மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 14 | ரகளையான மாடுலேஷன்... மறக்கவே முடியாத ‘விக்டர்’ அருண்விஜய்!

14-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் ஏற்று நடித்திருந்த விக்டர் கதாப்பாத்திரத்தை பார்க்கப்போகிறோம். அருண் விஜய் கேரியரில் ஒரு முக்கியமான, மறக்க முடியாத பாத்திரம் ‘விக்டர்’.
arun vijay
arun vijaypt web

பிரபல நடிகரின் மகன் என்கிற அந்தஸ்துடன் திரைத்துறையில் நுழைந்த நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். ஆரம்பத்தில் ‘அருண்குமார்’ என்கிற பெயரில் ஹீரோவாக சில படங்களில் நடித்தார். சுமாரான வெற்றிகள் கிடைத்தன. அதன் பிறகு தொடர்ச்சியான தோல்வியே.

திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் சிலரை அத்தனை எளிதில் நெருங்காது. அதற்கு சிறந்த உதாரணமாக அருண் விஜய்யை சொல்லலாம்.

தனது உடலை கச்சிதமாகப் பராமரிப்பதில் தொடர் அக்கறையுள்ளவர் அருண் விஜய். பார்ப்பதற்கும் ஸ்டைலாகத்தான் இருப்பார். நடிப்பும் சுமாராக வந்து விடும். ஆனால் வெற்றி என்பது அவருக்கு நெடுங்காலமாக எட்டாக்கனியாகவே இருந்தது.

இப்படியொரு சூழலில் அருண் விஜய்க்கு பரவலான கவனத்தை ரசிகர்களிடம் ஈட்டித் தந்த பாத்திரங்களுள் முக்கியமானது ‘விக்டர்’. ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லன் கேரக்டர். பொதுவாக முன்னணி ஹீரோக்களின் படத்தில் வில்லனாக நடிப்பவர்களை முரட்டு ரசிகர்கள் வசைமாரி பொழிவார்கள். சத்யராஜ், ரகுவரன் போன்றவர்கள் மட்டுமே தங்களின் தனித்தன்மையான நடிப்பால் வில்லன் பாத்திரத்தில் பிரகாசிப்பார்கள். ரசிகர்களிடமும் வரவேற்பு பெறுவார்கள். அருண் விஜய்க்கு அப்படியொரு ஜாக்பாட் பரிசை அளித்தது ‘விக்டர்’ பாத்திரம். தீவிரமான அஜித் ரசிகர்கள் கூட ‘விக்டர்’ பாத்திரத்தை கொண்டாடியதைக் கண்டு அருண் விஜய் தியேட்டரிலேயே கண்கலங்கியதாக அப்போது செய்திகள் வந்தன.

விக்டர் - வெள்ளைச் சட்டையுடன் ஒரு கெத்து ஆசாமி

தூக்கி வாரிய முடி, திடகாத்திரமான உடல், பளிச்சென்று வெளியில் தெரியும்படியாக அணிந்திருக்கும் வெள்ளை முழுக்கைச் சட்டை, திமிரான உடல்மொழி, ரகளையான மாடுலேஷன் என்று இந்தப் படத்தில் அருண் விஜய்யின் தோற்றமும் பாத்திர வடிவமைப்பும் வசீகரமாக இருந்தது.

விக்டரின் என்ட்ரி காட்சியே இந்தப் படத்தில் ரகளையாக இருக்கும். ஒரு காஃபி ஷாஃப்பில் சத்யாவும் (சத்யதேவ் ஐபிஎஸ்) தேன்மொழியும் (அஜித் மற்றும் அனுஷ்கா) அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது முகத்தை கைக்குட்டையால் மூடிக் கொண்டு அங்கு அதிரடியாக வருகை தருவார் விக்டர்.

