மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 32 | விரோதம் கூடாது.. சமாதனக் கொடியோடு ஒரு அமைதிப்புறா ‘தம்பி’!

32-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் வடசென்னை திரைப்படத்தில் டேனியல் பாலாஜி ஏற்று நடித்திருந்த தம்பி கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
டேனியல் பாலாஜி | வடசென்னை
டேனியல் பாலாஜி | வடசென்னைபுதிய தலைமுறை

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான டேனியல் பாலாஜி சமீபத்தில் மறைந்து விட்டார். வெற்றி மாறன் இயக்கத்தில் அவர் நடித்திருந்த ‘ரவி’ என்கிற கேரக்டரைப் பற்றி இந்தக் கட்டுரைத் தொடரில் முன்பே பார்த்திருக்கிறோம். அவரது மறைவையொட்டி ‘வடசென்னை’ திரைப்படத்தில் டேனியல் பாலாஜி ஏற்றிருந்த ‘தம்பி’ என்கிற பாத்திரத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

டேனியல் பாலாஜி | வடசென்னை
டேனியல் பாலாஜி | வடசென்னை

அதிகாரப் போட்டி என்பது மனிதர்கள் தோன்றிய காலந்தொட்டே இருக்கும் பிரச்னை. பெரும்பாலான மன்னர்களின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இந்த அதிகாரப் போட்டிதான் மையமான காரணமாக இருக்கும். யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்று நிகழும் மோதலில் தொடர்புள்ள, தொடர்பில்லாத எத்தனையோ நபர்களின் வாழ்வு பாதிக்கப்படும். 

‘வடசென்னை’ திரைப்படமும் இதே மையத்தில்தான் இயங்குகிறது. நண்பர்களாக இருந்த ரவுடிகளின் இடையே நிகழும் தன்னிச்சையான அதிகாரப் போட்டியும், இந்தச் சர்ச்சைக்கு தொடர்பேயில்லாத ஒரு இளைஞன் உள்ளே வந்து மாட்டிக் கொள்வதும்தான் இந்தத் திரைப்படம். 

டேனியல் பாலாஜி | வடசென்னை
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 30 | அஞ்சாதே ‘தயா’ | வில்லன்தனத்தை காட்ட வசனம் எதற்கு?

இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோ என்றாலும் இதர பாத்திரங்களுக்கு சமமான முக்கியத்துவம் இருக்கும் வகையில் திரைக்கதை எழுதப்பட்டிருக்கும். குணா, செந்தில், ராஜன், அன்பு என்று இதில் நிறைய கேரக்டர்கள் பயணித்தாலும் அடிப்படையில் இது சந்திராவின் கதை. தன்னுடைய கணவரின் சாவிற்கு காரணமானவர்களை, அன்பு என்னும் இளைஞனை ஆயுதமாகக் கொண்டு பின்னால் நின்று சந்திரா பழிவாங்கும் கதை. ஏறத்தாழ பாஞ்சாலி சபதம் மாதிரியான சமாச்சாரம். 

பாஞ்சாலி |  ‘வடசென்னை’ சந்திரா
பாஞ்சாலி | ‘வடசென்னை’ சந்திரா
‘வடசென்னை’ திரைப்படத்தில் நிறைய ரவுடிப் பாத்திரங்கள் இருந்தாலும் ராஜனின் தம்பியாக நடித்திருக்கும் டேனியல் பாலாஜியின் கேரக்டர் வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. ஆவேசமாக முட்டிக் கொள்ளும் இரு தரப்பிற்கு இடையில் சமாதானக் கொடியை பறக்க விடும் அமைதிப் புறாவாக படம் பூராவும் வரும் பாத்திரம்தான் ‘தம்பி’.

ஆனால் ஆரம்பத்தில் இந்தத் தம்பியும் சண்டைக்கோழிகளில் ஒருவராகத்தான் இருப்பார். அதிகாரப் போட்டிற்குள் தடுமாற்றத்துடன் நின்றிருப்பார். ஆனால் அண்ணனின் மரணமும் நண்பர்களின் துரோகமும் இவரை முற்றிலுமாக மாற்றி விடும். காவி வேட்டி கட்டி ஆன்மீகப் பாதையில் பயணிப்பதோடு ஊரில் உள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபடுவார். 

