2024
2024pt web

2024-ன் அரசியல் சர்ச்சை சரவெடிகள்| ’அவருக்கு வேறு வேலை இல்லை’ - முதல்வர் To ஆதவ் பற்ற வைத்த நெருப்பு

2024ல் அரசியல் களத்தில் சர்ச்சைக்குள்ளான, விவாதத்திற்குள்ளான, ஆய்வுக்குள்ளான தலைவர்கள் மற்றும் இன்னும் சிலரது பேச்சுக்களை பார்க்கலாம்.
Published on

2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தைத் திருப்பியதுபோல இந்த வருடம் அத்துணை வேகமாக கடந்துவிட்டது. வருடம் எவ்வளவு வேகமாக கடந்தாலும், அரசியலில் பரபரப்புகளுக்கா பஞ்சம் வந்துவிடப்போகிறது. இந்த வருடமும் ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தன, தலைவர்களின் பேச்சுகள் விவாதங்கள் ஆகின, பலரது பேச்சுகள் கண்டனங்களைப் பெற்றது, சிலரது பேச்சுகள் ஆய்வுக்குள்ளாகிற்று..

இந்த கட்டுரையில், 2024ல் அரசியல் களத்தில் சர்ச்சைக்குள்ளான, விவாதத்திற்குள்ளான, ஆய்வுக்குள்ளான தலைவர்கள் மற்றும் இன்னும் சிலரது பேச்சுக்களை பார்க்கலாம்.

செத்தாலும் தனிக்கட்சிதான் - ஆதங்கத்தை  கொட்டிய துரை வைகோ!

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் போட்டியிட்டது. வேட்பாளராக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிட்டார். தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், தனிச்சின்னம் ஒதுக்குவதற்குமுன் அவர் பேசிய கருத்துகள் அரசியல் அரங்கில் விவாதத்தினை ஏற்படுத்தியது.

துரை வைகோ
துரை வைகோ

தேர்தல் நெருங்கிய நேரத்தில் மதிமுகவிற்கு சின்னம் ஒதுக்கப்படாத சூழல் நிலவியது. அப்போது திருச்சியில் நடந்த கூட்டமொன்றில், சின்னம் தொடர்பான பேச்சு வந்தபோது, “செத்தாலும் எங்கள் சின்னம்தான். சுயமரியாதைக்காரன் நான். நீங்கள் வேட்பாளரை நிறுத்துங்கள். நாங்கள் உங்களுக்காக நிற்கின்றோம். திராவிடர் கழகத்தினர்போல் அரசியல் செய்துகொள்கிறோம்” எனக் கூறினார்.

இதனை அடுத்து, துரை வைகோ அப்படிப் பேசியது ஏன்? மதிமுகவிற்கு திமுக தலைமை அழுத்தம் கொடுக்கிறதா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தது. இதனை அடுத்த ஒரு சில தினங்களில் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், திருச்சியில் மதிமுக வெற்றி பெற்றது.

2024
ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கு.. நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்!

முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் - சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில், நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விமர்சனம் செய்யும் ரீதியில் ஒருபாடலைப் பாடினார். அதில் குறிப்பிட்ட ஒரு வார்த்தை பட்டியலின மக்களை இழிவு செய்வதாகக் கூறிப்பட்டது. அதேசமயத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும், தமிழக அரசு பற்றியும் அவதூறாக பேசியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.

சீமான்
சீமான்pt web

துரைமுருகன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தானும் அதே வார்த்தையைக் கூறி முடிந்தால் என்மேல் நடவடிக்கை எடுங்கள் என சவால்விட்டார். இதனை அடுத்து சீமான் மேல் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீமான் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசியல் அரங்கில் ஒரு விவாதமாகவே மாறியது.

2024
புஷ்பா 2 விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜூன் கைது! என்ன நடந்தது?

திராவிட இயக்கம் போட்ட பிச்சை - ஆர்.எஸ். பாரதி மீண்டும் சர்ச்சை பேச்சு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர் எஸ் பாரதி
ஆர் எஸ் பாரதி

இந்நிகழ்வில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “எங்கள் பட்டப்படிப்புகள் குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்ததா? திராவிட இயக்கம் போட்ட பிச்சை. திராவிட இயக்கம் இல்லையென்றால், இத்தனை டாக்டர்கள் போர்டு தொங்காது. நான் படித்தபோது பி.ஏ படித்தாலே போர்டு வைத்து கொள்வார்கள். இப்போது நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது” எனக் கூறினார். இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.

