மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 24 | கொலைக்கருவிகளை உற்பத்தி செய்யும் அரசியல்வாதி சமுத்திரக்கனி

24-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருந்த கனகு கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - சுப்ரமணியபுரம் சமுத்திரக்கனி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - சுப்ரமணியபுரம் சமுத்திரக்கனி Youtube

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

அரசியல்வாதிகளுக்குள் நிகழும் அதிகார வெறி  மற்றும் போட்டி காரணமாக கொலைகள் நிகழ்கின்றன. சமூகத்தின் அடித்தட்டில் உள்ள இளைஞர்கள் இந்த வன்முறைக் கண்ணியில் மிக நுட்பமாக சிக்க வைக்கப்படுகிறார்கள். ‘உன்னை அப்படியே விட்டுருவமா.. பார்த்து மேல தூக்கிட்டு வந்துருவோம்’ என்கிற ஆசை அவர்களுக்கு காட்டப்பட்டு, காரியம் முடிந்ததும் அந்த இளைஞர்கள் பலிகடாக்களாக கைவிடப்படுகிறார்கள். புலி வாலை பிடித்த கதையாக தொடர் வன்முறையில் சிக்கி தங்களின் வாழ்க்கையையே இழக்கிறார்கள்.

சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி
சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி

அரசியல் கொலைகளின் பின்னணியில் இருக்கும் கூலிப்படை இளைஞர்களின் பரிதாபமான கோணம் இது. ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் மையம் இதுதான். தங்களை நம்பியிருக்கும் இளைஞர்களை அப்படி நுட்பமாக சிக்க வைக்கும் நயவஞ்சமான அரசியல்வாதியாக ‘கனகு’ என்னும் பாத்திரத்தில் நடித்திருந்தார் சமுத்திரக்கனி. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - சுப்ரமணியபுரம் சமுத்திரக்கனி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 23 | உடலசைவிலேயே அசாத்திய நடிப்பை கொடுத்த ‘முதல்வன்’ பட ரகுவரன்

நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி

நடிப்பில் ஆர்வம் கொண்ட சமுத்திரக்கனி, இயக்குநர் கே.விஜயனிடம் உதவி இயக்குநராக சினிமாத்துறையில் நுழைந்து பிறகு பாலசந்தரின் பார்வையில் பட்டு ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் உதவியாளரானார்.

அங்கு தொழில் கற்று தொலைக்காட்சி தொடர்களை இயக்கும் அளவிற்கு முன்னேறி பிறகு வெள்ளித் திரையிலும் இயக்குநரானார். வெற்றிப்பட இயக்குநர் என்கிற அங்கீகாரம் சற்று தாமதமாக கிடைத்தாலும், ‘நடிகர்’ என்னும் அடையாளம் அவரிடம் மிக வேகமாக வந்து ஒட்டிக் கொண்டது. 

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும், சமுத்திரக்கனி நடித்ததில் முதன்முறையில் மனதில் நிற்கக்கூடிய பாத்திரமாக அமைந்தது, சுப்ரமணியபுரம் படத்தில் வரும் கனகுதான். பிறகு ‘விசாரணை’ திரைப்படத்தின் மூலம் சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது வாங்குமளவிற்கு முன்னேறி விட்டார். 

தேசிய விருது பெற்ற நடிகர் சமுத்திரக்கனி
தேசிய விருது பெற்ற நடிகர் சமுத்திரக்கனி

சுப்ரமணியபுரம்  திரைப்படத்தின் பாத்திரங்களையும் காட்சிகளையும் இயக்குநர் சசிகுமார் மிக நுட்பமாக உருவாக்கியிருந்தார். இதில் ‘கனகு’ பாத்திரம் மிக நயவஞ்சகமானது. குடும்ப கௌரவம், பெருமை, அண்ணனின் அதிகாரவெறிக்கு துணை போதல் போன்ற விஷயங்களில் ஈடுபடுவதுதான் கனகுவின் வேலை. 