டேனியல் பாலாஜி | வடசென்னை
‘படத்தில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ...’ - மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி சினிமாவில் கடந்து வந்த பாதை!

ராஜன், சந்திரா, தம்பி, அன்பு

‘வடசென்னை’ திரைப்படம், ஒரு ‘பெரிய தலையை’ மட்டையாக்கி விடும் மங்கலகரமான சம்பவத்துடன் துவங்கும். யார் கொலைசெய்யப்பட்டது என்பது பார்வையாளர்களுக்கு  காட்டப்படாது. யார் செய்தார்கள் என்பது காட்டப்படும். அதிகாரப் போட்டியில் முதன்மையாக இருக்கும் செந்தில் இந்தச் சம்பவத்திற்கு முன்னிலை வகிப்பார். குணா, வேலு, ஜாவா பழனி ஆகியோர் சம்பவம் செய்து விட்டு அந்தக்  கிளுகிளுப்பை பதட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். இந்தக் காட்சியில் ‘தம்பி’ இருக்க மாட்டார். 

டேனியல் பாலாஜி | வடசென்னை
டேனியல் பாலாஜி | வடசென்னை

இந்தக் கொலையின் மூலம் கிடைக்கும் ஆதாயம் தொடர்பாக செந்திலுக்கும் குணாவிற்கும் பகைமை உருவாகி விடும். பழியை ஏற்றுக் கொண்டு குணா அணி சிறைக்குள் இருக்க, வெளியே இருக்கும் செந்தில் அணி அரசியல் அதிகாரத்தில் தங்களின் காலை ஊன்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கும். தங்களை இன்னமும் ஜாமீனில் எடுக்காதது குறித்து குணா ஆத்திரமாக பேச, செந்தில் அதற்கு சமாளிப்பாக பதில் சொல்ல, இரு குழுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, ‘தம்பியின் என்ட்ரி நிகழும்.

அதுவரை மௌனமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த தம்பி, சிறைக்கம்பியை எரிச்சலுடன் அடித்து ‘ஏய்’ என்று கத்தியவுடன் அனைவரும் மௌனமாகி விடுவார்கள். எனில் தம்பியின் பேச்சுக்கு அங்கு மதிப்புள்ளது என்று பொருள். “இப்படி சண்டை போடறதுக்கா, அன்னிக்கு நீங்க பண்ணதுக்கெல்லாம் சைலண்ட்டா இருந்தேன். ஒத்துமையா இருந்து லைஃப்ல செட்டில் ஆவீங்கன்னுதான். செந்திலு.. சீக்கிரமா பெயில்ல எடு. குணா.. வெளிய வந்து பகையெல்லாம் காண்பிச்சினுருக்காத” என்று தம்பி அறிவுறுத்த டைட்டில் கார்டு ஆரம்பிக்கிறது. 

டேனியல் பாலாஜி | வடசென்னை
டேனியல் பாலாஜி | வடசென்னை

டேனியல் பாலாஜியின் இருவிதமான தோற்றங்கள்

இந்தத் திரைப்படத்தில் டேனியல் பாலாஜி பொதுவாக இருவிதமான கெட்டப்பில் வருகிறார். அந்த புறத்தோற்றமே அவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. அந்த ஊரே மதிக்கும் ராஜனின் சொந்த சகோதரன்தான் இந்த ‘தம்பி’. கள்ளக்கடத்தல் செய்வதுதான் ராஜனின் தொழில். எனவே அந்தக் காலக்கட்டத்தில் ஒரு ரவுடியின் தோற்றத்தில் இருக்கிறார் தம்பி. ராஜனின் மரணம் நிகழ்ந்தவுடன் காவி வேட்டை, வெள்ளை சட்டை, உருத்திராட்ச மாலை, நெற்றியில் குங்குமம்,  நிதானமான பேச்சு என்று ஆளே மாறி விடுகிறார். 

