மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 39 | ‘இப்படியொரு நண்பன் நமக்கு கிடைக்க மாட்டானா?’- சேது ஸ்ரீமன்

39 வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘சேது’ திரைப்படத்தில் ஸ்ரீமன் ஏற்று நடித்திருந்த தாஸ் கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
சேது திரைப்படம்
நடிகர் ஸ்ரீமன்புதிய தலைமுறை

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

குமாரவாத ஸ்ரீனிவாச ரெட்டி என்கிற இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் சினிமாவில் ஸ்ரீமன் என்கிற நடிகராக அறியப்படுகிறார். இவரது தந்தையான பிரசாத் ரெட்டி, தெலுங்கு சினிமாத் துறையில் பிரபலமான நடனக் கலைஞர். பிறகு தயாரிப்பாளராகவும் உயர்ந்த அவருடைய பல படங்களில் ஸ்ரீமன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். பிறகு படிப்பிற்காக சென்னை பெயர்ந்த ஸ்ரீமன், நடனம், குதிரைப்பயிற்சி மற்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் போன்றவற்றைக் கற்கிறார்.

நடிகர் ஸ்ரீமன்
நடிகர் ஸ்ரீமன்

கலா மாஸ்டரின் நடனக் குழுவில் இவரைப் பார்த்த இயக்குநர் கஸ்தூரி ராஜா, மவுனமொழி என்கிற படத்தில் அறிமுகம் செய்கிறார். பிறகு விக்ரமனின் ‘புதிய மன்னர்கள்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஹீரோவின் நண்பனாக நடித்து புகழ் பெறும் ஸ்ரீமனுக்கு ‘லவ் டுடே’ திரைப்படம் பெரிய பிரேக்காக அமைகிறது.

குணச்சித்திர நடிகராகவும் பிறகு நகைச்சுவை நடிகராகவும் பரிணமித்த ஸ்ரீமன், ஏராளமான திரைப்படங்களில் இப்போதும் நடித்துக் கொண்டு வருகிறார்.

ஸ்ரீமன் நடித்த படங்களில் மறக்க முடியாதது ‘சேது’. இப்படியொரு நண்பன் நமக்கு வாய்க்க மாட்டானா என்று ஒவ்வொருவரும் ஏக்கப்படுமளவிற்கு மிக உணர்ச்சிகரமான பாத்திரத்தை (தாஸ்) கையாண்டு பார்வையாளர்களை நெகிழ வைத்திருப்பார். 

தாஸ் என்கிற நண்பனாக நடிப்பில் அசத்திய ஸ்ரீமன்

தாஸின் அறிமுகக் காட்சி ஒரு நடனத்தில்தான் ஆரம்பிக்கும். கல்லூரி தேர்தலில் சீயான் (விக்ரம்) வெற்றி பெற்றதையடுத்து அந்த வளாகமே அல்லோலகல்லோலப்படும். மாணவர்களின் வெறி கொண்ட நடனத்தில் புழுதி பறக்கும். குத்தி ஆடி மூச்சு வாங்க குனியும் தாஸ், ‘ம்மா.. தாயே..’ என்று ஜோதிலட்சுமியை இரு கையையும் நீட்டி அழைப்பார். அவர் ஆடி அசைந்து நடந்து வருவதை ஆசை பொங்கும் கண்களால் பார்த்து உறைந்து போய் பின்பு தன்னை உசுப்பிக் கொண்டு “நீ அடிச்சு கிளப்பு ஆத்தா” என்பார்.

சேது திரைப்படம் - ஸ்ரீமன்
சேது திரைப்படம் - ஸ்ரீமன்

இந்தப் படத்தில் சட்சட்டென்று மாறும் ஸ்ரீமனின் முகபாவங்கள், வசனங்களில் துரித கணத்தில் தெரியும் மாடுலேஷன் மாற்றங்கள் போன்றவற்றைக் கவனித்தால் ஒரு நடிகர் கற்க வேண்டிய அடிப்படையான பாடங்கள் தெரியும். ஸ்ரீமனின் இந்த அபாரமான நடிப்பிற்கு இயக்குநர் பாலா ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கக்கூடும் என்பது எளிதில் யூகிக்கக்கூடிய அம்சம். ஏனெனில் இதர திரைப்படங்களில் ஸ்ரீமனின் நடிப்பு இந்த அளவிற்கு அற்புதமானதாக, மறக்க முடியாததாக அமையவில்லை. 

