வலி இல்லாமல் அடிக்கடி வரும் வாய்ப்புண்.. புற்றுநோய்க்கான அறிகுறியா? மருத்துவர் சொல்வதென்ன?
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாயில் ஒருமுறையாவது வாய்ப்புண் ஏற்பட்டிருக்கும். சிலருக்கு அடிக்கடி வருவதுண்டு.. அது நீண்டகாலமாக ஆறாமலும், வலியும் இல்லாமலும் இருக்கும். அத்தகைய புண்களை நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை புற்றுநோயாக மாறும் அபாயம் கொண்டவை என சொல்கிறார்கள் சில மருத்துவர்கள். வாய்ப்புற்றுநோய் என்பது வாயை பாதிக்கும் புற்றுநோய். இது வாயின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.
வாய் புற்றுநோய் என்றால் என்ன?
வாய்வழி புற்றுநோயானது, வாய்வழி குழி அல்லது தொண்டையில் இருக்கும் திசுக்களினால் ஏற்படுகிறது. பற்கள், ஈறுகள், உதடுகள், வாயின் முன்பகுதி, தொண்டையின் முன் பகுதி என்று எங்கு வேண்டுமானாலும் வரலாம். இதற்கு பொதுவாகவே வாய், மூச்சுக்குழாய் மற்றும் உணவுப்பாதைகளில் வித்தியாசமான அறிகுறிகள் தென்படும்.
சரி.. வலியில்லாத புண்கள் வாய்ப்புற்றுநோயை உண்டாக்குமா? இது குறித்து பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா சொல்வதென்ன ? பார்க்கலாம்..
Leukoplakia
“நமது நாக்கு, ஈறு, மேல் அன்னம் போன்ற இடங்களில் ஆராத, வலியில்லாத புண்கள் இருந்தால், இது வாய்ப்புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். நாக்கின் இரண்டு ஓரங்கள், அல்லது நடுப்பகுதி போன்ற பகுதிகளில், தடிமனான புண்கள் தோன்றலாம்.. அதேபோல ஈறு பகுதிகளிலும் திடீரென ரத்தம் கசியும்.
இதில் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டால், Leukoplakia என்ற வாய்ப்புற்றுநோயின் முதற்கட்ட அறிகுறி ஏற்படலாம். இதனை கண்டுகொல்லாமல் அப்படியே விட்டுவிட்டால், அருகிலுள்ள தாடை எலும்புகள், நிணநீர் கணுக்களில் பரவி தொடர்ந்து ரத்தத்தின் மூலம் உள்ளுறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
எதனால் இது ஏற்படுகிறது?
புகையிலை பிடிப்பவர்கள், போதைப்பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிகம் ஏற்படும். முதலில் புண்கள் உருவாகும். பின் அது ஆறாமல் இருந்து வாய்ப்புற்றுநோயாக உருவெடுக்கிறது. இதை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதன் பின்னர், உணவு உண்பதற்கு கூட மிகுந்த சிரமத்தை உண்டாக்கக்கூடியதாக மாறும்.
விழிப்புணர்வு அவசியம்!
எனவே, இது குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணரையும், பல் சிறப்பு மருத்துவரையும் சந்தித்து அனைவருமே பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. ஆறாத வாய்ப்புண்களை அலட்சியப்படுத்த வேண்டாம். மேலும், புகையிலை சார்ந்தவற்றை எடுத்துக்கொள்வதை நிச்சயம் கைவிட வேண்டும்” என்றார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.