‘படத்தில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ...’ - மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி சினிமாவில் கடந்து வந்த பாதை!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தைப் பதித்த டேனியல் பாலாஜியின் இறப்பு, தமிழ் சினிமாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இத்தருணத்தில் சின்னதிரை டூ வெள்ளித்திரை வரை, டேனியல் பாலாஜி கடந்த வந்த பாதை எப்படியானது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு!
டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி புதிய தலைமுறை

1975 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த டேனியல் பாலாஜி, தரமணியில் உள்ள திரைப்பட நிறுவனம் ஒன்றில், திரைப்பட தயாரிப்பு தொடர்பான படிப்பினை பயின்றுள்ளார். தமிழ் திரைத்துறையில் வில்லன் கதாபாத்திரத்தில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர்களில் டேனியல் பாலாஜியும் ஒருவர்.

டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

மருதநாயகத்தில் தொடங்கிய வெள்ளித்திரை பயணம்...

தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன்களில் ஒருவராக வலம் வந்தாலும் ஆரம்பத்தில் புரொடக்ஷன் மேனேஜராக சினிமா துறையில் நுழைந்தார். கமல்ஹாசன் இயக்கி நடிக்க இருந்த "மருதநாயகம்" படத்தில், புரொடக்க்ஷன் மேனேஜராக பணியாற்றினார். ஆனால் அந்தப் படம் தொடர முடியாமல் போனதால், அவருடைய வாழ்க்கைப் பயணம் மாறிப் போனது.

திரைத்துறையில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பிரபல தனியார் தொலைக்காட்சியில், நடிகை ராதிகா தயாரித்து நடித்த சித்தி என்ற தொடரில் "டேனியல்" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்ததால் அவரின் பெயர், 'டேனியல் பாலாஜி' என மாறியது. அதன்பின் அலைகள் என்ற சீரியலில் நடித்தார் டேனியல் பாலாஜி.

டேனியல் பாலாஜி
சுருள்முடி, வன்மம், அச்சம், குரோதம், கூடவே பயம்! திமிரான ‘பொல்லாதவன்’ ரவியை மறக்க முடியுமா?

பின்னர் தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பதித்தவர். தென்னிந்தியத் திரையுலகில் சற்று மாறுபட்ட வில்லனாக வித்தியாசமான முறையில் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தார்.

டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

திருப்புமுனையாக அமைந்த ‘காக்க காக்க’

சின்னதிரை மூலம் தடம் பதித்த டேனியல் பாலாஜி வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்தார். அப்போது, ஸ்ரீகாந்த் நடித்து வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’, தனுஷ் நடிப்பில் வெளியான ‘காதல் கொண்டேன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி நடித்தார்.

தொடக்கத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த டேனியல் பாலாஜி, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த "காக்க காக்க" திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் என்ற முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

காக்க காக்க திரைப்படத்தில் டேனியல் பாலாஜி
காக்க காக்க திரைப்படத்தில் டேனியல் பாலாஜி

பின்னர் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "வேட்டையாடு விளையாடு" படத்தில் சற்று மாறுபட்ட வில்லனாக நடித்து அதிக கவனம் ஈர்த்தார் டேனியல் பாலாஜி. தொடர்ந்து பொல்லாதவன் படத்திலும் மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்திருப்பார்.

இதனால் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திலேயே நடிப்பது என முடிவு செய்த டேனியல் பாலாஜி, விஜய், அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து தனி முத்திரை பதித்தார். தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் போலவே, ‘வடசென்னை’ திரைப்படமும் டேனியல் பாலாஜிக்கு மற்றொரு முக்கிய படமாக திரை பயணத்தில் அமைந்தது.

பொல்லாதவன் படத்தில் டேனியல் பாலாஜி
பொல்லாதவன் படத்தில் டேனியல் பாலாஜி

மாரடைப்பால் மரணம்

கொரோனா பரவல் நேரத்தில் தொற்று ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மனம் தளராமல் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து நம்பிக்கையும் கொடுத்தார்.

இந்தநிலையில்தான் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 48 வயதேயான டேனியல் பாலாஜி, மாரடைப்பால் இறந்திருப்பது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

டேனியல் பாலாஜி
நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்; சோகத்தில் திரைத்துறை!