அந்தக் குடும்பத்தில் மூன்று சகோதரர்கள். முதலாமவர் அரசு உத்தியோகத்தில் இருப்பதால் அரசியல், அடிதடி போன்றவற்றில் வெளிப்படையாக ஆர்வம் காட்ட மாட்டார். அதே சமயத்தில் தனக்கு எதிரே நடக்கும் தீமைகளையும் கண்டு கொள்ளாமல் கள்ள மௌனமாக இருப்பார்.

சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி
சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி

இரண்டாமவரான சோமு முன்னாள் கவுன்சிலர். இழந்து கொண்டிருக்கும் பெருமையையும் அதிகாரத்தையும் எப்படியாவது மீட்க வேண்டுமென்று தவியாகத் தவிக்கிறவர். மூன்றாமவர்தான் கனகு. அண்ணனை அதிகாரத்தில் மீண்டும் அமர வைப்பதற்காக பல சூழ்ச்சிகளைச் செய்கிறவர்.

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - சுப்ரமணியபுரம் சமுத்திரக்கனி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 21 | குருமார்களின் ரகசிய வன்மத்தின் விதை, ஆடுகளம் பேட்டைக்காரன்

பரமன் - அழகர் - துளசி - அரசியல் பலிகடாக்கள்

இவர்களின் வீட்டு எதிரில் ‘சித்தன் சவுண்ட் சர்வீஸ்’ கம்பெனியின் வாசலில் பலியாக கிடக்கும் இளைஞர்கள்தான் அழகர் மற்றும் பரமன். கனகுவின் மூலமாக தாங்களும் ‘ஒரு ஆள்’ ஆகி விடலாமென்கிற எதிர்பார்ப்பில் இருப்பவர்கள். சில்லறைத் தகராறுகளில் ஈடுபட்டு அவ்வப்போது காவல் நிலைய லாக்கப்பை தரிசனம் செய்து விட்டு திரும்பி வருவார்கள். அண்ணனின் செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறை அதிகாரிகளிடம் சவடாலாகப் பேசி இவர்களை வெளியே கொண்டு வருபவர் கனகு. 

சுப்ரமணியபுரம் படம்
சுப்ரமணியபுரம் படம்

பரமனும் அழகனும் எவரிடமாவது தகராறு செய்யும் போது காவல் துறைக்கு தகவல் தருபவர் யார் தெரியுமா? அதுவும் கனகுவேதான். இதுவொரு தந்திரம். ஒருவரை பிரச்சினையில் சிக்க வைத்து விட்டு, பிறகு தாமே அவரை மீட்டுக் கொண்டு வந்தால் அவர்கள் தங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்கிற கணக்கு. இந்த ஆட்டத்தை திறம்பட ஆடுகிறார் கனகு. இது அந்த அப்பாவி இளைஞர்களுக்குத் தெரியவில்லை. 

‘பரமனையும் அழகரையும் போலீஸ்ல பிடிச்சிட்டு போயிட்டாங்களாம்’ என்கிற வசனத்தோடுதான் படத்தின் ஆரம்பக்காட்சி வருகிறது. வழக்கம் போல் அவர்களை காவல் நிலையத்திலிருந்து மீட்டுக் கொண்டு வருகிறார் கனகு.

சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி
சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி

“எவனோ ஒருத்தன் நம்மள ரொம்ப நாளா போட்டுக் கொடுத்துட்டு இருக்கான். யாருன்னு மட்டும் தெரியட்டும்” என்று பரமனிடம் உறுமுகிறான் அழகர். அதைக் கண்டு கொள்ளாதது போல் வரும் கனகு “விடு அழகரு. அதுக்குத்தானே நாங்க இருக்கோம்” என்று கள்ளக் கரிசனத்துடன் சொன்னபடி தனது ஸ்கூட்டரில் ஏறி செல்கிறார். 

