மறக்க முடியாத துணைக்கதாபாத்திரங்கள்: காதல் கோட்டை | நறுமணம் வீசும் இனிமையான ‘பன்னீர்’ தலைவாசல் விஜய்

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘காதல் கோட்டை’ திரைப்படத்தில் ‘தலைவாசல்’ விஜய் ஏற்று நடித்திருந்த ‘பன்னீர்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்புதிய தலைமுறை

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

தமிழ் சினிமாவிற்கு முதன்முறையாக,  ‘சிறந்த இயக்குநர்’ என்கிற பிரிவில் தேசிய விருதைப் பெற்றுத் தந்த திரைப்படம் ‘காதல் கோட்டை’. அகத்தியன் இயக்கிய இந்தத் திரைப்படம் வெளியாகி நாளையோடு (ஜூலை 12) 28 வருடங்கள் நிறைவடைகின்றன. எனவே இந்தப் படத்தை மீள்நினைவு செய்யும் நோக்கில் இதில் வரும் ஒரு முக்கியமான துணைக் கதாபாத்திரத்தைப் பற்றி பார்ப்போம்.

காதல் கோட்டை
காதல் கோட்டை

பொதுவாகவே  பொதுமக்களுக்கும்  ஆட்டோகாரர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். “மீட்டருக்கு மேல் காசு கேட்கிறார்..  அடாவடியாகப் பேசுகிறார்” என்று ஆட்டோகாரர்கள் மீது பொதுத்தரப்பினர் புகார்களை நிறைய அடுக்குவார்கள். இந்த நடைமுறை சமாச்சாரம் அப்படியே சினிமாவிலும் தொடர்ந்து பதிவாகிக் கொண்டிருந்தது. ‘அய்ய.. சாவுகிராக்கி..’ என்று ஏக வசனத்தில் மலினமாகப் பேசுகிற ஆட்டோகாரர்களையே எதிர்மறையான கோணத்தில் தமிழ் சினிமாவும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | Dancing Rose | “அதுக்காகல்லாம் ரோஸை அடிச்சுட முடியாது..”

கண்ணியமான ஆட்டோகாரர் பாத்திரம்

இந்த வழக்கமான பார்வையிலிருந்து விலகி ஒரு கண்ணியமான, தோழமையான ஆட்டோகாரரை சித்திரித்த முதல் திரைப்படமாக ‘காதல் கோட்டை’யைச் சொல்லலாம். இதில் வரும் ‘பன்னீர்’ என்கிற ஆட்டோ ஓட்டும் கேரக்டர், ஹீரோவுடன் கொண்டிருக்கும் நட்பிற்காக பல உதவிகளை எவ்வித நிபந்தனையும் இன்றி செய்யும் நல்ல கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். 

‘காதல் கோட்டை’ படத்தில் வரும் ‘ஒவ்வொரு காரெக்டரின் பெயரையும் அர்த்தபூர்வமுள்ளதாக சூட்டினேன்’ என்று ஒரு நேர்காணலில் சொல்கிறார் இயக்குநர் அகத்தியன். சூர்யா மற்றும் கமலி என்பது முறையே ஹீரோ மற்றும் ஹீரோயினின் பெயர்கள். சூரியன், தாமரை என்கிற பொருளில் நோக்கும் போது இந்தப் பாத்திரங்கள் அர்த்தபூர்வமாகின்றன.

காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்

அதைப் போலவே ‘பன்னீர்’ என்கிற பெயர் கொண்ட ஆட்டேகாரர், இனிமையான வாசனையைக் கொண்ட நட்பினைத் தருவதால் அப்படியொரு பெயர் திட்டமிட்டு சூட்டப்பட்டதாக அகத்தியன் சொல்வது ஒரு சுவாரசியமான தகவல். 

காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 41 | ‘நான் வாழ வைப்பேன்’ ஸ்டைலிஷ் ரஜினிகாந்த்!

சிறந்த துணை நடிகர்களில் ஒருவர் தலைவாசல் விஜய்

சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஆட்டோகாரர் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார் ‘தலைவாசல்’ விஜய். அது அடித்தட்டு ஆசாமி கேரக்டராக இருந்தாலும் சரி, மிடில் கிளாஸ் நபராக இருந்தாலும் சரி. எலீட் கனவானாக இருந்தாலும் சரி, அந்தந்த பாத்திரங்களில் அதற்குரிய உடல்மொழியோடு கூடுபாய்ந்து விடும் திறமை வாய்ந்த துணை நடிகர்களில் ஒருவர்

தலைவாசல் விஜய்.