2024
சையத் முஷ்டாக் அலி| 98 ரன்கள் விளாசி மீண்டும் கெத்து காட்டிய ரஹானே.. ஃபைனலுக்கு முன்னேறியது மும்பை!

தெலுங்கு மக்கள் குறித்தான அவதூறு - சர்ச்சையில் சிக்கிய கஸ்தூரி!

பிராமண சமூகத்தின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதற்கு மாநிலம் முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

கஸ்தூரி
கஸ்தூரிபுதிய தலைமுறை

ஆனாலும், மாநிலம் முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் புகாரளிக்கப்பட்டது. அவர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கஸ்தூரியும் தலைமறைவானார். காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்யப்பட்ட அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2024
தென்காசி: கனமழை காரணமாக நீரில் மூழ்கிய 2,000 ஏக்கர் பயிர்கள்... விவசாயிகள் வேதனை

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு - பேசுபொருளான விசிக முழக்கம்

தமிழகத்தின் அரசியல் கடந்த சில மாதங்களாக விசிகவை மையமிட்டே சுற்றி வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்த பின், விசிகவை தன்பக்கம் இழுக்க அதிமுக கடுமையாக முயற்சித்தது. தேசிய அரசியலைக் கருத்தில்கொண்டும், பாஜக எதிர்ப்பில் தீவிரமாக இருப்பதாலும் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணிதான் என உறுதியாக இருந்துவிட்டார்.

திருமாவளவன்
திருமாவளவன்web

இத்தகைய சூழலில்தான் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பேசிய வீடியோ அவரது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியானது. பதிவிட்ட உடனே அது நீக்கமும் செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்க பயணத்தை முடித்து முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு திரும்பிய நேரத்தில் இந்த வீடியோ பதிவிட்டு நீக்கப்பட்டது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, அதுபற்றி எனக்குத் தெரியாது எனத் தெரிவித்த திருமாவளவன் அட்மின் பதிவிட்டிருக்கலாம் எனத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

2024
திருவண்ணாமலை தீபத்திருவிழா: கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்வு!

அதிகாரப் பகிர்வுக்குத் தயார் - புயலை கிளப்பிய விஜய் பேச்சு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் அக்டோபர் 27 ஆம் தேதி நடந்தது. மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் தனது 48 நிமிட உரையில் தமது நிலைப்பாட்டை நேரடியாகவே தெரிவித்தார். பிளவுவாத அரசியலை மட்டுமல்ல, குடும்ப அரசியலையும் ஒழிக்க வேண்டும், திராவிடத்தையும் தமிழ்த் தேசியத்தையும் பிரித்துப் பார்க்கப் போவதில்லை என்ற அவர் அஸ்திவாரமாக ஆட்சியில் அதிகாரப் பகிர்வுக்குத் தயார் என்று தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்KIRANSA

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என விசிக தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது. இத்தகைய சூழலில்தான் விஜய் தெரிவித்திருந்த கருத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த பேச்சாகவே மாறிப்போனது.

2024
கோவை: சைபர் க்ரைம் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் - பாமக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

திருமாவளவன் துணை முதலமைச்சர் ஆகக் கூடாதா? - ஆதவ் அர்ஜுனா போட்ட வெடி!

விசிகவின் துணைப்பொதுச்செயலாளர்களுல் ஒருவராக ஆதவ் அர்ஜுனா பொறுப்பேற்றதில் இருந்தே அவரைச் சுற்றிலும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விசிக தலைவர் திருமாவளவன் கூறிய நிலையில், அது அரசியல் விவாதமாக மாறிப்போனது. இத்தகைய சூழலில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆதவ் அர்ஜுனா, “நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர், துணை முதலமைச்சர் ஆகும்போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் துணை முதலமைச்சர் ஆகக் கூடாதா?” எனக் கேள்வி எழுப்பினார். இது திமுக விசிக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆதவ் அர்ஜுனா, திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனா, திருமாவளவன்

இந்த விவகாரம் ஓரளவு மறைந்த நிலையில், எல்லோருக்குமான அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். இங்கு பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக் கூடாது” என திமுகவை நேரடியாகவே விமர்சித்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து ஆறுமாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2024
கனமழை முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவித்த மாவட்டங்களில், உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள்!

