மறக்க முடியாத துணைக்கதாபாத்திரங்கள் | மருமகளிடம் வேலைக்காரியாக நடிக்கும் மாமியாராக ‘அவர்கள்’ லீலாவதி

36 -வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘அவர்கள்’ திரைப்படத்தில் லீலாவதி ஏற்று நடித்திருந்த லீலாவதி கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘அவர்கள்’ லீலாவதி
‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘அவர்கள்’ லீலாவதிபுதிய தலைமுறை

‘மறக்க முடியாத துணைப் பாத்திரங்கள்’ என்கிற இந்தக் கட்டுரைத் தொடருக்கு பொருத்தமான ஒரு தமிழ் சினிமா இயக்குநரை நினைவுகூர வேண்டும் என்றால் அது கே.பாலசந்தர் அவர்களை மட்டுமே குறிப்பிட முடியும்.  

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

ஏனெனில், கணிசமான அளவிற்கு துணைப் பாத்திரங்களை வைத்து திரைக்கதை எழுதும் வழக்கமுள்ளவர் அவர்.  பாலசந்தரின் திரைப்படங்களில் எத்தனையோ துணைப் பாத்திரங்கள் இருந்தாலும் ஏறத்தாழ அனைத்துப் பாத்திரங்களையும் மறக்க முடியாததாக ஆக்கி விடுவார்.

ஒவ்வொரு கேரக்டரும் பார்வையாளனின் மனதில் அழுத்தமாக நிற்கும்படி பிரத்யேகமாக அவை வடிவமைக்கப்பட்டிருக்கும்.  கொஞ்ச நேரமே வந்தாலும் நினைவில் நிற்கும்படியாக காட்சிகள் வலிமையாக எழுதப்படும். இந்த நோக்கில் பாலசந்தர் ஒரு மாஸ்டர்.

அவர் இயக்கிய திரைப்படங்களில் இருந்து ஏராளமான துணைக் கதாபாத்திரங்களை நினைவு கூர முடியும் என்றால் அதிலிருந்து மிக மிக சுவாரசியமான, உணர்ச்சிகரமான ஒரு கேரக்டரை இந்த வாரம் பார்க்கப் போகிறோம். 

வேலைக்காரியாக நடிக்கும் மாமியார்

1977-ல் வெளியானது ‘அவர்கள்’ என்கிற திரைப்படம். ‘அய்யே.. பழைய பிளாக் அண்ட் வொயிட் படமா?’ என்று முகம் சுளிக்காமல் எப்படியாவது தேடிப் பாருங்கள். ஒரு முக்கோண காதலின் சிக்கலை தனது அபாரமான திரைக்கதையால் பாலசந்தர் விவரித்திருக்கும் திறமைக்கு சமகால இயக்குநர்கள் உட்பட பலரும் அவரின் முன்னால் தாக்குப் பிடிக்க முடியாது.

ஹைவோல்டேஜ் டிராமா காட்சிகள், சாட்டையால் சொடுக்கியது போல் சுளீர் வசனங்கள். அட்டகாசமான திருப்பங்கள் என்று இந்தப் படமே ஒரு ஸ்பெஷலானதுதான். 

இதில் பிரதான பாத்திரங்களில் சுஜாதா, ரவிகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய நால்வரும் கலக்கியிருப்பார்கள். ஆனால் நாம் பார்க்கப் போவது, திரைக்கதையின் ஓரமாக நகர்ந்து சென்றாலும் வலிமையாக எழுதப்பட்டிருக்கும் ஒரு கேரக்டரைப் பற்றி.

‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘அவர்கள்’ லீலாவதி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்| “சார்..மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சு”- VIP ‘அழகு சுந்தரம்’ விவேக்!

நாடகம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் என்று எதுவாக இருந்தாலும் மாமியார் பாத்திரம் என்றால் அதை எதிர்மறையாகத்தான் சித்திரிப்பதுதான் வழக்கம். உலகத்தில் ‘நல்ல மாமியார்’ என்றொருவர் இருக்கவே முடியாது என்பது தேய்வழக்காகவே பொதுவாக  வெளிப்படும். ஆனால்

இந்தப் படத்தில் பாலசந்தர் உருவாக்கியிருப்பது ஒரு ‘நேர்மறையான’ மாமியார். அதிலும் இப்படியொரு தியாக மனப்பான்மையுள்ள பாத்திரம் இருக்குமா என்று பிரமிக்கும் அளவிற்கு உணர்ச்சிகரமான பாத்திரம்.