டேனியல் பாலாஜி | வடசென்னை
சுருள்முடி, வன்மம், அச்சம், குரோதம், கூடவே பயம்! திமிரான ‘பொல்லாதவன்’ ரவியை மறக்க முடியுமா?

ராஜீவ்காந்தியின் மரணம் நிகழ்வதையொட்டி ஊரில் உள்ள கடைகளை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை ஊர் ஜனம் அள்ளிக் கொண்டு சென்று விடுகிறது. காவல்துறை எச்சரிக்கை தந்தும் பலனில்லை. “தம்பி.. சொன்னாதான் சார் இவங்க கேப்பாங்க” என்று ஒரு காவல்துறை அதிகாரி யோசனை சொல்கிறார். அதன்படி தம்பி ஊருக்குள் வருகிறார். சிறையில் பார்த்த முரட்டுத் தோற்றம் இப்போதில்லை. சாமியார் கோலத்தில் இருக்கிறார்.

“பொருட்களையெல்லாம் கொண்டு வந்து குடுத்துடுங்க. நம்மள நம்பி வந்து கடை வெச்சிருக்கவங்களை நாமதானே பார்த்துக்கணும்” என்று தம்பி சொல்ல மறுபேச்சில்லாமல் அத்தனை பொருட்களும் வெளியே வருகின்றன.

ராஜனின் மீது ஊர் வைத்திருந்த மரியாதை அப்படியே தம்பியின் மீது இடம் மாறியிருக்கிறது. 
டேனியல் பாலாஜி | வடசென்னை
டேனியல் பாலாஜி | வடசென்னை

பம்பரம் ஆடிக் கொண்டிருந்த ஊர் சிறுவர்களை கேரம் ஆடச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் ராஜன். அதற்காக மன்றம்  துவங்குகிறார். நல்ல ஆட்டக்காரனாகி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசுப் பணிக்கு செல்வதின் மூலம் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பது ராஜனின் ஐடியா. ராஜனின் மறைவிற்குப் பிறகு தம்பி அந்த விஷயத்தை ஆர்வமுடன் தொடர்கிறார். 

அன்புவை பாதுகாக்கும் தம்பி

அன்பு என்கிற இளைஞன் கேரம் ஆட்டததில் பிரகாசிக்கிறான். அவனை வளர்த்தெடுப்பதின் அவனுடைய வருங்காலத்தை வளமாக்கி விட முடியுமென்று தம்பி நம்புகிறார். ஆனால் கடைத்திருட்டில் நடந்த சண்டையில் அன்புவின் மீது வழக்கு பாயக்கூடும் என்கிற நிலைமை ஏற்படும் போது கடைக்காரனிடம் சென்று மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்.

கடைக்காரன் பதிலுக்கு தாக்குவதால் அன்புவின் கைவிரலில் அடிபட்டு ஆட்டத்தில் தோல்வி ஏற்படுகிறது. இதனால் ஒரு வருடம் வீணாகிறது. “நம்ம ஊர்ல லைஃபை தொலைக்கறது ரொம்ப ஈஸி. பொருளை எடுக்கறது.. சண்டை செய்யறது.. இதெல்லாம் ஆரம்பத்துல நல்லாத்தான் இருக்கும். உன் கைல கேம் இருக்கு. நீ ஒரு பத்து புள்ளைங்களை அந்த மாதிரி ரெடி பண்ணு” என்று அன்புவிற்கு தம்பி உபதேசம் செய்யும் காட்சி சிறப்பானது. 

டேனியல் பாலாஜி | வடசென்னை
டேனியல் பாலாஜி | வடசென்னை

தனது காதலி பத்மாவை கிண்டல் செய்யும் ‘ஜாவா’ பழனியை ஓர் எதிர்பாராத சம்பவத்தில் அன்பு குத்திப் போடுகிறான். தெரியாமல் நடந்து விடும் தற்செயலான விஷயம் அது. தன்னைக் காப்பாற்றச் சொல்லி தம்பியின் முன்பு வந்து நிற்கிறான் அன்பு.