“கொடூரமான ஒரு கொலை இங்க நடக்கப் போகுது. பார்க்கணும்னா பாருங்க. இல்ல கண்ணை மூடிக்கங்க. உங்க இஷ்டம். போன்ல படம் பிடிக்கணும்னாலும் ஓகே. (குரலை உயர்த்தி) பர்மிஷன் நான் தரேன்” என்று ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே தனது ஆட்களுடன் உள்ளே நுழைய காஃபி ஷாப்பின் வாடிக்கையாளர்கள் பதறி சிதறுவார்கள்.

காத்திருக்கும் பதிமூன்று வருடப் பகை

சத்யாவும் விக்டரும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேராக சந்திக்கும் தருணம் அது. அவர்களின் இடையே 13 வருடப் பகை இருக்கிறது. இரண்டு பேருமே அங்கு ஒருவரையொருவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள். ஸ்டைலாக அமைக்கப்பட்ட ஆக்ஷன் காட்களில் தீ பறக்கும். எதிரியால் தடுக்கப்பட்ட வலது கையில் உள்ள கத்தியை கீழே நழுவ விட்டு அதை இடது கையால் லாவகமாக பிடித்து தாக்க முயலும் விக்டரின் ஸ்டைல் பார்ப்பதற்கே அட்டகாசமாக இருக்கும்.

சண்டையின் நடுவில் இதர காவல்துறை அதிகாரிகள் வருவதைப் பார்த்து விடுவதால் விக்டர் தப்பிப்பான். ஓடிக் கொண்டிருக்கும் காரில் பாய்ந்து தன்னை லாவகமாக உள்ளே செருகிக் கொள்ளும் காட்சி டூப் இல்லாமல் அசலாக படமாக்கப்பட்டிருப்பதை உணர முடியும்.

விக்டரின் ஆள் ஒருவன் கேட்பான் “யார்ரா அவன்?”.. விக்டர் பதில் சொல்லுவான். “அவனை முதன் முதலா ஜெயில்ல சந்திச்சேன். 13 வருஷத்துக்கு முன்னாடி. அவன் பேரு சத்யா”

சத்யாவின் பிளாஷ்பேக் காட்சிகள் விரியும். டாக்டராகும் கனவுடன் நன்றாகப் படிக்கும் சத்யா, ஒரு ரவுடியால் தன்னுடைய தந்தை அநியாயமாக கொல்லப்படுவதால் காவல்துறை அதிகாரியாக வேண்டுமென்று விரும்பி உழைத்து அந்தப் பணியில் சேர்வார். மறைந்த தந்தை மானசீகமாக வழிநடத்த, தன்னுடைய பணியில் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் பணிபுரிவார். போலீஸ் வேலையை கௌரவமானதாக நினைப்பார். தீயவர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறுவார்.

‘சத்யா.. நீ போலீஸா…?”

ஃபாதர் மேத்யூ என்பவனின் தலைமையில் செயல்படும் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அண்டர்கவர் காப் ஆக மாறுவார் சத்யா. சிறைக்குச் செல்வார். விக்டருடன் பழகத் துவங்குவார். “ஆசைத்தம்பியோட ஆளுங்க உன்னைப் போட டிரை பண்ணுவாங்க. உஷாரா இரு” என்று விக்டருக்கு தகவல் சொல்வார். அவன் அலட்சியப்படுத்தினாலும், பிறகு அது நடப்பதைப் பார்த்து சத்யா மீது நம்பிக்கை ஏற்பட ஆரம்பிக்கும். மேத்யூவிடம் சொல்லி தன்னுடைய கேங்கில் சேர்த்துக் கொள்வான்.

