அஜ்மீர் தர்கா விவகாரம் | ஆய்வு என்ற பெயரில் பேராபத்து.. என்ன பிரச்னை? எங்கு சிக்கல்? ஓர் அலசல்!
அஜ்மீர் தர்கா
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் அஜ்மீர் தர்கா அமைந்துள்ளது. குவாஜா மொய்னுதீன் சிஸ்தி தர்கா என அழைக்கப்படும் இந்த தர்காவிற்கு நாடு முழுவதிலும் இருந்து இஸ்லாமியர்கள் வருகை தருகின்றனர்.
இத்தகைய சூழலில்தான், இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா அஜ்மீர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த மனுவில், 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குவாஜா மொய்னுதீன் சிஸ்தி தர்கா இருக்கும் இடத்தில், முன்பு சிவன் கோயில் இருந்தது. சிவன் கோயில் இடிக்கப்பட்டு தர்கா கட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அஜ்மீர் தர்காவை சங்கட் மோகன் மகாதேவ் கோயில் என அறிவிக்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் இந்து வழிபாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். தனது வாதத்திற்கு ஆதரவாக அஜ்மீரைச் சேர்ந்த ஹர் பிலாஸ் சர்தாவின் புத்தகத்தை மேற்கோள் காட்டியுள்ளார். 1911 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'Ajmer: Historical And Descriptive' எனும் புத்தகம் ஸ்காட்டிஷ் மிஷன் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி மூலம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விவகாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ்
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் இந்த விவகாரத்தில் பதிலளிக்க, இந்திய தொல்லியல் துறை, மத்திய அரசின் சிறும்பான்மையினர் நலத்துறை மற்றும் ஆஜ்மீர் தர்கா கமிட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என்று சிவில் நீதிபதி மன்மோகன் சந்தேல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் பல அரசியல் தலைவர்கள் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991க்கு எதிரானது என குற்றம் சாட்டுகின்றனர். 15 ஆகஸ்ட் 1947க்கு முன்பு ஒரு வழிபாட்டுத் தலம் எப்படி இருந்ததோ அதை அப்படியே பராமரிக்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் சாரம். ஆனால், சமீபத்தில் உத்தரப்பிரதேசம் சம்பாலில் உள்ள ஷாஜி ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந்து வழிபாட்டுத் தலம் இருந்தது எனும் வழக்கிலும், அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, மசூதியை சர்வே செய்யவும், மேற்பார்வையிட வழக்கரைஞர் ஆணையத்தையும் அமைத்து உத்தரவிட்டிருந்தார். அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது அப்போது வெடித்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர். அப்போதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. தற்போது மேலும் ஒரு தர்கா விவகாரத்திலும் அதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதத்தின் பெயரால் அரசியல் - அசோக் கெலாட்
இதுதொடர்பாக பேசிய அசாதுதீன் ஓவைசி, “கடந்த 800 ஆண்டுகளாக அந்த இடத்தில் தர்கா இருக்கிறது. பிரதமர்கள் நேரு தொடங்கி மோடி வரை ‘சதர்’ அனுப்பியுள்ளனர். ஆனால், மசூதிக்கள் மற்றும் தர்காக்கள் தொடர்பாக பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் ஏன் இந்த வெறுப்பைப் பரப்புகிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், “பாஜக - ஆர்எஸ்எஸ் அரசு அமைந்ததில் இருந்து மதத்தின் பெயரால் அரசியல் செய்து வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
“பாபர் மசூதி வழக்கிற்குப் பிறகு, தற்போது மசூதிகளுக்கு எதிராக அதிகளவில் மனுக்கள், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இது மதரீதியில் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் செயல்” என அஜ்மீர் தர்காவை பாராமரிக்கும் அமைப்பின் செயலர் சையது சர்வார் சிஸ்தி தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் பலரும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு வழக்கறிஞரும், எழுத்தாளருமான இரா. முருகவேளை தொடர்பு கொண்டோம்.
ஞானவாபியைத் தொடர்ந்து சமீபத்தில் தொடர்ச்சியாக மசூதிகள் இருக்கும் இடத்தில் கோவில்கள் இருந்ததாக வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருகிறதே?