கல்லூரிக்கு முதல் நாள் வரும் மாணவியான அபிதகுஜாலாம்பாளை, ஜாலியாக ‘ரேகிங்’ செய்யும் நோக்கில் சேது அழைத்து அவளது டிபன்பாக்ஸை வாங்கிப் பார்த்து “என்னதிது.. தயிர் சாதம்.. மாவடு?” என்று கேட்க, தாஸ் தனது குரலில் பெண்மையை பாவனையாக  ஏற்றிக் கொண்டு “பாத்தா.. தெரியல… மாமி” என்று நையாண்டியாக சொல்லுவார். பிறகு அபிதா கிளம்பும் போது அதே தொனியில் “எச்சூஸ்மி.. உங்க மயிலிறகு குட்டி போட்டா நேக்கும் ஒண்ணு தரேளா.. நானும் வளர்த்துக்கறேன். டாங்க்ஸ்” என்று பிராமண வழக்கில் தாஸ் சொல்லும் காட்சி ரகளையானது. கல்லூரி மாணவர்கள் செய்யும் அராஜகமான குறும்பின் வேடிக்கை இந்தக் காட்சியில் பொங்கி வழியும்.

சேது திரைப்படம் - ஸ்ரீமன், விக்ரம், அபிதா
சேது திரைப்படம் - ஸ்ரீமன், விக்ரம், அபிதா

விதம் விதமாக மாறும் வசன உச்சரிப்பு

கல்லூரி சேர்மன் சேது என்பதால் அவனுடைய உதவியைத் தேடி அபிதாவும் அவளது தோழியும் சேதுவின் வீட்டிற்கு வருவார்கள். அபிதாவின் மீது காதலில் விழுந்திருப்பதால் சேது வெட்டியான ஆங்கிலத்தில் பேசி அவர்களிடம் பந்தா காட்டுவான்.  “ஹால்டிக்கெட் தொலைஞ்சு போச்சு. ஹெச்ஓடி எக்ஸாம் எழுத முடியாதுன்னு சொல்லிட்டாரு” என்று அபிதாவின் தோழி வந்த காரணத்தைச் சொல்ல “ஹெச்ஓடின்னா?” என்று சேது திகைக்க “ஹெட் ஆஃப் த டிபார்ட்மெண்ட்” என்று சொல்லியபடி தாஸூம் அந்த உரையாடலில் கலந்து கொள்ள முயல “புள்ளப்பூச்சி மாதிரி ஒட்டிக்கற. கொஞ்சம் எஸ் ஆவறியா?” என்று சேது ரகசியமாக கண்டிக்க ‘தாங்க்யூ’ என்று குறும்பாக சொல்லி விட்டு பவ்யமாக வீட்டிற்குள் நடந்து செல்வான் தாஸ். 

அந்த அறையின் கட்டிலில் சேதுவின் அண்ணன் அமர்ந்திருப்பதால் கட்டிலின் நுனியில் தாஸ் அமர்வது, விருந்தாளிகளுக்கேயான உடல்மொழியில் கச்சிதமாக அமைந்திருக்கும். “யாருடா அது?” என்று அண்ணன் கேட்க “கூடப்படிக்கற புள்ளைங்க” என்று தாஸ் துரிதமாக சொல்லும் மாடுலேஷனைக் கவனித்தால் ஆச்சரியமாக இருக்கும். சற்று முன் வேறு தொனியில் பேசிய, அதே நடிகரா என்று தோன்றும். நண்பனின் அண்ணன் என்கிற மரியாதையும் ‘பெரிசு’ என்கிற கிண்டலும் கலந்திருக்கும் தொனி அது.

சேது திரைப்படம் - ஸ்ரீமன்
சேது திரைப்படம் - ஸ்ரீமன்

அபிதாவை கோயிலில் சந்தித்தது, நெய் முறுக்கு வாங்கிச் சாப்பிட்டது போன்ற சம்பவங்களையெல்லாம் சேது மெல்லிய தயக்கத்துடன் தாஸிடம் சொல்ல, அவனுக்குப் புரிந்து விடும். “ஏண்டா.. சீயான்.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. சரியா சாப்பிடறியா.. நீ..” என்று தீவிரமான தொனியில் விசாரிக்கும் தாஸ், பிறகு “மாட்டிக்கிட்டியே சீயான்.. அய்யோ வெட்கப்படறான்டா” என்று கலாய்க்கும் காட்சியில் நட்பின் உரிமையும்  மற்றும் ரகளையான கிண்டலும் தெரியும். “அருமை பெருமையுமா.. உன்னை வளர்த்தமே.. தேசிங்கு ராசா” என்று மூக்கைச் சிந்தி தரையில் சரிந்து தாஸ் வேடிக்கையாக ஒப்பாரி வைக்கையில் இந்தக் காட்சியின் ரகளை இன்னமும் உச்சத்திற்கு உயரும். 