கைவிட முடியாத அதிகாரத்தின்  போதை

கோயில் திருவிழா கமிட்டியில் தன்னுடைய பெயர் வேண்டுமென்றே விடுபட்டிருக்கிற சோகத்திலும் ஆத்திரத்திலும் இருக்கிறார் அரசியல்வாதி சோமு. “யாரு இந்த மொக்கச்சாமி.. நாம பார்த்து வெச்சவன். இப்பச் சொல்லுங்க. அவன் கைய காலை உடைச்சுடலாம்” என்று கனகு சொல்ல “அடுத்தடுத்து மேல போற வழியைப் பாப்பியா.. உள்ளூர் விஷயமெல்லாம் தேவையா?” என்று ‘சூதானமாக’ ஆலோசனை சொல்கிறார் மூத்த அண்ணன். 

சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி
சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி

மீண்டும் ஒரு தெருச்சண்டை. வழக்கம் போல் அநாமதேய பெயரில் போலீஸிடம் போட்டுக் கொடுக்கிறார் கனகு. அழகரையும் பரமனையும் காவல்துறை அள்ளிக் கொண்டு செல்கிறது. கனகுவே மீண்டும் ஆபத்பாந்தவன் வடிவத்தில் வந்து “வக்கீலிடம் எல்லாம் பேசிட்டம்மா.. அவரு பார்த்துக்குவாரு. வக்கீலுக்கு கொடுக்க ஃபீஸ் இருக்கில்ல” என்று அழகரின் தாயாரிடம் அன்பாக விசாரித்து விட்டுச் செல்கிறார். இதனால் பரமன் மற்றும் அழகரின் விசுவாச உணர்வு கூடுகிறது. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - சுப்ரமணியபுரம் சமுத்திரக்கனி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 20 |நடிப்பின் இலக்கணம் - காளையனாக வாழ்ந்த குரு சோமசுந்தரம்!

மாவட்டத் தலைவர்’ பதவி தனக்குத்தான் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பிலும் நிராசையிலும் இருக்கிறார் சோமு. நடப்பில் தலைவராக இருக்கும் பழனிச்சாமிக்கே தலைமை மீண்டும் வாய்ப்பு தரலாம் என்கிற பேச்சும் கூடவே அடிபடுகிறது. “அதெப்படி. எல்லாத்தையும் அந்தாளுக்கே தூக்கித் தருவாங்களா.. . இந்த முறை நமக்குத்தான்..” என்று அடித்துச் சொல்கிறார் கனகு. ஆனால் பழனிச்சாமிக்குத்தான் மீண்டும் பதவி கிடைக்கிறது. சோமுவின் மனைவியே இது பற்றி அவமானகரமாக பேசி சோமுவிடம் அடி வாங்கி அழுகிறார். “பதவி இல்லைன்னா.. வீட்ல பொம்பளைங்க கூட மதிக்க மாட்டேங்குதுங்க” என்று மனம் புழுங்குகிறார் சோமு. 

சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி
சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி

அண்ணன் படும் துயரத்தைப் பார்த்து கனகுவிற்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது. பழனிச்சாமியை அகற்றினால்தான் தன்னுடைய அண்ணனுக்கு வழி கிடைக்கும் என்று யோசிக்கிறார். எனவே அதற்கேற்ற ஆயுதங்களை தயார் செய்கிறார். அந்த ஆயுதங்கள் வேறு யாருமல்ல. பரமனும் அழகனும்தான். “அண்ணன் வீட்டுக்கே ரெண்டு நாளா போகலையாம்” என்று சொல்லியபடி இருவரையும் ஹோட்டலுக்கு அழைத்து வருகிறான் காசி. அங்கு கனகு மதுவருந்தியபடி தலையைத் தொங்கப் போட்டு அமர்ந்திருக்கிறார். 