சினிமா துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்து வந்த டேனியல் பாலாஜியின் இறப்புச் செய்தி, தமிழ் சினிமாவிற்கே ஒரு பெரும் பேரிழப்பு என திரைத்துறையினர் வேதனை தெரிவித்துவருகின்றனர்.

நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா தொடங்கி இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் வரை திரைத்துறையிலிருந்து பலரும் டேனியல் பாலாஜி மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய்யுடன் டேனியல் பாலாஜி
நடிகர் விஜய்யுடன் டேனியல் பாலாஜி

கண் தானம்

உயிரிழந்த டேனியல் பாலாஜி இறப்பதற்கு முன்பே 'தனது கண்களை' தானமாகக் கொடுத்திருந்தார். இவர் உயிரிழந்த செய்தி அறிந்ததும், அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள் அவரின் கண்களை தானமாக பெற்றுச் சென்றனர்.

சினிமாவில் வில்லனாக வலம் வந்த டேனியல் பாலாஜி நிஜத்தில் தன்னுடைய கண்களை வழங்கி ஹீரோவாக மாறியுள்ளார் என அவரது ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

டேனியல் பாலாஜி
இறந்த பிறகும் தன் கண்களின் மூலம் உலகை காணும் டேனியல் பாலாஜி!

“முரளி அண்ணனிடம் சிபாரிசு கேட்கக்கூடாதுன்னு இருந்தேன்!” - டேனியல் பாலாஜி

டேனியல் பாலாஜி, மறைந்த நடிகர் முரளியின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் முரளியின் தாயும், டேனியல் பாலாஜியின் தாயும் உடன்பிறந்தவர்கள். டேனியல் பாலாஜி சினிமாவுக்குள் வந்தபோது, முரளி தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்தார். இருந்தபோதிலும், அவரிடம் எந்த சிபாரிசும் கேட்காமல் சிறுசிறு கதாபாத்திரங்களின்மூலம் மேல் வந்தவர் பாலாஜி.

டேனியல் பாலாஜி - முரளி
டேனியல் பாலாஜி - முரளி

இதுபற்றி கடந்த 2021-ல் யூ-ட்யூப் சேனல் ஒன்றில் பேசியிருந்த டேனியல் பாலாஜி, “எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் ரொம்பவே அதிகம். நான் பள்ளிப்படிப்பில் இருக்கும்போதே அண்ணன் நடிகராகிவிட்டார். நான் சினிமாவுக்கு வரும்போது, சிபாரிச்சுக்காக வந்தேன் என யாரும் நினைத்துவிடுவார்களோ என அவரை பார்ப்பதையே தவிர்த்துவிட்டேன். பின் சினிமாவுக்கு வந்தபின் அவரே என்னை கூப்பிட்டார். கூப்பிட்டு எப்போதும் போல பேசினார். என்னதான் வயதில் பெரியவராக இருந்தாலும், என் சிறுவயதில் அவரை அண்ணா என நான் கூப்பிட்டதே இல்லை. ‘முரளி’ என்றுதான் சொல்லுவேன். அதுபற்றி அவரே கலாய்யாக என்னிடம் கேட்பார். அண்ணான்னு கூப்பிட சொல்வார்.

பின் சினிமாவுக்கு வந்தபின் ‘ஏன் வில்லனாவே நடிக்கிற’ என என்னிடம் ஒருமுறை அவர் கேட்டார். அதற்கு நான் அவரிடம், ‘அதான் ஹீரோவா நடிக்க நீங்க இருக்கீங்களே’ என்றேன்” என்று கூறி கலகலத்திருப்பார்.

இந்த வீடியோக்கள் யாவும் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா, இன்று தன் சமூகவலைதள பக்கங்களில் மறைந்த தன் சித்தப்பா டேனியல் பாலாஜிக்காக ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “வாழ்வில் நமக்கானவர்கள்தான் மிகவும் முக்கியம் என நினைக்கவைத்த மற்றொருநாள் இது. இன்னும் அதிக நேரம் நாம் ஒன்றாக செலவிட்டிருக்கலாம் என தோன்றுகிறது... Rest In Peace பாலாஜி சித்தப்பா🤍” என்றுள்ளார். இதையடுத்து பலரும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் முரளி, 2010-ம் ஆண்டில் தன் 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com