விக்டரின் திருமணம். ‘அதாரு.. அதாரு.. பாடலில் கால்களை பின்னால் மடித்துக் கொண்டு கூட்டத்திற்கு நடுவே விக்டர் குதிக்கும் ஸ்லோமோஷன் காட்சி நன்றாக இருக்கும். ஒரு நபரைக் கடத்தும் போது போலீஸை விக்டர் சுட்டு விட தன்னிச்சையாக பதறி விடுவார் சத்யா. அவர்கள் டீல் பேசிக் கொண்டிருக்கும் போது சத்யாவின் உள்ளே இருக்கும் போலீஸ் ஆஃபிசர் ஆவேசமாக விழித்துக் கொள்வார். “இந்த ஒரு நிமிஷத்துக்காகத்தான் இத்தனை வருடம் காத்துக் கொண்டிருந்தேன்” என்று இரண்டு கைகளிலும் துப்பாக்கியை ஏந்தி எதிரிகளைக் கொல்வார். மேத்யூவை பாதுகாக்க விக்டர் போராடுவான். ஆனால் மேத்யூவை சுட்டுக் கொன்று விடுவார் சத்யா.

நண்பனாக நம்பியவன் போலீஸா என்கிற அதிர்ச்சி விக்டரின் முகத்தில் தெரியும். பிறகு சிறையில் இருக்கும் விக்டரை சந்தித்து சத்யா சொல்வார். “நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடுவுல ஒரு மெல்லிசான கோடு. இந்தப் பக்கம் இருந்தா நல்லவன். அந்தப் பக்கம் இருந்தா கெட்டவன். இந்தப் பக்கம் இருக்கறவன் வெளியே வரணும். அதனாலதான் நீ உயிரோட இருக்க. இல்ல.. நான் அந்தப் பக்கம்தான் இருப்பேன்னு அடம்பிடிச்சா உனக்கு சாவு நிச்சயம்”

இடையில் ஒரு மெல்லிய கோடு

பிறகு நீண்ட வருடங்கள்.. கடந்து போகும். விக்டர் என்கிற ஆசாமி மெல்ல அவுட் ஆஃப் போகஸிற்கு செல்லும். விவாகரத்து ஆன ஹேமானிக்காவை சத்யா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வார். ஆனால் அன்றைய இரவே மணப்பெண் கொல்லப்படுவார். பிறகு என்னென்னமோ நடந்து விடும். தனது தனிப்பட்ட இழப்பு காரணமாக, தனக்குப் பிடித்தமான போலீஸ் வேலையை துறந்து விட்டு ஹேமானிக்காவின் மகளை தன்னுடைய மகளாக பாசமுடன் வளர்த்து வருவார் சத்யா.

“என்னுடைய மகளைக் காணவில்லை. போலீஸில் புகார் சொல்லியும் பலன் இல்லை. நீதான் ஏதாவது செய்யணும். உன்னாலதான் முடியும்” என்று சத்யாவின் நண்பன் ஒருவன் கெஞ்சுவதால், மீண்டும் தன் சாகசப் பயணத்தை ஆரம்பிப்பார் சத்யா. யூனிபார்ம் அணியாத போலீஸ். ஆட்களைக் கடத்தி மனித உறுப்புகளை பணக்காரர்களுக்கு விற்றுச் சம்பாதிக்கும் ஒரு கும்பலில் இருந்து நண்பனின் மகளைக் காப்பாற்றுவார். அந்தக் கும்பலுக்கும் விக்டருக்கும் தொடர்பிருப்பது அப்போதுதான் சத்யாவிற்குத் தெரிய வரும்.

நீ்ண்ட வருடங்கள் கழித்து விக்டரின் வாசனை

விக்டர் கடத்த முடிவு செய்திருப்பது தேன்மொழியை. அவளுடைய இதயம்தான் ஒரு பெரிய தொழில் அதிபருக்கு மேட்ச் ஆகிறது என்பதால் கோடிக்கணக்கில் டீல் பேசி முடித்திருப்பான் விக்டர். எனவே தேன்மொழியை கடத்துவதற்காக கொலைவெறியில் இருப்பான். இதை அறிந்து கொள்ளும் சத்யா, தேன்மொழிக்கு தன் வீட்டில் பாதுகாப்பு தருவார். விக்டர் சர்வநிச்சயமாக வருவான் என்பது அவருக்குத் தெரியும். எனவே இரவு முழுக்க காத்திருப்பார். காலை வரை எதுவுமே நடக்காது. சத்யாவின் மகள் பள்ளிக்கு கிளம்பி விடுவாள். பிறகு அந்த போன் கால் வரும்.

