சுருள்முடி, வன்மம், அச்சம், குரோதம், கூடவே பயம்! திமிரான ‘பொல்லாதவன்’ ரவியை மறக்க முடியுமா?

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் தொடரின் இந்த 7-வது அத்தியாயத்தில், பொல்லாதவன் படத்தில் ரவி கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் பாலாஜி பற்றி பார்ப்போம்.
பொல்லாதவன் ரவி டேனியல் பாலாஜி
பொல்லாதவன் ரவி டேனியல் பாலாஜிகோப்புப்படம்

(தொடரின் பிற அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

ராதிகா நடித்த ‘சித்தி’ சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரம் அது. ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒரு புதிய நடிகரின் முகத்தை அந்தத் தொடரில் தற்செயலாக கண்டேன். அந்த நடிகரிடம் ஏதோவொரு வித்தியாசம் இருப்பதை உடனே உணர முடிந்தது. அவரின் தெனாவெட்டான முகபாவம், வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்வற்றில் ஒரு தன்னிச்சையான வசீகரம் இருந்தது. 'இவர் சரியான இயக்குநர்களின் கைகளில் சிக்கினால் நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக வருவார்' என்று என் உள்ளுணர்வு அப்போது சொல்லிற்று. பிற்பாடு இந்தக் கணிப்பு உண்மையானதில் ரகசியமான பெருமிதம் ஏற்பட்டது.

அந்த நடிகர் – டேனியல் பாலாஜி.

‘சித்தி’ தொடரில் டேனியல் பாலாஜி
‘சித்தி’ தொடரில் டேனியல் பாலாஜி

இதன் பிறகு அவர் நடித்ததுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’. இதில் பாலாஜி ஏற்ற ரவி என்கிற பாத்திரமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த கேரக்ட்டரைப் பற்றிதான் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.

‘பொல்லாதவன்’ வெற்றிமாறனின் முதல் திரைப்படம். கமர்சியல் படம்தான் என்றாலும் வித்தியாசமான திரைக்கதையின் மூலம் அசர வைத்திருந்தார். ஹீரோவிற்கு நிகராக வில்லனின் பாத்திரத்தையும் வலிமையாக படைப்பதுதான் திரைக்கதையின் அடிப்படையான இலக்கணம். அதுதான் ஒரு திரைப்படத்தை சுவாரசியமாக்கும். இது வெற்றிமாறனுக்குத் தெரிந்திருந்ததால் ரவி என்கிற வில்லன் பாத்திரத்தை வலிமையாகவும் பிரத்யேகமான குணாதிசயத்துடனும் எழுதியிருந்தார்.

பொல்லாதவன் ரவி டேனியல் பாலாஜி
'அவள் அப்படித்தான்' தியாகு நினைவில் இருக்கிறாரா..! - சுரேஷ் கண்ணன்

பொதுவாகவே வெற்றிமாறனின் திரைப்படங்களில் ஒவ்வொரு கேரக்ட்டரும் ஸ்பெஷலாக இருக்கும். தோற்றம், உடல்மொழி, வசன உச்சரிப்பு என்று அந்தப் பாத்திரத்திற்கு பொருந்தும் வகையில் நடிகர்களைத் தேர்ந்தெடுத்து உருமாற்றுவார். இதற்கான சிரமங்களை ஏற்கத் தயாராக உள்ள நடிகர்களைத்தான் தேர்ந்தெடுப்பார். இன்னொரு பக்கம், தான் நடிக்கும் கேரக்ட்டர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருந்தார் பாலாஜி. எனவே இந்தக் கூட்டணி வெற்றியடைந்ததில் ஆச்சரியம் இல்லை.

தனுஷ் - வெற்றிமாறன் - டேனியல் பாலாஜி
தனுஷ் - வெற்றிமாறன் - டேனியல் பாலாஜி

ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரு பாத்திரங்களின் வழியாக மாறி மாறி விரியும்படியாக திரைக்கதையை எழுதியிருந்தார் வெற்றிமாறன். “இப்படிச் செய்வது பார்வையாளர்களைக் குழப்பலாம்” என்று எச்சரித்தார், எடிட்டர் விஜயன். ஆனால் இதுதான் படத்தின் முக்கியமான வித்தியாசம் என்று கருதிய வெற்றிமாறன் அதையே தொடர்ந்தார். திரைக்கதையின் புதுமைக்காகவும் ‘பொல்லாதவன்’ திரைப்படம் அதிகம் பேசப்பட்டது.

