திடீரென வந்த அறிவிப்பு.. ரஜினி - கமல் காம்போ என்ன ஆச்சு?காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு சற்றே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
தமிழ்த் திரையுலகில் இரு சூப்பர் ஸ்டார்கள்
நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வரும் நிலையில் அவரது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் காத்திருந்தார்கள். விக்ரம் படம் மெகா ஹிட் அடித்து கமல் ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தநிலையில், கடைசியாக வெளியாக தக் லைஃப் படம் பெரிய ஏமாற்றமாக அமைந்திருந்தது. அதனால் அடுத்தப் படமாவது பெரிய அளவில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கமல் ரசிகர்களிடம் எக்கச்சக்கமாக இருந்தது. போதாக் குறைக்கு ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய ஹைப் சமீபத்தில் உருவாகியிருந்தது. ஆனால், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு சற்றே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். என்ன அறிவிப்பு வெளியாகி இருக்கிறது? அறிவிப்பு சொல்லாமல் சொல்லும் செய்தி என்ன? விரிவாக பார்க்கலாம்.
தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார்கள் பெரிதாக இணைந்து நடித்ததில்லை. எம்ஜிஆரும், சிவாஜியும் ஒரு படத்தில் தான் இணைந்து நடித்தார்கள், அஜித் விஜய்கூட அப்படித்தான் ஒரே படம். ஆனால், தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன். ஆரம்ப காலங்களில் இருவரும் நிறைய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால், ஒரு கட்டத்தில் ரஜினியை இரண்டாம் ஹீரோவாக நிலைநிறுத்திவிடுவார்கள் என்று எண்ணிய கமல், ரஜினியிடம் இனி இணைந்து நடிக்க வேண்டாம் என அறிவுரை கூறினார். அதன்பின்னர் தான் இருவரும் இணைந்து நடிக்கும் முடிவை கைவிட்டனர். அதன்பின் தங்களது தனித்தனி படங்களில் கவனம் செலுத்தி வந்தனர் ரஜினியும், கமலும். இந்தச் சூழலில் ரஜினி - கமல் கூட்டணி தமிழில் 46 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாக சமீபத்தில் பேசப்பட்டது. சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் இந்த செய்தியை கமல்ஹாசன் உறுதியும் செய்தார்.
இணைந்தது நடிப்பது குறித்து ரஜினி - கமல் கருத்து
இதுகுறித்து கமல்ஹாசன் பேசியபோது, "நாங்க இணைந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இத்தனை நாள் விரும்பியே பிரிந்திருந்தோம். எங்கள் இருவருக்குமிடையே போட்டி என்ற எண்ணத்தை நீங்கள்தான் உருவாக்கினீர்கள். நிஜத்தில், எங்களுக்கு அது போட்டி அல்ல; வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். நாங்கள் இருவரும் மீண்டும் ஒரே படத்தில் இணைவது வியாபாரரீதியாக ஆச்சர்யமாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு, இது எப்போதோ நடக்க வேண்டிய ஒன்று. இப்போது நடந்திருப்பதிலே நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" எனக் குறிப்பிட்டார் கமல்.
அதற்கு ஏற்றார்போல் ரஜினிகாந்தும் அளித்திருந்த பேட்டியில், "நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை. அதற்குச் சரியான கதையும், கதாபாத்திரமும் கிடைக்க வேண்டும். கிடைத்தால் நடிப்போம்" என பதில் அளித்து ஹைப் ஏற்றினார். ஆனாலும், அந்த பேட்டியில் ரஜினி ஒரு ட்விஸ்ட் வைத்திருந்தார். ரஜினி மிகத் தெளிவாக, “அடுத்ததாக ராஜ்கமல் - ரெட் ஜெயண்ட் இணையும் படத்தில் பணியாற்றுகிறேன். இன்னும் அதற்கான இயக்குநர் முடிவாகவில்லை” என்று கூறியிருந்தார். ரஜினி சொன்னதில் இருந்து உறுதியான ஒரே தகவல் ராஜ்கமல் - ரெட் ஜெயண்ட் இணையும் படத்தில் அவர் பணியாற்றுவது. கமல் உடன் இணைந்து நடிக்கிறாரா, லோகேஷ் இயக்குகிறாரா என மற்ற எல்லாமே வெறும் ஊகம் தான்.
அந்த வகையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவரிடமும் இப்படம் பற்றி அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ருதி, "உங்களைப் போலவே நாங்களும் காத்திருக்கிறோம்" என்றார். சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறும் போது "இதனை எங்கள் அப்பாக்கள் (ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்) உங்களுக்குச் சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆனால் அப்பா (ரஜினிகாந்த்) கமல் மாமாவின் பேனரில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதன் மற்ற விவரங்களை சொல்லவேண்டிய நேரத்துல தலைவர் சரியா சொல்லுவார்" என்று தெரிவித்தார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் முக்கிய அறிவிப்பு
இந்நிலையில்தான், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கமல்ஹாசன். மேலும் வாழ்த்துக் கவிதை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில்,
“அன்புடை ரஜினி,
காற்றாய் அலைந்த நம்மை
இறக்கி இறுக்கி தனதாக்கியது சிகரத்தின்
இரு பனிப் பாறைகள் உருகிவழிந்து
இரு சிறு நதிகளானோம்
மீண்டும் நாம் காற்றாய்
மழையாய் மாறுவோம்
நம் அன்புடை நெஞ்சார
நமைக் காத்த செம்புலம் நனைக்க
நாழும் பொழிவோம் மகிழ்வோம்
வாழ்க நாம் பிறந்த கலை மண்” என்று கமல் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய அறிவிப்பை பொறுத்தவரை இது ரஜினி நடிக்கும் படம். ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படம் உறுதி என்று இருதரப்பிலும் சொல்லப்பட்டாலும் தற்போதைக்கு அது டேக் ஆஃப் ஆகவில்லை என்பதே இந்த அறிவிப்பு மறைமுகமாக சொல்கிறது. தன்னுடைய தயாரிப்பு என்பதால் ஒருவேளை, இந்தப் படத்தில் கமல் ஹெஸ்ட் ரோலில் நடிப்பாரா என்பதும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது. அருணாச்சலம் படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து சுந்தர்.சி படம் இயக்குகிறார் என்பதே அதிகாரப்பூர்வமான செய்தி. ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி - கமல் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதியாகும். இன்றைய அறிவிப்பை பொறுத்தவரை பிறந்தநாளுக்காக நல்லதொரு அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்த கமல் ரசிகர்களுக்கு ஒருவகையில் இது அதிர்ச்சியான தகவல்தான். ரஜினி ரசிகர்களுக்கோ, ’உள்ளத்தை அள்ளித்தா’ தொடங்கி ’வின்னர்’ என காமெடி, மசாலா படங்களையும், சமீபத்தில் ’அரண்மனை’ படங்களை சீரியலாக எடுத்து வந்த சுந்தர்.சி தற்போது ரஜினியை வைத்து என்ன மாதிரியான படத்தை எடுக்கப் போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

