நேர்மை பிடிக்கும்.. ஆனால் சூழ்நிலை கைதி... உளவியல் சதுரங்க ஆட்டத்தில் ‘குருதிப்புனல்’ கே விஸ்வநாத்!

27-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் குருதிப்புனல் திரைப்படத்தில் கே விஸ்வநாத் ஏற்று நடித்திருந்த ஸ்ரீனிவாஸ் கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்puthiya thalaimurai

தெலுங்கு சினிமாவின் முக்கியமான ஆளுமை மற்றும் முன்னோடிகளுள் ஒருவர் இயக்குனர் கே விஸ்வநாத். இயக்குனர் என்பதைத் தாண்டி திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், நடிகர் என்பது உள்ளிட்ட பல்வேறு முகங்கள் இவருக்கு உண்டு. ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள இவர், சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம்,

குருதிப்புனல்.

கமல்ஹாசன் - கே பாலச்சந்தர் - கே விஸ்வநாத்
கமல்ஹாசன் - கே பாலச்சந்தர் - கே விஸ்வநாத்

கமல்ஹாசனை வைத்து இயக்குனர் பாலச்சந்தர் எவ்வாறு தமிழில் மிக முக்கியமான திரைப்படங்களை இயக்கினாரோ, அதே போல் தெலுங்குத் திரையில் சிறப்பான திரைப்படங்களை இயக்கி கமல்ஹாசனை ஒரு சிறந்த நடிகராக தூக்கி நிறுத்திய சிறப்பு விஸ்வநாத்திற்கு உண்டு.

குருநாதர் என்கிற நன்றிக் கடனிற்காகவும் மரியாதைக்காகவும் கே.விஸ்வநாத்தை தமிழில் நடிகராக கமல் அறிமுகப்படுத்த விரும்பியிருக்கலாம் என்று தோன்றுகிறது. குருதிப்புனல் திரைப்படத்தில் ‘ஸ்ரீனிவாஸ்’ என்கிற சிறிய பாத்திரத்தில் கே.விஸ்வநாத் நடித்திருந்தாலும் படத்தின் போக்கில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் படியான நடிப்பைத் தந்திருந்தார். அவர் நடித்திருந்த காட்சிகள் அனைத்தும் மிக இயல்பான நடிப்பைத் தாங்கியிருந்தன. 

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்

பயங்கரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளை ஒடுக்கும் காவல்துறை அதிகாரிகளாக கமல்ஹாசனும் அர்ஜூனும் நடித்திருந்தார்கள். அவர்களின் பாத்திரப் பெயர்கள் முறையே ஆதிநாராயணன் மற்றும் அப்பாஸ். இவர்களின் மூத்த அதிகாரியாக, டி.ஐ.ஜி ஸ்ரீனிவாஸாக கே.விஸ்வநாத் நடித்திருந்தார். 

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 26 | நாயகன் பட ‘ஜனகராஜ்’!

“யார் அந்த சின்ன சுவாமிஜி?”

ஆதியும் அப்பாஸூம் உடற்பயிற்சிக்கூடத்தில் ஒரு ரகசிய திட்டம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆப்ரேஷன் அவர்கள் இருவரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது, டி.ஐ.ஜி உள்பட. இந்தச் சமயத்தில் ஸ்ரீனிவாஸ் உடற்பயிற்சிக் கூடத்திற்குள் வருகிறார். இருவரும் விறைப்பாகி அட்டென்ஷனில் நிற்க “கெட் ஈஸ் பாய்ஸ்” என்று அவர்களை இலகுவாக்குகிறார். 

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத் - அர்ஜூன்
குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத் - அர்ஜூன்

காவல்துறை அதிகாரி என்றால் அதற்குரிய தோரணையுடன், ஃபிட்டான உடம்புடன் இருக்க வேண்டும். ஆனால் விஸ்வநாத் இந்தத் தோற்றத்திற்குப் பொருந்தாவிட்டாலும் தனது இயல்பான நடிப்பின் மூலம் இந்தத் தடையைத் தாண்டி வந்து விடுகிறார். ஆதியின் ஒரு செயல்பாட்டிற்காக அவனிடம்  பாராட்டைத் தெரிவிக்கும் ஸ்ரீனிவாஸ், “உன் ஒய்ப் கிட்ட ஸாரி சொன்னேன்னு சொல்லிடு ஆதி. சாப்பிட வரேன்னு சொல்லியிருந்தேன். முடியாமப் போச்சு” என்று சொல்லி