ஸ்ரீமனின் நடிப்பு அற்புதமாக வெளிப்படும் காட்சி

அடுத்த காட்சி இன்னமும் சுவாரசியமானது. தனது நண்பன் சேதுவைத் தேடி அவனது வீட்டுக்கு வரும் தாஸ், பைக்கில் அமர்ந்து கொண்டே “சீயான் இருக்கானா?” என்று அண்ணியிடம் விசாரித்து விட்டு “பெரிய சீயான் இல்லையே?” என்று துடுக்குத்தனமாக கேட்டு விடுவான். “அடி செருப்பால.. இதெல்லாம் அவனோட வெச்சுக்க.. எதுக்குடா அவரை இழுக்கறே.. தறுதலைப் பயலே” என்று அண்ணி காட்டமாக  திட்டியவுடன், முகத்தை அடிபட்ட குழந்தை மாதிரி வைத்துக் கொண்டு பாவமாக உள்ளே வந்து அமர்வான் தாஸ். “காப்பி சாப்பிடறியா?” என்று அண்ணி பரிவாக கேட்க “வேணாம்” என்று குற்றவுணர்வுடன் சொல்வான்.

சேது திரைப்படம் - ஸ்ரீமன்
சேது திரைப்படம் - ஸ்ரீமன்

“என்னடா.. இவன் ஆளே மாறிட்டான்.. காலைல எழுந்து குளிச்சிடறான்” என்று சேதுவிடம் தெரியும் மாற்றத்தைப் பற்றி அண்ணி விசாரிக்க, அந்த உற்சாகமான தொனிக்கு உடனே மாறும் தாஸ் “உங்களுக்குத் தெரியாதாக்கும்.. அன்னிக்கு வந்துதே.. ஒரு ஊமைக்கத்தாளை.. அவங்க அப்பன் கூட கோயில்ல மணியாட்ற அரைமண்டையன்” என்று ஏகவசனத்தில் பேசி அதற்கும் அண்ணியிடம் திட்டு வாங்கும் காட்சி சுவாரசியமானது. 

சேது மெல்லிய வெட்கச் சிரிப்புடன் அமர்ந்திருக்க “ஏண்டா.. உனக்குள்ள சிரிச்சுக்கற.. சொல்லுடா” என்று தாஸ் கேட்க, சேது சட்டைப்பையில் இருந்து ஒரு வெள்ளிக் கொலுசை எடுத்து  நீட்ட, சட்டென்று முகம் மாறி ஆச்சரியப்படும் தாஸ் “இதெல்லாம் யாரு உனக்கு சொல்லித் தர்றது?” என்று கிண்டலடித்து விட்டு “உன் லவ் மேட்டர் லீக் ஆயிடுச்சு போல. அதான் அவ கூட கைபாம் வர ஆரம்பிச்சிருக்கான்” என்று அபிதாவின் முறைமாமனைப் பற்றி சீரியஸாக கூறும் காட்சியில் ஸ்ரீமனின் நடிப்பு அற்புதமாக இருக்கும். அபிதாவை டிஎவிஎஸ் 50-ல் இறக்கி விட்டு திரும்பும் முறைப் பையனை மடக்கி நிறுத்தி “சொந்த பந்தங்களை கூட தெரிஞ்சு வெச்சுக்காம.. அப்படி என்ன சாமி..  பூஜைக்கு அவசரம்” என்று கிண்டலான தொனியில் தாஸ் சொல்லும் வசனம் அருமை. 

சேது திரைப்படம் - ஸ்ரீமன்
சேது திரைப்படம் - ஸ்ரீமன்

ஸ்ரீமனின் உணர்ச்சிகரமான நடிப்பு

சேது தன்னுடைய காதலை அபிதாவிடம் வலுக்கட்டாயமாக திணிக்க முயல, அவள் அதிர்ச்சியுடன் “அப்படில்லாம் எனக்கு எதுவுமில்ல” என்று அழுகையுடன் மறுக்க, அடுத்த காட்சியில் தாஸின் கிண்டல் ஆரம்பமாகும். “ஆதிமனிதன் காதலுக்குப் பின்னே அடுத்த காதல் இதுதான்.. எனக்கு அப்பவே தெரியும். போயி காதலைச் சொல்லுடான்னா.. கையத் தட்டினா சத்தம் வரும்ங்கிறான்.. அவன் அப்பனைத் தூக்கிப் போட்டு மிதிப்பேங்கறான்.. இப்பத்தான் தெரியுது. நெய் முறுக்கு அவளா தரலை. இவன் பிடுங்கித் தின்னிருக்கான்” என்று குறும்பாக சொல்லும் காட்சியில் சேதுவே சிரித்து விடுவான். நமக்கும் தன்னிச்சையாக சிரிப்பு வந்து விடும்.