பொல்லாதவன் ரவி டேனியல் பாலாஜி
நீ கலக்கு சித்தப்பூ... செவ்வாழ சித்தப்பூ சரவணனை யாரால் மறக்க முடியும்..!

வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது நமக்குத் தெரியும். எனவே ‘கதை நேரத்தில்’ வரும் சசியைத்தான் ‘ரவி’ கேரக்ட்டரில் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். அந்தச் சமயத்தில் எவரோ ‘வேட்டையாடு விளையாடு’வில் நடித்த பாலாஜியைப் பற்றி சொல்ல அது சரியான சாய்ஸாக இருக்கும் என்று வெற்றி மாறனுக்குப் பட்டது. ஆனால் இவர்கள் பாலாஜியை தொடர்பு கொண்ட நேரம், அவர் தனது நீளமான தலைமுடியை வெட்டியிருந்தார். பொதுவாக நடிகர்களுக்கு விக் வைப்பது வெற்றிமாறனுக்கு பிடிக்காது. ஆனால் வேறு வழியில்லை. டெஸ்ட் ஷூட்டில் சரியாக இருந்த பாலாஜியின் விக் படப்பிடிப்பின் போது சொதப்பலாகத் தெரிந்தது. எனவே விக் மேல் நீர் ஊற்றி ஒருமாதிரியாக சமாளித்தார்கள்.

டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

மற்ற கேரக்ட்டர்களைப் போலவே ‘ரவி’யின் கேரக்ட்டரையும் ஸ்பெஷலாக டிசைன் செய்திருந்தார் வெற்றிமாறன். அதிகாரத்தின் இரண்டாம் இடத்தில் இருப்பவர்களுக்கு எப்போதுமே ஒரு நிரந்தர வலி இருக்கும். முதலிடத்திற்கு நகரவும் முடியாது. இரண்டாம் இடத்தில் திருப்தி கொள்ளவும் முடியாது. இந்த எரிச்சலையும் கோபத்தையும் ரவியின் பாத்திரம் சிறப்பாக வெளிப்படுத்தியது.

பொல்லாதவன் ரவி டேனியல் பாலாஜி
'சவடால்' வைத்தி... மறக்க முடியுமா..? ஏன்னா அதான் நாகேஷ்..!

ரவியின் அண்ணனான செல்வம் (கிஷோர்) பெரிய தாதாவாக இருப்பார். ஆனால் அவர் முரட்டுத்தனமான ரவுடி அல்ல. புத்திசாலித்தனமும் நிதானமும் கொண்டவர். தனது சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய நெட்வொர்க்கை வெற்றிகரமாக ஏற்படுத்தி வைத்திருப்பார். அநாவசியமாக எந்தவொரு விரோதத்தையும் வளர்த்துக் கொள்வது செல்வத்திற்கு பிடிக்காது. இயன்றவரையில் சமரசங்களையும் சமாதானத்தையும் கடைப்பிடிப்பார். ஆனால் தொழிலுக்கு ஆபத்து என்றால் எந்தவொரு எல்லைக்கும் செல்வார். இதுதான் செல்வத்தின் வொர்க்கிங் ஸ்டைல். “விரோதக்காரனா இருந்தாலும் அவங்க குடும்பத்திற்கு முன்னாடி போடக்கூடாது. அப்புறம் தனியா மாட்டாமயா போயிடுவான்’ என்று தவறு செய்த தனது ஆட்களை ரத்தம் வர தண்டிப்பார்.