“உன் பையனுக்கு என் பேரை வெச்சியே.. ஸ்ரீனிவாஸ்ன்னு.. என் பேரைக் காப்பாத்துவானா?” என்று குறும்பான சிரிப்புடன் அவர் கேட்க, ஆதி சங்கடமான சிரிப்புடன் “குறும்பு நல்லா வருது” என்று சொல்ல, “உன்னை மாதிரி” என்று சொல்லி சிரித்து விட்டு தானும் உடற்பயிற்சி செய்ய தயாராகிறார் ஸ்ரீனிவாஸ்.

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்

ஒரு இறுக்கமான சூழலை, தனது இயல்பான நடிப்பின் மூலம் சட்டென்று இலகுவாக்கி விடுகிறார் விஸ்வநாத். காவல்துறை அதிகாரி என்கிற தோற்றம் மாறி சட்டென்று அவர், ஒரு பெரியப்பா மாதிரியாக மாறிவிடும் அதிசயம் இந்தக் காட்சியில்  நடக்கிறது. ஸ்ரீனிவாஸ் மீது ஆதி மிக மதிப்பும் பிரியமும் வைத்திருக்கிறான் என்பது மகனுக்கு அதே பெயரை வைத்திருப்பதிலிருந்து தெரிகிறது. 

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 24 | கொலைக்கருவிகளை உற்பத்தி செய்யும் அரசியல்வாதி சமுத்திரக்கனி

கிருஷ்ணனும் நேர்மையின் காலடித் தடங்களும்

அதுவொரு கிருஷ்ண ஜெயந்தி நாள். வீடுகளில் குழந்தை கிருஷ்ணனின் காலடித் தடங்களை இடும் வழக்கம் உண்டு. இந்தச் சடங்கையும் கிருஷ்ணன் என்கிற பெயரையும் திரைக்கதையில் மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருந்தார் கமல்ஹாசன்.

சென்னைக்கு வருகை தரவிருக்கும் ஒரு மத்திய அமைச்சரை கொல்வதற்காக நக்சலைட் இயக்கம்  திட்டம் தீட்டுகிறது. அந்தக் குழுவைச் சேராதவன் என்றாலும் ராக்கெட் லான்ச்சர் இயக்குவதில் திறமையானவன் என்பதால் கிருஷ்ணன் என்கிற பெயர் கொண்ட நபரை பயங்கரவாதிகள் அழைத்து வருகிறார்கள்.

குருதிப்புனல் படம்
குருதிப்புனல் படம்

‘கிருஷ்ணன் வந்துட்டான்’ என்று குழுவின் கமாண்டருக்கு, ஒரு காவல்துறை அதிகாரியே ரகசிய தகவல் சொல்வதுடன் இந்தக் காட்சி துவங்குகிறது. அடுத்த காட்சியில் காலடித் தடங்கள் தெரிய ஆதி நாராயணனின் வீடு. சீனியர் அதிகாரியான ஸ்ரீனிவாஸ், திடீரென்று ஆச்சரிய வருகையைத் தர, ஆதியும் அப்பாஸூம் பரபரப்பாகி விடுகிறார்கள். “நானும் ரொம்ப நாளா வரேன்… வரேன்னு சொல்லிட்டிருந்தேன்ல.. .ஹியர் ஐ ஆம்..” என்கிறார் ஸ்ரீனிவாஸ்.

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத் - அர்ஜூன்
குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத் - அர்ஜூன்

இருவரும் மரியாதையுடன் அவரை வரவேற்கிறார்கள். ஆதியின் மகன் “டி.ஐ.ஜி அங்கிள்.. ஆக்சுவலா.. தாத்தா.. ன்னு சொல்லணும்” என்று குறும்பு செய்ய ஆதி அவனை அதட்டுகிறார். “லீவ் ஹிம் அலோன் ஆதி..” என்று விருந்தினருக்கேயுரிய தோரணையுடன் அதைத் தடுக்கிறார் ஸ்ரீனிவாஸ். 