இந்தப் பாத்திரத்தை பாலசந்தர் கையாண்டிருக்கும் விதம் அத்தனை அற்புதமாக இருக்கிறது. 

பாவப்பட்ட மருமகளுக்கு ஆதரவாக நிற்கும் நேர்மை

லீலாவதி என்கிற இந்த மாமியார் பாத்திரத்தின் என்ட்ரி, படம் ஆரம்பித்து ஐம்பது நிமிடங்களுக்குப் பின் நிகழ்கிறது.

அதற்கு முன்பாக கதையின் பின்னணியை சுருக்கமாக அறிந்து கொண்டால்தான், இந்த மாமியாரைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடியும். 

அனு, தன்னுடைய சைக்கோ கணவனின் கொடுமை தாங்காமல் விவாகரத்து பெற்று பம்பாயில் இருந்து சென்னைக்கு பணிமாற்றம் வாங்கிக் கொண்டு வருகிறாள். கையில் இரண்டு வயது பிள்ளை. அலுவலகமும் சென்றாக வேண்டும். இது தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் அவளைத் துரத்துகின்றன. தன்னம்பிக்கை கொண்ட அனு அவற்றைச் சமாளிக்க ஆரம்பிக்கிறாள். 

ஒரு நாள் அனு தன்னுடைய மனப்பாரத்தை இறக்கி வைக்க, நண்பரின் பரிந்துரைப்படி ஒரு சாமியாரிடம் ஆசி வாங்கச் செல்கிறாள். அங்கு அவள் தன்னுடைய பின்னணியைப் பற்றி சொல்லி கண்கலங்கும் போது வரிசையில் நின்றிருக்கும் இன்னொரு பெண்ணிற்கு திடுக்கிடுகிறது. ‘இவள் ஒருவேளை அவளாக இருப்பாளோ?!’ அனுவின் மாமியார் லீலாவதிதான் அது. அவள் தன்னுடைய மருமகளைப் பார்த்ததில்லை. மகனுடைய நடத்தையின் லட்சணம் அப்படி.

அனு தன்னுடைய மருமகளாக இருப்பாளோ என்று லீலாவிற்கு சந்தேகம் வருவதை ஒரு அழகான பிளாஷ்பேக் காட்சி வழியாக விவரித்திருப்பார் பாலசந்தர். அது என்னவென்று பார்ப்போம்.

‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘அவர்கள்’ லீலாவதி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 33 | சூது கவ்வும் | ‘ஞானோதயம்’ பெறும் அமைச்சராக எம்.எஸ்.பாஸ்கர்

பாலசந்தரின் திரைக்கதை மேதைமை

நீண்ட காலமாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத தன்னுடைய மகன், சம்மதம் தெரிவித்து பம்பாயில் இருந்து கடிதம் போட்டிருப்பதை தன்னுடைய வீட்டுப் பணியாளிடம் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பார் லீலாவதி. அதன் கூடவே இந்தியில் எழுதப்பட்டிருந்த ஒரு கடிதமும் இருக்கும். ஏதாவது முக்கியமான கடிதம் தவறுதலாக வந்து சேர்ந்து வந்திருக்குமோ என்று குழம்புவார். ஆனால் இந்தியில் எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தை படித்துச் சொல்ல யாரும் கிடைக்க மாட்டார்கள். (மொழி அரசியல்?!)

கடைசியில் அந்தக் கடிதத்தை யார் படித்துச் சொல்வார்கள் தெரியுமா? இங்குதான் பாலசந்தரின் அசாதாரணமான குறும்பு வெளிப்படுகிறது. லீலாவின் மகனுக்கு வரன் பார்ப்பதற்காக பெண் வீட்டார் வந்திருப்பார்கள்.