அடுத்த காட்சி உணர்ச்சிகரமானது. சேதுவின் நண்பன் ஒருவனை எதிரி க்ரூப் போட்டு அடித்து விட, அவர்களைத் தேடிச் சென்று உதைக்கும் சேது, எதிரில் அபிதா வந்தவுடன் விதுவிதிர்த்துப் போய் அடிப்பதை நிறுத்தி விட்டு திகைப்புடன் சென்று விடுவான். இது தாஸிற்கு கோபத்தை ஏற்படுத்தி விடும்.

எனவே ஜாடையாக மற்ற நண்பர்களிடம் சொல்வது போல் தன் ஆதங்கத்தைக் கொட்டுவான். “ஏண்டா.. எங்க பின்னாடியே வர்றீங்க.. போயி பாவாடை தாவணி இருந்தா கட்டிட்டு வாங்க.. அப்பத்தான் உங்களுக்காக சப்போர்ட்டுக்கு வருவோம்” என்று தாஸ் சொன்னவுடன் சேது குமைச்சலில் முகம் சுளிப்பான். 

சேது திரைப்படம் - ஸ்ரீமன்
சேது திரைப்படம் - ஸ்ரீமன்

“காசு கொடுத்தா நூறு பேர் வருவாளுங்கடா. இன்னிக்கு உன்னைக் கிறங்கடிச்சிட்டு நாளைக்கு இன்னொருத்தனை கட்டிக்கிட்டு போகப் போறா பாரு” என்று தாஸ் மலினமாக பேச ஆரம்பித்தவுடன் சேதுவிற்கு பயங்கர கோபம் வந்து, நண்பன் என்றும் பாராமல் தாஸை துரத்தி துரத்தி அடிக்க ஆரம்பித்து விடுவான். ஒரு கட்டத்தில் “அடிடா.. அடி.. அது ஒண்ணுதான் பாக்கி.. போதுண்டா சாமி” என்று தழுதழுக்கும் குரலில் தாஸ் சொல்லி கையெடுத்து கும்பிடுவது கலங்க வைக்கும் காட்சி. அதுவரையான சிரிப்பு உறைந்து நண்பர்களுக்குள் ஏற்படும் பிரிவானது நம்மையும் சலனமடையச் செய்யும். 

சேது திரைப்படம் - ஸ்ரீமன், விக்ரம்
சேது திரைப்படம் - ஸ்ரீமன், விக்ரம்
“வா தண்ணியடிக்கலாம்” என்று பிறகு சேது வந்து சமாதானம் செய்ய “நம்மளயே நம்பி இருக்காங்கடா” என்று தாஸ் கலங்கலான குரலில் சொல்ல நட்பிற்குள் மீண்டும் இணக்கம் உருவாகும். 

நட்பின் உரிமையில் வெளிப்படும் மிகையான கோபம்

இந்தப் படத்தில் ஸ்ரீமனின் நடிப்பு உச்சத்தில் வெளிப்படும் காட்சி ஒன்றுண்டு. பாலியல் தொழில் நடத்தும் அடியாட்களால் மூர்க்கமாகத் தாக்கப்படும் சேதுவிற்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு விடும். ஆங்கில மருத்துவ முறையைத் தொடர்ந்து முயற்சி செய்து பார்த்தாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், ‘பாரம்பரிய மருத்துவத்தை முயற்சி செய்யலாம்’ என்று மருத்துவர் பரிந்துரைப்பார். “ஏர்வாடி, குணசீலம் போன்ற சிகிச்சை மையத்திற்கு இட்டுச் செல்லலாம்” என்று அவர் சொல்ல, கோபத்துடன் எழுந்து வெளியே வந்து விடுவான் தாஸ்.