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 23 | உடலசைவிலேயே அசாத்திய நடிப்பை கொடுத்த ‘முதல்வன்’ பட ரகுவரன்

“வாங்க..” என்று ஆதியும் அப்பாஸூம் அவரை வரவேற்க, காலை சற்று தாங்கித் தாங்கி நடக்கிறார் ஸ்ரீனிவாஸ். அதற்கான காரணம் அடுத்த சில நிமிடங்களில் வரும் வசனத்தில் தெரிய வருகிறது. “போன முறை வர முடியாததுக்கு ஸாரி சொன்னேனே.. ஆதி உன் கிட்ட சொன்னானா.?” என்று ஸ்ரீனிவாஸ் கேட்க, ஆதியின் மனைவி சுமி மழுப்பலான பதிலைச் சொல்லி சமாளிக்க “சொல்லல.. நீதான் சமாளிக்கற” என்று சிரிக்கிறார் ஸ்ரீனிவாஸ்.

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத் - அர்ஜூன்
குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத் - அர்ஜூன்

கிருஷ்ண ஜெயந்தி இனிப்பை சுமி கொண்டு வந்து தர “வெறும் ஸ்வீட்தானா.. சாப்பாடுல்லாம் கிடையாதா?” என்று வாயில் வைத்து ஸ்ரீனிவாஸ் குறும்பாக கேட்கும் காட்சிகளில் எல்லாம் கே.விஸ்வநாத்தின் நடிப்பு அத்தனை இயல்பாக இருக்கிறது. நம்முடைய வீடுகளில் வரும் விருந்தினர்கள் நகைச்சுவையாகப் பேசும் அதே மாதிரியான தோரணை.

“நேர்மைன்றது ஸ்டமக் மஸில் மாதிரி”

அடுத்ததாக ஸ்ரீனிவாஸ் உணவருந்தும் காட்சி. சாப்பிடும் போது புரையேறிக் கொள்வதையும் வேண்டிய உணவை கை நீட்டி கேட்பதையும்  மிக இயல்பாக செய்யும் விஸ்வநாத், தொண்டைக் கமறலோடு “விடிஞ்சு எழுந்ததில இருந்து பொய், மோசம், ஏமாத்தம், நடிப்பு.. வாழ்க்கைல ஏதோ பயம்..  இதெல்லாம் சேர்ந்து நம்ம வயசையே குறைச்சுடுது.. இதுக்கு ஒரே மருந்து.. கட்டுப்பாடு.. டிஸிப்ளின்.. அது இருந்ததாலதான் அவர் நூறு வயசு வரைக்கும் இருந்தாரு.. மொராஜி. தி கிரேட் மேன்”.. என்று விஸ்வநாத் பேசுவதிலிருந்து அதுவொரு உரையாடலின் தொடர்ச்சி என்பதை உணர முடிகிறது.

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்

இந்தக் காட்சியில் கமல், விஸ்வநாத் ஆகியோர் உள்ளிட்டவர்கள் செய்யும் சின்னச் சின்ன அசைவுகள் காட்சியின் நம்பகத்தன்மையை மிகச் சிறப்பாக கூட்டுகின்றன. 

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கோபத்தின் வெப்பமும் அன்பின் குளிர்ச்சியும் ஆய்த எழுத்து இன்பா

“அதெல்லாம் அந்தக் காலம் சார்.. அந்த டைப் மாடல்லாம் இப்ப மேனுபாக்சரிங்கே பண்றதில்ல. இப்பல்லாம் டகாடக்.. சகாசக்தான்..” என்று எழுத்தாளர் சுஜாதாவின் வாசனையோடு கிண்டலாக கமெண்ட் செய்கிறான் அப்பாஸ். “ஏன்.. உங்க கிட்ட இல்லையா.. உங்க ரெண்டு பேர் கிட்ட எவ்வளவு நேர்மை இருக்கு” என்று உண்மையான அன்போடு ஸ்ரீனிவாஸ் பாராட்ட, ஆதியின் மகன் தனது தோழர்களோடு உள்ளே ஓடி வந்து “தாத்தா.. நான் சொல்றத பொய்ன்றாங்க.. அந்த புல்லட் காயத்தைக் காட்டுங்களேன்” என்று கத்த அவனை ஆதி அதட்டுகிறார்.