அந்தப் பெண்ணுக்கு இந்தி வாசிக்கத் தெரியும் என்பதை அறிந்து கொள்ளும் லீலா, “இந்த லெட்டரை வெச்சுட்டு ரெண்டு நாளா அல்லாடறேன். படிச்சுச் சொல்லும்மா” என்று கேட்க, அப்போதுதான் மகன் செய்திருக்கும் அழிச்சாட்டியம் அம்பலமாகும். லீலாவின் மகனான ராமநாதன், அனு என்கிற பெண்ணை பம்பாயில் திருமணம் செய்து கொண்டு டார்ச்சர் செய்து விட்டு பிறகு விவாகரத்து செய்திருப்பதும், அனுவிற்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வரும். 

ராமநாதன் அனுப்பிய திருமண சம்மதக் கடிதத்தோடு, இந்திக் கடிதத்தையும் இணைத்து அனுப்பியிருப்பவர், அந்த வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர். வரன் பார்க்க வந்த பெண்ணின் வாயாலேயே இந்தத் தகவல் வெளியாகும் டிவிஸ்ட்டை சுவாரசியமாக வடிவமைத்திருப்பார் இயக்குநர்.

என்றாலும் கூட “அதான் டிவோர்ஸ் ஆயிடுச்சே.. எங்க பொண்ணை திருமணத்திற்கு தர சம்மதம்” என்று பெண் வீட்டார் சொல்ல, இங்குதான் லீலாவதி என்கிற கேரக்டரின் அறம் வெளிப்படும். “தப்பு நடந்துடக் கூடாதுன்னு எங்கோ இருக்கற வேலைக்காரன் இந்த லெட்டரை எழுதி அனுப்பிச்சிருக்கான். அவனுக்கு இருக்கற நேர்மை கூட எனக்கில்லைன்னா எப்படி.. உனக்கு வேற நல்ல மாப்பிள்ளை கிடைப்பாம்மா” என்று அவர்களை வழியனுப்பி வைத்து விடுவார்.

‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘அவர்கள்’ லீலாவதி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 30 | அஞ்சாதே ‘தயா’ | வில்லன்தனத்தை காட்ட வசனம் எதற்கு?

தியாகத்தின் உச்சம் - லீலாவதி

இதற்குப் பிறகு லீலாவதி செய்யும் ஒரு காரியம் இருக்கிறதே?! உலகத்தில் எந்தவொரு மாமியாரும் அதுவரை செய்திராத விஷயம் அது. ஆம், அதுவொரு சினிமேட்டிக் டிராமாதான் என்றாலும் மனச்சாட்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒருவர், தன்னுடைய தியாகத்தை எத்தனை தூரத்திற்கு உயர்த்திச் செல்வார் என்பதற்கான உதாரணம்.

அனு கைப்பிள்ளையுடன் அவஸ்தைப்படுகிறாள் என்பதை அறிந்து கொள்ளும் லீலா, ஒரு நடுத்தர வயது வேலைக்காரப் பெண்மணி மாதிரியான தோரணையுடன் அனுவின் வீட்டிற்கு செல்வார். அனு களைப்புடன் வீட்டினுள் உள்ளே நுழைந்தவுடன் வாசலில் சற்று நேரம் நின்று விட்டு பிறகு உரிமையுடன் உள்ளே வருவார். அவர் தனது ‘அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை’ கேட்டு வாங்கும் காட்சி அத்தனை சுவாரசியமாக இருக்கும்.

“என்னம்மா.. வீடெல்லாம் குப்பையா இருக்கே..” என்று கேட்டு சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார். தூளியில் அசுத்தம் செய்து விடும் குழந்தையை ஓடிச் சென்று சுத்தப்படுத்துவார். இவரின் நடவடிக்கைகளை சந்தேகத்துடன் பார்க்கும் அனு, ஒரு கட்டத்தி்ல் தடுத்து நிறுத்தி “யார் நீ?” என்று கறாரான குரலில் கேட்க “உனக்கு வேலை, குழந்தை ரெண்டும் இருக்கு. எனக்கு ரெண்டுமே இல்ல. வேலை கொடு கண்ணு” என்று கெஞ்சலான உரிமையுடன் கேட்பார். இதன் பிறகு சம்பளம், காஃபி போன்றவை தொடர்பான உரையாடல்கள் சுவாரசியமாக நகரும். 