என்னவொரு ரகளையான காட்சி?!

Split Screen-ல் ஒரு பக்கம் சத்யாவும் இன்னொரு பக்கம் விக்டரும் மாறி மாறி பேசிக் கொள்ளும் காட்சி ரகளையாக இருக்கும். ஒருவரின் ஈகோவை அடுத்தவர் தூண்டி விடும்படியாக இந்த உரையாடல் நடக்கும்.

அதாரு... அதாரு.. பாடலை விக்டர் பாட ஆரம்பிப்பான், அதன் தொடர்ச்சியை சத்யா பாடி விட்டு கேட்பார்.

“சொல்லு விக்டர். எப்ப வரே?..”

“என்ன சத்யா.. முடியெல்லாம் நரைச்சுப் போச்சு.. உனக்கு வயசாயிடுச்சு.. சத்யா”

“வயசாயிடுச்சா…இல்லையான்றது… நேத்து காஃபி ஷாப்லயே உனக்கு தெரிஞ்சிருக்கும்.. இருந்தும் கேட்கற பார்.. அங்க நிக்கற நீ..”

“ஒத்துக்கறேன்.. செம காட்டு காட்டுன. ஆனா ஒரு நிமிஷம் இருந்திருந்தா முடிச்சிருக்கலாம்.”.

“ஆமாம்.. நான் உன்னை”

“கிழிஞ்சது உன் சட்டை சத்யா..”

“சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு விக்டர்”

“ஹாஹாஹா.. போலீஸ் வேலைல்லாம் வேணாம்ன்னு சொல்லிட்டு எங்களையெல்லாம் ஆழ்ந்த சோகத்தில் தள்ளிட்டு திடீர்னு ஏன் உள்ளே வந்திருக்க. எனக்கு சந்தோஷந்தான். சும்மா கேட்டேன். அவ என்ன உனக்கு வேண்டியவளா.. என்ன.. டாவா? இல்லலல்ல.. அப்புறம் ஏன் சத்யா?”

“அரிப்பு. நீ நெனக்கற அரிப்பு இல்ல. போலீஸ்காரன் அரிப்பு. புரியுதுல்ல”

“தெளிவா. நானும் உன்ன மாதிரிதான் சத்யா. ஏன்னா.. நீ சொன்னல்ல. நான் கோட்டுக்கு அந்தப் பக்கம் போய் விழுந்துட்டேன். நீ சொன்ன பேச்சை நான் கேட்கலை. அதுக்கெல்லாம் முன்னாடியே அந்த கோட்டைத் தாண்டி போனவன். திரும்பியெல்லாம் வர முடியாது. அடுத்து என்ன சத்யா வேற ஏதாவது சொல்லு..”

“மீட் பண்ணலாம் வா..”

“இப்ப சொன்ன பாரு.. நீ ஆளு சத்யா.. நீதான்.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் சத்யா. அதனாலதான் எனக்கு அவ்ளோ ஏமாத்தமா இருந்தது. உன் கூட சேர்ந்து என்னல்லாம் செய்யலாம்ன்னு நெனச்சிட்டு இருந்தேன் தெரியுமா.. நான் ஒருத்தன தப்பா எடை போட்டேன்றதுதான் எனக்கு பெரிய அடி. இன்னும் அதுல இருந்து மீண்டு வரலை..”