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்

“லீவ் அஸ் அலோன்.. ஆதி.. இது சின்னப்பசங்க விஷயம்” என்று தம்மையும் அவர்களோடு இணைத்துக் கொள்ளும் ஸ்ரீனிவாஸ், தனது காலைக் காட்டும் போதுதான், ஏன் அவர் முதலில் தாங்கித் தாங்கி நடந்து வந்தார் என்பதற்கான விடை கிடைக்கிறது. “திருடனைப் பிடிக்கறப்ப 303 புல்லட் பட்டுது” என்று சிறுவன் ஆர்வத்தோடு சொல்ல, அவனைத் தடுக்கும் ஸ்ரீனிவாஸ் “பாயிண்ட் 32” என்று திருத்துகிறார். 

“இந்த நேர்மைன்றது ஸ்டமக் மஸில் மாதிரி. கண்ட்ரோல்ல வெச்சுக்கணும். இல்லைன்னா டெம்ப்டேஷன் வந்துட்டே இருக்கும், நம்ம சுமி செஞ்ச ஊறுகா மாதிரி” என்று சிரித்துக் கொண்டே ஊறுகாயை இலையில் போடும் ஸ்ரீனிவாஸிடம் “உங்களுக்கு போன் வந்திருக்கு” என்று சுமி வந்து சொல்ல எழுந்து செல்கிறார். தொலைபேசியில் ஒரு முக்கியமான எமர்ஜென்சி தகவல் என்பது அவர் பேசும் தோரணையில் இருந்து தெரிகிறது. இந்தச் சமயத்தில் ஒரு விஷயம் நடக்கிறது. அது இயக்குநரால் திட்டமிட்டு நடந்ததா அல்லது நடிகரால் தன்னிச்சையாக செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.

குருதிப்புனல் கே.விஸ்வநாத்
குருதிப்புனல் கே.விஸ்வநாத்

ஸ்ரீனிவாஸின் எச்சில் கை அருகிலிருக்கும் புகைப்படத்தின் அருகே தன்னிச்சையாகத் செல்கிறது. அந்தப் படத்தில் இருப்பது ஆதியும் ஸ்ரீனிவாஸூம் என்பது போல் மங்கலாகத் தெரிகிறது. தன்னுடைய எச்சில் கை புகைப்படத்தில் பட்டுவிடாதவாறு சட்டென்று பின்னுக்கு இழுத்துக் கொள்கிறார் விஸ்வநாத். “நேர்மைன்றது உங்க கிட்ட இருக்கு” என்று அவர் ஆதி, அப்பாஸை பாராட்டுவதையும், தன்னுடைய எச்சில் கை ஆதியின் புகைப்படத்தின் மீது பட்டுவிடக்கூடாது என்று ஜாக்கிரதையாக தவிர்ப்பதையும் பொருத்திப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. இந்தக் காட்சி இன்னொரு வீட்டில் இடப்பட்டிருக்கும் கிருஷ்ணனின் காலடித் தடங்களோடு பயணிக்கிறது

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 17 | நினைவுகள் உறைந்து போன ஒரு தகப்பனாக எம்.எஸ்.பாஸ்கர்...!

மூத்த அதிகாரியே கறுப்பு ஆடாக மாறியிருக்கும் துயரம்

பயங்கரவாதக் குழுவின் தலைவனான பத்ரியை மயக்க மருந்து கொடுத்து விசாரணை செய்கிறான் ஆதி. அப்போதுதான் ‘சின்ன சுவாமிஜி' என்கிற பெயரை ஸ்ரீனிவாஸ் என்கிற பெயரோடு இணைத்து மயக்கத்தில் உளறுகிறான் பத்ரி. “உன் புள்ள ஸ்ரீனிவாஸ் சாகப் போறான்” என்று அவன் சொல்ல, அடுத்த காட்சியில் ஆதியின் மகன் மீது ஸ்நைப்பர் ஷாட் தாக்குதல் நடக்கிறது. அது ஆதிக்கு வைக்கும் செக்மேட். 