எதிர் வீட்டிலிருந்து ஓர் இளைஞன் இவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க “யாருய்யா.. இங்கயே பார்க்கற” என்று அவனை அதட்டுவாள் லீலா. அந்த இளைஞன், அனுவின் முன்னாள் காதலன் பரணி. எனவே சங்கடமான வெட்கத்துடன் அனு அதைத் தடுப்பாள்.

அப்போது லீலா பேசும் வசனம் அற்புதமாக இருக்கும். “வீட்டுக்குள்ள பார்வை படறவங்களைப் பார்த்து குரைக்க வேண்டியது நாயோட கடமை. அவங்க வேண்டியவங்களா, வேண்டாதவாங்களான்னு முடிவு செய்ய வேண்டியது வீட்டுக்காரங்க கடமை. வேலை கொடு கண்ணு” என்று பேசும் வசனம் சுவாரசியமானது.

‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘அவர்கள்’ லீலாவதி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கோபத்தின் வெப்பமும் அன்பின் குளிர்ச்சியும் ஆய்த எழுத்து இன்பா

லீலாவதி என்கிற பெயரில் நடித்த கன்னட நடிகை

“ம்.. சினிமா ஸ்டார் பேர் மாதிரி ஸ்டைலா இருக்கே?” என்று வேலைக்காரப் பெண்மணியின் பெயரை விசாரித்து கிண்டலடிப்பார் அனு. ஆம், லீலாவதி என்பது இந்த கேரக்டரின் பெயர் மட்டுமல்ல, அதில் நடித்தவரின் உண்மையான பெயரும் அதுதான். கன்னடத் திரைப்படத்துறையில் பிரபலமான நடிகை லீலாவதி.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று  இதர தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்தாலும் கன்னடத்தில் மட்டும் நானூறுக்கும் மேலான திரைப்படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளை வென்றுள்ள திறமையான நடிகை.

ஓகே.. நாம் படத்திற்கு திரும்புவோம். விவாகரத்து ஆனாலும் அனுவின் கழுத்தில் தாலி இன்னமும் தொங்குவதைப் பார்க்கும் லீலா, வேலைக்காரி என்கிற எல்லைக்குள் ஜாக்கிரதையாக அதைப் பற்றி விசாரிக்கும் காட்சியும் அதற்கு அனு பதில் சொல்கிற காட்சியும் சுவாரசியமானது.

“நீ நல்லா வாழணும்ன்னு நெனக்கறியா. எல்லோருக்கும் நல்லவளா வாழணும்னு நெனக்கிறயா?” என்று உரிமையான கோபத்துடன் லீலா பேசும் வசனத்தில் அத்தனை கூர்மை இருக்கும். 

‘அவர்கள்’ படத்தின் மெயின் டிராக் படு சுவாரசியம் என்றால், அனு - லீலாவிற்கு இடையில் நிகழும் இந்த சைடு டிராக்கும் அதற்கு நிகரான சுவாரசியத்தைக் கொண்டது. அனுவின் வீட்டிற்கு எதிரே வசிக்கும் பரணி என்கிற இளைஞன், தன்னுடைய மருமகளின் முன்னாள் காதலன் என்பதை அறிந்து கொள்ளும் லீலா, அவர்கள் இருவரையும் இணைத்து வைக்கக்கூடிய நாடகங்களை ஆடுவது சுவாரசியமான காட்சிகள். அனுவிற்கும் பரணிக்கும் இடையில் நிகழும் தயக்கமான சதுரங்க ஆட்டம் ஒருவழியாக நிறைவுற்று திருமணத்தை நோக்கி நகரும். 

தவறு செய்வது மகனாகவே இருந்தாலும் அறம் பிறழாத தாய்

தனது திரைப்படங்களின் நாயகிகளுக்கு மகிழ்ச்சி கிடைப்பதை பாலசந்தர் பொதுவாக விரும்ப மாட்டார். அவர்கள் அவதிப்பட்டுக் கொண்டே கிடந்தால்தான் மேலும் சுவாரசியமான டிராமாக்கள் நிகழும் என்கிற கதாசிரியரின் நோக்கம்தான் அது.

