சாதிவாரி கணக்கெடுப்பு | அன்புமணி போடும் கணக்கு என்ன? அரசு ஏன் தயங்குகிறது? - விளக்குகிறார் அய்யநாதன்
தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகவும், இடஒதுக்கீட்டுக்காகவும் தொடர்ச்சியாக குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இந்தக் குரல்கள்தான் ‘சமூக நீதிக்கான மாநிலம் தமிழ்நாடு’ என்ற பெயர்க்காரணத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு கோரி குரல்கொடுப்பவர்கள் எல்லாம், தமிழ்நாட்டில் நடைமுறையிலிருக்கும் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க குரல் கொடுக்கின்றோம் என்கின்றனர். மாநில அரசோ மத்திய அரசை நோக்கிக் கைநீட்டுகிறது.
என்ன சிக்கல்? எங்கு பிரச்னை? பத்திரிகையாளர் அய்யநாதனைத் தொடர்புகொண்டு பேசினோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு கோரி குரல்கள் வருகின்றன? மத்திய அரசிடம்தான் அதற்கான அதிகாரம் இருக்கிறதா?
இந்திய ஒன்றிய அரசுதான் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், ‘மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து எடுங்கள்; அதில் சாதி, மதம், படிப்பு, பொருளாதார நிலை உள்ளிட்ட சிலவிஷயங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது. அதை ஒன்றிய அரசு செய்யவில்லை., அதேநேரத்தில் ஒரு மாநில அரசுக்கு புள்ளி விபரக் கணக்கெடுப்பு, அதாவது சர்வே எடுக்க உரிமையுண்டு; இந்த உரிமை மத்திய அரசுக்கும் உண்டு. ஆனால், தமிழக அரசு, ‘தாங்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்தால் அதற்கு மதிப்பில்லை எனச் சொல்கிறது’ எனச் சொல்கிறது.
காரணங்களின்றி ஒரு அரசு அப்படிச் சொல்லுமா?
தமிழக அரசு சொல்வதில் இருவிஷயங்கள் இருக்கிறது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போது 2020 ஆம் ஆண்டு கடிதம் ஒன்றை அனுப்புகிறது. அதில், இங்கிருக்கும் சீர்மரபினரின் (68 சமூகங்கள் இருக்கின்றன) வாழ்நிலை, கல்வி போன்றவற்றின் நிலைகுறித்தான புள்ளிவிபரங்களை எடுத்து அனுப்பச்சொல்கிறது. இந்த சர்வே எடுக்க எடப்பாடி பழனிசாமி எத்தனிக்கையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இந்தக் கணக்கெடுப்பை நடத்தினால் சமூகப்பதற்றமும் சட்ட ஒழுங்கு சிக்கலும் ஏற்படுமென எச்சரிக்கை விடுத்திருந்தார் ஆனால், அப்போது எந்த சர்வேயும் எடுக்கவில்லை.
இதனிடையே, பழைய புள்ளிவிபரங்களை வைத்து வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் வழக்கு போடப்பட்டது., அதில், நானும் ஒரு அங்கம்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, ‘பழைய தரவுகளை வைத்துக்கொண்டு உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டது தவறு’ என்று சொன்னது. அடுத்து, பிற்படுத்தப்பட்டிருக்கும் தன்மையை வெளிகொணர்ந்துதான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சொன்னது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் வைத்துக்கொண்டால்கூட, உச்சநீதிமன்றம் கேட்ட தரவுகளை நீங்கள் எப்படி எடுப்பீர்கள். எந்த சமூகம் பிற்படுத்தப்பட்ட தன்மையில் இருக்கிறது என்பதை நிர்ணயிக்கும் மாநில அரசுக்கு, நிர்ணயம் செய்வதற்கான சர்வேயை எடுக்க அதிகாரம் இல்லை என ஒன்றிய அரசு எங்கே சொல்கிறது. இதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம், அன்புமணியும் வலியுறுத்துகிறார்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது பல்வேறு காரணங்களுக்கானது. அதில் வறுமை ஒழிப்பு, மக்கள் நலத்திட்டங்கள் தீட்டுவது, வேலைவாய்ப்பு என பல்வேறு விஷயங்கள் இருக்கலாம். நாங்கள் வலியுறுத்தும் சர்வே என்பது ஒரேயொரு குறிக்கோளைக் கொண்டது, அதாவது சமூக நீதியை உறுதிப்படுத்துவது. எனவே, சர்வே தாராளமாக எடுக்கலாம்.
மாநில அரசு இதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பதற்கான காரணம் என்ன?
மொத்த பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் என்றால் 256 சமூகங்கள் இருக்கின்றது. சர்வே எடுத்தால் இந்த சமன்பாடு மாறும் என அரசு நினைக்கலாம். போராடக்கூடிய சமூகங்களை மட்டுமாவது கணக்கெடுங்கள் என்றுதான் நாங்கள் சொல்லுகின்றோம். பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் யாரும் எதுவும் கேட்கவில்லை. மிகப்பிற்படுத்த சமூக மக்கள்தான் கேட்கிறார்கள். அவர்களை மட்டுமாவது கணக்கெடுங்கள்.
அன்புமணி கேட்பதில் அரசியல் இருக்கிறது என்கிற விமர்சனங்கள் வருகிறதே?
எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. பாமக தன் வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்ள இதைச் செய்கிறது. இதை இந்த ஒரு பார்வையில் மட்டும் பார்க்காமல் விசாலமான பார்வையில் பாருங்கள். சர்வே எடுக்க முடியுமா? முடியாதா? சர்வே எடுப்பதற்கான அவசியம் என்ன? சர்வே எடுத்துதான் ஆக வேண்டுமென்று நீதிமன்றம் கொடுக்கும் அழுத்தம்.. இந்த மூன்று விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். சர்வே எடுக்கலாம் என்ற முடிவுக்கு பெரும்பாலானோர் வரலாம்.