சேது திரைப்படம் - ஸ்ரீமன், சிவக்குமார்
சேது திரைப்படம் - ஸ்ரீமன், சிவக்குமார்

சேதுவின் அண்ணன் வெளியே வர, டென்ஷனுடன் பிடித்துக் கொண்டிருக்கும் சிகரெட்டை அவசரமாக கீழே போட்டு விட்டு “என்ன பண்றதா.. உத்தேசம்?” என்று விரோதமான குரலில் தாஸ் கேட்பான். “இல்லப்பா.. அதை முயற்சி பண்ணலாம்” என்று அண்ணன் சொல்ல “போய்யாங்க.. கேன… உன்னால முடியலைன்னா பொத்திட்டு போ..நாங்க பார்த்துக்கறோம். அவன் என்னமோ சொல்றான்னு இவரு மண்டைய மண்டைய ஆட்டிட்டு வராரு.. நல்லா வந்துடப் போகுது வாயில.. நீயெல்லாம் படிச்சு..” என்று நீதிபதி பணியில் இருப்பவரையே எடுத்தெறிந்து பேசும் அளவிற்கு தாஸின் மனம் கொதித்துக் கிடக்கும். 

தாஸை கன்னத்தில் அறையும் அண்ணி “யார் கிட்ட என்ன பேச்சு பேசற..” என்று ஆத்திரப்பட, அவரைச் சமாதானப்படுத்தும் அண்ணன் “அப்படி என்ன தப்பா பேசிட்டான்.. அவனுக்கு அவன் பிரெண்டு முக்கியம். போ” என்று சொல்லி விட்டு “ஒரு நாப்பது நாளுப்பா. முயற்சி பண்ணி பார்ப்போம்” என்று அண்ணன் சொன்னவுடன் தழுதழுத்த குரலில் “அது இல்லேண்ணே..” என்று தாஸ் கலங்க “எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா.. நாங்க அவனை சரியா வளர்த்தமோ.. இல்லயோ.. ஆனா உன்னை மாதிரி பிரெண்ட்ஸ் அவனுக்கு அமைஞ்சிருக்காங்க” என்று தாஸின் தலையை கோதி அண்ணன் பேசும் காட்சியில் நெகிழாதவர்கள் இருக்க முடியாது. இந்தக் காட்சியில் ஸ்ரீமனின் நடிப்பு அத்தனை அற்புதமாக இருக்கும். 

சேது திரைப்படம் - ஸ்ரீமன், சிவக்குமார்
சேது திரைப்படம் - ஸ்ரீமன், சிவக்குமார்

“அவன் வருவான்டா”  - கண்கலங்க வைக்கும் தாஸ்

இதற்குப் பிறகு வருகிற காட்சியும் உணர்ச்சிகரமானது. சேதுவிற்கு குணமாகும் என்கிற நம்பிக்கையை ஏறத்தாழ அனைவரும் இழந்து விட தாஸ் மட்டும் அதை இழக்க மாட்டான். மதுவருந்தும் போது, கூட இருக்கும் நண்பர்கள் கண்கலங்க, ஒருவனை கன்னத்தில் அறைந்து “அவன் வருவான்டா..” என்கிற ஒரே வசனத்தை மூன்று விதமான வசன உச்சரிப்பில் தாஸ் சொல்லும் காட்சி அருமையானது. 

கிளைமாக்ஸ் காட்சி. சேது சற்று தெளிவாகி அபிதாவைத் தேடி வர, அதற்குள் என்னென்னமோ நடந்திருக்க, மீண்டும் மனம் பேதலித்து அவன் திரும்பவும் மருத்துவமனை வாகனத்தை நோக்கி நகர, சேதுவைத் தேடி வரும் தாஸ், பைக்கை அப்படியே தரையில் சரித்து ஓடி வந்து சேதுவைத் தொட்டு உலுக்கி, கன்னத்தில் அறைந்து, அண்ணனிடம் சென்று முறையிடும் காட்சியில் நெஞ்சம் நெகிழ்ந்து விடும். 

சேது திரைப்படம் - ஸ்ரீமன், விக்ரம்
சேது திரைப்படம் - ஸ்ரீமன், விக்ரம்

அதேதான். ‘இப்படியொரு  உண்மையான, பிரியமான, அன்பான நண்பன் நமக்கு கிடைக்க மாட்டானா?’ என்று படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஏங்க வைக்கும் அளவிற்கு ‘தாஸ் என்கிற பாத்திரத்தில் அருமையாக நடித்து அதை மறக்க முடியாதபடிக்கு ஆக்கி விட்டார் ஸ்ரீமன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com