பொல்லாதவன் டேனியல் பாலாஜி - கிஷோர்
பொல்லாதவன் டேனியல் பாலாஜி - கிஷோர்

ஆனால் செல்வத்தின் தம்பி ரவியோ (பாலாஜி) இதற்கு நேர்மாறானவன். முன்கோபமுள்ளவன். முரட்டுத்தனமான முட்டாள். உள்ளுக்குள் கோழை. முன்னேறுவதற்காக எந்தவொரு குறுக்கு வழியையும் பயன்படுத்த தயங்காதவன். தனது அண்ணனின் செல்வாக்கு மீது ரவிக்கு எப்போதும் ஒரு எரிச்சல் உண்டு. அதை விடவும் கூடுதல் எரிச்சல், செல்வத்தின் வலது கையான ‘அவுட்’ என்பவனின் மீது. தம்பியான தன்னை நம்பாமல் எப்போதும் ‘அவுட்’டையே நம்பி அண்ணன் வேலை தருகிறாரே என்கிற எரிச்சல் ரவிக்கு உண்டு. ஆனால் செல்வத்தைப் போலவே நிதானமாக யோசிக்கிறவன், அவுட்டு. எனவே செல்வத்திற்கு ‘அவுட்டு’ மேல்தான் நம்பிக்கை.  

பொல்லாதவன் ரவி டேனியல் பாலாஜி
'சவடால்' வைத்தி... மறக்க முடியுமா..? ஏன்னா அதான் நாகேஷ்..!

தன்னுடைய மனக்குறையை அண்ணனிடம் நேரடியாக வெளிப்படுத்த துணிச்சல் இல்லாமல் அண்ணியிடம் (அஞ்சு) புலம்பி அடைக்கலமாவது ரவியின் வழக்கம். “என்ன இருந்தாலும் உன்னை உட்டுக்குடுக்க மாட்டாரு.. ரவி.. கவலைப்படாத” என்று ஆறுதல் சொல்வார் அண்ணி. “ஏங்க.. அவுட்டுக்கு கொடுக்கற பாதி வேலையை நம்ம புள்ளைக்கு தரக்கூடாதா?” என்று சிபாரிசுக்கு செல்வார். இதுவும் செல்வத்தை எரிச்சல் அடைய வைக்கிற விஷயம். “பொம்பளை காதைக் கடிச்சிக்கின்னு இருக்கே.. அவன் கண்ணைப் பாரு.. எப்பவும் ஆடினே இருக்கும்.. இதையும் ஒட்டுக் கேட்டுக்கினு இருக்கான் பார்” என்று கதவைத் திறந்து கொண்டு வரும் செல்வம், ரவியின் தலையிலேயே அடிப்பார். “அப்பா உன்னை சப்பைன்னு சொல்லுச்சு’ என்று செல்வத்தின் மகன் ஜாலியாகச் சொல்ல அவனை அடிக்க வரும் பாலாஜி ‘சின்னப் பையன்’ என்று சொல்லும் உச்சரிப்பு நன்றாக இருக்கும்.

பொல்லாதவன் டேனியல் பாலாஜி - கிஷோர்
பொல்லாதவன் டேனியல் பாலாஜி - கிஷோர்

முகத்தை பாதி மறைப்பது போல் தொங்கும் சுருள்முடி, வன்மம், அச்சம், குரோதம் எல்லாம் கலந்திருக்கும் குறுகுறு பார்வை, உடம்புடன் இறுக்கமாக இருக்கும் அடர்வண்ண சட்டை, திமிரான நடை, பார்த்தவுடன் ரவுடி என்று சொல்ல வைக்கும் தோற்றம் என்று ‘புள்ளீங்கோ’ ஸ்டைலில் கச்சிதமாகப் பொருந்தியிருப்பார் பாலாஜி. தனது அண்ணன் சொந்தமாக தொழில் செய்ய வாய்ப்பு தரவில்லையே என்கிற எரிச்சலும் விரோதமும் பாலாஜியின் கண்ணில் எப்போதும் இருக்கும். கூடவே அண்ணனின் மீதான அச்சமும். இந்த கலவையான முகபாவத்தை படம் முழுவதும் அற்புதமாக வெளிப்படுத்துவார். ஆனால் அண்ணன் தரும் வேலையை தனது திமிரான நடடிவக்கை காரணமாக சொதப்பி விடுவார்.

பொல்லாதவன் ரவி டேனியல் பாலாஜி
வெள்ளை வேட்டி, ஜிப்பா, முறுக்கு மீசை, கூர்மையான பார்வை - 'ரங்கன் வாத்தியார்' என்னும் அபூர்வம்..!