வீடு தேடிச் சென்ற ஸ்வீட்பாக்ஸ்.. சர்ச்சையும் சமாதானமும்..

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. அதிமுக உடனான கூட்டணி முறிவுதான் இருகட்சிகளின் தோல்விக்கும் முக்கியக் காரணம் என பலர் தெரிவித்திருந்தனர்.

திருமாவளவன், அண்ணாமலை
திருமாவளவன், அண்ணாமலை

தமிழிசை சௌந்தரராஜனும், ”கூட்டணி சரியாக அமைந்திருந்தால் 35 பிரதிநிதிகள் வரைக் கிடைத்திருப்பார்கள். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை” எனத் தெரிவித்திருந்தார். தமிழிசையின் கருத்துக்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பலரும் இணையதளங்களில் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்தனர். தமிழிசை சௌந்தரராஜனை விமர்சித்து கருத்துகளைத் தெரிவித்தனர். இதற்கு தமிழிசை கடுமையான கண்டங்களைப் பதிவு செய்திருந்தார். முடிவாக ஜூன் 14 ஆம் தேதி தமிழிசையின் வீட்டுக்குச் சென்ற அண்ணாமலை ஸ்வீட் பாக்ஸைக் கொடுத்து சமாதானம் செய்தார்..

2024
ஆஸி. : ஆய்வகத்திலிருந்து காணாமல் போன 300 கொடிய வைரஸ் மாதிரிகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

”எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை” - இபிஎஸ் Vs அண்ணாமலை வார்த்தையுத்தம்!

அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்தபோதே இருதரப்புத் தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தனர். கூட்டணி முறிந்தபின் அது இன்னும் அதிகமானது. அண்ணாமலை குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “மைக் கிடைத்துவிட்டால் எந்த அளவிற்கு பொய் பேச முடியுமோ அந்த அளவிற்கு பொய் பேசும் ஒருவர்தான் பாஜக தலைவராக இருக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடிகொடுத்த அண்ணாமலை, “தவழ்ந்து காலில் விழுந்து பதவியைப் பிடித்த எடப்பாடி பழனிசாமி தன்மானமிக்க, விவசாயியின் மகனை பச்சை மையில் பத்தாண்டுகள் கையெழுத்துப்போட்ட ஒரு பைசா வாங்காத இந்த அண்ணாமலையைப் பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது” எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமிpt web

இது இரு கட்சிகளுக்கும் இடையிலான தலைவர்களிடையே கடும் வார்த்தை மோதலை ஏற்படுத்தியது. அண்ணாமலை பேச்சுக்கு பதிலுரைத்த தமிழிசை சௌந்தரராஜன், “அது அவருடைய பாணி என எடுத்துக்கொள்ள வேண்டும். தலைவர்களுக்கு என்ன மாதிரியான மரியாதையை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

2024
வலி இல்லாமல் அடிக்கடி வரும் வாய்ப்புண்.. புற்றுநோய்க்கான அறிகுறியா? மருத்துவர் சொல்வதென்ன?

அவருக்கு வேறு வேலை இல்லை - முதல்வர் கொடுத்த பதில்

அதானி விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “அதானி விவகாரத்தில் அமைச்சர் ஏற்கனவே உரிய முறையில் பதில் அளித்துள்ளார். அவருக்கு (ராமதாஸ்) வேறு வேலை இல்லை. ஏதாவது ஒரு அறிக்கை நாள்தோறும் விடுக்கிறார். எனவே பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின், ராமதாஸ், அன்புமணி
மு.க.ஸ்டாலின், ராமதாஸ், அன்புமணிPT

இந்த பதில் மூத்த தலைவர் ராமதாஸை அவமதிக்கும் பதில் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது எங்களின் உரிமை. பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்வது உங்களின் கடமை. அதனைவிட்டுவிட்டு மருத்துவர் ஐயாவை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மூத்த அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதியை பார்த்து அவருக்கு "வேறு வேலை இல்லையென்று" சொல்வது எவ்வளவு ஆணவம். கலைஞரிடம் ஸ்டாலின் எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.

2024
”நேருவை சொன்னது போதும்..” - மக்களவையில் பிரியங்கா காந்தி முதல் உரை.. அனல் பறந்த வாதம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com