சாம்பியன்ஸ் டிராபி | அடேங்கப்பா இத்தனை கோடிகளா? பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒரு ஐ.சி.சி போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதில் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன.
இதில் தலா 4 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, இறுதியில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதற்கிடையே, இந்திய அணி மட்டும் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்லாத நிலையில், அது விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இதையடுத்து இந்திய அணி நேரிடையாக துபாய் செல்ல உள்ளது.
இதற்கிடையே, இந்த தொடருக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. அதன்படி, 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் நடைபெறும் இந்தப் போட்டிக்கான பரிசுத் தொகையை உலகக் கிரிக்கெட் வாரியம் பெருமளவில் அதிகரித்துள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கும் டாலர் 125,000 பங்கேற்பு பரிசு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு மதிப்பை விட மொத்த பரிசுத் தொகை 53 சதவீதம் அதிகரித்து டாலர் 6.9 மில்லியனை எட்டியுள்ளது. அதன்படி, கோப்பையை வெல்லும் அணிக்கு 2.24 மில்லியன் டாலரும் (இந்திய மதிப்பில் ரூ.19.45 கோடி) இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணி 1.12 மில்லியன் டாலரும் (இந்திய மதிப்பில் ரூ.9.72 கோடி) வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தவிர, அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா ரூ. 4.86 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்று தோல்வியுறும் அணிகளுக்கும் அதன் இடங்களைப் பொறுத்து பரிசுத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.