“நான் அந்தப் பையனை முதன்முதலா அப்போதான் பார்த்தேன்’ என்று தனுஷைப் பற்றி பாலாஜி சொல்லும் போது கதையின் கோணம் மாறும். ஹீரோவான தனுஷூம் வில்லனான பாலாஜியும் இரண்டு முறை வழியில் தற்செயலாக கடந்து செல்வார்கள். அப்போது இருவருக்குமே தெரியாது, ஒருவரின் வாழ்க்கையை இன்னொருவர் மிகவும் பயங்கரமாக பாதிக்கப் போகிறார்கள் என்று.

தன்னுடைய பைக் காணவில்லை என்று காவல்துறையில் புகார் செய்வார், தனுஷ். அப்படி புகார் தருவதற்கு முன் செல்வத்தின் ஆட்கள் யாரும் அந்தத் திருட்டில் சம்பந்தப்படவில்லை என்பதை ‘ஆட்டோ குமார்’ மூலமாக உறுதி செய்து கொள்வார். பைக் திருடிய சென்ட்ராயனை அடித்து போலீஸில் ஒப்படைப்பார். மாட்டியவன் தன்னுடைய ஆள் என்பதால் கேஸை வாபஸ் வாங்கச் சொல்வதற்காக தனுஷிடம் செல்வார் பாலாஜி. இதுதான் ஒரு பிரச்சினை தொடர்பாக இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சீன்.

பொல்லாதவன் தனுஷ் - கருணாஸ்
பொல்லாதவன் தனுஷ் - கருணாஸ்

ஆட்டோ குமாரிடம் சென்று ‘அவனை கேஸை வாபஸ் வாங்கச் சொல்லு’ என்று உத்தரவு போல் பாலாஜி சொல்ல, பைக் தொலைந்ததால் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்திருக்கும் தனுஷ் “அதெல்லாம் முடியாது” என்று சொல்ல “இன்னாடா. நம்ம ஏரியா பையன்.. ஸால்வா முடிச்சிடலாம்ன்னு பார்த்தா” என்று தனுஷைப் பார்க்காமல் கருணாஸை பார்த்தபடி பாலாஜி வசனம் சொல்வதே அத்தனை சிறப்பாக இருக்கும்.

‘நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை’ என்கிற கெத்தும் திமிரும் அதில் இருக்கும். ஆனால் இந்த தள்ளுமுள்ளுவில் தனுஷின் அப்பாவை பாலாஜி தள்ளி விட்டு விட, தனுஷிற்குள் ஆத்திரம் பொங்கிக் கொண்டு வரும். “டேய் அவன் செல்வத்தோட தம்பிடா” என்று ஆட்டோ குமார் தடுப்பதற்குள் பாலாஜியின் மீது பாய்ந்து பிரித்து மேய்ந்து விடுவார் தனுஷ். (அந்த உடம்பை வைத்துக் கொண்டு எப்படி என்றெல்லாம் லாஜிக் கேட்கக்கூடாது).

எந்தவொரு ரவுடிக்கும் பொதுமக்கள் வைத்திருக்கும் பயம்தான் அடிப்படையான முதலீடு. அது சேதமடைந்து விட்டால் கெத்து போய் விடும். ஒரு சாதாரண பையனிடம் ரோட்டில் அடிவாங்குகிறாமே என்கிற எரிச்சலுடன் உக்கிரமாகச் சண்டை போடுவார் பாலாஜி. மக்கள் அவரைப் பார்த்து சிரிப்பது வேறு அவரை பயங்கர காண்டாக்கி விடும். இந்த நடிப்பையெல்லாம் சம்பந்தப்பட்ட காட்சியில் அற்புதமாக வெளிப்படுத்துவார் பாலாஜி. ஒரு கட்டத்தில் ஓர் எடைக்கல்லைக் கொண்டு வந்து தலைக்கு மேல் தனுஷ் ஓங்கும் போது பாலாஜியின் கண்ணில் உண்மையான உயிர் பயம் தெரியும்.