“நான் என் வேலையை மட்டும்தான் செஞ்சேன்.. நீங்கள்லாம் ரொம்ப நல்லவங்க.. வல்லவங்கன்னு மாதிரி ஃபீல் கொடுக்காத விக்டர். நீங்கள்லாம்.. (கெட்ட வார்த்தை)”

“ஒத்துக்கறேன்… அதனாலதான் கொஞ்ச நேரம் கழிச்சு நான் உனக்கு போன் பண்ணி அதே வார்த்தையை சொல்லப் போறேன். ‘நான் என் வேலையைத்தான் செஞ்சேன்.’ன்னு… நான் அவளைத் தூக்கிட்டேன் சத்யா… பத்து செகண்ட்ல இந்தக் கால் கட் ஆயிடும்.. அப்ப ‘நான் அவளைத் தூக்கிட்டேன்’றது உன் காதுல ஒலிச்சா நல்லாயிருக்கும்..” என்று பேசியபடியே வேகமாக ஓடுவான் விக்டர். அவன் கடத்தவிருப்பது தேன்மொழியை அல்ல. சத்யாவின் மகள் இஷாவை.

“எல்.ஐ.சி.பில்டிங்கை மாத்திட்டாங்களா?”

கொதிப்படையும் சத்யாவை போனில் அழைப்பான் விக்டர். “இன்னமும் ஒன் அவர்ல நான் சொல்ற இடத்துக்கு வரணும்..” என்னும் விக்டரிடம் “இது எனக்கும் உனக்கும். நடுவுல குடும்பத்தைக் கொண்டு வராத” என்று வெடிக்கும் சத்யாவிடம் “என் காதுல ‘எங்க வரணும்’ன்னு ரெண்டே வார்த்தை மட்டும்தான் கேட்கணும்.. நாம ஜாலியா உக்காந்து பேசுவோம்ல.. நாட்டியப் பேரொளி ஹேமானிகா சாவறதுக்கு பத்து செகண்ட் முன்னாடி என்ன சொன்னான்னு நான் அப்ப சொல்றேன். ஒகேவா சத்யா?” என்று விக்டர் தெனாவெட்டாகச் சொல்ல, மனம் உடைந்து கதறி அழுவார் சத்யா.

பிறகு விக்டர் பயணிப்பதை டிராக்கர் மூலம் அறிந்து அந்தத் திசையில் பயணிப்பார். ஆனால் அதை விக்டர் கண்டுபிடித்து கோபமாக விசாரிப்பான். அந்தக் கோபத்தின் இடையிலும் நக்கல் தெறிக்கும்.

“ஏன் ரைட்ல திரும்பல.. எல்ஐசி பில்டிங் கிட்டதானே வரச் சொன்னேன்.. அதை மாத்திட்டீங்களா. கண்ணகி சிலை மாதிரி.. என் கிட்ட யாரும் சொல்லல..”

“என் பொண்ணு எங்க..” சத்யா ஆவேசமாக கேட்க “தேன் மொழி எங்க.. அவளை ஒப்படைச்சிட்டு போயிட்டே இரு. தேன்மொழி கிடைக்கலைன்னா. எனக்கு இது வெறும் பணம்தான். மயிராச்சேன்னு போயிட்டே இருப்பேன். ஆனா என் கிட்ட இருக்கறது உன்னோட சின்னப் பொண்ணு. ஆனா அவளுக்காக நீ வருவியான்னு ஒரு சின்ன டவுட் வருது. என்னதான் இருந்தாலும் அது உன் பொண்ணு இல்லல்ல.. வேற ஒருத்தனுக்குப் பொறந்தவதானே. இதுவரைக்கும் இல்லை.. இப்ப வருது. நீ நடந்துக்கறத வச்சு சொல்றேன். இப்ப அங்கயே இருக்கியா.. எல்லாரையும் அனுப்பிடு. நான் அங்க வரண்டா.. உன்னைப் போட்டுட்டு அவளைத் தூக்கிட்டுப் போறேன்..” என்று சத்யாவின் ஈகோவை தூண்டும் விதமாக விக்டர் பேசுவான்.