குருதிப்புனல் கமல்ஹாசன்
குருதிப்புனல் கமல்ஹாசன்

காவல்துறையிலிருந்து பயங்கரவாத குழுவிற்கு நீண்ட காலமாக யாரோ தகவல் சொல்லி வருகிறார்கள் என்கிற சந்தேகம் ஆதிக்கு இருக்கிறது. பத்ரி தந்த வாக்குமூலத்தின் மூலம் இப்போது அது தெளிவாகி விட்டது. அது வேறு யாருமல்ல, ஆதி குருவாக மதிக்கும் டி.ஐ.ஜி ஸ்ரீனிவாஸ்தான் அந்த கறுப்பு ஆடு. எனவே அவர் வீட்டுக்கு செல்கிறான். அதற்கு முன் சில முன்னேற்பாடுகளைச் செய்து விட்டு செல்கிறான். 

ஆதியின் மகன் மீது நடந்த தாக்குதல் பற்றி அறியும் ஸ்ரீனிவாஸ் அது பற்றி ஆறுதலுடன் உரையாடலை ஆரம்பிக்கிறார்.  “ஜாக்கிரதையா இருக்கணும் ஆதி.. நீ ஒரு குடும்பஸ்தன்” என்று அவர் சொல்ல “ரொம்ப ஆச்சரியமா இருக்கு. பத்ரியும் இதே அட்வைஸ்தான் சொன்னான்” என்று பொடி வைத்து பேசுகிறான் ஆதி. அவனது முகத்தில் தன்னுடைய ஆதர்சமான அதிகாரியே கருப்பு ஆடாக மாறி விட்டாரே என்கிற அதிர்ச்சி தெரிகிறது.  “அவங்க பிடியில இருந்து தப்பிக்கறது கஷ்டம். ஈவு இரக்கம் இல்லாத காட்டுமிராண்டிங்க” என்று பொதுவான எச்சரிக்கை தொனியில் சொல்கிறார் ஸ்ரீனிவாஸ்.

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 15 | ‘ராஜ பார்வை’யின் ரகளை ‘தாத்தா’ எல்.வி.பிரசாத்
குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்

ஆனால் ஆதி பேசப் பேச, தன்னைக் குறித்தான ரகசியத்தை அவன் அறிந்திருக்கிறான் என்பதை உணர ஆரம்பிக்கிறார். “நம்பிக்கை போயிடுச்சு.. உங்களை கார்டியன் மாதிரி நெனச்சிட்டிருந்தேன். என் குழந்தைக்கு கூட உங்க பேரைத்தான் வெச்சேன்” என்று ஆதி ஆதங்கத்துடன் சொல்ல, “இப்ப என்ன ஆச்சு?” என்கிற  ஸ்ரீனிவாஸ் ஆறுதலாக ஆதியின் கையைத் தொடப் போக சட்டென்று பின்னால் இழுத்துக் கொள்கிறான்.

அந்தச் செய்கை பட்டவர்த்தனமாக உணர்த்தி விடுகிறது. “ஓ.. பத்ரி சொல்லியிருப்பான்” என்று முதல் வாக்குமூலத்தைத் தருகிறார். பிறகு கசப்புடன் “நான் ஒண்ணும் பணம் வாங்கலை ஆதி.. என் குடும்பத்திற்காக” என்று வேதனையுடன் சொல்கிறார். ஆனால் அதை எரிச்சலுடன் மறுக்கிறான் ஆதி. 

அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும் தற்கொலைக் காட்சி

ஸ்ரீனிவாஸ் பதட்டத்துடன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க “ஓ.. இந்தப் பழக்கம்லாம் இருக்கா?” என்று ஆதி அதிர்ச்சியடைய, “என்னைப் பத்தி உனக்குத் தெரியாதது எவ்வளவோ இருக்கு” என்கிறார் ஸ்ரீனிவாஸ். அப்போது போன் ஒலிக்கிறது. “சின்ன சுவாமிஜி. எல்லாம் தெரிஞ்சு போச்சு. உன் ஆளே எல்லாத்தையும் சிபிஐக்கு சொல்லிட்டான். அவங்க உன் வீட்டுக்குத்தான் வந்திட்டிருப்பாங்க…மத்தவங்களையாவது காப்பாத்து. சிபிஐ கேக்கற கேள்விக்கு பதில் சொல்லாம தப்பிச்சுக்க” என்று ஒரு குரல் மிரட்டுகிறது. “ஆகட்டும்” என்று போனை வைக்கிறார் ஸ்ரீனிவாஸ்.