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகிறது. ஞானவாபி மசூதி விவகாரத்திலும் இது நடந்தது. இதில் தொல்லியல் துறை ஏறத்தாழ 1000 பக்கங்களுக்கு (4 வால்யூம்கள்) அறிக்கையை சமர்பித்தது. இதன்பின் பல இடங்களில் இதுபோன்ற வழக்குகள் போடப்பட்டன. சட்டம் இருந்தாலும் அத்தகைய வழக்குகளை கீழ் நீதிமன்றங்கள் எடுத்துக் கொள்கின்றன. இதன்பின் சொல்லி வைத்தமாதிரி தொல்லியல் துறை 500 முதல் 1000 பக்கங்களுக்கு அறிக்கையைக் கொடுக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் இதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வித பதற்றத்தை அப்படியே வைத்திருப்பதற்கான முயற்சிதான் இது. ஒவ்வொரு மசூதியும் ஏதோ ஒரு இந்துக்கோயிலை இடித்துக் கட்டப்பட்டதுதான் என இவர்களை பரப்புரையை நம்பும் இந்து அடிப்படைவாத வெறியர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால், அரசியல்வாதிகள் பெரும்பாலானோருக்கு இதில் நம்பிக்கை கிடையாது. அவர்கள் இந்துக்கள் - இஸ்லாமியர்களை பதற்றத்திலேயே வைத்திருப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்போது பாஜக மைனாரிட்டி அரசு வேறு. அதனால், இந்து மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு என்ற அவர்களது பழைய நடைமுறைக்கு அவர்கள் திரும்புகிறார்கள். இதில் எந்த அளவிற்கு பிரச்னைகள் வருகிறதோ, எந்த அளவிற்கு சண்டைகள் நடக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுக்கு நல்லது. இதில் மோசமான ஒரு விஷயம் என்னவெனில், தொல்லியல் துறை முழுக்க முழுக்க இந்துத்துவவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சமர்பிக்கும் அறிக்கை உலகளவிலோ அல்லது மற்ற ஆராய்ச்சியாளர்களாலோ உறுதிபடுத்தப்படுகிறதா என்பதும் தெரியவில்லை. அதுதொடர்பான விவாதம் நடக்கிறதா என்றுகூட தெரியவில்லை. நீதிமன்றத்தில் கொடுக்கிறார்கள்; நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொள்கிறது. அதை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது சரியா? ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் போன்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களை வைத்து குழு அமைத்து அந்த அறிக்கையை எல்லாம் ஆராய வேண்டும்தானே. தொல்லியல் துறை ஒரு அறிக்கையை கொடுத்தால் அது என்ன கடவுளின் கூற்றா?
சுருக்கமாக சொன்னால், ஒரு குழு வழக்கு தொடுக்கும், நீதிமன்றம் அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும், தொல்லியல் துறையினர் ஆய்வு செய்வார்கள். அவர்களோ, ‘ஆமாம், அந்த இடத்தில் இந்துக்கோயில் இருந்தது’ எனச் சொல்வார்கள். உடனே, நீதிமன்றமோ, இந்துக்கள் பூஜை செய்யலாம் என சொல்லிவிடும்.
இந்துக்கோயில் அங்கு இருந்திருந்தாலும் எப்போதோ நடந்த தவறுக்கு இப்போதுள்ள இஸ்லாமிய மக்கள் என்ன செய்வார்கள் என சிலர் கேட்கிறார்களே? இந்த வாதம் சரியா?
இது மிகவும் தவறான வார்த்தை. அப்படி கோயில் இல்லை என்பதுதான் உண்மை. பாபர் மசூதி கட்டப்பட்ட 1600 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் இந்தியாவில் என்ன நடந்தது என இஸ்லாமியர்களின் குறிப்புகள் இருக்கிறது; இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களின் குறிப்புகள் இருக்கிறது; அப்படி கோயில் இடிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. பாபர் நாமாவிலும் அப்படி ஏதும் இல்லை. மேற்கண்டதுபோல், ‘அப்படி கோவில் இருந்திருக்கும்பட்சத்தில்..’ என நீங்கள் பேசினால், ‘நான் எதற்கு கோவிலை விட்டுக்கொடுக்க வேண்டும்’ என்றுதான் அவர்கள் பேச்சையே ஆரம்பிப்பார்கள்.
அஜ்மீர் தர்கா விவகாரத்திலும் ஹிந்து சேனா தலைவர் Ajmer: Historical And Descriptive எனும் புத்தகத்தை மேற்கோள்காட்டுகிறாரே?
முகலாயர்கள் ஆட்சி எல்லாம் முடிந்தபின் பிரிட்டிஷ் ஆட்சி வந்தபின், எல்லா இடங்களைப் பற்றியும் இம்மாதிரி ஆய்வுகள் வருகிறது. தாஜ்மகால் இந்துக்கோவில் என்று நிறைய புத்தகங்கள் எல்லாம் இருக்கிறது. இம்மாதிரி எந்தெந்த இடங்கள் எல்லாம் முக்கியமாக இருக்கிறதோ, அந்த இடங்களை எல்லாம் தங்களுடையது என சொந்தம் கொண்டாடுவது இந்துத்துவவாதிகளின் (இந்துக்கள் அல்ல) வழக்கமாக மாறியிருக்கிறது. மொத்தமாக கைப்பற்றிக்கொள்வது.
