்கரவாதத்துக்கு எதிரான குழுவின் துணைத் தலைவர் பதவியும் அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது! (தகவல் உதவி, அனைத்திந்திய காங்கிரஸ் பேரவையின் ஊடக, விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா). சமீபத்தில் ஏற்பட்ட பெரிய அவமானம் என்றால், அடுத்து நடைபெறவுள்ள ‘ஜி-7’ மாநாட்டுக்கு இந்தியாவை அழைக்கவில்லை கனடா.
இவை அனைத்துமே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் அதற்குப் பிறகும் – அதிலும் குறிப்பாக நம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் ‘பதில் நடவடிக்கை ஏன்’ என்பதை விளக்க உலக நாடுகள் சிலவற்றுக்குப் பயணம் சென்ற சூழலில் நடந்துள்ளன. எல்லா நாடுகளுமே ‘பயங்கரவாதச் செயல்களைக்’ கண்டித்தன. ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் எந்த நாடும் – ‘பாகிஸ்தானை’ கண்டிக்கவேயில்லை!
கடந்த வாரம் நான் எழுதியதைப்போல, இந்தியாவின் ராணுவ – வெளியுறவுக் கொள்கைகளை புதிய சூழலுக்கேற்ப வகுக்க மீண்டும் தீவிர ஆலோசனைகளைத் தொடங்கியாக வேண்டும் – அவ்வளவாக கூர்த்த மதியுள்ள தலைவர்கள் இல்லாவிட்டாலும்!