பொல்லாதவன் ரவி டேனியல் பாலாஜி
பொல்லாதவன் ரவி டேனியல் பாலாஜி

ஜெயலில் இருந்து ரிலீஸ் ஆன செல்வத்திடம் “ஏங்க நம்ம புள்ளய ரோட்ல போற எவனோ அடிச்சிட்டாங்க” என்று பிலாக்கணம் வைப்பார் அவரது மனைவி. எரிச்சலுடன் திரும்பி தம்பியைப் பார்ப்பார் செல்வம். கண்களை பரபர என்று உருட்டிக் கொண்டு குற்றவுணர்வும் எரிச்சலும் கலந்த பார்வையில் மௌனமாக அமர்ந்திருப்பார் பாலாஜி. ‘பப்ளிக் கிட்ட போய் அடி வாங்கினு வந்திருக்கான் பாரு’ என்று செல்வம் எரிச்சல்பட்டாலும் தம்பியின் துணியை விலக்கி உள்ளார்ந்த பாசத்துடன் பார்த்து விட்டு  ‘அந்தப் பையன் யாருன்னு பார்த்து போட்டுருங்க’ என்று உத்தரவு இடுவார். “நீங்க வெளில வர்றதுக்குத்தான் காத்துக்கினு இருந்தேன்” என்று அப்போதும் கெத்து மாறாமல் சொல்வார் பாலாஜி.

இங்குதான் செல்வத்தின் புத்திசாலித்தனம் வெளிப்படும். “நம்ம புள்ளைங்களை வெச்சு செய்ய வேணாம். வியாசர்பாடில இருந்து பசங்களை கூட்டிக்கினு வாங்க” என்பார். ஆனால் இந்த பிளானையும் ரவி சொதப்பி விடுவார். தனுஷிற்குப் பதிலாக அவருடைய அப்பாவை காலில் வெட்டி விடுவார்கள். சம்பவத்தின் போது இந்தத் தவறு நடந்து விடும் பதட்டத்தை பாலாஜி அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

பொல்லாதவன் ரவி டேனியல் பாலாஜி
பொல்லாதவன் ரவி டேனியல் பாலாஜி

‘அடிச்சவனை போட்டுட்டு வாங்கடான்னா ஒரு கிளவனை வெட்டியிருக்காங்க’ என்று தம்பியின் தலையிலேயே எரிச்சலுடன் அடிப்பார் செல்வம். “இன்னா பண்ட்டாங்க இப்போ.. என்னை பப்ளிக்ல வெச்சு அடிச்சப்பா எவ்ள அசிங்கமா இருந்தது. இப்ப அவன் அப்பன் அடிபட்டுக் கெடக்கறதை பார்த்து கஷ்டப்படட்டும்” என்று செல்வத்தை எதிர்த்து நின்று பேசி மேலும் அடிவாங்குவார் பாலாஜி.

தனுஷின் மேல் தவறில்லை என்பதால் தாக்குதல் சம்பவத்தை நிறுத்தச் சொல்லியிருப்பார் செல்வம். ஆனால் பாலாஜியின் முட்டாள்தனமான கோபம் காரணமாக காரியம் கை மீறி விடும். இந்தக் குற்றவுணர்ச்சி காரணமாக தனுஷின் தந்தையைப் பார்ப்பதற்காக செல்வம் மருத்துவனைக்குச் செல்வார். ‘நீ போ’ன்னு சொல்லிட்டு பின்னாடி ஆள் அனுப்பி எங்க அப்பனை வெட்டிட்டல்ல.. அதுக்குப் பதில் என்னைக் குத்திப் போட்டிருக்கலாம்ல. உன் இடத்துக்குத்தானே வந்தேன்’ என்று தனுஷ் முகத்தில் கோபம் பொங்க வசனம் பேசும் காட்சி சிறப்பானது. தவறு நம்முடையது என்பதால் பொறுமையாகச் சமாளிக்க முயல்வார் செல்வம். ஆனால் ஆத்திரக்காரனான பாலாஜியோ எகிறிக் கொண்டு வர “போட்றா.. போட்றா” என்று பதிலுக்கு திமிறிக் கொண்டு நிற்பார் தனுஷ்.