“வாடா.. வாழ்க்கைலயே நீ கரெக்ட்டா சொன்ன விஷயம் இதுதான்” என்று சத்யாவும் பதிலுக்கு வெடிக்கிறார். சத்யா முன்பு செய்த ஒரு நல்ல விஷயம் இப்போது உதவுகிறது. விக்டரின் ஆள் ஒருவனுக்கு சத்யா முன்பு உதவி செய்திருக்கிறார். அவன் சொல்லும் தகவலை வைத்து தேன்மொழியை மீட்கிறார் சத்யா. காவல்துறையின் துப்பாக்கிகளில் இருந்து தப்பித்து ஓடுகிறான் விக்டர். ஓடிக் கொண்டே விக்டர் சிந்திக்கும் காட்சி ஸ்லோமோஷனில் நன்றாக எடுக்கப்பட்டிருக்கும்.

‘உன்னை சின்னப்பையனா ஸ்கூல் போக வெச்சிட்டேன்’

“விக்டர் இதான் உன் டைம்.. இவ்வளவு நடந்தும் நீ இப்ப ஓடிக்கிட்டிருக்கல்ல.. இதுதான் உன் டைம்.. போட்டுத் தாக்கு..”

தன்னுடைய மகளை மீட்கும் முயற்சியில் விக்டரின் மனைவி லிசாவை சத்யா கொல்ல நேரிடுகிறது. இது விக்டரின் மனதைப் பாதிக்கிறது. சத்யாவை தொடர்ந்து கண்காணிக்கிறான். பின்பு அழைக்கிறான்.

“லிசா.. செத்து எட்டு நாள் ஆச்சு. அல்லு விட்ருச்சு.. உனக்கு. உன் சின்னப் பொண்ணு பக்கத்துல இருந்து நீ நகரவேயில்ல. சின்னப்பையன் மாதிரி உன்னை தினமும் ஸ்கூலுக்கு போக வெச்சிட்டேன் பாத்தியா..சத்யா” என்று விக்டர் போனில் சொன்னதும், அன்றிரவு விக்டர் வருவான் என்று சத்யா யூகிக்கிறார். அதற்காக காத்திருக்கிறார். விக்டர் வீட்டிற்குள் புகை மாதிரி நுழைகிறான்.

“உன்னைப் போட்டுட்டு உன் குழந்தையை தூக்கிட்டுப் போகப் போறேன். அவளை ஊர் மேய விடப் போறேன். கட்டிக்கப் போறவ செத்துப் போனவுன்ன இன்னொரு பிகரோட செட்டில் ஆகணும்ன்னு நெனச்சல்ல. தப்பு சத்யா..” என்று விக்டர் மறுபடியும் சத்யாவின் ஈகோவைத் தூண்ட “ரொம்ப பேசிட்டோம். வாடா.. ரெண்டே நிமிஷத்துல முடிச்சிடறேன்” என்கிறார் சத்யா. இருவருக்கும் ஆக்ரோஷமான சண்டை நடக்கிறது. இறுதியில் விக்டரை வெற்றிகரமாக வீழ்த்தி போலீஸில் ஒப்படைக்கிறார் சத்யா.

ஒரு திரைப்படத்தில் ஹீரோவிற்கு இணையான கெத்துடன் வில்லன் பாத்திரம் எழுதப்பட்டால்தான் அந்த திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும். அப்படியொரு பாத்திரம் விக்டர்.

இதில் விக்டர் வரும் காட்சிகள் குறைவு. இடையில் நீண்ட நேரத்திற்கு விக்டரின் வாசனையே இருக்காது. என்றாலும் படம் முழுவதும் பயணிப்பது போன்ற பிரமையை தனது அசாதாரண நடிப்பால் ஏற்படுத்தி விட்டார் அருண் விஜய். அந்த வருடத்திற்கான ‘சிறந்த வில்லன்’ விருதுகள் சிலதையும் அருண் விஜய் வென்றார். பிறகு ஹீரோவாக நடித்து மீண்டும் தன் பயணத்தை வெற்றிகரமாக மீட்டுக் கொண்டாலும் அருண் விஜய்யின் நடிப்பு வரிசையில் மறக்கவே முடியாத பாத்திரமாக ‘விக்டர்’ எப்போதும் இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com