அதுமட்டுமின்றி, அஜ்மீர் தர்கா என்பது அதிகமான இந்துக்களும் செல்லும் இடம். நீங்கள் ஏன் வருகிறீர்கள் என அவர்கள் கேட்கவில்லையே. அனுமதிக்கத்தானே செய்துள்ளார்கள். இந்துக்கள் அங்கு செல்வதை இந்துத்துவவாதிகள் விரும்பவில்லை. இரண்டாவது அது நம்முடையது என அதைக் கைப்பற்றிக்கொள்வது. அதை மசூதியாக நினைத்து நீங்கள் (இந்துக்கள்) செல்லாதீர்கள். உங்களுடையது என நினைத்து செல்லுங்கள்; ஆக்கிரமித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் இதுதான் அவர்களது விருப்பம்.
நீங்கள் சொல்லும் புத்தகத்தைப் போல் ஆய்வுகள் எத்தனையோ இருக்கத்தான் செய்கின்றன. நம்மூரிலும் இம்மாதிரி ஆய்வுகள் இருக்கத்தானே செய்கின்றன. ஆனால், பக்கச்சார்பில்லாத முறையான ஆய்வினை நடத்த வேண்டும். ஆனால், தொல்லியல் துறை சரியான ஆய்வை செய்யும் என எனக்கு நம்பிக்கை இல்லை.
தமிழகத்திலும் புத்த விஹார்கள் மீதுதான் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறதே. அப்படியானால், இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒன்றுபோல்தானே எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் வைக்கும் குற்றச்சாட்டுகளை யாரும் பொருட்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழுகிறதுதானே?
குற்றச்சாட்டுகள் எல்லா இடத்திலும் இருக்கும். இதைத்தான் முன்னாலேயே சொல்லி இருக்கிறேன்., 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ‘நாம் எல்லோரும் பௌத்தர்கள்தான்.. நம்மை இப்படி மாற்றிவிட்டார்கள்’ என்ற வாதம் கருத்தியல் ரீதியான ஒன்று. ‘பௌத்த விஹார்களை மீட்போம்., எல்லோரும் இடிப்பதற்காக கிளம்பி வாருங்கள்’ என யாரும் சொல்வதில்லை. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. திருப்பதி கோவிலை பௌத்த கோவில் என சொல்கிறார்கள். திருப்பதி கோவிலை கைப்பற்றி பௌத்த கோவிலாக மாற்ற வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதானே. அதேதான் அஜ்மீருக்கும், அயோத்திக்கும், ஞானவாபிக்கும். அதற்காகத்தான் பாராளுமன்றத்தில் சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. என்ன இருந்தாலும், சிறுபான்மையின மக்களை இப்படிச் செய்வது எப்படி சரியான ஒன்றாக இருக்கும்..” என்றார் முருகவேள்.
சில தினங்களுக்கு முன் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா காலச்சுவடு இதழில் அளித்திருந்த நேர்காணலில் கூறியிருந்த சில வார்த்தைகளை மேற்கோள் காட்டலாம். “பாபர் மசூதி இடிப்பு குறித்து நம் வரலாற்றாசிரியர்கள் எடுத்த நிலைப்பாட்டை நினைவுகூர்வது இங்கே பொருத்தமாக இருக்கும். அயோத்தியில் கோயில் அமைந்திருக்கவில்லையென்று இடதுசாரிகளும் இடதுசாரி வரலாற்றாசிரியர்களும் அன்று வாதிட்டனர். உண்மையில் அவர்கள் எப்படி வாதிட்டிருக்க வேண்டும் தெரியுமா? மசூதிக்குக் கீழே கோயில் இருப்பதற்குச் சாத்தியம் உண்டா, இல்லையா எனும் கேள்வி அர்த்தமற்றது. ஒருவேளை கோயில் இருந்திருந்தால்தான் என்ன? 16ஆம் நூற்றாண்டில் ஒரு முகலாய மன்னர் அதை இடித்தார் என்பதற்காக இன்று நாம் பழிவாங்கப்போகிறோமா? ஏதோ ஒரு மன்னரின் தவறுக்கு இன்றைய இஸ்லாமியர்கள் எப்படிப் பொறுப்பாவார்கள்? மசூதியை இடிப்பதன் மூலம் கோயில் இடிப்பைச் சமன்படுத்திவிட முடியுமா? ஜேஎன்யு, அலிகார் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர்கள் இக்கேள்விகளைத்தான் எழுப்பியிருக்க வேண்டும்.
அரசியல் ஆதாயத்துக்காக வரலாறு பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. இந்துக்களுக்கு இருக்கும் எல்லா உரிமைகளையும் நம் அரசியலமைப்புச் சட்டம் இஸ்லாமியர்களுக்கும் வழங்கியிருக்கிறது என்று அவர்கள் வலியுறுத்தியிருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.