இவர்களது திருமணம் கூடிவரும் நேரத்தில் அனுவின் முன்னாள் கணவன் ராமநாதனும் பணி நிமித்தமாக சென்னைக்கு மாற்றலாகி வருவான். அனுவிற்கு அவன்தான் உயரதிகாரி. “பாம்பு கண்ல பட்டிருக்கு கண்ணு. இனிமேதான் நீ ஜாக்கிரதையா இருக்கணும்” என்று எச்சரிப்பாள் லீலா. ராமநாதன் தன்னுடைய மகனாகவே இருந்தாலும் அந்த அயோக்கியனின் கண், அனுவின் மீது படக்கூடாது என்று கவலைப்படுவாள்.

தன்னுடைய அம்மா எங்கேயோ தினமும் சென்று விட்டு திரும்புவதை சந்தேகப்பட்டு ராமநாதன் ஆத்திரத்துடன்  விசாரிக்கும் காட்சி, ராமநாதனின் பர்ஸை வேலைக்காரி லீலா திருடி விட்டாளோ என்று சந்தேகப்பட்டு அனு உரையாடும் காட்சி, மருமகளிடமே வேலைக்காரியாக வேலை செய்வதை மகன் பார்த்து விடும் காட்சி போன்ற சுவாரசியமான டிராமாக்கள் நிகழும். 

ஒரு கட்டத்தில் தன் வீட்டில் வேலைக்காரியாக வேலை செய்து கொண்டிருப்பவர், தன் மாமியார் என்பதை அறிந்து அனு அதிர்ச்சியடைவார்.

லீலாவை எப்படியெல்லாம் வேலை வாங்கியிருக்கிறோம் என்பதை குற்றவுணர்ச்சியுடன் நினைவுகூர்வார். பிறகு வேலைக்காரியை, அதாவது தன் மாமியாரை நோக்கி அனு பேசும் வசனங்கள் இருக்கிறதே?! அற்புதமான காட்சி அது.

‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘அவர்கள்’ லீலாவதி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 19 |கொடுமைக்கார மனைவி ‘பொன்னாத்தா’வாக வடிவுக்கரசி!

ஒருமையில் பேசி விட்டு பிறகு திருத்தி பன்மையில் மரியாதையாக மாற்றி “ஏன் இப்படிப் பண்ணே ஆயா..” என்று கேட்டு விட்டு “ஏன் இப்படிப் பண்ணீங்க.. அத்தே?” என்று காலில் விழுந்து வணங்கும் காட்சியை நெகிழாமல் பார்க்கவே முடியாது. இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழும் காட்சியில் நம்முடைய கண்கள் கசிவதையும் தவிர்க்க முடியாது. 

இத்துடன் இந்த டிராமா முடியாது. பிறகு கிளைமாக்ஸில் நிகழும் இன்னொரு டிவிஸ்டையும் இணைத்துதான் ‘லீலாவதி’ என்கிற கேரக்டரின் முழுமையான பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும். அயோக்கியனான தன் மகன் செய்யும் பாவத்திற்கு பரிகாரம் தேடுவதற்காக, தன் அடையாளத்தை மறைத்து மருமகளிடம் வேலைக்காரியாக பணி செய்யும் இந்த கேரக்டர் நாடகத்தனமாக இருந்தாலும் உன்னதமானது.

செல்வந்தப் பின்னணியைக் கொண்டவராக இருக்கும் லீலாவதி, பிறகு வேலைக்காரியாக ஆனவுடன் தன் உடல்மொழியை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளும் பாணி சுவாரசியமானது. தனது அபாரமான நடிப்பை, மாமியார் மற்றும் வேலைக்காரி ஆகிய இரு கேரக்டர்களின்  மூலம் வெளிப்படுத்தி அதை மறக்க முடியாத அனுபவமாக ஆக்கியிருப்பார் லீலாவதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com