திருவண்ணாமலை தீபத்திருவிழா: கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்வு!
பொதுவாக பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து இருக்கும். அதேபோல சித்ரா பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா போன்ற விஷேஷ நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கூடுதலாக அதிகரித்து இருக்கும். அந்தவகையில் இன்று திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளதையடுத்து, அங்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் திருவண்னாமலையை தாக்கிய ஃபெஞ்சல் புயலாலும், ஏற்பட்ட மூன்று மண் சரிவாலும், இன்று மலை உச்சியில் மகா தீபத்தை ஏற்ற அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக மலை உச்சிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி அரசு அவர்களுக்கு எந்த மாதிரியாக வசதிகளை ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளது என்பதை பார்க்கலாம்...
பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, கிரிவலப் பாதையில் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலவே ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 60 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மருத்துவக்குழுக்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக பேருந்து நிலையங்கள் 25 அமைக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறாக பக்தர்கள் அச்சமின்றி கிரிவலம் செல்ல அரசு தொடர்ந்து முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டு வருகிறது.