மோடியின் 11 ஆண்டு ஆட்சி
மோடியின் 11 ஆண்டு ஆட்சிமுகநூல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|மோடியின் 11 ஆண்டு ஆட்சி: ஓர் பகுப்பாய்வு!

என்னுடைய மதிப்பின்படி, 2014-ஐ விட இந்தியா வலிமையானதாகவோ, தரம் உயர்ந்ததாகவோ, நியாயமானதாகவோ மாறிவிடவில்லை. - ப.சிதம்பரம்
Published on

எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து என்று உலகில் ஏதுமில்லை; ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டைக்கூட பல விஞ்ஞானிகள் ஏற்கவில்லை -  இந்தியாவைச் சேர்ந்த ஜெயந்த் நர்லிகர் அவர்களில் ஒருவர். தவறான உள்நோக்கம் ஏதுமில்லை என்றால் எல்லோருடைய கருத்துகளிலும் சில உண்மைகள் இருக்கும் - அவை மதிக்கப்பட வேண்டும். அந்தப் பண்பு கடந்த 11 ஆண்டுகளாக ஆளும் ‘ஒன்றிய அரசால்’ வளர்த்துக் கொள்ளப்படவில்லை.

 நரேந்திர மோடி பிரதம அமைச்சராக 11 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறார்; அதனால் இந்தியாவைத் தொடர்ந்து நீண்ட காலம் ஆண்ட பிரதமர்கள் வரிசையில் மூன்றாவதாக இடம் பிடித்திருக்கிறார். பொதுத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதில் அவருக்குள்ள உறுதிக்கும் திறனுக்கும் இது நல்லதொரு சான்று.

எல்லா அரசுகளின் நிர்வாகத்திலும் நன்மைகளும் உண்டு, குறைகளும் உண்டு - இப்போது ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசும் அதற்கு விதிவிலக்கல்ல. மோடியின் அரசு தனது ஆட்சிக்கு உரைகல்லாக சில அளவீடுகளைத்தான் நம்புகிறது: வளரும் நாடுகளில், பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட இந்த அளவீடுகள் ஏற்கெனவே எவ்வளவு இருந்தது - இப்போது எவ்வளவு கூடியிருக்கிறது என்று ஒப்பிட உதவுகிறது. உதாரணத்துக்கு, புதிதாக எத்தனை பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டன, எத்தனை கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் போடப்பட்டன என்று. ஆனால் ஓர் அரசு நல்ல அரசா - இல்லையா என்று மதிப்பிட மக்கள் வேறு அளவுகோல்களையே பயன்படுத்துகின்றனர்: அவை, ‘நல்லாட்சியின்’ கூறுகள் எப்படி இருக்கின்றன என்பதாகும். ‘நல்லாட்சி’ என்பதை எந்தவிதத்திலும் ‘அளந்து’ சொல்லிவிட முடியாது. நல்லாட்சி நடைபெற்றால் அந்த நாடு எல்லோரும் வாழ்வதற்கு உகந்ததாகவும் வலிமையானதாகவும் அனைவருக்கும் நீதி வழங்குவதாகவும் இருக்கும். அத்துடன் மக்கள் - தனி நபர்களாகத் திருப்தி அடைவதுடன் அவர்களின் குடும்ப வாழ்க்கையும் எல்லா வகையிலும் மேம்பட்டு தரம் உயரும். நல்லாட்சியின் தரத்தை எந்த வகையிலும் அளந்தோ, நிறுத்தோ சொல்லிவிட முடியாது.

என்னுடைய மதிப்பின்படி, 2014-ஐ விட இந்தியா வலிமையானதாகவோ, தரம் உயர்ந்ததாகவோ, நியாயமானதாகவோ மாறிவிடவில்லை. சில கோடிப் பேரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்தாலும் - பல கோடிப் பேரின் வாழ்க்கை இருண்டு வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், அச்சம் காரணமாக நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

எல்லோர் வாழ்க்கைத் தரமும் கூடியிருக்கிறதா?

பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் கூட்டும் நோக்கத்தோடுதான் பொருளாதார சீர்திருத்தங்களும் தாராளமயமாக்கல் கொள்கையும் கொண்டுவரப்பட்டன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசின் பத்தாண்டுக் காலத்தில் (2004-2014) சராசரி பொருளாதார வளர்ச்சி வீதம் பழைய கணக்கீட்டின்படி 7.46% - புதிய கணக்கீட்டின்படி 6.7%. மோடி ஆட்சியில் 2014-15-க்குப் பிறகு, குறிப்பாக 2019-20-க்கும் பிறகு பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துகொண்டே வந்ததைத்தான் அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2024-25-ல் கூட மிதமான வளர்ச்சிதான் ஏற்பட்டிருக்கிறது. 2014-15 முதல் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் (சிஏஜிஆர்) உண்மையான ஜிடிபியின் படி 6.1%; 2019-20 முதல் இது 5.1% ஆக சரிந்திருக்கிறது. வேளாண்மை, தொழில்துறை, ஆலைவாய் உற்பத்தித் துறைகளில் வளர்ச்சி குறைந்து 5%-க்கும் கீழே போய்விட்டது. சேவைத் துறையில் மட்டுமே வளர்ச்சி வீதம் 5.4% ஆக இருந்தது.

 மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்வது நபர்வாரி அல்லது தனி நபர் ஊதியத்தையே சார்ந்தது, பெயரளவிலான ஜிடிபியில் அல்ல. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தனிநபர் வருமானம் பத்தாண்டுகளில் இரட்டிப்பானது; அமெரிக்க டாலர் மதிப்பில் 543-லிருந்து 1,438 டாலர்களாக உயர்ந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதல் பத்தாண்டுகளில் அது 1.89 மடங்கு மட்டுமே அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் 1,438-லிருந்து 2,711 ஆக உயர்ந்தது.

மோடியின் 11 ஆண்டு ஆட்சி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... |ஒருபுறம் கடல்பாறை – மறுபுறம் நீர்ச்சுழல்!

11-வது ஆண்டில் மட்டும்தான் அது 2,878 டாலர்களாக இரட்டிப்பாகியிருக்கிறது. இப்படி மந்தமான வளர்ச்சியால் மொத்தமுள்ள 196 நாடுகளின் பட்டியலில் இந்தியா 136-வது இடத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு 8% ஜிடிபி என்ற வேகத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக வளர்ந்திருந்தால் - ‘வளர்ந்த நாடு’ என்ற எல்லையைத் தொடும் வாய்ப்பைப் (சராசரி தனிநபர் வருமானம் 14,000 அமெரிக்க டாலர்) பெற்றிருக்கும். அதை இந்தியா இழந்தது.

எல்லோருக்கும் நியாயம் வழங்கப்படுகிறதா?

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது. மிகப் பெரிய பணக்காரர்களாக மக்களில் 20% பேர் இருக்கிறார்கள், வறுமைக் கோட்டுக்கும் கீழே பரம ஏழ்மை நிலையில் 20% பேர் வாழ்கிறார்கள். எல்லா நிலைகளிலும் மக்களிடையே ஒருவித அச்சமும் பாதுகாப்பற்ற தன்மையும் நிலவுகிறது. ‘பேரினவாதம்’ தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிவருவதற்குப் பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. வகுப்பு மோதல்களும் சாதி மோதல்களும் அதிகரித்து வருகின்றன. எழுத்திலும் பேச்சிலும் வெறுப்புணர்வு அதிகமாகப் பீறிடுகிறது. ‘அரசியலணைவு முதலாளியம்’ (சலுகை சார் முதலாளியம்) வெட்கமில்லாமல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. குற்ற வழக்குகளில் நீதி வழங்குவது சீர்குலைந்துவிட்டது.

நாட்டின் கூட்டாட்சி அமைப்பில் மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சர்வாதிகார ஆட்சி முறை வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் பரவிவருகிறது. இரண்டு உதாரணங்கள் மட்டும் இவற்றை விளக்கப் போதுமானது:

1. அரசியல்ரீதியாக எதிரிகளை ஒடுக்கும் நோக்கத்துக்காக, வருமான வரிச் சட்டம் முதல் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டம் வரையில் அனைத்துமே அடக்குமுறை ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன;

2.போதிய நிதி இல்லாததால் மும்பை புறநகர் ரயில் சேவைப் பகுதிகளில் மட்டும் 2014 முதல் 2025 வரையில் 29,970 பேர் இறந்துள்ளனர், 30,214 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் – அகமதாபாதிலிருந்து மும்பைக்கு ரூ.1,08,000 கோடி செலவில் புல்லட் ரயில் திட்டத்துக்கு சிறிதும் இரக்கமல்லாமல் நிதி ஒதுக்கி கவனம் செலுத்தப்படுகிறது.