இதிலும் நட்பைக் கொண்டாடும் ஆட்டோகாரராக சிறப்பான நடிப்பைத் தந்திருந்தார். 

ஒரு இண்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் வந்து இறங்குகிறார் ஹீரோ சூர்யா. ரயில்வே ஸ்டேஷனின் வாசலில் காத்திருக்கும் பன்னீர், வாடிக்கையாளரைப் பார்த்ததும் “வாங்க சார்.. ஆட்டோல போகலாம்” என்று தற்செயலாக அழைக்க “போலாம் சார்..” என்று சூர்யா சொன்னதும் பன்னீருக்கு ஒரு சிறிய ஆனந்த அதிர்ச்சி.

காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்

“என்ன.. அப்படிப் பார்க்கறீங்க?” என்று சூர்யா கேட்டதும் “ஏ.. ஆட்டோ.. இங்க வா..ன்னுதான் மரியாதையில்லாம கூப்பிடுவாங்க.. ஆட்டோக்காரனை சார் போட்டு கூப்பிட்ட முதல் ஆள் நீங்கதான்” என்று பன்னீர்  நெகிழ்ச்சியுடன் சொல்வதில் இயக்குநரின்  வழியாக பார்வையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி கடத்தப்படுகிறது. 

காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 39 | ‘இப்படியொரு நண்பன் நமக்கு கிடைக்க மாட்டானா?’- சேது ஸ்ரீமன்

ஆட்டோகாரருக்கும் மரியாதை வேண்டும்…

அதிகாரத்தில் இருப்பவர்களை ‘சார்.. ஐயா.. தலைவரே’ என்றெல்லாம் மரியாதையுடன் அழைக்கும் பொதுச்சமூகம், அடித்தட்டு உழைப்பாளிகளை மரியாதையில்லாமல் ஏக வசனத்தில் அழைப்பது முறையான கலாசாரம் அல்ல. ஒரு சமூகத்திற்கு அனைத்து விதமான பணியாளர்களின் சேவையும் அவசியம். அவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதும் அவசியம். 

“என் பெயர் சூர்யா” என்று ஹீரோ அறிமுகப்படுத்திக் கொண்டதும், “ஆட்டோகாரன் கிட்ட பெயரைச் சொல்றதும் நீங்கதான் முதல்ல” என்று அதற்கும் பன்னீர் மகிழ்ச்சியடைகிறார். “நானும் முன்னாடி மதுரைல கொஞ்ச காலம் ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன்” என்று சூர்யா சொல்வதின் மூலமாக இந்த உரையாடலுக்கு ஒரு நியாயமான தர்க்கம் சேர்கிறது.

காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்

“குளிச்சிட்டு இண்டர்வியூ போகணும். சின்னதா ஒரு லாட்ஜ் இருந்தா ஓகே” என்று சூர்யா சொல்ல, “அவ்ளதான.. நான் தங்கியிருக்கிற இடமே இருக்கு. சின்ன இடம்தான். ஓகேன்னா போகலாம்” என்று பன்னீர் சொல்ல, மகிழ்ச்சியுடன் அதற்கு சம்மதிக்கிறான் சூர்யா. இப்படி தற்செயல் உறவாக துவங்கும் இவர்களின் நட்பு மிக வலுவாக நீடிக்கும்படியான சூழல் அமைகிறது. 

காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
மறக்க முடியாத துணைக்கதாபாத்திரங்கள் | மருமகளிடம் வேலைக்காரியாக நடிக்கும் மாமியாராக ‘அவர்கள்’ லீலாவதி

‘என்னோட ரூம் இருக்கு.. மனசு இருக்கு’....

வேலை தேடி சென்னை வந்த சூர்யாவிற்கு சில மாதங்களுக்குப் பிறகு வேலையை உதறித் தள்ளி விலகும்படியான நிலைமை ஏற்படுகிறது. தோளில் பயணச் சுமையை தாங்கியபடி சோர்வுடன் நடந்து வரும் சூர்யாவை சாலையில் தற்செயலாக பார்க்கும் பன்னீர் “சூர்யா.. எப்படி இருக்கீங்க.. பார்த்து ரொம்ப நாளாச்சு.. வாங்க ஆட்டோல போகலாம்" என்று உரிமையாக அழைக்கிறார்.