குருதிப்புனல்  கே.விஸ்வநாத்
குருதிப்புனல் கே.விஸ்வநாத்

“சிபிஐக்கு சொன்னியா?” என்று அவர் ஆதியிடம் கேட்க “அவங்க வர்றதுக்கு முன்னாடி உங்க நிஜ முகத்தைப் பார்க்க விரும்பினேன். இந்தப் புது முகத்துல எங்கயாவது நேர்மை இருக்குதான்னு” என்று ஆதி கசப்புடன் சொல்ல “இங்க எதுவுமில்ல. உன் முகத்தை கண்ணாடில பாரு. அதுல இருக்கு நேர்மை” என்று ஆதியைப் பாராட்டுகிற ஸ்ரீனிவாஸ், “உன் கிட்ட எவ்வளவோ சொல்லணும்னு இருந்தேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் தோரணையில் அவர் நெருங்கி வர, பின்னால் விலகிச் செல்கிறான் ஆதி. 

சிபிஐ அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைகிறார்கள். “ரொம்ப அவசரம்” என்று சொல்லும் அவர்களிடம் தன் மனைவியை நிதானமாக அறிமுகப்படுத்தி விட்டு “இதோ வந்து விடுகிறேன்” என்று கழிப்பறைக்குள் சென்று கதவைச் சாத்துகிறார் ஸ்ரீனிவாஸ்.

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்

ஆனால் அவர் செல்லும் விதத்தில் ஏதோவொன்று உறுத்தலாக இருப்பதை உணரும் ஆதி, உள்ளுணர்வின் தற்செயலான எச்சரிக்கையில் சட்டென்று யூகித்து கழிப்பறையை நோக்கி பாய்கிறான். அதற்குள் நிலைமை கை மீறி விடுகிறது. வாய்க்குள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார் ஸ்ரீனிவாஸ். குண்டு பின்மண்டையின் வழியாக பாய்ந்து கண்ணாடியின் மீது சதையும் ரத்தமும் படியும் காட்சி, பார்வையாளர்களுக்கு திகைப்பு ஏற்படுத்தும்படியாக தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குருதிப்புனல் கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 14 | ரகளையான மாடுலேஷன்... மறக்கவே முடியாத ‘விக்டர்’ அருண்விஜய்!
நேர்மையான காவல் அதிகாரிகளுக்கும் பயங்கரவாத இயக்கத்தினரும் நிகழும் உளவியல் ரீதியான சதுரங்க ஆட்டம்தான் ‘குருதிப்புனல்’ திரைப்படத்தின் மையம்.

தன்னுடைய ஆதர்ச அதிகாரி ‘கறுப்பு ஆடாக’ மாறி விட்டாரே என்று கோபம் கொள்ளும் ஆதி, பின்னால் தானும் அதே போல் ஆக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவனுடைய குடும்பத்தினரின் மீது நிகழும் அச்சுறுத்தல், மிரட்டல், தாக்குதல் போன்றவை அந்தப் புள்ளியை நோக்கி அவனை நகர்த்திச் செல்கிறது. அப்போதுதான் தன்னுடைய குருவின் நிர்க்கதியை நினைத்து குற்றவுணர்வும் வருத்தமும் கொள்கிறான் ஆதி. 

குருதிப்புனல் அர்ஜூன் - கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்
குருதிப்புனல் அர்ஜூன் - கமல்ஹாசன் - கே.விஸ்வநாத்

தனக்கு கீழே பணிபுரியும் அதிகாரிகளின் நேர்மையை மனந்திறந்து பாராட்டும் அதே சமயத்தில் சூழ்நிலைக் கைதியாக மாட்டிக் கொள்ளும் சங்கடத்தையும் தனது நடிப்பால் அற்புதமான வெளிக்கொணர்ந்த ‘ஸ்ரீனிவாஸ்’ என்கிற ‘சின்ன சுவாமிஜி’ பாத்திரத்தையும் அதைச் சிறப்பாக கையாண்ட கே.விஸ்வநாத் அவர்களையும் மறக்கவே முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com