  இந்தியா வலிமையான நாடா?   

 இந்தியா வலிமையான நாடா என்ற கேள்வியை ஒற்றுமை, நட்புணர்வு, பக்கத்து நாடுகளுடன் கூட்டாகச் சேர்ந்து செயல்படும் தோழமை உறவு, பாதுகாப்பான எல்லைகள், எதையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ள ராணுவப் படைகள், உலக நாடுகளுடன் சுமுகமான ராஜீய – வர்த்தக உறவுகள், சர்வதேச அமைப்புகளில் கண்ணியமான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்க வேண்டுகிறேன். பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்கிய பிறகு – ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய அரசு எடுத்த பதிலடி நடவடிக்கைகள் இந்தியாவின் பலவீனங்கள் அனைத்தையும் வெளிப்படுத்திவிட்டன. இந்திய நிலையை விளக்க பக்கத்து நாடுகளான இலங்கை, மியான்மர், வங்கதேசம், பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தானம், மாலத்தீவுகள், மோரிஷியஸ் ஆகியவற்றுக்கு தூதுக் குழுக்கள் அனுப்பப்படவில்லை, இந்த நாடுகளும் தங்களுடைய கருத்து என்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. பல நாடுகள் பயங்கரவாதச் செயலைக் கண்டித்தனவே தவிர, ஒரு நாடும் பாகிஸ்தானை பயங்கரவாதத்துக்குத் துணை போவதாகப் பெயர் குறிப்பிட்டுக் கண்டிக்கவில்லை. மரபு வழியிலான போரில் பாகிஸ்தானைவிட இந்தியா வலிமையானது என்று இதுவரை நம்பி வந்ததும் இப்போது சந்தேகத்துக்கு இடமாகிவிட்டது. 

   அடிப்படையான வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, ‘குவாட்’ அமைப்பில் இணைந்திருந்தும் இந்தியப் பொருள்களுக்கு இறக்குமதி வரியை அதிகப்படுத்தியிருக்கிறது அமெரிக்கா. அத்துடன் பாகிஸ்தானுக்கு இணையாகவே இந்தியாவையும் இதில் நடத்தியிருக்கிறது. பன்னாட்டுச் செலாவணி நிதிய (ஐஎம்எஃப்) தலைமை நிர்வாக வாரியம் (25 உறுப்பினர்கள்) – உலக வங்கி இயக்குநர்கள் வாரியம் ஆகிய இரண்டிலும் இந்தியா ஓர் உறுப்பினராக இருந்த நிலையிலும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கும் தீர்மானத்துக்கு அவை ஆதரவாக வாக்களித்துள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய நான்கு நாள் போரிலும் பிரான்ஸ், ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து வாங்கிய ராணுவ விமானங்கள், பீரங்கிகள், வான் தாக்குதல் தடுப்பு சாதனங்கள் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தித்தான் இந்தியா போரிட்டது. இந்தியா வலிமையான நாடுதான் - ஆனால் நாம் இதுவரை நம்பிக்கொண்டிருந்த வகையில் வலிமையானது அல்ல.

எல்லா விதங்களிலும், எல்லா அதிகாரங்களும் பிரதமர் நரேந்திர மோடி ஒருவர் கையிலேயே குவிந்துள்ளன. அரசின் சாதனைகளுக்கு அவர் மட்டுமே காரணம் என்ற புகழ்மாலை அவருக்கானது; அதே வகையில் இந்த ஆட்சியின் தோல்விகள் அனைத்துக்கும் அவர் மட்டுமே பொறுப்பேற்கவும் வேண்டும்.

மோடியின் 11 ஆண்டு ஆட்சி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்|அடக்க முடியாதவர் திருவாளர் டிரம்ப்!

இந்தியனாக இருப்பதில் பெருமையா என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொள்ளும்போது – ‘ஆம்’ என்பதே என்னுடைய பதில். ஆனால் இந்தியா இப்போது நிர்வகிக்கப்படும் விதம் கண்டு எனக்கு மகிழ்ச்சியா என்று கேட்டால் பதில் – ‘இல்லை’. எல்லோருக்கும் நியாயமானதாகவும், வாழ்வதற்கேற்ற நல்ல சூழல் மிக்கதாகவும், வலிமையானதாகவும் இந்தியா மாறும் நாளையே நான் எதிர்பார்க்கிறேன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com