தலைவாசல் விஜய் - அஜித்
தலைவாசல் விஜய் - அஜித்

“எங்க போறதுன்னு தெரியல.. முன்னாடி சென்னைக்கு புதுசு.. அதனால எங்க போறதுன்னு தெரியாம இருந்தது. இப்ப வேற சூழ்நிலை. எங்க போறதுன்னு தொியல” என்று சூர்யா விரக்தியுடன் சொல்ல “சென்னைல இடமா இல்ல.. பார்க்கு.. பீச்சுன்னு நிறைய இடம் இருக்கு. இல்லாட்டி இருக்கவே இருக்கு என்னோட ரூமு.. என்னோட மனசு” என்று ஆறுதலாக சொல்லும் பன்னீரைப் பார்க்கையில் நமக்கே அத்தனை சந்தோஷமாக இருக்கிறது.

காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 33 | சூது கவ்வும் | ‘ஞானோதயம்’ பெறும் அமைச்சராக எம்.எஸ்.பாஸ்கர்

அடுத்த காட்சியில் இருவரும் கடற்கரையில் அமர்ந்திருக்கிறார்கள். “ஏன்.. சார்.. வேலையை விட்டுட்டீங்க?” என்று பன்னீர் உரிமை கலந்த நட்புடன் கேட்க, சூர்யா மௌனம் காக்கிறான். “தோ.. பார் சூர்யா.. மனசுல இருக்கறத யார் கிட்டயாவது சொன்னாதான் பாரம் குறையும்” என்று சட்டென்று ஒருமையில் தாவுகிற பன்னீர், பிறகு அந்தப் பிழையை உணர்ந்து “நீ வா.. போ.. ன்னு பேசறது பிடிக்கலைன்னா சொல்லிடுங்க” என்று மன்னிப்பு கேட்கும் தோரணையில் சொல்கிறார்.

தலைவாசல் விஜய் - அஜித்
தலைவாசல் விஜய் - அஜித்

இதற்கு சூர்யா பதில் ஏதும் சொல்லாமல், பன்னீரின் வாயில் இருக்கும் சிகரெட்டை தான் வாங்கி புகைக்கத் துவங்குவதின் மூலம் ‘நீ என் பிரெண்டுதான்” என்பதை சொல்லால் அல்லாமல் செய்கையால் உணர்த்துகிறான்.

இப்படியாக சின்னச் சின்ன விஷயங்களில் தன்னுடைய இயக்குநர் ‘டச்’சை அகத்தியன் இணைத்திருப்பது அழகு. 

‘கவலைப்படாதே சகோதரா….’

பிறகு தனது பிளாஷ்பேக்கை  பன்னீரிடம் விவரிக்கிறான் சூர்யா. அந்த நெகிழ்ச்சியான பின்னணியைக் கேட்டவுடன் பன்னீருக்கு தோழமையுணர்வு அதிகமாகிறது. “சகோதரா… உன்னோட காதல் ரொம்ப உயர்ந்ததுடா.. பசிக்குது.. வா.. சாப்பிடப் போகலாம்” என்று மனமார பாராட்டி விட்டு கையேந்தி பவனுக்கு அழைத்துச் செல்கிறார். 

‘கவலைப்படாதே சகோதரா.. எங்கம்மா கருமாரி.. காத்து நிப்பா.. காதலைத்தான் சேர்த்து வைப்பா.. கவலைப்படாதே சகோதரா’... என்கிற பாடல் அடுத்த காட்சியில் ஆரம்பிக்கிறது. தனது நண்பனின் காதலுக்கு ஆறுதல் சொல்லும் பாட்டாக மட்டும் அது அல்லாமல், ஆட்டோகாரர்கள் கொண்டாடும் பாடலாகவும் அமைகிறது. விளிம்புநிலை மக்களுக்கு உற்சாகமூட்டும் பாட்டாக தனது பிரத்யேகமான பாணியில் அருமையாகப் பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் தேவா.

வேறு பணியில் இணைய ஆர்வம் காட்டாத சூர்யா, பன்னீருடன் அடைந்த நெருக்கம் காரணமாக “எனக்கு ஆட்டோ ஓட்டறதுக்கு ஏற்பாடு பண்ணேன்..” என்று கேட்க “நீ ரொம்ப பிராக்டிக்கலா பேசற.. நாளைக்கே ஏற்பாடு பண்ணிடறேன்” என்று பன்னீர் உற்சாகமாகிறான். (‘முன்னாடி மதுரைல கொஞ்ச நாள் ஆட்டோ ஓட்டியிருக்கேன்’ என்று முன்பு  ஒன்றில் ஹீரோ சொல்லும் வசனத்தின் மூலம் இந்த லாஜிக் பொருந்துவதைப் பார்க்கலாம்).

காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
'உன்னை நான் அறிவேன்..' குணாவின் நிஜ 'அபிராமி' ரேகா நடித்த ரோஸி தான்..!

பன்னீரின் நறுமணத்துடன் ஓர் இனிய நட்பு

பன்னீர் ஏற்பாடு செய்து தரும் ஆட்டோ தொழில் காரணமாகத்தான் சூர்யா தனது ‘முகம் காணாத’ காதலியான கமலியை பிற்பாடு அடையப் போகிறான். பன்னீரின் ஆட்டோவில் கமலியின் தோழி தற்செயலாக பயணம் செய்கிறாள். சிக்னலில் காத்திருக்கும் போது ஓர் இளம் ஜோடி சாலையின் நடுவிலேயே முத்தமழையைப் பொழிய “நாய்க் காதல்” என்று எரிச்சலுடன் அதை விமர்சிக்கிறான் பன்னீர். 

தலைவாசல் விஜய்
தலைவாசல் விஜய்

“ஏன்.. அப்படிச் சொல்றீங்க” என்று கமலியின் தோழி கேட்க “நாய்ங்கதான் நடுரோட்ல காதல் செய்யும். என் நண்பனோட காதல் ரொம்ப புனிதமானது. இதயத்துல தொடங்கி கண்கள்ல முடிகிற காதல் அது” என்று பன்னீர் உணர்ச்சிகரமாகச் சொன்னவுடன் கமலியின் தோழிக்கு மூளையில் பல்ப் எரிகிறது. ஏனெனில் அது அவளுக்கும் பரிச்சயமாகியிருக்கிற வசனம். “நீங்க சொல்ற கமலி என்னோட பிரெண்டுதான்” என்று அவள் சொல்ல இருவரும் ஆச்சரியப்பட்டு ஹீரோ - ஹீரோயினைத் தேடி அவசரமாக பயணிக்கிறார்கள்.

தலைவாசல் விஜய்
தலைவாசல் விஜய்

படத்தின் கிளைமாக்ஸில், அதுவரை முகம் பார்க்காமல் காதலித்து வந்த சூர்யாவும் கமலியும் ஒருவழியாக பரஸ்பரம் அடையாளம் கண்டு தங்களின் அன்பைப் பரிமாறிக் கொள்வதை ஆனந்த பரவசத்தோடு பார்க்கிறான் பன்னீர்.

காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 24 | கொலைக்கருவிகளை உற்பத்தி செய்யும் அரசியல்வாதி சமுத்திரக்கனி

இயக்குநர் அகத்தியன் சித்தரித்த ‘நல்ல’ ஆட்டோகாரர்

காதல் கோட்டை படத்தில் ஹீரோவிற்கும் ஆட்டோகாரர் ஒருவருக்கும் இடையே துவங்குகிற தற்செயலான நட்பு, கிளை விட்டு வளர்ந்து வலுவான உறவாக மாறுகிறது. ஒரு பெண்ணின் முகத்தைப் பார்க்காமலேயே காதல் கொள்ளும் சூர்யாவின் செயலை உயர்வானதாக மதிக்கிறான் பன்னீர். அதற்காக தனது நிபந்தனையில்லாத அன்பையும் உதவிகளையும் வாரி வழங்குகிறான்.

காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்

சென்னையில் இயங்கும் ஓர் ஆட்டோகாரரை இத்தனை நேர்மறையான பிம்பமாகவும் நட்பிற்காக எந்த உதவியை வேண்டுமானாலும் செய்யும் கண்ணியமான நபராகவும் சித்தரித்த ஒரே காரணத்திற்காகவே இயக்குநர் அகத்தியனை எத்தனை வேண்டுமானாலும் பாராட்டலாம். எந்தவொரு தொழிலிலும் மோசமானவர்களும் உண்டு. நல்லவர்களும் உண்டு. சட்டென்று எதையும் பொதுமைப்படுத்தி விட முடியாது. 

‘பன்னீர்’ என்கிற ஆட்டோகாரர் பாத்திரத்தில் உண்மையாகவே நறுமணம் வீசும் இனிமையான நபராக நடிப்பில் அசத்தி அந்தப் பாத்திரத்தை மறக்க முடியாததாக ஆக்கி விட்டார் ‘தலைவாசல்’ விஜய். 

காதல் கோட்டை தலைவாசல் விஜய் - அஜித்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 23 | உடலசைவிலேயே அசாத்திய நடிப்பை கொடுத்த ‘முதல்வன்’ பட ரகுவரன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com