அதிகாலையில் தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்! பல்லடம் அருகே ஒரே குடும்பத்தில் மூவர் கொலை.. நடந்தது என்ன?
செய்தியாளர்: சுரேஷ் குமார்
தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த மூத்த தம்பதியர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவர், தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலு என்ற அலமாத்தாள் உடன் தனியாக தங்கி விவசாயம் செய்து வருகின்றார். இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார்.
உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தந்தை வீட்டிற்கு வந்த மகன்:
இந்நிலையில், தனது உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக நேற்று செந்தில்குமார் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து இரவு 3 பேரும் உறங்கி உள்ளனர் அப்போது தோட்டத்து பகுதியில் சப்தம் கேட்டதால் தெய்வசிகாமணி (76) முதலில் எழுந்து வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை:
அதனை தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த செந்தில் குமார் (45) மற்றும் அலமாத்தாள் (65) ஆகிய இருவரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து இன்று காலை செந்தில்குமார் வரச்சொல்லியிருந்த சவரத் தொழிலாளி வீட்டில் வந்து பார்த்துள்ளார். அப்போது மூவரும் சடலமாக கிடந்துள்ளனர்.
போலீசாருக்கு தகவல் அளிந்த சவரத் தொழிலாளி:
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அவினாசிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளது.
குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றால் காவல்துறைக்கு கேவலம் - கொலை செய்யப்பட்டவரின் மனைவி கதறல்:
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி, விசாரணை மேற்கொண்டார். அவரிடம் செந்தில்குமாரின் மனைவி கதறி அழுதபடி ”எனது குழந்தைகளை நான் எப்படி பார்த்துக் கொள்வேன். உறங்கிக் கொண்டிருந்த கணவரை வெட்டிக் கொன்று விட்டனர். அவர்களை நிச்சயம் பிடிக்க வேண்டும். பிடிக்கவில்லை எனில் காவல்துறைக்கு கேவலம்” என தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி கதறி அழுதார்.
8 பவுன் நகைக்காக 3 கொலைகள் நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தகவல்..!
இதையடுத்து அங்கு வந்த தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தும் மோப்ப நாய் மூலம் தோட்டப்பகுதிகளில் தடயங்களை சேகரித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் 8 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை தாய் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குற்றவளிகளை கண்டறிய 5 தனிப்படைகள் அமைப்பு!
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி பேசுகையில்.. இந்த சம்பவம், ஒரு நபர் செய்திருக்க வாய்ப்பில்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 தனி படைகள் அமைத்து விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை செய்யப்பட்டும் வருகிறது என்று தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணி, அமலாத்தாள் மற்றும் அவர்களது மகன் செந்தில்குமார் ஆகியோரின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைமுடிந்து உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது பின்னர் அமரர் உறுதி மூலம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.