டேனியல் பாலாஜி | வடசென்னை
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 24 | கொலைக்கருவிகளை உற்பத்தி செய்யும் அரசியல்வாதி சமுத்திரக்கனி

“எவ்வளவோ சொன்னேன்டா. உன் கிட்ட இதெல்லாம் வேணாம்ன்னு” என்று தம்பி ஆதங்கப்படுகிறார். “லைப்பை தொலைச்சிட்டியிடா” என்று தம்பி வேதனையுடன் சொல்லும் வசனம் பிறகு சமூகவலைத்தளங்களின் மீம்ஸ் ஏரியாவில் வைரல் ஆகியது. 

டேனியல் பாலாஜி | வடசென்னை
டேனியல் பாலாஜி | வடசென்னை

அன்புவை பாதுகாப்பாக வைக்கச் சொல்லி குணாவிடம் சொல்கிறார் தம்பி. அன்புவின் மூலம் தனது பழிவாங்கலை நிகழ்த்திக் கொள்ள முடியும் என்று கருதுகிற சந்திரா அதற்கேற்ப தன் சதுரங்க ஆட்டத்தை ஆட ஆரம்பிக்கிறாள். அன்புவின் பாதை மாற ஆரம்பிக்கிறது. அன்பு செய்த கொலையை தனது தம்பி சங்கரின் மீது போட்டு அவனைப் பெரிய ஆளாக்க முயற்சிக்கிறார் குணா. இதற்கான தூண்டுதலைத் தந்தவள் சந்திராதான். ஆனால் சிறைக்குள் சங்கர், செந்திலால் சாகடிக்கப்படுகிறான். அந்த இடத்தில் உயிரை இழந்து வேண்டியிருக்க வேண்டியவன் அன்புதான். 

அன்புவை பலி கேட்கும் செந்திலின் மனைவி

தன் உயிரைக்  காப்பாற்றிய குணாவிற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான் அன்பு. குணாவின் எதிரியான செந்திலை ‘போட்டுத் தள்ளுவதற்காக’, தன் திருமணத்தை தள்ளி வைத்து விட்டு  சிறைக்கும் செல்கிறான். இந்தக் கொலை முயற்சியில் செந்திலின் உயிர் போகவில்லை. ஆனால் நடைப்பிணமாக மாறி விடுகிறான். அன்புதான் அந்தக் கறுப்பு ஆடு என்பது செந்திலின் அணிக்குத் தெரியாது.

காலம் கடந்து செல்கிறது. தம்பியின் மகள் ‘பெரிய பெண்ணாகி’ விட அந்த விழாவிற்கு அன்புவை அழைக்கிறார் தம்பி. அங்கு குணா மற்றும் செந்திலின் ஆட்கள் என்று இரு தரப்பும் வரக்கூடும் என்பதால் அன்பு வரத் தயங்குகிறான். என்றாலும் “நான் இருக்கறப்ப ஏதாச்சும் நடக்க விட்டுருவனா?” என்று தம்பி தைரியமூட்டியதும் செல்லத் துணிகிறான். 

டேனியல் பாலாஜி | வடசென்னை | தனுஷ்
டேனியல் பாலாஜி | வடசென்னை | தனுஷ்

குணா மற்றும் செந்திலின் தரப்புக்கிடையே சமாதானம் பேச ஒரு தொழிலதிபர் முயல்கிறார். இதன் மூலம் இருவருக்கும் நிறைய ஆதாயம் கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறார். “என் புருஷனை குத்தினவனை எங்க கிட்ட கொடுத்துடுங்க” என்று செந்திலின் மனைவி ஒரு கறாரான நிபந்தனையை விதிக்க, பக்கத்தில் நின்றிருக்கும் அன்பு திகைத்துப் போகிறான். “ஏம்மா.. குத்தினவனுக்கு தண்டனை தரலாம். குத்திய பொருளுக்கு தண்டனை தர முடியுமா?” என்று இதிலுள்ள லாஜிக்கை தம்பி எடுத்துரைக்கிறார்.

டேனியல் பாலாஜி | வடசென்னை | தனுஷ்
டேனியல் பாலாஜி | வடசென்னை | தனுஷ்

இதன் மூலம் அன்புவைக் காப்பாற்ற முயல்வதுதான் அவருடைய நோக்கம். ஆனால் தன்னை ஆயுதமாக ஏவிய குணா இப்போது அமைதியாக இருப்பதைப் பார்த்து அன்பு அதிர்ச்சியடைகிறான். 