தனுஷ்
தனுஷ்

அண்ணனின் எச்சரிக்கையையும் மீறி சந்து முனையில் வைத்து தனுஷை தாக்குவதற்கு இன்னொரு முறை முயல்வார் பாலாஜி. இதிலும் தோல்விதான் கிடைக்கும். “அவனுக்கு பயமே கிடையாது. இல்லன்னா எப்பவோ ஊரை விட்டு ஓடியிருப்பான். சும்மா இருக்கறவன இவன்தான் போய் போய் நோண்டிக்கிட்டு இருக்கான். தொழில் பண்ணனும்னா அந்தப் பையனை மறந்துடு” என்று அட்வைஸ் சொல்லும் செல்வத்தை பாலாஜிக்கு பிடிக்காது. எரிச்சல் தாங்காமல் உச்சக்கட்டமாக பாலாஜி போடும் பிளான் பயங்கரமானது.

“அவுட்டு.. அவுட்டு.. ன்னு எல்லா வேலையையும் அவனுக்கே குடுத்துக்கினு இருக்காரு. ஒரு நாள் அண்ணனுக்கே ஸ்கெட்சு போடப் போறான்” என்று அடிக்கடி சொல்லும் பாலாஜி, தனது அண்ணனைப் போடுவதற்காக தானே திட்டம் போடுவது டெரரான காட்சி. அப்போது கூட எதிரிகள் கையில் தன் தம்பி சிக்கி விடக்கூடாது என்பதற்காக வண்டிக்குள் தள்ளிப் போராடும் அண்ணனை திகைப்பும் ஆத்திரமுமாக பார்க்கும் காட்சியில் பாலாஜியின் நடிப்பு அற்புதமாக இருக்கும்.

பொல்லாதவன்
பொல்லாதவன்

அனைவரிடமும் சண்டையிட்டு சமாளிக்கும் செல்வத்தின் முதுகில் ஒரு கத்தி வந்து இறங்கும். திரும்பிப் பார்த்தால் அது தன்னுடைய தம்பியாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைவார் செல்வம். “இப்ப உன்னை செஞ்சல்ல. கழுத்துலயே போடுங்கடா இவனை” என்று ஒட்டுமொத்த ஆத்திரமும் மண்டைக்குள் இறங்க அத்தனை கால பழியுணர்ச்சியை வெறி கொண்ட கண்களில் வெளிப்படுத்தியிருப்பார் பாலாஜி.

கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷிற்கும் பாலாஜிக்கும் இடையில் நடக்கும் அந்தச் சண்டை உக்கிரமானது. பாலாஜிக்கு தான் தொழிலில் வளர்வதை விடவும் தனுஷை பழிவாங்குவதுதான் மிக மிக முக்கியமாக தெரியும். ‘அவன் செத்தால்தான் நமக்கு நிம்மதி’ என்கிற உக்கிரத்தோடு சண்டை இடுவார். செல்வத்தைக் கொன்றது ரவிதான் என்கிற உண்மையை தெரிந்து கொள்ளும் ‘அவுட்டு’, ரவி தப்பிச் செல்லாதவாறு கதவை அடைப்பார். ஒரு கட்டத்தில் ரவியை அடித்து வீழ்த்தி விட்டு தனுஷ் கிளம்பும் சமயத்தில் “இப்ப போயிட்டியனா விட்டுடுவேன்னு நெனச்சியா.. உன்னைச் சாகடிக்கற வரைக்கும் விடமாட்டேன்.. வாடா..” என்று கண்களில் கொலைவெறி பொங்க சண்டைக்கு அழைப்பார் பாலாஜி.

பொல்லாதவன்
பொல்லாதவன்

தானும் தன் குடும்பமும் நிம்மதியாக வாழ வேண்டுமெனில் ரவியைக் கொல்வதுதான் ஒரே வழி என்பதை உணரும் தனுஷ் அதைச் செய்து விட்டு ‘அவுட்டு’வின் உதவியுடன் அங்கிருந்து வெளியேறுவார்.

தனது அண்ணனின் செல்வாக்கு மீதுள்ள விரோதம், ஒரு சாதாரண பையன் தன்னை அடித்து விட்டானே என்று பகையை விடாமல் வளர்க்கும் வன்மம் ஆகியவைதான் ‘ரவி’யை வீழ்த்தியது எனலாம்.

டேனியல் பாலாஜி கையாண்ட பாத்திரங்களில் மறக்க முடியாத ஒன்று ‘ரவி’ கேரக்ட்டர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com