பாகிஸ்தான் வன்முறை| கன்டெய்னரில் அமர்ந்து மத வழிபாடு.. இரக்கமின்றி தள்ளிவிட்ட ராணுவம்.. #ViralVideo
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் உள்ளார். அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் ஊழல் மற்றும் வன்முறை தொடர்பாக அவர்மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதில், ஒருசில வழக்குகள் மீது ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒருசில வழக்குகளில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
அவரை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில், கடந்த நவ.26ஆம் தேதி பேரணி நடத்தினர். இந்தப் பேரணியின்போது போராட்டக்காரர்களும், பாதுகாப்புப் படையினருக்கும் வெடித்த மோதல் வன்முறையாக மாறியது. இதில் 4 போலீஸார் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தும் பணியில் பாகிஸ்தான் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டது. அவர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுவீச்சு நடத்தப்பட்டது. மேலும் அவர்களைச் சுடவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்துசென்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக, இதுவரை 1,000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் போராட்டத்தின்போது, கன்டெய்னரின் அமர்ந்து மத வழிபாடு செய்துகொண்டிருந்த நபர் ஒருவரை, பாதுகாப்புப் படையினர் இரக்கமின்றிக் கீழே தள்ளிவிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அன்றைய தினம், அந்த நபர் 25 அடி உயர ஷிப்பிங் கன்டெய்னரின் மீது ஏறி அமர்ந்து பிரார்த்தனை செய்கிறார். அப்போது அந்த கன்டெய்னரின் மீது ஏறும் பாதுகாப்புப் படையினர் அவரை இழுத்து கீழே தள்ளுகின்றனர். அப்போதும் தனது பிடியை விடாத அவரின் கையை இழுத்து கீழே தள்ளுகின்றனர். இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. இதற்கு இமரான் கானின் பிடிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
”25 அடி உயரத்தில் இருந்து கொடூரமாக அவரைத் தள்ளிவிட்டபோது, அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அந்த மனிதனின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்று கட்சி விசாரணை நடத்தி வருகிறது. அமைதியான முறையில், போராட்டம் நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் அரசு வன்முறைத் தாக்குதலை நடத்தியது. முடிந்தவரை பலரைக் கொல்லும் நோக்கத்துடன் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் ஓர் உதாரணம்தான் இது” எனத் தெரிவித்துள்ளது.
இந்த வன்முறை காரணமாக, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை ஏ அணி, தொடரை முடிக்காமல் பாதியிலேயே நாடு திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.