கனகு விரிக்கும் நயவஞ்சகமான வலை

“இப்படி உங்களை பார்த்ததே இல்லையே. என்னாச்சுண்ணே?” என்று அழகர் கவலையுடன் கேட்க “உங்க கிட்ட சொல்றதுல என்ன இருக்கு. நாம தாயா புள்ளயா பழகிட்டோம்” என்று சென்டிமென்ட்டை தூவி வலையை விரிக்க ஆரம்பிக்கிறார் கனகு. “நாம மேல வந்து அப்படியே உங்களுக்கும் ஏதாச்சும் செஞ்சு தூக்கி விட்ரலாம்ன்னு பார்த்தா முடியாமப் போச்சே.. போஸ்டிங் கிடைக்கலையே?” என்று கனகு பாவனையாக அனத்த “இப்ப என்னண்ணே.. செய்யணும்?” என்று அழகர் துடிக்க, பரமன் அவசரப்படாமல் அமைதியாக நிற்கிறான்.

சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி
சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி

“பழனிச்சாமி இல்லாம பண்றதுதான் இதுக்கு வழி” என்கிற செய்தியை மறைமுகமாக அவர்களின் மூளைக்குள் திணிக்கும் கனகு “சரிண்ணே.. நாங்க பார்த்துக்கறோம்” என்று அவர்களே சொல்லும்படியாக, அவர்களை கொலைக்கருவிகளாக மாற்றுகிறார். இந்தக் காட்சியில் சமுத்திரக்கனியின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. 

எண்ணைய் வைத்து படிய வாரிய குருவிக்கூடு சிகையலங்காரம், கழுத்தில் மைனர் ஜெயின், பெரிய காலர் வைத்த பூப்போட்ட சட்டை என்று கனகுவின் புறத்தோற்றம் அவரது நடிப்பிற்கும் எண்பதுகளின் காலக்கட்ட பின்னணிக்கும் பொருத்தமாக இருக்கிறது. 

சம்பவ நாள். நள்ளிரவு. வீட்டு வாசலில் இருக்கும் அழகரும் பரமனும் என்ன செய்கிறார்கள் என்று மாடியில் இருந்து எட்டிப் பார்க்கிறார் கனகு. மேலே வானத்தில் நிலா மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. சிறிது நேரம் கழித்து வந்து மீண்டும் எட்டிப் பார்க்கிறார். அவர்கள் சென்று விட்டிருக்கிறார்கள். இதை அற்புதமான ஒரே ஷாட்டில் படமாக்கியிருக்கிறார் சசிகுமார். 

துரோகமும் தொடர்ந்து நடக்கும் கொலைகளும்

பழனிச்சாமி கொல்லப்பட்டதால் சோமுவிற்கு அந்தப் பதிவு கிடைக்கிறது. கனகுவின் நோக்கம் நிறைவேறி விட்டது. ஆனால் வாக்குத் தந்தபடி பரமனையும் அழகரையும் கனகு ஜாமீனில் எடுப்பதில்லை. கை விட்டு விடுகிறார். எனவே அவர்கள் தானாகவே சரண் அடைந்து சிறையில் இருக்கிறார்கள். கனகு தங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

சுப்ரமணியபுரம் படம்
சுப்ரமணியபுரம் படம்

இன்னொருவர் செய்யும் உதவியால் ஜாமீனில் வெளியே வரும் பரமரும் அழகரும் நேராக கனகுவின் வீட்டிற்குள் சென்று ஆவேசத்துடன் இறங்குகிறார்கள். வழக்கம் போல் அநாமதேய குரலில் காவல்துறையில் புகார் செய்கிறார் கனகு. ஆனால் அவர்களின் ஆவேச வருகையைத் தடுக்க முடியவில்லை. அண்ணன் மகள் துளசியின் அறையில் ஒளிந்து கொள்வதால் கனகுவால் அப்போதைக்கு உயிர் தப்ப முடிகிறது. 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - சுப்ரமணியபுரம் சமுத்திரக்கனி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 18 |முரட்டுத்தனமான அண்ணனுக்கு பாசமிகு தங்கையாக செவனம்மா!