டேனியல் பாலாஜி | வடசென்னை
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 23 | உடலசைவிலேயே அசாத்திய நடிப்பை கொடுத்த ‘முதல்வன்’ பட ரகுவரன்

ராஜனின் பிரதிபிம்பமாக  மாறும் அன்பு

தன்னுடைய குழப்பத்தை மனைவியிடம் அன்பு பகிர்வதின் மூலம் ராஜனின் பின்னணிக் கதை பிளாஷ்பேக்கில்  விரிகிறது. செய்வது கடத்தல் தொழில் என்றாலும் ஊரின் மீது உண்மையான பாசத்துடன் இருக்கிறார் ராஜன். அரசியல்வாதிகளின் தந்திரம் மற்றும் காவல்துறையின் அராஜகம் காரணமாக ஊர் மக்களுக்கு பிரச்சினை வரும் என்று தெரிந்ததும் தனது தொழிலை நிறுத்தி விடுகிறார் ராஜன்.

ஆனால் குணா, செந்தில், வேலு, பழனி ஆகிய நால்வருக்கும் தங்களின் வருமானத்தை இழக்கிறோமே என்று கடுப்பாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ராஜனைக் கேட்டுக் கொண்டுதான் செய்ய வேண்டுமா என்று ஆத்திரமாகிறார்கள். ராஜனின் இடத்தை அடைவதுதான் செந்திலின் நோக்கமாக இருக்கிறது. அரசியல்வாதியான முத்து செந்திலுக்கு மறைமுகமான பக்கபலமாக இருக்கிறார். 

டேனியல் பாலாஜி | வடசென்னை Gang
டேனியல் பாலாஜி | வடசென்னை Gang

ஆனால் தம்பியின் நிலை என்ன? அவனால் தன் அண்ணனுக்கு துரோகம் செய்ய முடியாது. அதே சமயத்தில் நண்பர்களை விட்டுத்தரவும் முடியாது. இந்தச் சங்கடத்தை பல இடங்களில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் டேனியல் பாலாஜி. 

எம்.ஜி,ஆரின் மரணத்தின் போது ராஜனுக்குத் தெரியாமல் செந்தில் அணி கடத்தல் தொழிலில் இறங்க அது பிரச்சினையில் போய் முடிந்து விடுகிறது. தன்னைக் கேட்காமல் இப்படிச் செய்து விட்டார்களே என்று ஆத்திரமடையும் ராஜன், அவர்களை பொது இடத்திலேயே அடிக்கிறார். தன்னுடைய தம்பியையும் கோபத்தில் துரத்துகிறார். “நான் எதுவும் பண்ணலைண்ணா.. அவங்க கூட போகவேயில்லையே” என்று தம்பி கதறியும் ராஜனின் மனம் இரங்கவில்லை. 

டேனியல் பாலாஜி | வடசென்னை
டேனியல் பாலாஜி | வடசென்னை

தங்களின் வளர்ச்சிக்கு ராஜன் ஒரு பெரிய தடையாக இருப்பார் என்று செந்திலும் மற்றவர்களும் நினைக்கிறார்கள். ஊருக்குள் ராஜனுக்கு இருக்கும் செல்வாக்கு அவர்களை எரிச்சல்படுத்துகிறது. எனவே ராஜனை போட்டுத் தள்ளி விடுவது என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் தம்பிக்கு இதில் உடன்பாடில்லை. “நான் அண்ணனை கூட்டிட்டு வரேன். அவர் பேசி சால்வ் பண்ணிடுவாரு” என்று  ஹோட்டலுக்கு அழைத்து வருகிறான்.