இந்தத் தாக்குதல் குறித்து காவல்துறையில் சோமு புகார் அளிக்கிறார். அவரும் நேரடியாக பெயர் சொல்லாமல் “யாருன்னு தெரியலைங்க. ஏதோ மக்களுக்கு நல்லது பண்ணலாம்ன்னு பார்த்தா.. வீட்ல வந்து மிரட்டறாங்க” என்று காவல்துறை அதிகாரியிடம் மையமாக சொல்கிறார். “எங்க அவங்க பேரைச் சொல்லிடுவியோன்னு நெனச்சேன். சொல்லியிருந்தா.. நம்மள கை காட்டியிருப்பாங்க” என்று வெளியே வந்த பிறகு கனகு சொல்ல “இது கூட தெரியாமலா அரசியல் பண்ணுவேன்” என்பது போல் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார் சோமு.

சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி
சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி

கனகுவை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கும் பரமனுக்கும் அழகருககும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. கனகு மீது அழகர் நிகழ்த்தும் கொலை முயற்சியில் குறி தப்பி, கனகுவின் அண்ணன் மீது கத்தி பாய்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார் கனகு.

கொலைக்கருவிகளை உற்பத்தி செய்யும் அரசியல்

காயத்துடன் மருத்துவமனையில் படுத்திருக்கும் தந்தையை துளசி சோகமாக பார்த்துக் கொண்டிருக்க, துளசியை தனியாக அழைத்துச் செல்லும் கனகு “என்னைக்கு அந்த ஈனப்பயலோட உன்னை அப்பா பார்த்தாரோ.. அன்னைக்கே பாதி செத்துட்டார். என்னிக்கு இருந்தாலும் அவனால எங்க உசுருக்கு ஆபத்துதான். எங்க உசுரை விடு. ஒரு கொலைகாரனை கட்டிக்கிட்டு நீ நிம்மதியா வாழ முடியுமா” என்று உருக்கமாகப் பேசும் கனகு, தடாலென்று துளசியின் காலில் விழுந்து ‘நீ எடுக்கப் போற முடிவுலதான் நம்ம குடும்பமே இருக்கு. நீ நம்ம குலசாமிம்மா” என்று கதறுகிறார். 

சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி
சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி

கனகுவின் இந்த அனுதாப நாடகத்தின் மூலம் இரண்டு விஷயங்களை சாதிக்க முடியும். ஒன்று அழகரின் மீது துளசிக்கு வெறுப்பு வரச் செய்வது. துளசியின் மூலம் அழகரை தனியாக வரவழைத்து போட்டுத் தள்ளுவது. இரண்டு விஷயங்களுமே கனகச்சிதமாக நடக்கிறது. காதலனை காட்டிக் கொடுத்த துயரம் தாங்காமல் துளசி வெடித்து அழ, “இது போதும்டா. நம்ம குடும்ப கௌரவத்தையே காப்பாத்திட்ட” என்று துளசியை அணைத்து இழுத்துச் செல்கிறார் கனகு. அந்த அதிர்ச்சியுடனே கனகுவின் ஆட்களால் குத்துப்பட்டு பரிதாபமாக சாகிறான் அழகர்.

சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி - ஸ்வாதி
சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக்கனி - ஸ்வாதி

தன்னுடைய நண்பன் அழகரை, நயவஞ்சமாக கொலை செய்த கனகுவை, மிகக் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து தனது பழியை தீர்த்துக் கொள்கிறான் பரமன். 

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் - சுப்ரமணியபுரம் சமுத்திரக்கனி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 16 | சிரிப்பும் சீரியஸூமாக ‘சாமிபிள்ளை’ சுருளிராஜன்!

வில்லன் பாத்திரம் என்பதற்காக உரக்க கத்த வேண்டியதில்லை. டுஷ்யூம், டுஷ்யும் என்று இறங்கி சண்டை போட வேண்டியதில்லை. சரியான முறையில் பேசி மூளைச்சலவை செய்வதின் மூலம் ஆட்களை கொலைக்கருவிகளாக மாற்ற முடியும் என்கிற நுட்பமான அரசியல்வாதியின் நடிப்பை சரியாகக் கொண்டு வந்து ‘கனகு’ என்கிற பாத்திரத்தை மறக்க முடியாததாக மாற்றியிருக்கிறார் சமுத்திரக்கனி. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com