டேனியல் பாலாஜி | வடசென்னை
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கோபத்தின் வெப்பமும் அன்பின் குளிர்ச்சியும் ஆய்த எழுத்து இன்பா

டேனியல் பாலாஜியின் அற்புதமான நடிப்பு

ராஜன் சொல்லும் விளக்கங்களைக் கேட்டவுடன் அவர் தங்களின் நல்லதுக்குத்தான் செய்திருக்கிறார் என்பது இவர்களுக்குப் புரிகிறது. மர்டர் பிளானிலிருந்து பின்வாங்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த அரிய வாய்ப்பை கைவிட செந்தில் தயாராக இல்லை. ஒரே குழப்பமும் தடுமாற்றமுமாக விரியும் இந்தக் காட்சியை வெற்றிமாறன் ஒரு லாங் டேக்கில் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அற்புதமாக இருக்கிறது. 

எதிர்பாராத நேரத்தில் ராஜனை இவர்கள் வெட்ட ஆரம்பிக்கிறார்கள். வெளியே நின்றிருக்கும் தம்பி ஓடி வந்து இவர்களை அடித்து தடுக்க முனைவதற்குள் காரியம் கை மீறி விடுகிறது. ‘அய்யோ.. அய்யோ..’ என்று தன்னுடைய அண்ணனின் கொலையைத் தடுக்க முடியாத துயரத்தோடு தம்பி தடுமாறும் காட்சியில் டேனியல் பாலாஜியின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது.

டேனியல் பாலாஜி | வடசென்னை | அமீர்
டேனியல் பாலாஜி | வடசென்னை | அமீர்

“அண்ணி.. அண்ணி..” என்று கதறிக் கொண்டே சந்திராவிடம் சென்று ராஜன் கொலை செய்யப்பட்டதை சொல்லும் காட்சியிலும் பாலாஜியின் நடிப்பு அருமையாக அமைந்திருக்கிறது.  துளி கூட அழாமல் கணவனின் சடலத்தைக் காண வரும் சந்திராவிடம் “அண்ணி.. ஏன் அண்ணி. என் கிட்ட எதுவும் பேச மாட்டேன்ற.. என்னை ஏதாச்சும் திட்டேன்” என்று உருக்கமாகப் பேசிக் கதறும் காட்சியில் நம்மையை உருக வைக்கிறது பாலாஜியின் நடிப்பு. 

டேனியல் பாலாஜி | வடசென்னை
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 17 | நினைவுகள் உறைந்து போன ஒரு தகப்பனாக எம்.எஸ்.பாஸ்கர்...!

அன்புவின் மூலமாக ராஜனின் மரணத்திற்கு பழிவாங்க நினைக்கும் திட்டத்தை தம்பியிடம் சந்திரா விவரிக்க “இன்னமுமா அண்ணன் சாவிற்கு பழிவாங்கணும்னு நெனக்கறீங்கோ?” என்று இறுதிக்காட்சியில் கேட்கிறார் தம்பி. 

டேனியல் பாலாஜி | வடசென்னை | ஆண்ட்ரியா
டேனியல் பாலாஜி | வடசென்னை | ஆண்ட்ரியா

ஒருபக்கம் தன்னுடைய அண்ணனின் மீதுள்ள விசுவாசமான பாசம், இன்னொரு பக்கம் நண்பர்களின் உறவு கெடாமல் இருக்க முயலும் போராட்டம். இரண்டிற்குமான தத்தளிப்பை பல காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் டேனியல் பாலாஜி.

விரோதம் நீடிக்காமல் தொடர்ந்து சமாதானம் பேச முயல்வதும், ஊரில் உள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்த முயல்வதும் என அவரின் அடையாளமே ஒரு கட்டத்தில் மாறி விடுகிறது.

இப்படியொரு பிரத்யேகமான வடிவமைப்பில் வரையப்பட்டிருக்கும் ‘தம்பி’ என்னும் பாத்திரத்தை தன்னுடைய அசத்தலான நடிப்பின் மூலம் சிறப்பாக்கியிருக்கிறார் டேனியல் பாலாஜி.

இப்போது நம் முன்னால் இருக்கும் கேள்வி ஒன்றுதான். வடசென்னை பாகம் இரண்டு வெளிவரும் போது அதில் எந்த நடிகரால் தம்பியின் பாத்திரத்தை சரியாக இட்டு நிரப்பி விட முடியும்?! 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com